முகப்பு
எல்லோரும் வல்லவரே

14. மனத்திற்குள் லைப்ரரி

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றி சிலருக்குத் தெரிந்திருக்கலாம். 26 வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர். , ஒளியின் வேகம்  ரிலேட்டிவிட்டி தியரி, குவாண்டம் தியரி, போட்டோ எலெக்டிரிக் எஃபெக்ட் மற்றும்         E = mc2  என்ற அணுசக்தியின்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

பிரபஞ்சத்தின் எல்லையற்ற
நூற்களஞ்சியம் உங்கள் சொந்த
மனதிற்குள்ளேயே இருக்கிறது.
புறவுலகம் நீங்கள் உங்கள் மனதை
ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு
தூண்டுகோல், வாய்ப்பு மட்டுமே

- விவேகானந்தர்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றி சிலருக்குத் தெரிந்திருக்கலாம். 26 வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  ஒளியின் வேகம்  ரிலேட்டிவிட்டி தியரி, குவாண்டம் தியரி, போட்டோ எலெக்டிரிக் எஃபெக்ட் மற்றும்         E = mc2  என்ற அணுசக்தியின் அடிப்படையைக் கண்டுபிடித்தவர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மொத்தத்தில் மிக முக்கியமான, மிகப்பெரிய சிந்தனையாளர், அறிவுஜீவி.

அவர் காலத்திலேயே அவரைப் பற்றிய வியப்பும்  மரியாதையும் மிக அதிகம்.  ஐன்ஸ்டைன் அவரது 76 வது வயதில் குடல் தொடர்பான சிரமத்தால் மரணம் அடைந்தார். 'என் உடலை எரித்துவிடுங்கள் . இல்லாவிட்டால் என் எலும்புகளை வணங்க மக்கள் கூட்டம் வரும்' என்று அவர் முன்பே சொல்லியிருந்தார்.

அவர்  விருப்பப்படியே 1955 ல் அவர் இறந்த உடன் அவரது உடலை  (பிரேத)பரிசோதனை செய்துவிட்டு எரித்துவிட்டார்கள். ஆனால்.. பிரேத பரிசோதனை செய்த பேத்தாலஜிஸ்ட் தாமஸ் ஹார்வி என்ற மருத்துவர் கூடுதலாக ஒரு வேலை செய்திருக்கிறார். அது, ஐன்ஸ்டைனின் மூளையை மட்டும் பிரித்து சோதனைகளுக்காக தனியாக வைத்துக்கொண்டதுதான். இவ்வளவு அறிவாளியாக இருந்திருக்கிறாரே, இவரது மூளையின் அமைப்பில் ஏதும் வேறுபாடு இருக்கிறதா என்று பார்ப்பதுதான் அவரது நோக்கம்.

ஐஸ்டைனுடைய  மூளை பார்ப்பதற்கு  அதே வயதுடைய மற்றவர்களின் மூளை போலத்தான் இருந்திருக்கிறது. அடுத்து எடை போட்டுப் பார்த்திருக்கிறார்.  1.22 கிலோ கிராம்கள் (2.7 பவுண்ட்) இருந்திருக்கிறது. அதிலும் ஐன்ஸ்டைன்  வயது ஒத்வர்களிடம் இருந்து மாறுபாடு இல்லை. பின்பு, மூளையை 240 சிறு தூண்டுகளாக கூறுபோட்டு செலாய்டின் என்ற திரவத்தில் வைத்து மேல் ஆராய்ச்சிக்காக  பாதுகாத்திருக்கிறார்.

அதன் பின் இந்த விஷயத்தில் ஆர்வம் இருப்பவர்கள் ஆராய்ந்து அதன் முடிவுகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று உலகின் பல பகுதிகளில் இருந்த மருத்துவர்களுக்கு மூளையின் பகுதிகளை அனுப்பியிருக்கிறார்.  அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அதாவது 1985 ம் ஆண்டு வரை எவரும் ஐன்ஸ்டைனின் மூளையின் வேறுபாடு பற்றி எதையும் சொல்லவில்லை.

1985ல் டாக்டர் மரியான் டைமெண்ட் என்பவர்  ஐன்ஸ்டைனின் மூளையில் கிளியா செல்களின் எண்ணிக்கை (Glia cells to neurons) அதிகம் என்று ஆராய்ந்து சொன்னார். ஆனால் கிளியா செல் களின் எண்ணிக்கையை வைத்து ஏதும் முடிவு செய்ய முடியாது என்று மற்ற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

பின்பு அதற்கும் பதினோரு  ஆண்டுகள் கழித்து, 1996ல் யுனிவர்சிடி ஆஃப் அலபாமா வைச்  சேர்ந்த பிரிட் ஆண்டர்சன் என்பவர் ஐன்ஸ்டனின் மூளையில் 'பிரான்ட்டல் கார்டெக்ஸ்’ மற்றவர்களுடைய அளவைக் காட்டிலும் மெலிதாக இருக்கிறது என்று சொன்னார்.

இப்படியாக பலரும் இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஏதேதோ சொல்லுகிறார்கள். ஏனய ஆராய்சியாளர்களால் மறுக்கப்படுகிறார்கள். ஆக அவர்களால்  ஐன்ஸ்டைனின் மூளையில் எந்த பெரிய வேறுபாட்டையும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

இதெல்லாம் தேவையே இல்லை. காரணம், அந்த மூளைக்கு உரியவரே அவரது மூளை பற்றி, மூளைத் திறன் பற்றித்  தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.  அவர் சொன்னது, நான் யாரைக் காட்டிலும் புத்திசாலியில்லை. ஆனால், எடுத்துக்கொண்ட  விஷயத்தைப் பற்றி அதிகம் நேரம் சிந்திக்கிறேன்.

ஆக, அறிவு படைத்தவர்கள், அறிவு இல்லாதவர்கள் என்றெல்லாம் ஒதுக்கவும் வேண்டாம், ஒதுங்கவும் வேண்டாம். வேறுபாடு  என்பது  தகவல் பெறும் வகையிலும் கிடைக்கிற தகவலை பயன்படுத்தும் விதத்திலும் தான் இருக்கிறது. அங்கே சரி செய்தால் போதும். அவற்றில் செய்யும் மேம்பாடு எவரையும் வல்லவராக்கி விடும்.

தகவலை பெறும் விதம் ஆப்சர்வேஷன், மனதால் கவனிப்பது, வாங்குவது போன்றவை. அவற்றை  A  என்று வைத்துக்கொள்வோம்.

அடுத்து கிடைத்த தகவலைப் பற்றி சிந்திப்பது. இதுதான் மூளையில் நடைபெறும் செயல். சென்ற அத்தியாயத்தில் பார்க்கத் தொடங்கியிருப்பது. இதை  B  என்று வைத்துக்கொள்வோம். அதற்கும் அடுத்த கட்டம் ஒன்று உண்டு. அதன் பெயர்  C. 

A  யை பார்த்தாயிற்று.   C  பின்னால்தான். இப்போது பார்க்க வேண்டியது B யை.

ஒரு பிரச்னையைத் தீர்ப்பது குறித்து அதிக நேரம் சிந்திக்கிறேன் என்கிறார். அதிக நேரம் சிந்திப்பது என்றால் எவ்வளவு நேரம்?

ஐன்ஸ்டைன் எவ்வளவு நேரம் என்று குறிப்பிடவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். 'கூடுதல் நேரம்’என்று பொருள் பட longer  என்கிறார். மற்றவரைக் காட்டிலும் கூடுதல் நேரம் என்பதுதான் அவர் சொல்லுவதன் பொருள்.

சுவற்றில் ஆணி அடிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். சுவர் நல்ல வலுவான சுவர். அடித்த உடன் ஆணி உள்ளே போய்விடுமா? அடிக்கிறோம் அடிக்கிறோம் முடியவில்லை. எவ்வளவு நேரம் அடிப்பது?

இங்கே நேரத்தைக் கணக்குப் பார்ப்பவர் ஆணியை அடிக்க மாட்டார். பாதியில் விட்டுவிடுவார். நேரம் ஒரு பொருட்டல்ல. எப்படியும் அடித்தே ஆகவேண்டும் என்று நினைப்பவர், அடித்து இறக்கிவிடுவார்.  அவர் முன்னவரைவிடக் கூடுதல் நேரம் செலவு செய்திருப்பார்.

எவ்வளவு நேரம் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. எவ்வளவு தேவைப்படுகிறதோ அவ்வளவு நேரம் என்பதுதான் தேவை.  முதலில் ஒரு  அணி ஆடி முடித்து 400 ஓட்டங்கள் எடுத்துவிட்டார்கள் என்றால், அடுத்து ஆடும் அணி வெற்றிபெற 400 க்கும் மேலாக எடுத்தாக வேண்டும். எவ்வளவு தேவையோ அவ்வளவு. முதலில் ஆடியவர் 500எடுத்தால், அடுத்து ஆடுபவர் 500 க்கும் மேல்.

எத்தனை முறை முயற்சித்தோம் என்பதல்ல கணக்கு. முடியும் வரை செயல்பாடு என்பதுதான் வெற்றியாளர் அணுகுமுறை.

ஆணி அடிப்பது புற வேலை. கிரிக்கெட் விளையாட்டில் ஓட்டங்கள் எடுப்பதெல்லாம் உடல் செய்யும் வேலை. இவை உதாரணங்கள்தான். ஆனால் இங்கே B   என்பது மனதிற்குள், மூளையில் செய்யப்படவேண்டிய வேலை.

உள்ளே தேடுவது. விவேகானந்தர் சொல்லுவது போல, நமக்குள்ளே இருக்கும் மிகப்பெரிய நூல் நிலையத்தில் தேடுவது. வெகு நேரம் சிந்திப்பது. தீர்க்கமாக சிந்திப்பது.

பலராலும் செய்ய முடியாத, செய்யப் பொறுமை இல்லாத, அதில் நம்பிக்கையில்லாத வேலைதான் ஆழந்து சிந்திப்பது.

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது. தமிழகத்தில் முதுகலை படித்துவிட்டு லண்டனில்  சட்டம் படிக்கச் செல்லுகிறார் அந்த இளைஞர். தமிழகத்தைச் சேர்ந்தவர். அங்கே ரயிலில், பேருந்துகளில் பலரும் ஒரு குறிபிட்ட செய்தித் தாளை ஆர்வத்துடன் படிப்பதை கவனிக்கிறார்.  அந்த ஆங்கில தினசரியின் பெயர் 'த டெலிகிராப்’.

அப்போது அந்த இளைஞருக்கு  வயது இருபத்து இரண்டுக்கு சற்று கூடுதலாக இருக்கலாம். அவ்வளவுதான். அந்த வயதில் அவர் பார்வையில் அந்தக் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அவர் மனது அதை கவனித்திருக்கிறது. அப்படியென்றால் அங்கே  A  செயல்பாடு சிறப்பாக நடந்திருக்கிறது.

இதைச் செய்வதே பலருக்கும் அரிது. லண்டன் சென்ற எவ்வளவோ நபர்கள், தொழிலதிபர்கள்  அதைப் 'பார்த்திருப்பார்கள்’. ஆனால் 'கவனித்திருக்க’ மாட்டார்கள். இரண்டுக்கும் இடையில் இருக்கும் வேறுப்பாடு நமக்குத் தெரியும்.

அந்த இளைஞர், A  யுடன் நிறுத்தவில்லை.

அடுத்து B க்கு நகர்ந்தார்.  

B  க்கு நகர்ந்தார் என்றால்?

அந்தத் தகவலை உள்ளே வைத்து அரைத்தார். மூளையைப் போட்டுக் கசக்கினார். அவருக்குள் ஒரு பொறி தட்டியது.

1942ல் தமிழகம் வந்தார். வந்ததும் ஒரு பத்திரிக்கை தொடங்கினார். கிட்டத்தட்ட அதே பாணியில். அதே அர்த்தம் தொனிக்கும் தமிழ் பெயருடன்.

பெரிய வெற்றி. அவர்  வல்லவர்தானே.

அந்த தினசரியின் பெயர் தெரியுமல்லவா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.