அத்தியாயம் - 12
'என்னடே முத்து, எந்த கப்பல் கவுந்துச்சுன்னு இங்கன கன்னத்துல கை வச்சிக்கிடக்க?'
'என்னடே முத்து, எந்த கப்பல் கவுந்துச்சுன்னு இங்கன கன்னத்துல கை வச்சிக்கிடக்க?' என்றார் நடேசபிள்ளை. வெயில் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் வர நாளிருக்கிறது. அதற்குள் என்னமாச் சுடுது, இந்த ஊர்?
'சிதம்பரம் அய்யா கப்பலு கவுந்துருமோன்னு கவலையா இருக்கு சாமி. அவரப் பிடிச்சுப் போட்டுட்டாங்கள்லா? 40 வருசமாமே?'
'இதுவரை இப்படி நான் ஒரு தண்டனையக் கேக்கல. சடகோபாச்சாரியார் மெட்ராஸ்ல வாதாடறேங்காரு. பாப்பம்'
'ஜெயில் வாழ்க்கை…அவரு தாங்குவாராய்யா?’ கண்மூடி தலையசைத்தான் முத்துராசா. ஜெயில் எப்படி இருக்குமென்பது முன்னாள் போலீசுக்குத் தெரியும். இது சிறைச்சாலை சீர்த்திருத்தங்கள் வருமுன்னான காலம்.
'என்ன செய்ய? ரெட்டை தீவாந்தர தண்டனை. அந்தமான் ஜெயிலு போவணும். அது இன்னும் மோசமால்லா இருக்கும்? ஆனா அந்த ஜெயிலு நிறைஞ்சு கிடக்காம். இங்க எங்கனாச்சும் வைப்பானுவோ.'
'பாளையங்கோட்ட ஜெயில்னா, நானே அவர தப்பிக்க வச்சிருவன் சாமி. அங்கிட்டிருக்கிற ஒவ்வொரு செங்கல்லும் எனக்குத் தெரியும்'
சிரித்தார் நடேசபிள்ளை 'டே, வெள்ளக்காரன் இத யோசிக்க மாட்டானா? நம்மூர்ல வக்க மாட்டான் பாத்துக்க. மெட்ராஸோ, பூனாவோ கொண்டுபோவான்.இல்ல கோயமுத்தூர்ல வைப்பான்.'
நடேசபிள்ளை எதிர்பார்த்தபடியே வ.உ.சி கோயமுத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டார். முத்துராசாவின் கோபம் ஆஷ் மீதும், விஞ்ச் மீதும் திரும்பியது. மாடசாமியுடன் அவனை தூத்துக்குடியில் பார்த்ததாக எவரோ சாட்சி சொல்ல, முத்துராசா போலீஸின் கவனத்தில் வைக்கப்பட்டான். மெல்ல மெல்ல , பயிற்சிக்கு வருபவர் எண்ணிக்கை குறைந்தது. வருமானம் குறையக் குறைய முத்துராசா கவலைப்படத் தொடங்கினான். இருவருடங்கள் வானம் பொய்க்க, விவசாய வருமானம் தேய்ந்து போனது. 1910 அக்டோபரில் , வானம்பொய்த்து, கடன் சுமை தாளாமல் முத்துராசாவின் மாமனார் ஊர்க்காடுப் பகுதியில் தற்கொலை செய்துகொண்டான். அவன் மனைவி, தன் தங்கையையும் தம்பியையும் வீட்டிற்கு அழைத்துவந்தாள்.
நடேசபிள்ளை, கவனிப்பும் கண்காணிப்பும் முத்துராசாவின் பக்கம் பலமாவதைக் கண்ணுற்றார். இன்னும் ஆண்டர்சன் இவனைக் கவனிக்கவில்லை. அந்த கல்லூரி மாணவர்களின் கதிதான் இவனுக்கும்...அவர் அலுவலகத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தந்தி ஒன்று வந்தது. ஜோன்ஸ் அட்கின்ஸன், இவனுக்கு என்ன திடீர்னு என்மேல் பாசம்? செய்தியைப் பார்த்ததும் அவர் கிரிமினல் லாயர் மூளை வேகமாக வேலை செய்தது.
'சொல்லுங்க சாமி' முத்துராசா கைகட்டியபடி முன்னே மரியாதையாக நின்றிருக்க, அன்று நண்பகல், அவன் வீட்டு வாசல் வேப்பமர அடியில் ஒரு கட்டிலில் நடேசபிள்ளை அமர்ந்திருந்தார்.
'ஆண்டர்ஸன் துரைன்னு ஒருத்தர் இருக்காரு, தெரியுமுல்லா?.” முத்துவின் மனைவி நீட்டிய மோர் டம்ளரை மற்றொரு கையால் வாங்கிக்கொண்டபடி தொடர்ந்தார் “அவருக்கு , நம்ம முள்ளக்காடு பக்கம் வேட்டையாட, கூடவே , ஒரு நல்ல ஆள் வேணுமாம். அவரோட நண்பர் ஜோன்ஸ் கேட்டு எழுதியிருக்காரு. போறியா?'
'முள்ளக்காட்டுல என்ன இருக்கும் சாமி? பன்னி, முசலு.. இதுக்கு நான் வேணுமா? இது ஒரு வேட்டைன்னு அந்த வெள்ளைக்காரனும் அலையுதான்'
'டே, அப்படி சொல்லிப்புடாதே.அஸ்ஸாம்ல,காண்டாமிருகம்னு ஒன்னு.. பத்து காட்டுப்பன்னி சைஸு இருக்கும்.கேட்டியா? அதை வேட்டையாடியிருக்கான்..'
'களக்காடு, குத்தாலம், செங்கோட்டைன்னா புலி வேட்டைக்குப் போவலாம். மன்னிச்சுகிடுங்க சாமி, இது பொளப்பத்த வேலை.'
நடேசபிள்ளை குரல் தாழ்த்தினார் “ஏற்கெனவே, ஒம்பேரு கொஞ்சம் நாறிக்கெடக்கு. சுதேசி அவன் இவன்னு வரான், கூத்தடிக்கான்னு.. இந்த ஆளு வில்லங்கம் பிடிச்சவன், கேட்டியா? இவங்கூட நின்னேன்னு வையி, ராஜாங்கம் ஒம்பேர்ல ஒன்னும் செய்யாது.பொளப்பு சோலியப் பாருடே”.
ஒரு நிமிட தயக்கத்தின்பின் கேட்டான் முத்துராசா “என்னிக்கு வரணும்?”
'லிண்டா, இனிமே எங்க குடும்பத்துல கேக்கறதுக்கு மட்டும்தான் பாக்கியிருக்கு' முத்துக்குமார், மணியைப் பார்த்தான்.காலை ஒன்பது மணி. இன்று ஒரு நாளில் இவள் எனது வீட்டில் பேசி முடித்துக் கிளம்பிவிட்டால் பின்னர் தொல்லையில்லை.அம்மாவுக்கு ஏற்கெனவே சந்தேகம் வந்துவிட்டது. இவள் அம்மாவிடமும் பேட்டி எடுத்துக் கிளம்பிவிட்டால், அது சரியாகிவிடும்.
லிண்டா ஆமோதித்தாள். 'அதுக்கு முன்னாடி, ஒரு சின்ன வேலை இருக்கு. உன்னோட டி.என்.ஏ சாம்பிள் வேணும். தருவியா?'
'எதுக்கு?' அன்று அவள் மரபணு பற்றிப் பேசியது நினைவில் வந்தது.
'ஒரு ஸ்க்ரீனிங் பரிசோதனை. இந்த இந்த ஆட்கள், இந்த வம்சாவளியில் வந்தவர்கள் , என்னால் விசாரிக்கப்பட்டார்கள் என்பது ஆவணப்படுத்தப்படும். இது ஓரளவுக்கு எனது ஆராய்ச்சியை உண்மைப்படுத்தும். இன்று மாலை, எனது ஆய்வாளர் மிச்செல் இங்கு வருகிறாள். அவளிடம் கொடுத்தால் போதும். அவளோடு என் லாயரும்..'
'அன்னிக்கு பேசிட்டிருந்தியே, அவரா?'
'யா. சென்னை, சேலம், கோயமுத்தூரில் எல்லாம், நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்ற முத்துக்குமார், முத்து, குமரன்களின் மரபணு எடுத்தாகிவிட்டது. இங்கு நீ, உனது குடும்பம் பாக்கி'
'என் குடும்பம்? அது எதற்கு?'
லிண்டா அவனை ஆயாசத்தோடு நோக்கினாள் “ லுக். இது மரபணு சமாச்சாரம். இதில் முந்திய வம்சாவளியினரின் தொடர்பு தெரியவந்து, உறுதிப்படும்.இது மிக அவசியம்.நீ, உன் தாய், தந்தை, அத்தைகள், சித்திகள், பாட்டி...அதோடு உன் பெரிய தாத்தா வழியில் இப்போது யாரெல்லாம் இருக்கிறார்கள்?.”
'அவரு பையன் சின்ன வயசுல போயிட்டார்னு கேள்வி. என் தந்தை வழித் தாத்தா, அவரோட அக்கா ரெண்டுபேரு அவர்கூடப் பிறந்தவங்க. அந்த பாட்டியோட பொண்ணுதான் செல்லியாத்தா. அவளுக்கும் குழந்தையில்ல. வாரிசு இருக்கறது எங்க குடும்பத்துல மட்டும்தான்.'
'Y குரோமோசோம், Y-STR மட்டுமில்லாம வேற வமிசாவழி தகவல்களும் எடுக்கணும். மைட்டோக்காண்ட்ரியா டி.என்.ஏ “ என்று அவள் முணுமுணுத்தது கேட்டு கலவரமடைந்தான்.
'எங்ககிட்ட என்ன மாதிரிகள் எடுப்பீங்க?' என்றான் சந்தேகத்தோடு.
'பக்கல் ஸ்வாப். காதுகுடையற பஞ்சு குச்சி மாதிரி ஒன்னு வைச்சி, ஈறுகள்ல லேசா அழுத்தி செல்களை எடுப்போம். ஈறுகள்ல செல்கள் வலிக்காமல் எளிதில் வந்துவிடும். அது போதும்.'
'எதுக்குலே இப்படி வாயில குச்சிய விட்டுக் குடையறா? 'அம்மாவின் எரிச்சலான கேள்விக்கு , பெரியப்பா பதிலுறுத்தார் 'ஏ, நீ சும்மா கிட. காட்டுக் காச்சல் இங்கீட்டு யாருக்காச்சும் வந்திருக்கும்.' அவள் நம்பவில்லையென்றாலும், சிக்கன்குனியா காய்ச்சலுக்கு ஆய்வுக்காக சாம்பிள் எடுக்க ஐக்கிய நாட்டு சுகாதார அமைப்பில்லிருந்து ஒரு கருப்பர் பெண் வந்திருக்கிறாள் என்று எளிதில் எல்லாரையும் நம்ப வைக்க முடிந்தது. அந்தப் பெண்ணுடன் எப்பவும் சிரித்தமாதிரியே முகம் வைத்த ஒரு ஆங்கிலேயர். ஒரு லாயர் ஏன் , மாதிரிகள் எடுக்குமிடத்திற்கும் வரவேண்டுமென்பது முத்துகுமாருக்குப் புரியவில்லை.
தொடரும்...