குடியரசுத்தலைவர் ஆட்சி திணிப்பு! மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாஜக திட்டம்! - மமதா
மத்திய பாஜக அரசு மீது மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சனம்...
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மக்களின் குடியுரிமையைப் பறிக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 291 வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.
அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக அவர் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
"பாஜக அரசு ஒரு திட்டமிட்ட சதியை அரங்கேற்றி வருகிறது. நாடு அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் முறையான சட்டம் - ஒழுங்கு இல்லை, மக்கள் நிம்மதியாக உணரவில்லை. பிரிவினை அரசியல் கடைப்பிடிக்கப்பட்டு இங்கு போர் போன்ற சூழல் உருவாக்கப்படுகிறது.
பிரதமர் மோடி தனது பதவிக்காலத்தில்கூட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எல்ஐசி, ரயில்வே முதல் ஏர் இந்தியா வரையிலான பொதுத்துறை நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களிடமும் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள், நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்கள் உள்பட சில தனிநபர்களிடமும் ஒப்படைக்கப்படுகின்றன.
வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பது தெரிந்தே வங்காளத்தில் அதிகாரப்பூர்வமற்ற குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மேற்குவங்கத்தில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வங்காளத் தேர்தலுக்குப் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில் மக்களின் குடியுரிமையைப் பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்றும் விமர்சித்தார்.