முகப்பு
ஐந்து குண்டுகள்

அத்தியாயம் - 7

1908 ஜனவரியில் , முத்துராசா, மீண்டும் நீலகண்டனை விக்கிரமசிங்கபுரத்தில் சந்தித்தான். ஆற்றின் கரையில்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:13 PM
பகிர்:

1908 ஜனவரியில் , முத்துராசா, மீண்டும் நீலகண்டனை விக்கிரமசிங்கபுரத்தில் சந்தித்தான். ஆற்றின் கரையில், குளிர்க்காற்று உடலை வருட, நீலகண்டன் வெள்ளைக்காரர்களின் சுரண்டலையும், இந்தியரின் அடிமைத்தனத்தையும் எடுத்துச் சொல்லச் சொல்ல, முத்துராசாவுக்கு ஒரு வேகம் எழுந்தது.

‘ஸ்ரீமான் சிதம்பரம்பிள்ளை சொல்றார், ஒவ்வொரு வருஷமும் நம்ம நாட்டுலேர்ந்து நூற்று எண்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் அயல்நாட்டுக்குப் போறதாம். முத்துராசா, ஏன் நம்ம மக்கள் ஏழ்மையா இருக்கோம்னு புரியறதா?’

‘நிசமாவா அய்யரே?’

நீலகண்ட ப்ரம்மச்சாரி சிரித்தான் ‘நீ நேர்ல கேளு. தூத்துக்குடிக்கு வண்டி கட்டிப் போறேன்னா சொல்லு. அவரோட நண்பர்களுக்குச் செய்தி அனுப்பிடறேன். நேர்ல கேட்டேன்னு வை.. ஆடிப்போயிடுவே. சுப்ரமணிய சிவா-ன்னு இன்னொருத்தர் இருக்கார். அவர் பேச்சைக் கேக்கணும் நீ…’

பிப்ரவரி மாதம் , திருச்செந்தூர் செல்ல வண்டி கட்டினவர்களுடன் சேர்ந்து பயணித்து இரு நாட்களில் தூத்துக்குடி சென்று சேர்ந்தான் முத்துராசா. சுப்ரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், அவரை எளிதில் பார்க்க முடியாது என்றும் யாரோ சொன்னார்கள். ஏமாற்றமடைந்து திரும்ப நினைத்தவனை, இயக்கத்தில் இருந்த ஒருவன் மாடசாமிப்பிள்ளையிடம் அழைத்துபோக, அவர் சட்டென அடையாளம் கண்டுகொண்டார். தம்பிக்கை மீண்டான் கூட்டத்தைக் கலைக்க வந்தனில் ஒருவனில்லையா இவன்?

‘ஏ, நீ.. போலீஸ்லா? வேவு பாக்க வந்தியோடே?’

‘இல்லய்யா’ என்றான், மாடசாமியை அடையாளம் கண்டுகொண்ட முத்துராசா. ‘நீலகண்ட அய்யரு சொன்னாருன்னு இவுக பேச்சக் கேக்கவந்தேன்’

‘நீலகண்டனா?’ மாடசாமியின் கண்களில் ஒரு பொறி மின்னி மறைந்தது. அவனிடம் நிதானமாகப் பேசி , விவரம் முழுதும் அறிந்தார்.

‘நாளைக்கு என்ன தேதி இருபத்துமூணா? டே, இருந்துட்டுப் போ. நாளைக்கு சாயங்காலம் பிள்ளை , சிவா எல்லாரும் பேசுவாங்க. அதுல சங்கம் பத்தியும் சொல்லுவாங்க.. நீலகண்டன் சொல்லியிருப்பானே? விக்கிரமசிங்கபுரத்துல அவன்கூட இன்னொருத்தன் இருந்தானா?’

ஆற்றங்கரையில் அவர்கள் பேசும்போது யாரும் வருகிறார்களா? என்று காவல் காத்து நின்ற அந்த இளைஞனின் முகம் நினைவு வரவில்லை. ‘வாஞ்சி...வஞ்சி என்னமோ பெயர் சொன்னாரு. அவனா?’

‘வாஞ்சிநாதன்’ என்றார் மாடசாமிப்பிள்ளை, முகம் விகசித்து. ‘அவன் வீரண்டே. என்ன, கொஞ்சம் அவசரக்குடுக்கை.. எல்லாத்தையும் இன்னிக்கே செய்யணும்பான். சரி, எங்க தங்கப்போற? என் வீட்டுல திண்ணைல கிடந்துகிடுதியா?’

தூத்துக்குடி உப்புக்காற்றுக்கு முத்துராசாவுக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். இரவில் சிலர் பின்பக்கமாக தோப்பில் நிற்பதையும், அவர்களுடன் ரகசியமாக மாடசாமிப்பிள்ளை பேசுவதையும் கவனித்தான்.

‘வெள்ளைக்காரனெல்லாம் இந்த நாட்டுலேர்ந்து ஓடணும்’ சுப்பிரமணிய சிவாவின் கண்கள் சிவந்திருந்தன. கூட்டத்தில் ஐம்பது பேர் அமர்ந்திருந்திருந்தார்கள். முத்துராசா இரண்டாம் வரிசையில் ஓரமாக அமர்ந்திருந்தான்.. ‘எப்படி ஓடவைக்கறது? அவன் எதுக்கு வந்தான்னு தெரியணும். எதுக்கு வந்தான்?’ சிவா கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். கூட்டம் சலசலத்து, புரியாது விழித்தது. ஆமா,வெள்ளக்காரன் எதுக்கு வந்தான்?

‘வியாபாரம்.. அதுதான் வெள்ளக்காரன் செய்யறான். இங்க நம்மகிட்டேர்ந்து அடிமட்ட விலையில வாங்கி , அங்க பொருளைச் செஞ்சு திரும்ப நம்மகிட்டயே வந்து விக்கறான். இவனுக்கு அடிமட்ட விலைக்குக் கொடுக்கறதுக்கு இந்த ஆங்கிலேய அரசாங்கம் கூட்டு. உங்களால, ஒரு அணா கூடுதலா ஒரு மூட்டை பருத்திக்குக் கேட்டுற முடியுமா?”

‘இல்லை’ என கூட்டம் தலையசைத்தது.

‘இவங்களை ஓட வைக்கணும்னா,  வயித்துல அடிச்சா மட்டும் போறாது. அரசாங்கத்தை அடிக்கணும். ஜெய் மாகாளி’

அடுத்தாற்போல குட்டையாக, குண்டான ஒரு மனிதர் மேடையில் நின்றார். காற்றில் அவரது பட்டு அங்கவஸ்திரம் அலையாட, தலைப்பாகையைச் சரிசெய்து கொண்டு மெதுவாக,கணீரென்ற குரலில் தொடங்கினார்.சிதம்பரம் பிள்ளை.. இவர்தானா?

‘நாம ஆயுதம் எடுத்துப் போராடணும்னு சிவா சொல்லுதாரு. நா வேண்டாங்கேன். வெள்ளக்காரனுக்கு தொழில் படுத்தா பயம். ஓடிறுவான். நாம வன்முறையில் ஈடுபடக்கூடாது. தைரியமா நிக்கணும். ஒத்துமையா, ஒருத்தர் விடாம, ஆங்கில பொருட்களை வேணாம்னு வைச்சா,...’

கூட்டம் முடிந்ததும், கிளம்பிய சிதம்பரம்பிள்ளை, மாடசாமியுடன் வந்த முத்துராசாவைப் பார்த்துப் புன்னகைத்தார். அந்த கண்களின் ஒளி அவனை ஊடுருவி லேசாக சிலிர்க்க வைத்தது.  மாடசாமி, சிவாவிடம் ஏதோ குனிந்து காதில் சொல்ல, அவர் முத்துராசாவை ஏறிட்டுப்பார்த்துப் பெரிதாகப் புன்னகைத்தார். ‘இங்க வாடே’ என்றார். அமைதியாக கைகட்டி பக்தியுடன் அருகில் நின்ற அவனது நெற்றியில் கையால் வருடினார். சிதம்பரம்பிள்ளை, சற்றே நின்றார்.

‘மாகாளி உன்மீது கருணை வைக்கிறாள். உனது சக்தியை , வீரத்தை இந்நாட்டுக்குக் கொடு. ஜகன்மாதா கேட்கிறாள்’ முத்துராசாவுக்கு அத்தொடுதலில், உடல் சிலிர்த்தது. ‘இனி இங்கு மட்டுமில்ல, திருநெல்வேலியிலயோ, மதுரையிலேயே தொழிலாளர் புரட்சின்னு வந்தா , நீ முன்னாடி நிக்கணும். நிப்பியா?’

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.