அத்தியாயம் 22
கனமழையில் காற்றே கரைந்திருந்தது போலிருந்தது ஆனிக்கு. மூச்சு விடச் சிரமப்பட்டபோது,
கனமழையில் காற்றே கரைந்திருந்தது போலிருந்தது ஆனிக்கு. மூச்சு விடச் சிரமப்பட்டபோது, முத்தாயி, சுருக்குப்பையில் வைத்திருந்த மிளகையும், துளசியிலையையும், வெற்றிலை இடிக்கும் சிறு உரலில் இட்டு இடித்து, உருண்டையாக்கி ஆனியிடம் கொடுத்தாள். துளசியின் வீரியத்தை ஆனி ஏற்கெனவே அறிவாள்.
ஆனி இரு துளசி இலைகளைப் பிய்த்து கசக்கி முகர்ந்தாள். மூச்சு லேசாக இளகியதைப் போல உணர்ந்த நிறைவில் முத்தாயியை நோக்கிப் புன்னகைத்தாள். ‘அதிகப்படியான ஈரப்பதம், மலைப்பகுதி, தேவையில்லாத பயங்கள், கவலைகள்.. இவை போதாதா எனக்கு?’
முத்தாயி, ஒன்றும் புரியவில்லை என்றாலும், தன்னிரக்கத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்தாள். மெல்ல ஆனியின், மெலிந்த கைகளைத் தடவிக்கொடுத்தாள். ‘சரியாயிரும்…சாஞ்சு ஒக்காந்துகிடுங்க’
முத்துராசா, ஆண்டர்சனுக்குப் பின்னே நடந்தான். மழையில் ஈரித்த புற்களும், இலைகளும் அதிக அரவமின்றி நடக்க உதவின. மெலிதாக, மவுனமாகப் பெய்த மழையின் ஓசையும், வெட்டுக்கிளிகளின் ஒலியும் மிக அதிகமாகவே கேட்டதாக ஆண்டர்ஸன் உணர்ந்தான். ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு அவனை ஆட்கொண்டது. இதுவரை இல்லாத உணர்வு... திரும்பிப் பார்த்தான். ஐந்து அடி தொலைவில் முத்துராசா, கையில் ஒரு கத்தியுடன்...துப்பாக்கி இடுப்பில். இவன் என்னைக் கொலை செய்யப்போகிறானோ?
சே என்று தனக்குள்ளே சலித்தான் ஆண்டர்சன். ஏன் திடீரென இப்படி வேண்டாத உணர்வுகள்? சட்டென அவன் நின்றான். ஏதோ ஒலிகள் முன்னே...
பின்னே திரும்பாமலே கையசைத்து முத்துராசாவைத் தடுத்தான். மெல்ல வரும்படி சைகை காட்டினான். ‘ஏதோ ஆட்கள் நடமாடுவது போல... சரசரவென ஒலிகள் கேட்கிறதா?’ என்றான் மிக மெல்லிய குரலில்.
முத்துராசாவின் கண்கள் இடுங்கின. கூர்மையாக முன்னோக்கி கவனித்தான். ஓசைகள் இப்போது வலது புறமாக.. ஏதோ ஒன்று தங்களை நோக்கி வருவதாக..
வேட்டையில் அடிப்படை விதி. பயம் வந்தால் சிதறி ஓடக்கூடாது. கூட்டமாக ஓடவேண்டும். தனியாகக் காணப்படும் விலங்கைத்தான் பிற விலங்குகள் தாக்கும். கூட்டம், ஒன்று சேர்ந்த சக்தியைக் குறிக்கும். தாக்குதல் சற்றே தடைப்படும்.
இருவரும் வேட்டையை அறிந்தவர்கள். வேறுவேறு புறமாக நோக்கியபடி, ஆயுதஙக்ளை எடுத்தனர். வரப்போகும் ஆபத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
ஆனியை மெல்ல எழுப்பி கைத்தாங்கலாக முத்தாயி வெளியே அழைத்து வந்தாள். அடைந்து கிடக்கும் இடத்தில் ஆனிக்கு மூச்சுமுட்டுவது கூடுமென்பது அவள் அறிந்த ஒன்று. ஈர விறகுகளை தீமூட்டி, நீரைக் கொதிக்க வைத்து, சிறுமஞ்சளையும், துளசி இலைகளையும் ஒரு கல்லில் அரைத்து வெந்நீரில் இட்டாள்.
‘கொஞ்சம் குனிங்க, ஆங், அப்படித்தான்.. மூச்சை உள்ளே இழுங்க. இப்படி, நான் செய்யற மாதிரி’ மூச்சை இழுத்துப் பிடித்து மெல்ல வெளியிட்டு காட்டி, ஆனியை ஆவி பிடிக்க வைத்தாள். ஆனியின் பையில் தேடி, நீலகிரி இலைகளை பொடிப்பொடியாக்கி, துணியில் பொதிந்து, ஆனியை அதில் மூச்சிழுக்க வைத்தாள்.
அசதியில் ஆனி சற்றே உறங்க, முத்தாயி வெளியே மழையைப் பார்த்திருந்தாள். வாசல் தீவட்டி மெல்ல அணையத் தொடங்கியதை அறிந்து, காவலில் நின்றிருந்தவனை அழைக்க வாசலுக்கு மெதுவாக நடந்தாள்.
‘எங்கிட்டிருந்து வாரான், வெரசலா?’ வாசலில் நின்றிருந்தவன் மற்றவனிடம் பேசியது கேட்டது. முத்தாயி எட்டிப் பார்த்தாள். சற்றே தொலைவில் ஒருவன் ஈட்டியை ஏந்தியபடி ஓடிவருவது தெரிந்தது.
மற்றவன் பதில் சொல்லாமல், விரைவாக மழையில் ஓடிவந்தவனை அருகில் அமரவைத்தான்.
‘என்னாச்சு இப்படி ஓடியாற?’
‘தொரைக்கு ஆபத்துடே. கிழக்காலேர்ந்து கொஞ்ச ஆட்கள் வளைச்சிருக்கானுவோ. நீங்க ரெண்டு பேரு வாங்க. பொம்பளேள் இருந்துகிடுவாளுவோ’
‘லே. அதான் முத்துராசா இருக்கார்லா? ஒங்கூட இருந்தவனுவ எங்க?’
‘ஒருத்தன அடிச்சுட்டானுவோ. நா பின்னாடி இருந்தேனா, பம்மிட்டேன் பாத்துக்க, அவனுவ பாக்கல. பேச நேரமில்ல,கெளம்புங்க’
இருவரும் தயங்கியது முத்தாயிக்குத் தெரிந்தது. ஆனி உறங்குகிறாள். நான் பார்த்துக்கொண்டுவிடலாம்.
‘உள்ளாற கேட்டுட்டு வாரன். பெரியவரு சேதுபதி ஆணைல்லா, நாமளா போயிடமுடியுமாடே?’
ஆனி லேசாக முனகினாள். முத்தாயி உள்ளே விரைந்தாள். ‘ஈர விறகு..புகை உள்ளாற அடிக்கி. நமக்கே மூச்சு முட்டும்லா’ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு, பனையோலை விசிறி கொண்டு வீசத்தொடங்கினாள்.
வாசலிலிருந்து ஒருவன் உள்ளே சற்று நுழைந்து நிதானித்தான். “அம்மா’
ஆனி சில்லென்ற காற்று பட்டு சற்றே கண்விழித்தவள், குரல்கேட்டு முழுதும் உணர்வுபெற்றாள்.
முத்தாயி அவளுக்கு விளக்கிச் சொல்ல, ஆனி எழுந்தாள். ’நீங்க போகலாம்’ என்பதாகக் கைகாட்டினாள். ’நாங்க பாத்துக்கொள்கிறோம்-ங்கறாங்க தொரையம்மா’ என்றாள் முத்தாயி, அவனிடம். ஆனி, தன் பையை எடுத்துவரச் சொல்லி , அதனுள்ளிருந்த பட்டுப் பை ஒன்றை வெளியே எடுத்தாள்.
சட்டென தீப்பற்றிய தீவட்டியின் ஜொலித்த செந்தங்க நிறத்தில், அது மேலும் சிவப்பாக மின்னியது. ‘இது ஆண்டர்ஸன் எனக்குப் பரிசளித்த கைத்துப்பாக்கி’ என்றாள் ஆனி. ‘தங்க மோதிரம் என்றால் ஒரு பயனும் இல்லை, ஆனா எப்பவும் கையில் இருக்கும். இதற்கு எப்போதாவது பயன் வரும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை’
இரு வீரர்கள், வந்தவனுடன் புறப்பட்டுப் போனதும், ஒரு ஒல்லி காவலன், முன்வாசலில் வந்து நின்றான். ‘என்னை மட்டும் விட்டுட்டுப் போயிருக்கானுவ. ஏன், நானுஞ் சண்ட போடமாட்டனா? அட, வந்திருக்கறது, மாடசாமியாவே இருக்கட்டுமே, நம்ம கிட்டயும் வித்தை இருக்குல்லா?’
முத்தாயி வியர்த்தாள் ‘மாடசாமின்னா சொன்னீய? அவுகளா காட்டுள்ளாற நிக்கா?’
‘அட, ஒரு பேச்சுக்குச் சொல்லுதேன்’. முத்தாயிக்குப் புரிந்துபோனது. எச்சரிக்கையாகிறான். ஏதோ விசயமிருக்கிறது.
‘கொஞ்சம் உள்ளாற வந்துகிடும், மழ அடிக்கில்லா?’ என்றாள் அன்பான குரலில்.
அவன் சற்றே வாசல் தாண்டி உள்ளே நின்றான். ‘நேத்திக்கே அரசல் புரசலாக் கேட்டேன் பாத்துக்க. மாடசாமி தலைமையில கொஞ்ச சுதேசிக்காரங்க திருவிதாங்கூர் பக்கம் தாண்டிப் போறானுவளாம். அவுகளப் பிடிக்கத்தான் இத்தனை திட்டமும். புலியுமில்ல ஒண்ணுமில்ல.’
‘அட, புலி வேட்டைன்னுதான சொன்னாங்க?’ உள்ளே போய் அணைந்து கிடந்த அடுப்பில் கரியைக் கிளறி ஊதினாள், லேசாக கங்கு உயிர்க்க, அவள் ஊத ஊத சற்றே தீ பரவி செந்நிறமாக இரு விறகுக் கரிக்கட்டைகள் கோபத்துடன் செந்நிறமாக ஜொலித்தன.
அதன்மேல், ஆறிப்போயிருந்த வெந்நீர் பாத்திரத்தை வைத்து சூடாக்கினாள். மேலும் துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கலத்தில் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். ‘மழக்காத்துக்கு, இந்த சுடுதண்ணி சொகமா இருக்கும். குடிங்க’ அது ஆனி நீராவி பிடித்த தண்ணீர் என்பதை கவனமாக மறைத்தாள்.
அவன் இரு மடக்கு உறிஞ்சிவிட்டு, தெம்பில் முகம் மலர்ந்தான். இருட்டில் அவள் யாரெனத் தெரியாத நிலையில் பேசலானான்.
‘அட மடச்சி மவளே, மாடசாமி புலிவேசம் கட்டுவாரு பாத்துக்க, அவுக கிராமத்துல புலி வேசம்னா அவருதான். அதான் புலின்னு மறைவாச்சொல்லி வைச்சிருக்காக. சரி, நமக்கெதுக்கு ராசாங்க விசயம்?’
‘சரி, இதெல்லாம் அந்த சேதுபதிக்கு தெரிஞ்சிருக்கும்லா? ஏன், முத்துராசாவ மட்டும் தொரையோட விட்டுட்டுப் போயிருக்காரு?’
அவன் முகம், வெளியே அடித்த மின்னலில் ஒரு கணம் பளிச்சிட்டு இருண்டது. அவன் மெதுவாகச் சிரிப்பது கேட்டது’ ஏப்பிள்ள, நீ யாருன்னு தெரியல. பெரிய ராசாங்க விசயம்.. பொம்பளேள்ட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது’
முத்தாயியின் உடல் ஒருகணம் விறைத்தது. ‘ஏங்.. எங்கிட்ட சொன்னா என்னா? நா என்ன சுதேசிக்காரவகிட்டயா சொல்லிருவேன்? இந்த தொரசானியம்மாவுக்கு ஏதோ எடுபிடி வேல பாக்கேன். சரி, சொல்லாட்டா போறும்வே. எனக்கென்னாத்துக்கு ராசாங்க விசயமெல்லாம்?’
அவன் சரியாக அவளது விலகலென்ற பிடியில் விழுந்தான். ‘அட, அதுக்கில்லப்பிள்ளே, சபாபதி அய்யாவுக்கும் அந்த முத்துராசாவுக்கும் ஆவாது. இன்னிக்கோ நாளைக்கோ சுதேசிங்களைப் பிடிக்கப் போகையில, அவங்க அடிச்சாப்புல, அந்த முத்துராசாவ அய்யா அடிச்சுப் போட்டுட்டாருன்னு வையி.. யார் மேலயும் பழி வராது’
முத்தாயி, தனது நடுக்கத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். அமைதியாக அவள் இருந்ததை கவனியாது அவன் தொடர்ந்தான் ‘இப்பம் ரெண்டு பேரு போயிருக்கானுவோ பாரு, அவனுவளுக்கு, தொர பக்கம் யாரு தாக்குகிற மாதிரி நின்னாலும் சுடணும்னு உத்தரவு. அவனுவ என்னா? எல்லாருக்குமே அப்படித்தான். அவர் பக்கம் நம்மாளுவ நிக்கானா, மத்தவன சுதேசி நிக்கானான்னு கேக்கவா முடியும்? இன்னும் வென்னி இருக்காப்பிளே?’
‘அப்ப அந்தாளு சேதுபதி என்னாத்துக்கு?’ என்றாள் வெந்நீரைக் கொடுத்தபடியே. அவள் குரலிலிருந்த நடுக்கத்தை மழையில் அவன் கேட்கவில்லை.
‘அவரென்னா? எவன் செத்தாலும் அவருக்கு பரிசுதான். முத்துராசாவத் தீத்துட்டா, அவருக்கு தடையில்ல. சுதேசியைக் கொன்னாலும், அவருக்கு பரிசுதான். நமக்குதான் இந்த நாதியத்த பொழப்பு பாத்துக்க. ஒனக்கு கலியாணம் ஆயிட்டாப்பிளே?’
‘இல்லண்ணாச்சி’
‘அங், செத்தாலும் பரவாயில்ல, ஒரு போலீஸ்காரனக் கட்டிராதே. ஒங்கிட்ட சொல்லி என்னவாகப்போவுது? ஒங்கப்பண்ட்டல்லா சொல்லணும்? எங்கிட்டிருந்து வார?’
‘தூத்துகுடிப் பக்கம்.’
‘எனக்கு என்னா தோணுதுன்னா’ என்று தொடங்கியவன் சட்டென நிறுத்தினான் ‘பிள்ள, உள்ளாற போயி அம்மா என்ன செய்யுதுன்னு பாரு. எங்கிட்ட வாயடிக்காத, வெளங்கா?’
அவள் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றாள். உடலில் நடுக்கம் குறையவில்லை. ஆனியின் அருகே குனிந்தாள். ஆனி விழித்திருந்தாள். ‘என்ன?’ என்பதுபோல் சைகையில் ஆனி கேட்க, முத்தாயி விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.
தொடரும்…