முகப்பு
கனவுக்கன்னிகள்

பத்மினி - 3. மன்னாதி மன்னனும்… காதல் மன்னனும்…

கணேசனுக்கு முன்பாகவே பத்மினிக்கு நன்கு அறிமுகமானவர் எம்ஜிஆர். ‘மோகினி’ சினிமாவில் நாட்டியம் ஆட,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

ணேசனுக்கு முன்பாகவே பத்மினிக்கு நன்கு அறிமுகமானவர் எம்ஜிஆர். ‘மோகினி’ சினிமாவில் நாட்டியம் ஆட, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்றனர் திருவாங்கூர் சகோதரிகள். அந்த நொடி முதலே, எம்.ஜி.ஆர். -  பத்மினி நட்பு அரும்பு விட்டது.

எம்.ஜி.ஆர். பிரபலமாகி மிக நீண்ட காலம் கடந்தே, எம்.ஜி.ஆரின் நிழல் காதலி பத்மினி ஆனார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம், 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன். அதில் பத்மினி, வெள்ளையம்மாளாகத் தோன்றினார். மதுரை வீரனின் முதல் மனைவி பொம்மியாக பானுமதி நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பானுமதி - பத்மினி இருவரும் இணை சேர்ந்தது, மதுரைவீரனுக்குப் புது மகத்துவத்தை ஏற்படுத்தியது. புரட்சி நடிகரின் முதல் வெள்ளிவிழாப் படம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.

பத்மினி நாயகியாக நடித்த படங்களில் நாட்டியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மதுரை வீரன், கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரிப்பு. செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அதன் முதலாளி லேனா செட்டியார். அதில், பத்மினிக்கு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் முழங்கால்களுக்கும் வேலை சற்றுக் கூடுதல்.

‘உத்தமவில்லன்’ கமலுக்கு அறியாப் பருவத்தில் நடனத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது, ‘ஏச்சிப் பிழைக்கும்…’ பாடலுக்கான எம்.ஜி.ஆர். - பத்மினியின் அங்க அசைவுகள்தான். அந்தக் காட்சிக்காகவே, மதுரை வீரனை மறக்காமல் நூறு நாள்களுக்கு மேல் பார்த்து ரசித்து, அதேபோல் பாதம் தூக்கி ஆடினார் பரமக்குடி கூத்தபிரான். கமலின் கலை வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி, மதுரை வீரனில் இருந்து மையம் கொண்டது.

அந்நாளில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ். மதுரை வீரனில் எம்.ஜி.ஆரும் – பத்மினியும் தனக்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து கூறியுள்ளார் –

‘பட்சிராஜா ஸ்டுடியோஸ் ஏழை படும் பாடு, பிரசன்னா படங்களின்போதே பத்மினிக்கு சினிமா நடனம் சொல்லித் தந்துள்ளேன். பத்மினி நல்ல டான்ஸர். அவரை மாதிரி பரதம் தெரிந்தவர்களுக்கு, ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் போதும். புரிந்துகொண்டு ஆடி பிரமாதப்படுத்திவிடுவார்கள்.

‘ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க…’ பாடலுக்கான ஒத்திகையில் நான் ஆடிக்காட்டியதும், இந்த மூவ்மென்ட் கஷ்டமாக இருக்கும்போலிருக்கிறதே’ என எம்ஜிஆர் முணுமுணுத்தார். பிறகு அவரே, ’எனக்குத்தானே பெயர் கிடைக்கும்; நானே முயற்சி செய்து ஆடிடறேன்’ என்று சொன்னபடியே நன்றாக ஆடினார். எம்.ஜி.ஆர். தயங்கியதுகூட, பத்மினியுடன் ஆடும்போது நம் ஆட்டம் அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்றுதான்’.

எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த, 'ஆடல் காணீரோ...' சூப்பர் ஹிட் பாடலுக்கு பத்மினி ஆடிய திருவிளையாடல் நடனம், மிகப் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. ஒப்பற்ற அந்த நாட்டியம், படத்தின் வேகமான ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்று, எம்.ஜி.ஆர். அதை நீக்கி விடுமாறு சொல்லி விட்டார்.

செட்டியார், பப்பியின்  பரம விசிறி. அதேநேரத்தில், எம்.ஜி.ஆரின் உத்தரவை அவரால் உதாசீனம் செய்யவும் முடியவில்லை. யவ்வன பம்பரமாகச் சுழன்றாடும் பப்பியின் பாதங்களை விட்டுத்தர முடியாது என மனத்தின் குரல் கூவியது. ஹீரோவின் தயவும் தேவை. வேறு வழியின்றி, இடைவேளையில் தசாவதார பாடல் காட்சி காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். - பத்மினி ஜோடியாக நடித்த ஐந்தும் சமூகப்படங்கள் அல்ல. அத்தனையும் ராஜா - ராணி கதைகள். மதுரைவீரனுக்கு அடுத்து, மெர்ரிலாண்ட் ஸ்டுடியோ தயாரித்த ராஜராஜன், மன்னாதி மன்னன், ராணிசம்யுக்தா, விக்ரமாதித்தன் ஆகியவை மற்ற நான்கு படங்கள்.

டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - ஏ.பி.கோமளா ரேர் காம்பினேஷனில், ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே…’ பாடல் மட்டும் ராஜராஜனை ஞாபகப்படுத்துகிறது.

ராஜராஜனில் ஒரு விசேஷம். அண்ணன் - தம்பிகளான எம்.ஜி.சக்ரபாணியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், அக்கா - தங்கைகளான லலிதா, பத்மினியுடன் நடித்த ஒரே படம். ‘ஆடும் அழகே அழகு…’ எனத் தொடங்கும் பாடலுக்கு, லலிதா - பத்மினியின் நடனம் நிறைவாக இடம் பெற்றது. அதன்பின்னர், லலிதா திருமணமாகிச் சென்றுவிட்டார். மீண்டும் நடிக்க வரவில்லை.

1960-ல் ராஜா தேசிங்கு - எஸ்.எஸ்.ஆர்., 1961-ல் அரசிளங்குமரி - எம்.என்.நம்பியார், 1971-ல் ரிக்ஷாகாரன் - ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரது மனைவியாகவும் பத்மினி, எம்.ஜி.ஆர். படங்களில் நடித்துள்ளார். சகோதரி பத்மினியுடன் கடைசியாக நடித்த ராசியோ என்னவோ, ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது.

தனக்கு முக்கியத்துவம் தராத எந்த சீனிலும் தான் இடம் பெறுவதை எம்.ஜி.ஆர். அனுமதிக்கமாட்டார். நாயகன் வெறும் காட்சிப் பொருளாகக் காட்டப்படுவதை விரும்பாதவர். அவரது ஆரம்ப சினிமா நாள்களில், வசனம் பேசவும் வாய்ப்பு கிடைக்காமல் வதைக்கப்பட்டிருக்கிறார். முந்தைய உள்குத்துக் காயங்களின் எதிரொலியால், எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார். ஆனால், அதற்கு விதிவிலக்கு  மன்னாதி மன்னன்.

கறந்த பால் போல் கொஞ்சமும் கலப்படமற்ற லதாங்கி ராகப் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ…’

எம்.எல்.வசந்தகுமாரி - டி.எம்.சௌந்தரராஜன் குரல்களில் அது ஒரு கோமள கீதம்! கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் என்பார்களே அப்படி.

காட்சியைச் சற்றே மனத்தில் இருத்திப் பாருங்கள். பத்மினியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே பாடும், பப்பி அற்புதமாக ஆடும் அபிநயச் சித்திரம்! அதில் ஒரே இடத்தில் உதயசூரியன்போல் தகதகக்கும் திறந்த மார்போடு அமர்ந்து, எம்.ஜி.ஆர். வாத்தியம் வாசிக்க, அதற்கேற்ப பத்மினியின் பாதங்களும் ஒலிக்கும். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நூற்றுக்கான சினிமாக்களில், அவர் இதுபோல் வேறு எந்தப் படத்திலாவது சும்மா உட்கார்ந்து பாடியதை யாரும் பார்ப்பது துர்லபம்.

நாடோடி மன்னனுக்கும் மன்னாதி மன்னனுக்கும் ஒரே வசனகர்த்தா கண்ணதாசன். மன்னாதி மன்னனில், ‘அச்சம் என்பது மடமையடா…’ உள்ளிட்ட பெரும்பாலான பாடல்கள் அவர் எழுதியவை. ஆனால், ‘ஆடாத மனமும்…’ மட்டும், மருதகாசியின் கை வண்ணம். எத்தனை முயன்றும் கவிஞருக்கு வார்த்தைகள் சரியாக அமையாததால், மருதகாசியிடம் எழுதி வாங்கினர்.

வரலாறு காணாத நாடோடி மன்னனின் மகத்தான வெற்றி, மருதகாசியின் கன்னித்தமிழில் சீரும் சிறப்புமாக  மன்னாதி மன்னனில் திக்கெட்டும் ஒலித்தது. சிவாஜி கணேசனின் சிரஞ்சீவி ஜோடியான பத்மினியும் வேறு எந்த சினிமாவிலும், மக்கள் திலகத்தின் அங்க அழகை, ஆற்றலை வர்ணித்து இத்தனை எடுப்பாகப் பாடி ஆடியிருப்பாரா...  யாம் அறியோம்!

நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப் பாதையில்
வீரநடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனியிடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
பசும் தங்கம் உனது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே
ஆடாத மனமும் உண்டோ…

1960 தீபாவளி ரிலீஸின்போது, இப்பாடல் வரிகள் இல்லாத, மன்னாதி மன்னன் விளம்பரங்களை அன்றைய தமிழர்கள் பார்த்திருக்க இயலாது.

மன்னாதி மன்னனில் கவனம் ஈர்க்கும் இன்னொரு புதிய அம்சம், க்ளைமாக்ஸ். பத்மினியை பி.எஸ்.வீரப்பா தன் ஆசைக்கு இணங்கச் செய்யும் கட்டம். அவரிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்கிற தவிப்பில், அவஸ்தையான சூழலில் எம்.எல்.வசந்தகுமாரியின் போராடும் குரலில், வீரப் பெண் சித்ராவின் (பத்மினி) தன்மானத்தைப் பெருமிதத்துடன் கம்பீரமாக இசைக்கும்…

‘கலையோடு கலந்தது உண்மை கற்புக் கனலோடு பிறந்தது என் தமிழ் ஆளும் பெண்மை…’

பத்மினியின் நாட்டியத் திறமையை வெளிப்படுத்த கிடைத்த மாறுபட்டக் கதைக் களம். 25 ஆண்டுகளுக்குப் பின், டி.ராஜேந்தர் அதே போன்ற பாடல் காட்சியை தனது ‘மைதிலி என்னைக் காதலி’ படத்தில் பயன்படுத்திக்கொண்டார். அமலா ஆட ஆட ‘நானும் உந்தன் உறவை நாடுகின்ற பறவை…’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் நெஞ்சைத் தொடும்.

எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி. எல்லாரையும்போல் மக்கள் திலகத்தின் மனிதநேயம், அவரது உள்ளத்திலும் உரிமையோடு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது. பத்மினியின் திருமணத்துக்கு முன்னே உருவான படம் ‘ராணி சம்யுக்தா’.

பிருதிவிராஜன், குதிரை மீதேறி விரைந்து வந்து சம்யுக்தாவைக் கவர்ந்து செல்ல வேண்டும். அந்தக் காட்சி எடுக்கப்படாமல் இருந்தது. பத்மினி அதை முடித்துத் தர வந்தபோது நிறை மாதக் கர்ப்பிணி. திரையில் அது தெரியாதபடி மறைத்துப் படமாக்குவது முக்கியம். எம்.ஜி.ஆர். அப்போது எப்படி நடந்துகொண்டார் என்பதை பத்மினியின் வார்த்தைகளில் வாசிக்கலாம்.

‘எம்.ஜி.ஆர். என்னை எப்போதும் ‘என்னம்மா தங்கச்சி, நல்லா இருக்கியா’ என்பார். நான் துணிச்சலாக குதிரை சவாரிக்குத் தயாரானேன். பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. என்னைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார். ‘உன் வயித்துல உள்ள பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா,  என்னம்மா நீ...?’ என்றார்.

கர்ப்பிணியை குதிரையில் எப்படி அழைத்துச் செல்வது, ஏதாவது பிசகாகிவிடுமோ என்று எம்.ஜி.ஆருக்கு ஒரே கவலை. தலையணையெல்லாம் வைத்து, பயப்படாதீங்க என்று எனக்கு தைரியம் சொல்லி, என்னை அந்த நிலையில் நடிக்கவைத்ததற்காக பட அதிபரைத் திட்டினார். புரொடியூசருக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘பாவம்! வயிற்றில் குழந்தையோடு இருக்கிறார். கஷ்டப்படுத்தாமல் காட்சியை எடுங்கள்’ என எச்சரிக்கை செய்தவாறே உடன் நடித்தார்’.



ராணி சம்யுக்தாவில் மட்டுமல்ல, ரிக்ஷாகாரனில் நடித்தபோதும் பத்மினியைப் புதிய சங்கடம் வாட்டியது. அப்போது, தனது ‘உலகம் சுற்றும் வாலிபனு’க்காக எம்.ஜி.ஆர். அயல்நாட்டுப் பயணத்தில் இருந்தார். கழக இடைத்தேர்தல்கள் என அனைத்து நொடிகளிலும் நேரம்போல் இயங்கினார். இடையில், பத்மினிக்கு அவருடைய கணவரிடமிருந்து குடித்தனம் நடத்த அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்து விட்டது.

 பத்மினிக்குப் பதற்றம் அதிகரித்தது. எம்.ஜி.ஆர். இருக்கிற பிஸியில், அவர் ஒத்துழைக்க நினைத்தாலும் அரசியல் குறுக்கிடுமே என்கிற தவிப்பு கூடியது. குறித்த காலத்தில், பத்மினி அவரது கணவரைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர். தன் மற்ற இயக்கங்களை ஒத்திவைத்துவிட்டு, இரவு பகலாகத் தொடர்ந்து பத்மினியோடு நடித்துத் தீர்த்தார். அதோடு மட்டுமல்ல, பத்மினி முன்னிலையில் வாத்தியாராகி மஞ்சுளாவுக்கும் மகிழ்ச்சியோடு பாடம் நடத்தினார்.

‘எங்க தங்கச்சியைப்  பார்! ஒத்திகைன்னாலும்கூட, டேக் மாதிரி எவ்வளவு கரெக்டா செய்யறாங்க பார். இதைப்போல நடிக்க நீயும் கத்துக்கணும்’.

பத்மினிக்கு 27 வருடங்களுக்கு மேலாக அரிதாரம் பூசியவர் மேக்அப்மேன் தனகோடி. அவரை அம்போ என்று விட்டுவிட்டு அமெரிக்காவுக்குப் போவதில் பத்மினிக்கு சம்மதம் கிடையாது. எம்.ஜி.ஆரிடம் சொன்னால் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கை. தனகோடியின் எதிர்காலப் பிழைப்பு குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டார்.  

சினிமா எஜமானர்களை எதிரிகளாகப் பாவிப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். தொழிலாளிகளிடம் தனிப் பிரியம் காட்டுவதே தலைவரின் ஸ்டைல். பத்மினி விஷயத்திலும் அது நிரூபணமானது. தன்னுடைய புதிய ஜோடியான லதாவுக்கு தனகோடியை மேக்அப்மேனாக எம்.ஜி.ஆர். நியமித்தார்.

எவ்வளவுதான் தோண்டித் துருவினாலும், எம்.ஜி.ஆர். - பத்மினி சமாசாரம் இவ்வளவுதான். அதற்காக, வாத்தியாருடைய ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தப்பட வேண்டாம். சரோவைப் பற்றி எழுதும்போது எம்.ஜி.ஆர். புராணம் சரளமாக நீளும்.

*

அடுத்து, காதல் மன்னனை கவனிக்கலாம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்னரே பத்மினியோடு அதிக அன்யோன்யம் கொண்டவர் ஜெமினி கணேசன். பத்மினி - ஜெமினியின் நட்புக்குக் களம் அமைத்துத் தந்தவை, வாசனின் ஜெமினி ஸ்டுடியோவும், பத்மினியின் மயிலாப்பூர் வீடும்.

 ஜெமினி - பத்மினி இருவரும் நட்சத்திரங்களாக ஆவோமா எனச் சிந்திக்காத அறியாப் பருவம். தோழமை அவர்களைத் துரத்தியது. லல்லி, பப்பி இருவரையும் ஏற்றிக்கொண்டு சைக்கிளில்  ட்ரிபிள்ஸ் போவதென்றால் ஜெமினிக்கு இரட்டிப்பு சந்தோஷம். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு மிதிவண்டி பழகக் கற்றுத்தந்தவர் ஜெமினி கணேசன்.

பத்மினி, உலக நாட்டியப் பேரொளியாக வருவார் என்கிற பகல் கனவெல்லாம் அன்று ஜெமினிக்குக் கிடையாது. அவர் நேசம் பாராட்டிய பப்பி, சின்னப் பெண். அவரோடு சேர்ந்து சினிமாவில் டூயட் பாடுவோம் என்றெல்லாம் காதல் மன்னன் நினைக்கவே இல்லை. ஜெமினியின் வசீகர வாலிபம், விரைவில் அவரை ஹீரோவாக்கிவிடும் என்று சிறுமி பத்மினி எண்ணியது நடந்தது. 

ஜெமினிக்கு இயல்பாகவே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. ஐம்பது அறுபதுகளில், வட இந்தியக் கலைஞர்களுடன் சென்னையில் ஸ்டார் கிரிக்கெட் மேட்ச் நடக்கும். ஜெமினி கேப்டனாகி வழிகாட்டுவார். பத்மினியின் வீட்டில் நெட் ப்ராக்டீஸ் நடைபெறும். பத்மினி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு கிரிக்கெட் கெய்டு ‘சாம்பார்’தான்.

ஜெமினியோடு பத்மினி முதன்முதலாக நடித்தது ஆசா தீபம் என்கிற மலையாளப் படம். தமிழிலும் ஆசைமகன் என்ற பெயரில் வெளியானது. நிஜ வாழ்வின் பிரியமான தோழி, அதில்  வில்லியாகத் தோன்றினார். ஆசை மகன் படத்தில் பப்பி மீது கத்தி வீச வேண்டிய துர்ப்பாக்கியம் ஜெமினிக்கு. ரிகர்சல் பார்த்தார்கள். ஜெமினி கத்தியை வீச, யாரும் எதிர்பாராத நிலையில் கதவைத் திறந்துகொண்டு பத்மினி வந்துவிட்டார். ஜெமினி வீசிய கத்தியை தன் கையாலேயே பத்மினி பிடித்ததில், பப்பியின் கையில் வெட்டுப்பட்டு குருதி வழிந்தது.

ரத்தப்பூக்களின் வாசத்தில் அவர்களின் கலைப்பயணம் தொடங்கியது. சிவாஜி - பத்மினியை வைத்து அன்பு என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவர் நடேசன். அவரது நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ், 1956-ல் ஜெமினி - பத்மினியை ஆசை படத்தில் முதன்முதலாகக் காதல் ஜோடியாக்கியது. ஜெமினி தன் ‘ஆசை’நாயகியை பாப்ஸ் என்று அழைக்கத் தொடங்கினார்.

ஆசையைவிட, 1957-ல் சிட்டாடல் நிறுவனத்தில் உருவான ‘மல்லிகா’, ஜெமினி - பத்மினி இணைக்கு முதல் வெற்றிச்சித்திரம்! மங்கையர்திலகத்துக்குப் பின் மதுரைவீரனைவிட, மல்லிகாவில் பத்மினியின் நடிப்பு பர்ஸ்ட் க்ளாஸ் எனப் பத்திரிகைகள் ஒரே குரலில் உரத்துக் கூறின. அதில் இடம் பெற்ற ‘நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம்…’, ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே…’ ஆகியவை சூப்பர் ஹிட் பாடல்கள்.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரம்மாண்டமான கருப்பு வெள்ளைச் சித்திரம் வஞ்சிக்கோட்டை வாலிபன். எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்க வாசன் முடிவு செய்தார். நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். தீவிர கவனம் செலுத்திய நேரம். வாசனுக்கு அவரது கால்ஷீட் கிடைக்காமல் போனது. பின்னர் ஜெமினி கணேசன் அதில் ஹீரோ ஆனார். அப்படியும் பாஸ் திருப்தி அடையவில்லை. ரொமான்டிக் காதலன், ஆக்ஷன் ஹீரோவானால் ஜனங்கள் படம் பார்க்க வர வேண்டுமே.

தன் படத்துக்கு ஒரு தனித்தன்மையை வேண்டி அன்றைய மிகப்பெரிய நாட்டியத்தாரகைகளாகவும், அகில இந்திய நட்சத்திரங்களாகவும் இருந்த பத்மினி, வைஜெயந்திமாலா இருவரையும் நாயகிகளாக நடனமாடவிட்டார். ஒரே சமயத்தில் தமிழ், ஹிந்தி (ராஜ் திலக்) இரண்டிலும் அதே கலைஞர்களுடன், செலவைப் பார்க்காமல் உருவாக்கினார். ரசிகர்களின் ஆர்வத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கூடுதலாக, எல்லோரையும் வாயைப் பிளக்கச் செய்யும் வகையில்,  பாதங்களால் அனைவரின் நெஞ்சங்களிலும் என்றுமே அழியாத பரவச கோலத்தை அள்ளித் தெளித்தார்.

வஞ்சிக்கோட்டை வாலிபனின் ‘கண்ணும் கண்ணும் கலந்து...’ என்கிற போட்டி நடனம், பத்மினியின் கலைவாழ்வில் நிச்சயம் ஒரு காலப் பெட்டகம்! ஏறக்குறைய, ஒன்பது நிமிடங்கள் பத்மினியும் - வைஜெயந்தியும் ஆடிய ‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி…’ நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும். அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, பத்மினியின் முட்டி பெயர்ந்துவிட்டது. குருதி கொப்பளிக்கும் பத்மினியின் அனுபவத் தடம் இது.

‘படப்பிடிப்புத் தளம், காலை நான்கு மணிக்கே விளக்குகள் அமைத்துத் தயாராகிவிடும். எப்போதும் ஆடத் தயாராக இருக்க வேண்டும். அதனால் மேக்கப்பை  கலைக்காமல் ஜரிகைப் புடைவையும் நகைகளுமாக நாள் முழுதும் அமர்ந்திருப்போம். சற்று நீளமான பாடல். உண்மையிலேயே சவாலாக இருந்தது. காட்சிகள் வேகவேகமாக மாறும். ‘பார்க்கும் ரசிகர்கள், சலித்துக்கொள்ளவே கூடாது. ஒவ்வொரு இடத்திலும் டெம்போ கொஞ்சமும் குறையாமல் ஆட வேண்டும்’ என்று வாசன் சொல்லிவிட்டார்.

‘எஸ்.எஸ்.வாசன் மிகப்பெரிய டைரக்டர். சமயோசிதம் தெரிந்தவர். திருப்தி ஏற்படுகிற வரையில் ஷாட் முடியாது. ஷாட் எடுத்து முடிந்ததும், தன்னுடைய உணர்ச்சிகளை வெளியே காட்டமாட்டார். அவரிடமிருந்து கட், ஓகே என்று எந்த வார்த்தையும் வராது. ‘இதை மறுபடியும் ஒரு தரம் எடுத்துப் பார்க்கலாமே’ என்பார். முழுத் திருப்தி ஏற்படுகிறவரையில் என்னையும், வைஜெயந்தியையும் வைத்துத் தொடர்ந்து வேலை வாங்கினார்.

‘நீங்கள் பார்க்கும்போது நானும் வைஜெயந்தியும் சேர்ந்து ஆடுவதுபோலக் காட்சிகள் வரும். நிஜத்தில், பெரும்பகுதி காட்சிகளைத் தனித்தனியே எடுத்தார்கள். சிலவற்றை மட்டும், ஒன்றாக ஆடுவதுபோல் படமாக்கினார்கள். அவர் எப்படி ஆடினார் என்று எனக்குத் தெரியாது. நான் எப்படி ஆடினேன் என்பதையும் வைஜெயந்தி அறியவில்லை. 

‘சாதூர்யம் பேசாதடி என்கிற வரிகள் ஒலிப்பதற்கு முன் நான் முட்டி போட்டு ஆடுவேன். அவ்வாறு தரையில் அங்கும் இங்கும் ஆடியபோது, முழங்காலில் இருந்து ரத்தம் தெரித்தது. இடையில் நிறுத்தினால், மீண்டும் அத்தகைய வேகமான அங்க அசைவுகள் அமையாமல் போகலாம். எனவே, வலியைப் பொறுத்துக்கொண்டு சுழன்று சுழன்று ஆடி முடித்தேன். ஆர்வக்கோளாறில், ரத்தம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

‘மொத்தக் காட்சியையும் எடுத்து முடிந்ததும் அப்பாடா என்றிருந்தது. படத்தில் பார்த்தபோது ஒரே பிரமிப்பாகத் தோன்றியது. அத்தனை ஜோராக அமைந்துவிட்டது.

‘இந்தக் காட்சியையொட்டி எங்கள் இருவருக்குமே ஒரு போட்டி இருந்தது. பிரமாதமாக ஆட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. செட், ஜோடனை, எங்களது உடை, நகைகள், மேக்கப் எல்லாவகையிலும் ஒரு சவால் பரவியிருந்தது. ஒருவருக்கொருவர் தோல்வி – வெற்றி இல்லாமல் ஈடு கொடுத்தோம்.

‘படம் வெளிவந்தபோது, அந்த நடனத்தை மக்கள் எனக்கும் வைஜெயந்திக்குமான உண்மையான போட்டியாகவே எண்ணிக்கொண்டார்கள். யார் முந்திக்கொள்வார்கள் என்று நாற்காலியின் நுனிக்கே ரசிகர்கள் வந்து விடுவார்கள்’.

ஏறக்குறைய ஆட்டம் பூர்த்தியாகும் தருணம். பத்திரிகையாளர் நாரதர் ஸ்ரீனிவாசராவிடம் நயமாகக் கூறப்பட்ட விஷயம், ‘போட்டியின் முடிவில் பத்மினி தோற்பதாகக் காட்டக்கூடாது. நாரதர் ஸார்! உங்க பாஸ்கிட்ட கண்டிப்பா சொல்லிடுங்க. எங்க பப்பி எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது உங்களுக்கே தெரியும்.அவள் தோல்வி அடைவதாகக் காட்டினால், அவளுடைய பெயர் கெட்டுப்போகும் ஆமா! அவள் ஜெயிக்காமல் போவதாக நீங்கள் எடுப்பதானால், பப்பி ஷூட்டிங் வரமாட்டாள்’ - தாயார் சரஸ்வதி அம்மாள், சர்ச்சையைக் கிளப்பினார்.

சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவரில்லை, வைஜெயந்தியின் வளர்ப்புப் பாட்டி யதுகிரி. ‘எங்க பாப்பா தோற்பதாகக் காட்டக்கூடாது’.

நாரதர்,  நடந்ததை முதலாளியிடம் விளக்கினார். இரண்டு நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார் வாசன். திரைக்கதையில் லேசான மாற்றம். பத்மினியும் வைஜெயந்தியும் ஆக்ரோஷமாக ஆடிடும் நிலையில், சபாஷ் சரியான போட்டி என்பார் பி.எஸ்.வீரப்பா. சில நிமிடங்களில் யாருக்கு வெற்றி என்பது தெரிவதற்குள், ஜெமினி விளக்கை அணைத்துவிடுவதாகக் காட்சி முடியும்.

தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியின் பெயரும், வடக்கில் ராஜ்திலக்கில் வைஜெயந்தியின் பெயரும் டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.

1959-ல் வீரபாண்டிய கட்டபொம்மன். அதில் பப்பியின் அறிமுகக் காட்சி ஏக அமர்க்களம். ‘அஞ்சாத சிங்கம் என் காளை…’ என ஆடல் பாடலுடன் களை கட்டும். பத்மினியின் தலை அலங்காரமும், காஸ்ட்யூம்களும் மகளிரால் மறக்கமுடியாது. பத்மினி, ஜெமினியின் மனைவியாக, அவரைப் போருக்கு அனுப்ப அஞ்சி, ‘போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்…’ என்று காண்பவர்களையும் அழவைப்பார். ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’வுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஜெமினிக்காக பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய முதல் டூயட் அது.

1960-ல், ஸ்ரீதரின் மீண்ட சொர்க்கத்தை யாரால் மறக்க முடியும்! அதில், பரதக்கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அதி அற்புதமான நிர்மலா என்கிற வேடம் பத்மினிக்கு. திரையில் பத்மினி தெரியவில்லை. நிர்மலாவே யாதுமாகி நின்றாள். ஜெமினி அவரை நாட்டியத்தில் நெறிப்படுத்தும் காதலனாக நடிப்பில் சிகரம் தொட்டார். தொழில்நுட்ப ரீதியில் மிகச்சிறந்த படமாக உருவான மீண்ட சொர்க்கம், வர்த்தக ரீதியில் தோல்வி.

‘மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்…’


என்கிற கண்ணதாசனின் காவிய சோகமும், டி.சலபதிராவின் தனிமை ஏக்கம் த்வனிக்கும் மெல்லிய சிற்றோடை இசையும், பி.சுசிலாவின் உருக்கமான குரலில் இழையோடும் பிரிவின் தேய்மானமும், பத்மினியின் சித்திரப்பாவை நடிப்பும்... மீண்ட சொர்க்கத்தில் காலக் கரையான் அரிக்காமல் இன்னமும் மிச்சம் இருக்கின்றன. கோடிக்கணக்கான உலகத் தமிழச்சிகளது நெருக்கடியான இரவுகளில், துன்பத்தின் நீளத்தைக் குறைக்கும் இதமான மயிலிறகு ஸ்பரிசம் அப்பாடல்!

1966 சித்தியில், பத்மினியின் கண்ணியமான காதலனாக வந்தவர் ஜெமினி. அதற்குப் பிறகு ஜெமினி - பத்மினி ஜோடி நடித்த படங்கள்,  எதிர்காலம், திருமகள், தேரோட்டம், அப்பா டாட்டா ஆகியவை. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைகளைச் சொன்னபோதும், மக்களின் வரவேற்பைப் பெறவில்லை.

அவற்றில், மல்லியம் ராஜகோபாலின் படைப்பான ‘அப்பா டாட்டா’, மிக வித்தியாசமானது. பெற்ற குழந்தையை மனைவி சரியாகக் கவனிப்பதில்லையோ என்கிற சஞ்சலத்தில் உழலும் கணவனாக ஜெமினியும், அதனால் ஏற்படும் கோபதாபங்களால் நிஜமாகவே பிள்ளையைத் தொலைத்துவிடும் மனைவியாக பத்மினியும் வருவதாகக் காட்சிகள் பின்னப்பட்டிருக்கும். மிக காலதாமதமாக வெளிவந்து மக்கள் மனத்தில் பதியாமல் போனது.

அதில், பி.சுசிலாவின் குரலில் ஒலித்த தாலாட்டு -

‘கிண்ணத்தில் தேன் எடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை…’


என்கிற கண்ணதாசனின் சூப்பர்ஹிட் பாடல், எத்தனை பேருக்கு இன்று நினைவில் நிற்கும்!

பீம்சிங்கின் காலத்தை வென்ற பா வரிசைப் படங்களின் கதை ஆசிரியர் எம்.எஸ்.சோலைமலை. அவர் முதன்முதலாகத் தயாரித்து இயக்கிய படம், எதிர்காலம். அதில், பத்மினிக்கு சேரியில் வசிக்கும் ரவுடிப் பெண் வேடம். அதற்காக ரிக்ஷா ஓட்டவும், மெட்ராஸ் பாஷை பேசவும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

விமரிசனம் எழுதிய தமிழகத்தின் பிரபல முன்னணி வார இதழ் -

‘பத்மினியைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தப் படத்துக்குப் போனால், மிகுந்த மனக்கஷ்டத்துக்கு உள்ளாகக்கூடும்’ என்று எழுதியது.

மெர்ரிலாண்ட் சுப்ரமணியத்தின் குமாரசம்பவம் என்ற  மலையாளப் படத்திலும் பரமசிவனாக ஜெமினியும், பார்வதியாக பத்மினியும் நடித்திருக்கிறார்கள். பாலமுருகனாக நின்றவர் ஸ்ரீதேவி.

                                  *** 

முழு கட்டுரையைப் படிக்க →