சாவித்ரி-11. நட்சத்திர நாற்காலி!
இதுவரை நீங்கள் அறியாத சாவித்ரியின் 11. நட்சத்திர நாற்காலி!இதுவரை நீங்கள் அறியாத சாவித்ரியின் ‘ஸ்டார் டைரி’யிலிருந்து சுவாரஸ்யமான சில பக்கங்கள்:
இ
துவரை நீங்கள் அறியாத சாவித்ரியின் ‘ஸ்டார் டைரி’யிலிருந்து சுவாரஸ்யமான சில பக்கங்கள்:
‘நான் முதன் முதலில் பணம் என்று சம்பாதித்தது 11 வயதில். பால்யத்தில் இனிமையாகப் பாடுவேன். விஜயவாடா வானொலி நிலையத்தில் என்னைப் பாட அழைத்தார்கள். அதற்குச் சன்மானமாகப் பத்து ரூபாய்க்கான காசோலை கிடைத்தது. தொடர்ந்து பாடினேன். தொகையும் படிப்படியாகக் கூடி முப்பது ரூபாய் ஆனது.
வானொலியில் பாடுவதற்குக் காசு தருவார்கள் என்று கூடத் தெரியாது. பணம் சம்பாதிப்பது பற்றியச் சிந்தனைகள் அரும்பாத பருவம்! அதற்கான தேவைகளோ அவசியமோ புரியாதத் தருணம். என் குரலால் கிடைத்த வருமானத்தில் அம்மா எனக்கு ஒரு தங்கமோதிரம் போட்டார்கள்.
அடுத்து நாட்டியத்தில் புகழ் பெற வேண்டி தினமும் ஆறு மணி நேரம் தொடர்ந்து பரதம், குச்சுப்புடி ஆடப் பயிற்சிகள் மேற்கொண்டேன். ஒரு கலை நிகழ்ச்சியில் எட்டு பவுனில் பதக்கம் பரிசாகக் கிடைத்தது. அதை அழித்து நெக்லஸ் செய்தார்கள். பொன்னாலான ஆபரணங்கள் என்றால் எல்லாப் பெண்களுக்கும் ஆசை . நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
தமிழில் மிகப் பிரபலமான ஒரு வேடத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு தேடி வந்தது. நான் ஏற்க மறுத்தேன். அது என்ன படம் தெரியுமா?
மெட்ராஸ்ல நான் பார்த்த முதல் நாடகம் ரத்தக் கண்ணீர். அது கூட அந்த ட்ராமா படமாகிறதால, காந்தா ரோல்ல நான் நடிக்கணும்றதால பார்க்கச் சொன்னாங்க. அதுல வர்ற டயலாகை கேட்டுப் பயந்து பாதியிலேயே எழுந்து போய் விட்டேன்.
ரத்தக் கண்ணீர் ஷூட்டிங் தொடங்கியது. முதல் ஷாட்லயே அடி காந்தான்னு டயலாக் ஆரம்பிச்சுது. ‘பசிக்குது. வீட்டுக்குப் போறேன்னு’ சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.
சினிமால சேர்ந்த புதுசுலயே 8 படங்கள்ளே ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிக்கறது அப்போ பெரிய காரியம். மூணு மாசம் ரிகர்சல் பார்த்துட்டுத்தான் செட்டுக்குள்ளயே நுழைவோம்.கேமராமேன் நிற்கச் சொன்னார்னா... அவர் உட்காருன்னு சொல்ற வரைக்கும் நாங்க உட்கார மாட்டோம். ப்ரொடியூசர், டைரக்டர் செட்டுக்குள்ள வந்தாங்கனா எவ்வளவு நடுங்குவோம் தெரியுமா...?
முதலில் நடிக்கத் தொடங்கிய போது எனக்கு பயமும் கூச்சமும் ரொம்பவே அதிகம். யாருடனும் பழக மாட்டேன். ஏன் பேசவும் தயங்குவேன். எனக்கு ஏராளமாகக் காதல் கடிதங்களும் வர ஆரம்பித்தது. அம்மாவுக்குத் தெரியாமல் அதை எங்கே ஒளித்து வைப்பது?
ஒருநாள் உடன் நடித்துக்கொண்டிருந்த ஏ.நாகேஸ்வரராவிடம் என் தவிப்பைச் சொன்னேன்.
‘லவ் லெட்டர்ஸ் பார்த்து பயப்படாதே. ஃபேன்ஸ்கு யாரைப் பிடிக்குதோ அவங்களுக்கு மட்டும் தான் கடுதாசி போடுவாங்க. எல்லாருக்கும் எழுத மாட்டார்கள். சவுத்ல உன்னைத் தங்களோட ஃபேவரைட் டீரிம் கேர்ளா கொண்டாடறாங்க. அதுக்காக நீ ஜனங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.
விசிறிங்க இல்லன்னா நமக்கு இங்கே வேலை கொடுப்பாங்களா...? உன் மேலே அபிமானம் வெச்சிருக்காங்கன்னா நீ பெரிய ஸ்டார் ஆயிட்டேன்னு அர்த்தம். சினிமாவில் நடிக்க வந்த பிறகு இப்படி இருந்தால் எப்படி? எந்த விஷயத்திலும் ஒழுக்கம், கவனம், கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது முக்கியம். மற்றபடி சரளமாகப் பேசித் தாராளமாகப் பழகுவதே சரி.’
என்று எனக்கு ஏ. நாகேஸ்வர ராவ் அறிவுரை கூறினார். பின்னர் மெல்ல மெல்ல நான் தைரியம் பெற்றேன்.
‘எதையும் ஜாக்ரதையா கேட்டுக் கொண்டு கருத்தைச் செலுத்தி கொஞ்சம் கற்பனை கலந்து நடிக்க வேண்டும்.’ என்பார் என்.டி. ராமாராவ். அவர் சொன்ன மாதிரியே வாழ்ந்து காட்டினார். நர்த்தனசாலா படத்தில் அவருக்கு அர்ஜூனன் வேடம். அர்ஜூனன் விராடனின் சமஸ்தானத்தில் பிருகந்நளையாக மாறும் காட்சிகளில் நடிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து டான்ஸ் ரிகர்ஸல் பார்ப்பார் என்.டி. ஆர்.
எங்க பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர். நான் நடிக்க ஒதுக்கிய தேதிகளை ப்ரொடியூசர்கள் யாராவது, பயன்படுத்திக் கொள்ளாமல் போனால், அவருக்கு ரொம்பவும் கோபம் வந்துவிடும். காலை ஆறு மணிக்கு ஷூட்டிங் என்றால் என்னை ஐந்தரை மணிக்கே செட்டில் உட்கார வைத்து விடுவார். அட்ஜட்ஸ்மென்ட் என்கிற வார்த்தையே அவருக்குத் தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் என் கால்ஷீட் தேதிகளை நானே பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
‘சாவித்ரிக்கு நடிப்பு வராது- நடனம் ஆடலாம்.’ என்று சொன்ன டைரக்டர் எல்.வி. பிரசாத், பின்னர் சாவித்ரிக்கு டைரக்டரே தேவை கிடையாது என்று பெருமையாகக் கூறினார். பிரசாத் இயக்குநர் மட்டும் அல்ல. நல்ல நடிகரும் கூட. பிரசாத்தே நடித்து முக பாவங்களை வெளிப்படுத்துவார்.
(பிரசாத்தை திரையில் காண விரும்புகிறவர்கள் கமலின் 100-வது படத்தைப் பார்க்கவும். மாதவியின் தாத்தாவாக ராஜபார்வையில் எல்.வி. பிரசாத் சக்கை போடு போட்டிருப்பார்.)
மிஸ்ஸியம்மாவில் என்னிடம் ஒரேயடியாக கோபப்பட்டார். எனக்கு ரோஷம் வந்துவிட்டது. அந்தக் காட்சியில் சிறப்பாகவே நடித்து முடித்தேன்.
‘நான் கோபப்பட்டதற்கு வருத்தமா மகளே! உன்னை நன்றாக நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நடித்தேன்.’ என்றார் எல்.வி. பிரசாத்.
‘உடம்பை சீராக வைத்துக் கொள். பருமனை குறைத்துக் கொள்.’ என்பார் அடிக்கடி.’
---------------
நீங்கள் எங்காவது சொந்த ஊரிலோ, டூரிஸ்ட் ஸ்பாட்டிலோ, அல்லது மாமன் - மச்சான் தயவில் சினிமா ஸ்டுடியோக்களிலோ ஷூட்டிங் பார்த்திருக்கக் கூடும். ஷாட் ஓகே ஆனதும் இன்றைக்கு, கேரவனில் ஒளிந்து கொள்கிறார்கள் உங்களின் கனவுக் கன்னிகள். முன்பு அப்படி அல்ல.
பந்தாவாக கால் மேல் கால் போட்டு ஸ்டார் சேர் எனப்படும் நட்சத்திர நாற்காலியில் ஒய்யாரமாக உட்கார்ந்திருப்பார்கள். அதை முதலில் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சாவித்ரி!
கே. பாலாஜியின் சினிமா கம்பெனியில் ‘நேற்றுப் பூக்கள்’ பயன்படுத்திய டம்ளர் முதலிய பாத்திரங்கள் கூட நட்சத்திரப் பெயரோடு ஜே ஜே என ஜொலிக்கும். சில பிரபலங்கள் தங்களின் அபிமான ஜோடிகள் உபயோகித்த டம்ளரைப் பயன்படுத்தி ஆத்ம சாந்தி பெறுவதும் உண்டு.
ஸ்டார் சேரின் தத்துவம் என்ன? சாவித்ரி மாத்திரம் பயன்படுத்தும் தனி இருக்கை அவ்வளவே. நாற்காலியின் முதுகில் அவரது பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும். மற்றவர்கள் அமர இயலாது. அது ஒரு வகையான சவுகர்யம்.
ஒரு சினிமாவில் நாலைந்து முன்னணி நடிகைகள் சேர்ந்து நடிப்பது அப்போது சர்வ சாதாரணம். உதாரணமாக சாவித்ரி நடித்த படங்களில் எம்.என். ராஜம், கண்ணாம்பா, ராஜசுலோசனா, தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜா ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள்.
ப்ரொடக்ஷனில் கொண்டு வந்து போடும் நாற்காலிகளில் ஷூட்டிங் பார்க்க வரும் விஐபிகளோ, அவர்களது சின்ன வீடுகளோ உட்கார்ந்து விட்டால், வேர்க்க விறு விறுக்க நடித்து விட்டு வரும் நாயகி எங்கு போவார் ?
பையன் சேர் கொண்டு வந்து போடும் வரையில் காத்திருத்தல் சங்கடம். அதனால் சாவித்ரி தன்னிச்சையாக யோசித்து ஏ. நாகேஸ்வர ராவுடன் கூடிப் பேசி, கலந்து ஆலோசித்து நட்சத்திர நாற்காலியை அறிமுகம் செய்தார். மற்றவர்களுக்குத் தொந்தரவு தராத வகையில் எளிமையாக நடந்து கொள்ள அவருக்கு அடக்கமாக ஒரு வழி கிடைத்தது. பின்பு அதுவே அநேகப் புதுமுகங்களின் அட்டகாசத்துக்கும் அட்சயப் பாத்திரமாகவும் ஆனது.
‘எங்களுக்காக உட்கார தனியா ஒரு ஸ்டார் சேர் கொண்டு வருவதற்கு நாங்கள் முதலில் எப்படிப் பயந்திருக்கிறோம் தெரியுமா?’ - சாவித்ரி.
---------------------------
காரி’கை!
சாவித்ரியின் கார் எண்கள் எம்.எஸ்.இசட் 444. மற்றும் 0288 டிசோடா கார்.
சாவித்ரி பிறந்த வேளையில் பெரியப்பா சவுத்ரிக்கு ‘ஸ்டுடிபேக்கர்’ கார் ஏஜென்ஸி கிடைத்தது. தாய்ப்பாலின் வாசத்தோடு அவர் முதன் முதலில் பயணித்தது ஸ்டுடிபேக்கரில்.
ஸோ, கார் வாசனை சாவித்ரிக்கு இயல்பாகவே பிடித்தமான ஒன்றாகி விட்டது. இரண்டு பேர் மட்டும் அமரக் கூடிய டூரர் காரே சாவித்ரியின் ஸ்பெஷல் சாய்ஸ்!
சென்னைக்கு வந்த புதிதில் 14 வயதில், தெலுங்கு சம்சாரம் படத்துக்காக மூன்றே நாள்களில் மெரினா கடற்கரையிலும், மதராஸப் பட்டினத் தெருக்களிலும் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார். 1952ல் சாவித்ரி வாங்கிய முதல் கார் மாரிஸ் மைனர்.
ஜெமினி-சாவித்ரியின் காதல் வாகனமாக பவனி வந்தது 1948 ஆம் மாடல் ஃபோர்டு பெர்பெக்ட். எண் எம்.எஸ்.பி. 9282.
‘மனம் போல் மாங்கல்யம்’ தயாரித்த நாராயணன் அய்யங்காரிடமிருந்து, 1951ல் ஆறாயிரம் ரூபாய் கொடுத்து ஜெமினி கணேசன் முதன் முதலில் வாங்கியது.
ஷூட்டிங் இடைவேளைகளில் ஓய்வுக்காக சாவித்ரி ஒதுங்கும் அந்நாளைய கேரவன் அது. ஜெமினிக்கு மிகவும் ராசியான கார். சுப விரயங்கள், மங்கல நிகழ்வுகளுக்கும், மற்றும் மெரினா பீச்சில் புஷ்பவல்லி மற்றும் சாவித்ரியுடனான ஐ லவ் யூ! அரங்கேற்றங்களுக்கும் சென்டிமென்டாக அதைப் பயன்படுத்தினார் காதல் மன்னன்.
ஜெமினி- சாவித்ரி மட்டுமல்ல சிருங்கேரி சுவாமிகள், பெருந்தலைவர் காமராஜர், எஸ்.எஸ். வாசன் ஆகியோரும் அதில் பயணித்த புகழ் அதற்கு உண்டு.
இடது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்து ஹபிபுல்லா சாலை இல்லத்திலிருந்து ஜெமினிக்கோ, ஏவிஎம்முக்கோ, விஜயா- வாகினிக்கோ செல்ஃப் டிரைவிங்கில் அதி வேகமாகச் சென்ற ஒரே திரைத் தாரகை சாவித்ரி மாத்திரமே. பல நாள்கள் அவருக்கும் ஜெமினி கணேசனுக்கும் யார் முதலில் ஸ்டுடியோ போய்ச் சேர்வது என்பதில் பந்தயம் நடக்கும்.
1961ல் ‘எல்லாம் உனக்காக’ படத்தில் கார் ரேசில் கலந்து கொள்ளும் நாயகியாக, சாவித்ரி நடித்தது நிழல் சுகம்!
நிஜத்தில் 1963 ஜனவரியில் நடிகையர் திலகம் சோழவரம் கார் பந்தயத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். சாவித்ரியோடு அன்றைய போட்டியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்கள் ஜெமினி கணேசன், கே. பாலாஜி, ’குலதெய்வம்’ ராஜகோபால்.
கார் சவாரியில் மட்டுமல்ல குதிரை ரேஸில் பங்கேற்பதிலும் ஜெமினி - சாவித்ரி ஜோடி ஆர்வமுள்ளவர்கள். புது வருஷம், பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் இருவரையும் ரேஸ் கோர்ஸில் பார்க்க முடியும். அவர்கள் பணம் கட்டும் குதிரை முதலில் வராது என்பது சுவாரஸ்யம்.
-------------------------------------
பாரதி விழா!
தமிழ்த் திரை மகாகவி பாரதி மீது அரிதார பந்தம் ஏற்படுத்திக் கொண்ட காலம் ஒன்று உண்டு.கோலிவுட் பரிவாரங்களோடு எட்டயபுரம் வரை சென்று, நடிகர்திலகம் மிகப் பிரமாதமாக பாரதியாருக்கு விழா எடுத்து திரும்புவார். அவரைத் தொடர்ந்து 1963ல் ஜெமினி-சாவித்ரி ஜோடியும் அத்திருப்பணியைச் செய்தார்கள்.
சென்னையிலிருந்து காரில் புறப்பட்ட நடிக மன்னனுக்கும்- நடிகையர் திலகத்துக்கும் வழி நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அற்புத வரவேற்பு அளித்தனர். சுவர்கள் பூராவும் ‘ரத்தத்திலகம்’பட ரிலீஸ் போஸ்டர்கள்.
திருச்சியில் சாவித்ரிக்கு ஜே சொல்லியவாறு திரண்டு நின்றன தாய்க்குலங்கள்.
புரட்டிப் போடும் புரட்டாசி வெயில். ரத்தத்திலகத்தில் வந்த ஷேக்ஸ்பியரின் டெஸ்டிமோனாவை நேரில் காணும் ஆவலில் காற்றும் தற்காலிக விடுமுறை எடுத்துக் கொண்டது.
‘அம்மா நீங்க மகராஜியா இருக்கணும்!’ சாவித்ரிக்காக வான் முட்டும் வரை வாழ்த்து கோஷங்கள்.
பெருங்கூட்டத்தில் ஒருத்தியாகச் சிக்கிக் கொண்டு திணறினார் சாவித்ரி. இலேசாக கோபம் கூட வந்தது. வழியும் வியர்வையையும் துடைக்க இயலாமல் எரிச்சல், கெஞ்சல், பரிதாபம் கலந்தக் கதம்பக் குரலில்
‘இப்படி நெருக்கியடிச்சீங்கன்னா நான் எப்படி மகராஜியா இருக்க முடியும்...?’ என்று முனகினார்.
அன்றே ஒரு லட்ச ரூபாய் செலவில் பாரதி வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எட்டயபுரம் எங்கும் திருவிழா கோலம் பூண்டிருந்தது. விடுதலை வீரர்கள் வாழ்ந்த வீதிகளில் பக்தவச்சலம், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரோடு ஜெமினி- சாவித்ரி தம்பதி சமேதராக ஒரே காரில் சவாரி போனார்கள். தேசிய கவியின் சுதந்தர தாகத்தை ஓரளவாவது திருப்திப்படுத்த சாவித்ரியும் ஜெமினியும் ஏற்பாடு செய்தனர்.
எட்டயபுரத்தில் குடிநீர்ப் பஞ்சம். தாமிரபரணி ஓடும் நெல்லைச் சீமையில் அருந்த தூய்மையான நீர் கிடைக்காத துரதிர்ஷ்டம். தினந்தோறும் ஏழை மக்கள் படும் அல்லல் தீர, முறையான விநியோகத்துக்காக குடிநீர் தொட்டி கட்டிக் கொடுத்தனர். தொடர்ந்து முண்டாசு கவிஞனுக்கு முரசு கொட்டி வைபவம் நடக்க வேண்டுமென்று 25,000/- ரூபாய் நிதி வழங்கினார்கள்.
----------------
எலிஃபன்ட் காட்!
கர்நாடகத்தின் கட்டடக் கலைச்சிற்பி ‘பொறிஇயல் மேதை விஸ்வேஸ்வரய்யா’. அவரது நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற நேரம். நிறைவாக வாழ்ந்து நிகழ்கால வரலாறாக, கண் எதிரே காட்சி அளித்த விஸ்வேஸ்வரய்யாவிடம், நேரில் வாழ்த்து பெற ஜெமினியும் சாவித்ரியும் பெங்களூர் சென்றார்கள்.
காலை பத்து மணி முதல் பதினோரு மணி வரை அவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருந்தது. விஸ்வேஸ்வரய்யா ஆள்கள் தாங்கி வர, விருந்தினர்களை வழக்கமாகச் சந்திக்கும் ஹாலில், மிகச் சரியான விநாடிகளில் காத்திருந்தார்.
‘ஐ யம் கணேசன்... திஸிஸ் மை வொய்ஃப் சாவித்ரி. நாங்கள் திரைப்படக்கலைஞர்கள்’ என்று அறிமுகம் முடிந்தது.
‘ஓ! எலிஃபன்ட் காட்!’ என்று புன்னகை பூத்தார் பிருந்தாவனத்தின் நந்தகுமரன்.
சாவித்ரி கையோடு எடுத்துச் சென்றிருந்த மாலையை ‘விதான் சவுதா’ அய்யாவுக்குப் போட முயன்றார். ‘ஓ மை காட்!’ என இலேசாக அதிர்ந்து, கீழே நழுவ இருந்த தன் டர்பனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கற்களின் கவிஞர்.
எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் சிறு பென்சிலையும் தன்னோடு வைத்திருப்பது பெரியவரின் வழக்கம். சாவித்ரி அதைக் கூர்ந்து கவனித்ததைக் கண்டு,
‘என்ன பார்க்கிறாய்...? ஞாபக சக்தியில் மட்டும் அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது.’
உற்சாகமூட்டும் டூயட் காட்சிகளில் இன்ப உலா வரும் மைசூர் கிருஷ்ணராஜசாகர் கண்ணம்பாடி அணைக்கட்டையும், விஸ்வரூப விதான் சவுதாவையும் கட்டி முடிப்பதற்குள் எத்தனை ஏடுகள் செலவானதோ விஸ்வேஸ்வரய்யாவுக்கு! வியப்பின் சரித்திரத்தில் விழிகளின் சமுத்திரத்தில் நீந்தினார் சாவித்ரி கண்களை அகல விரித்து.
விஸ்வேஸ்வரய்யா தன் விருந்தினர்களிடம் மெல்ல பேச்சு கொடுத்தார்.
‘உலகம் உங்களிடம் நியாயமாக நடந்து கொள்கிறதா...? உங்களை கவுரவமாக நடத்துகிறதா ஈஸ் தி வேர்ல்ட் ஃபேர் டு யூ...?
‘ஆமாம் அய்யா. என்னால் இயன்ற பணியை உலகிற்குச் செய்கிறேனென்று நம்புகிறேன். உலகமும் என்னிடம் பரிவு காட்டுகிறது என்றே நான் எண்ணுகிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிற கொள்கையைக் கடைபிடிக்கிறேன்.’
‘உனக்கு முன்னேற வேண்டுமென்ற ஆசை இல்லையா...?’
‘ஆசை இருக்கிறது. ஆனால் பேராசை கிடையாது.’
‘ஆண்டவன் உன்னைக் கை விட மாட்டார்.’
ஜெமினி கணேசனுக்கு உண்மையான அறிஞரின் புத்திமதியைக் கேட்டதும், தன் தாத்தாவின் ஞாபகம் வந்து விட்டது. அவர் கண்களில் லேசாகக் கண்ணீர்.
‘என்னாங்க இது...! வந்த இடத்துல’ என்று சாவித்ரி சமாதானம் செய்தார்.
எவரையும் போர்ட்டிகோ வரை வந்து கார் கதவைத் திறந்து வீட்டுக்குள் அழைத்து வருவதும், திரும்பிப் போகும் போது கார் கதவைச் சாத்தி வழியனுப்புவதும் விஸ்வேஸ்வரய்யாவின் வழக்கம்.
மூப்பு காரணமாக அத்தகைய உயர்ந்த பண்பாடு நின்று போனது. அதை மனத்தில் எண்ணி ‘உங்களைச் சரியான முறையில் வரவேற்க முடியவில்லை’ என்று வருத்தத்துடன் விடை கொடுத்தார் விஸ்வேஸ்வரய்யா.