'நிறைவேறாத ஆசை என்று எதுவுமே எனக்கில்லை. திருப்தியாக இருக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நல்ல குடும்பத்தில் பிறந்தேன். உயர்குணங்கள் நிறைந்தவருக்கு மனைவியாக வாழ்ந்தேன். வாழ்க்கையின் மதிப்புகளைப் பற்றி என் பெற்றோர் எனக்கு எடுத்துச் சொன்னார்கள்.
'குழந்தை இல்லாத குறை தீர ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாமா?' என்று என் கணவரிடம் கேட்டேன். 'ஒன்றிரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதைவிட, ஒரு சமுதாயத்தை நாம் ஏன் தத்தெடுத்துக் கொள்ளக் கூடாது?' என்று கேட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர் அன்று காட்டிய வழியைப் பின்பற்றுகிறேன்.
உலகம் முழுவதற்கும் நான் அம்மாவாக இருக்கிறேன். வாக்கால், சிந்தனையால், உடம்பால் நல்லது செய்துகொண்டு, இந்த வாழ்க்கையை பயனுள்ள வகையில் வாழ விரும்புகிறேன். வாழ்க்கையை நேசிக்கிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் மனம் இருப்பதற்காக சந்தோஷப்படுகிறேன். அப்படியே நல்லதொரு இறுதியான முடிவும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்கிறார் எழுத்தாளர் சிவசங்கரி.
2026-ஆம் ஆண்டுக்கான 'பத்மஸ்ரீ' விருதை இவர் பெறும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு 'பத்மஸ்ரீ' விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. 150 -க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரை நூல்கள், 2 வாழ்க்கைச் சரித்திரங்கள் என எழுதிக் குவித்தவர் சிவசங்கரி.
புனை கதைகள் எழுதுவதிலிருந்து முற்றிலும் விலகி இருந்து, 16 ஆண்டுகள் ஒரு தவம் போல உழைத்து, 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற மாபெரும் படைப்பை எழுதி, சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். இவரது சுயசரிதையான 'சூர்யவம்சம்' நூல் சரஸ்வதி சம்மான் விருது பெற்றது. இவர் 'பாரதிய பாஷா பரிஷத்', 'பாரதி' உள்ளிட்ட பல விருதுகளையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு உள்ளிட்ட பரிசுகளையும் பெற்றுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'மத்திய அரசு வழங்கும் மிக உயரிய விருதான 'பத்மஸ்ரீ', கோடிக்கணக்கானோருக்கு மத்தியில் கிடைத்துள்ளது. 'இந்த விருது கிடைக்க வேண்டும்' என்று கடவுள் நினைத்திருக்கிறார். அதனால்தான் எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது.
1968- ஆம் ஆண்டில் நான் எழுத வந்தேன். தற்போது 56 ஆண்டுகள் முடிந்துவிட்டன. என் மனதுக்குச் சரியென்று தோன்றியதை, மக்களுடன் பகிர்ந்துகொள்வேன். எனக்குப் பிடிக்காத எதையுமே நான் எழுதியதில்லை. ஆனால், மிகவும் கடினமாக உழைத்து எழுதிய படைப்புகள் என்று சில படைப்புகளைக் கூறலாம்.
படைப்புகள்...
'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்பது எனது மிகப் பெரிய கனவு. அந்த நூலுக்காக, 18 மொழிகளில் உள்ள எழுத்தாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் தங்கியிருந்து, பேட்டி எடுத்து, அந்தந்த மாநிலங்களை, அவற்றின் மொழியை, கலாசாரத்தை, இலக்கியத்தைப் பற்றி அறிந்தது மிகப் பெரிய பாக்கியம்.
தற்போது இருப்பதைப் போல இணைய வசதிகளோ, கைப்பேசி வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் 'ஒன் உமன் ஆர்மி'யாக இருந்தது மிகப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன். இதற்காக துல்லியமாகத் திட்டமிட்டு செயல்பட்ட பெருமை வேண்டுமானால் எனக்கு இருக்கலாம். ஆனால், எனக்கு மேல் இருக்கும் ஒரு சக்திதான் என்னை அப்படி இயங்கத் தூண்டியது.
'உலக அளவில்கூட இலக்கியத்தில் இதுபோன்ற முயற்சி எடுக்கப்படவில்லை. இதுவே முதல் முயற்சி' என்றும் பலரும் பாராட்டுவது மிகுந்த திருப்தியைத் தருகிறது. இது எனக்கு மிகப் பெரிய நிறைவை, முழுமையைத் தந்த பணி.
மூன்று தலைமுறைகளைப் பற்றிப் பேசும் என்னுடைய 'பாலங்கள்' நாவலுக்காக, ஐந்தாறு வருடங்கள் தேடித் தேடி அலைந்து பல தகவல்களைச் சேகரித்தேன். அதற்காக மிகவும் சிரமப்பட்டேன். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற அந்த நாவலுக்கு கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருதும் கிடைத்தது.
அண்மையில் வெளியான என்னுடைய வாழ்க்கைச் சரித்திரமான 'சூர்யவம்சம் நினைவலைகள்' என்ற நூல் இரண்டு பகுதிகளாக வெளியானது. இதற்கு 2023-இல் சரஸ்வதி சம்மான் விருது கிடைத்தது. கொஞ்சம்கூட மிகைப்படுத்தல் இன்றி அந்தப் புத்தகத்தை எழுதினேன்.
எழுத முடியாதவை..
ஒரு படைப்பாளியாக ஒரு சில விஷயங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. என் சுவாசம் நிற்கிற வரையில் எனக்குள் அது இருக்கும். 'இதை எழுத முடியாமல் போனதே' என்ற ஏக்கம் எதுவும் இல்லை. எண்பத்து மூன்று வயதில், என் வயதுக்கேற்ற மாதிரிதான் நான் சில காரியங்களைச் செய்ய முடியும். முன்பெல்லாம் என் படைப்புகளுக்காக பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்களை, நிபுணர்களைச் சந்தித்து, பல கி.மீ. தூரம் பயணித்து, தகவல்களைத் திரட்டி, ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். இந்த வயதில் அப்படியெல்லாம் செய்வது இயலாத காரியம். அதுகுறித்து எந்தவிதமான வருத்தமோ, ஏக்கமோ எனக்கில்லை. என்னால் எதை எழுத முடிகிறதோ, எதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதை எழுதுகிறேன்.
உதவிகள்
ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்காக இந்தச் சமூகத்தில் தேவையானவற்றைப் பெறுகிறோம். பிறரின் உதவி இல்லாமல் நம்மால் வாழ முடியாது.
உதாரணமாக, ஒரு காபி குடித்தால்கூட, காபி கொட்டையை அரைப்பவரிலிருந்து, அதை கடைக்கு எடுத்துக் கொண்டு வந்து விற்பவர் வரை பலருடைய உழைப்பைப் பெற வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது, நாம் பயணிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு நாம் எதைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.
இந்தச் சமுதாயத்தையும், நாட்டையும் மிகவும் நேசிப்பவள் நான். என் இறுதிமூச்சு இருக்கும்வரைக்கும் நல்ல காரியங்கள் செய்து, பலருடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதன் மூலம் என்னுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் செய்த நல்ல காரியங்களைப் பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமானால், அது விளம்பரமாகிவிடும். இருந்தாலும், மனநிறைவை அளித்தவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு செயற்கைக் கை, கால்கள் அளித்தது, மருத்துவமனைகளில் வார்டுகள் கட்டிக் கொடுத்தது, ஏழ்மை நிலையில் உள்ளோரின் கல்விக்காக நிதியுதவி செய்தது, மருத்துவ உதவிகள் செய்தது.... எனத் தொடர்கிறது.
படம்: 'கலைமாமணி' யோகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.