சாவித்ரி- 1. அடடா... அறியாப் பருவமடா!
1964. குரோதி ஆண்டின் ஆவணி மாதத்துக் கடைசி முகூர்த்தம். கல்யாண வீடு. வி.ஐ.பி. இல்லத் திருமணம். மாபெரும் தலைவர்களும் உச்ச நட்சத்திரங்களும்
1964. குரோதி ஆண்டின் ஆவணி மாதத்துக் கடைசி முகூர்த்தம். கல்யாண வீடு. வி.ஐ.பி. இல்லத் திருமணம். மாபெரும் தலைவர்களும் உச்ச நட்சத்திரங்களும் ஒவ்வொருவராக உள்ளே வர வர, அவர்களை அருகிலிருந்து பார்க்கக்கூடிய பரவச வாய்ப்பு. எங்கும் பெண்களின் கலகலப்பு! இதனிடையே மனத்தைப் பிழியும் 'கலைக் கோயில்' சிட்டிபாபுவின் வீணை.
ராஜாஜி, ஜெமினி கணேசனை நெருங்கி சாவித்ரியை சுட்டிக்காட்டி, 'கல்யாணப் பெண் யார்? அவரா...? என்றார். கூட்டம் பூகம்பமாகச் சிரித்தது. ஜெமினிக்கு வெட்கமாகிவிட்டது. இயல்பாகவே சிவந்த முகம். பெருமிதத்தின் பூரிப்பு சற்றே பெருகியது. மன்மத வதனம் செவ்வானம் ஆயிற்று. அதிரடியாக அவரும் சிரித்தார். கவலையில்லாத மனிதன். அதற்குள் சாவித்ரி, 'என்ன ஒரேடியா இங்கே சிரிப்பு?'
ராஜாஜி, அன்றைக்கு மூதறிஞர் என்கிற தனது மகுடத்தைக் கழற்றிவிட்டார்போல. ஜெமினியிடம் கேட்டதையே ஜாலியாக சாவித்ரியிடமும் மீண்டும் வினவினார்.
‘ஏன், எதனால் அப்படிக் கேட்கிறீர்கள்...?’ - சாவித்ரியின் குரலில் சந்தோஷச் சாரல். பெரிய மனிதர்களுக்கு மத்தியில், ராஜாஜியிடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியின் மலர்ச்சி.
‘நானும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உன் பின்னால்தான் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது.’
அகிலமே ஆசிர்வதித்ததுபோல் தோன்றியது சாவித்ரிக்கு!
***
1965 நவம்பர் மாதம். சிவாஜி கணேசன் தலைமையில் தமிழக நட்சத்திரங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து. பாகிஸ்தான் போரில் எல்லையில் படுகாயமுற்ற ராணுவ வீரர்களின் மத்தியில் ஆறுதலாக ஆடிப்பாடி, உற்சாகப்படுத்திவிட்டு வந்தவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.
'யாராவது ஏதாவது பாடுங்களேன்...’ என்றார் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். சிவாஜி, 'ஆர்மோனியம் இல்லாம முடியாதே...’ எனவும், ஜனாதிபதிக்குச் சுடச்சுட கோபம் வந்துவிட்டது.
‘பத்தாயிரம் பேருக்கு மேல் இங்கே வேலை செய்கிறீர்கள். ஒருவருக்குக்கூட சங்கீத ஞானமில்லையோ...’
அறிவார்ந்த அரிமாவின் அதட்டலில் கலைஞர்கள் கலங்கினர். ஏ.எல்.ராகவன், 'ஆர்மோனியம் இல்லாமலே பாடறேன் சார்...' என்று சிந்து நதியின் இசை நிலவினிலே என முந்திக்கொண்டார். பி.சுசீலா, 'அத்தை மடி மெத்தையடி' பாட, கச்சேரி களை கட்டியது. 1965-ன் சிறந்த புதுமுகம் ஜெயலலிதா. ஜனாதிபதி முன்பாக ஆடினார். பி.எஸ்.வீரப்பா கணக்காக, மேதகு ஜனாதிபதி, கலைச் செல்விக்கு சபாஷ் போட்டார்.
நடிகர் திலகம் - நடிகையர் திலகம் இருவரும் இணைந்து நவராத்திரியில் ஆடிய சத்யவான் - சாவித்ரி தெருக்கூத்தை அரங்கேற்றினர். ஜனாதிபதி தன்னுடைய ஸ்பெஷல் பாராட்டை சிவாஜிக்குத் தெரிவித்தார். சாவித்ரியிடம் திரும்பி, 'புதிதாகப் பிறந்த குழந்தை சவுக்கியமாக இருக்கிறதா... பார்த்தாயா உன் வளர்ச்சியை நான் எப்படி கவனித்துக்கொண்டு வருகிறேன்!’
***
ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முதலிய உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் முதல் கடைசி குடிமகன் வரை, சாவித்ரியின் நடிப்பாற்றலால் மனம் மகிழ்ந்தார்கள். தேவதாஸில் தமிழச்சிகளின் மனத்தில் நவரசப் பதியம் போட்டவர், எட்டே ஆண்டுகளில் நூறு படங்களில் நாயகியாக நடித்துப் புதிய சாதனை படைத்தார்.
சாவித்ரிக்கு முன்பாக சதம் அடித்த ஹீரோ, ஹீரோயின்கள் யாரும் கிடையாது. 'கொஞ்சும் சலங்கை' சாவித்ரியின் நூறாவது பங்களிப்பு மட்டுமல்ல. அவரது முதல் வண்ணச் சித்திரமும்கூட. ஒட்டுமொத்த திரைஉலகத்தினரால், ஆணாதிக்க அரிதார சமூகத்தால் ஒருமனதாக நடிகையர் திலகமாகக் கொண்டாடப்பட்டவர் சாவித்ரி!
முதன்முதலாக கண்ணதாசன், தனது தயாரிப்பில் மிகத் துணிச்சலுடன் நடிகர் திலகம் - நடிகையர் திலகம் நடிக்கும் ரத்தத் திலகம் |
என்று விளம்பரப்படுத்தினார். சிவாஜி கணேசனும், எம்.ஜி.ராமச்சந்திரனும், என்.டி.ராமாராவும், நாகேஸ்வர ராவும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தனர். அறுபதுகளில் அப்படியொரு உச்சம் பெறுவது அத்தனை எளிதல்ல.
கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிப்படுத்தியாக வேண்டிய சுய முனைப்பும், அளவிட முடியாத ஆற்றலும், உச்சம் தொடத் தேவையான மிகக் கடினமான உழைப்பும் சாவித்ரியின் பக்க பலங்கள். தென்னக சினிமாவில் நீண்ட நெடிய காலம் நீடித்து நிலைத்து நிற்க அவை உதவின. ஜெமினி கணேசனும் துவக்கம் முதலே, சாவித்ரிக்கு அருமையான கதாபாத்திரங்கள் அமைய ஆலோசனைகள் தந்தார் என்கிறார்கள்.
முன் மாதிரிகள் இல்லாத துருவ நட்சத்திரம் அவர். மதராஸிகளின் முதல் கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி, திரையில் 'கண்ணகியாக' வாழ்ந்து காட்டிய கண்ணாம்பா, பாவுரமா என்று தேன் குரலில் பாடி வந்த பானுமதி, முத்தக் காட்சியில் நடித்த அஞ்சலி தேவி ஆகியோரை மிஞ்சி, மிகச் சீக்கிரத்தில் சிகரம் தொட்டவர் சாவித்ரி.
பத்மினி, வைஜெயந்தி போன்ற வலுவான நாட்டிய மேன்மையோ, செல்வாக்குமிக்க குடும்பப் பின்னணியோ சாவித்ரிக்குக் கிடையாது. டி.ஆர். ராஜகுமாரி போன்ற பரம்பரை வாரிசோ அல்ல அவர். தன்னைத்தானே உருவாக்கிக்கொண்ட கலைச் சுயம்பு சாவித்ரி.
தாய் மண்ணான விஜயவாடாவில் 'பாலராஜு' பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் அஞ்சலி ஆடிய நாட்டுப்புற நடன அசைவுகள் பாலகி சாவித்ரிக்கு அத்துபடி. நினைவு தெரிந்த நாள் முதலாக அஞ்சலியின் ரசிகை! சினிமா பைத்தியம் பிடித்து உடன்பிறந்த ஒரே அக்காவிடம், அபிநயங்களால் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பெரியப்பா சவுத்ரிக்கும், தாயார் சுபத்ராவுக்கும் சாவித்ரியின் மீது அதிகப் பாசம். அவருக்கு நடனம் சொல்லித் தர விரும்பினார்கள்.
'அஞ்சலி மாதிரியே ஆடுகிறாளே...' என்று அதிசயப்பட்ட சுற்றம் எதிர்த்தது. நம்மைப் போன்ற சம்சாரிகளுக்கு ஆட்டம் சரிப்பட்டு வராது என்றது.
பள்ளிக்கூட நாடகம். பத்து வயதில் கிருஷ்ணர் வேஷம் போட்டுக்கொண்டு ஆடினாள் சாவித்ரி. ஒளிந்திருந்து பார்த்து ரசித்துப் பாராட்டிய ஒரே ரசிகர் சவுத்ரி மட்டுமே. அம்மாவுக்கு பெரியப்பா சொல்லே வேதம். உள்ளூரிலேயே நட்டுவனார் பூர்ணையா சாஸ்திரியும், அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும் சாவித்ரிக்கு நடனம் கற்றுத் தர முன் வந்தனர். மூன்று வேளையும் விடாமல் கதக், பரதநாட்டியம், குச்சுப்புடி என்று பாதம் தூக்கி ஆடினார் சாவித்ரி. தனியாக அரங்கேற்றம் செய்யும் வசதி இல்லை.
காக்கிநாடாவின் கலாபரீஷத் என்கிற அமைப்பு ஆண்டுதோறும் நாட்டியப் போட்டி நடத்தி இளைய பாரதத்தை ஊக்குவித்தது. 1950. சாவித்ரிக்கு வயது 14. நாலாவது ஃபாரம் வாசித்த நேரம்.
சாவித்ரிக்கும் கலாபரீஷத் போட்டிகளில் பங்கேற்க ஓர் அழைப்பு. 'ஆத்ம வஞ்சனை' எனும் நாடகத்தில் ஒரு சிறிய வேடம். சுரையாவின் இந்தி சினிமா பாட்டைப் பாடியவாறே, இளமை கொப்பளிக்கத் துள்ளலாகத் தோன்றிய யவ்வன சுந்தரியைக் கண்டதும், அரங்கத்தில் ஆனந்த கும்மி! நாடோடிப் பெண்ணாக ரசிகர்களைக் கவர்ந்தவருக்கு அடுத்து வசனக் காட்சி. கூட்டம் ஆர்ப்பரித்தது. வசனம் சொல்ல முடியாமல் திக்கித் திணறி க்ரீன் ரூமுக்குள் ஓடினார்.
கலாபரீஷத்தின் கடைசி நாள். நிகழ்வின் சிறப்பு விருந்தினர் பிருத்வி ராஜ்கபூர். சுதந்தர இந்தியாவின் சினிமா சக்கரவர்த்தி. அன்று லலிதா-பத்மினியின் நடனம். திருவாங்கூர் சகோதரிகள் வந்து சேரவில்லை. எப்படியாவது ஒப்பேற்றியாக வேண்டும். பத்மினி அகப்படாத அவைக்கு சாவித்ரியின் அசைவுகள் அஸ்கா சர்க்கரை!
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை சாவித்ரி. முறையாகப் பயின்ற பரதம் தக்க சமயத்தில் கை கொடுத்தது. சுமார் இரண்டு மணி நேரம் வர்ணம், அலாரிப்பு, கீர்த்தனை, தில்லானா என ஒரு குறையும் இல்லாமல், தானே பதம் பாடியவாறு ஆடி முடித்தார். பிருத்வி ராஜ்கபூருக்கு உச்சி குளிர்ந்துபோனது.
'இந்தப் பெண் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வரப்போகிறார். அதற்குத் தேவையான முகபாவங்கள் அருமையாக அமைந்திருக்கின்றன.' வஞ்சனையின்றி சாவித்ரியை வாழ்த்திவிட்டுச் சென்றார். முன் பிறவியில் அவர் மகரிஷியாக இருந்திருக்க வேண்டும். பூர்வ ஜென்ம வாசனை. பிருத்வியின் வாக்கு உடனடியாகப் பலித்தது. நாட்டிய விழாவுக்கு வந்திருந்தவர்களை ஏவுகணையாகத் தாக்கியது.
சாதனா ஃபிலிம்ஸ், தெலுங்கு சம்சாரம் படத்துக்கு இரண்டாவது நாயகியைத் தேடியவர்களின் கண்களில் சூரியப் பிரகாசம். புத்தம் புது மொட்டாக அரும்பத் துடித்த சாவித்ரியைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிடித்துப்போனது.
'மெட்ராசுக்கு வாம்மா. நடிக்க சான்ஸ் தருகிறோம' என வாயாரச் சொல்லிப் புறப்பட்டார்கள். அந்த நொடி முதல் சினிமா ரயில் சென்ட்ரலை நோக்கி ஓடியது. 1950-ன் மே மாதம் 17-ம் தேதி. மிக உக்கிரமான கத்திரி வெயிலில், சாவித்ரி சென்னையில் கால் பதித்தார். ஆந்திர வெயிலுக்குத் தமிழகத்தின் அக்னி நட்சத்திரம் இளைப்பாறுதல் அளித்தது.
'சம்சாரம்' தெலுங்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்தது. எல்.வி. பிரசாத், சாவித்ரியை ஏமாற்றப் பிடிக்காமல் நிஜம் பேசினார்.
'இந்தப் பெண்ணுக்கு நடிப்பு சரியாக வரவில்லையே... இன்னும் பக்குவப்படவில்லை. டான்ஸ் ஆட வைக்கலாம். பெரிய ரோல் எதுவும் தர வேணாம்.'
அடுத்து ஜெமினி ஸ்டுடியோவில் இருந்தார் சாவித்ரி. அந்த அனுபவத்தை அங்கு பணியாற்றிய ஜெமினி கணேசன் பதிவு செய்துள்ளார்.
'நடுத்தர உயரம். சுறுசுறுப்பாகப் பேசும் கண்கள். மாநிறம். சுறுசுறுப்புக்கு சுறுசுறுப்பு தரும் அங்க அசைவுகள். பாடிக்கொண்டே அந்தப் பெண் நடனமாடிய நளினம், ஒரு கண்ணியம், கடமை உணர்ச்சி, தகப்பனாரிடம் கட்டுப்பாடு, கிளர்ச்சியோ அதிர்ச்சியோ இல்லாத நிர்மலமான முகம். ஒரு மரியாதை மிகுந்த புன்சிரிப்பு.
சாவித்ரியிடம் நடித்துக் காட்டச் சொன்னதும் சுறுசுறுப்பாக வசனம் பேசி நடித்துக் காட்டினாள். ‘அட நீ தெலுங்கு பெண்ணா? தமிழ் நன்னாப் பேசறியே’ என்று கொத்தமங்கலம் சுப்பு பாராட்டினார். அவ்வளவுதான். அதன்பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும், 'ரொம்ப சின்னப் பொண்ணுப்பா! அடுத்தப் படத்துக்குப் போட்டுக்கொள்ளலாம' என்று சொல்லிவிட்டார்கள்.’
சாவித்ரியின் பன்னிரெண்டு வயது போட்டோவை ஜெமினி ஸ்டுடியோ ஆல்பத்தில் ஒட்டிவைத்தார் கணேசன். 'ரொம்ப சூட்டிகையான பெண். வருங்காலத்தில் பெரிய நடிகையாக வரும் அறிகுறிகள் தென்படுகின்றன' என்றது அவரது குறிப்பு.
சாவித்ரியின் கனவு கோபுரங்கள் சட்டென்று சரிந்தன. அஞ்சலிபோல் ஆக முடியாதா நாமும்... ஏக்கத்தின் ஊர்வலத்தில் பெரியப்பா துணைக்கு வர, ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கினார். சொல்லிவைத்தாற்போல் எல்லாரும் 'அடடா அறியாப் பருவமடா...!' என்றார்கள்.
சாவித்ரியைத் தேடி ஆறுதல் சொல்ல எல்.வி.பிரசாத் வீட்டுக்கே வந்தார். 'இங்கே பாரம்மா. உனக்கு இன்னும் வயதாகவில்லை. பதினாலு வயசில் பெரிய வாய்ப்புக்காக ஏங்கி நீ ஏமாற்றம் அடையக்கூடாது. உனக்கு நடிப்புலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போது கிடைக்கும் ரோல்களை ஏற்றுக்கொண்டு உன் திறமையைக் காட்ட முயல வேண்டும'.
ப்ளீச் செய்த முகத்தில் கரியைப் பூசியதைப் போலாயிற்று சாவித்ரிக்கு. இரண்டு வாரங்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தார். எதற்கும் லாயக்கற்றுப் போய்விடுவோமோ என்கிற அச்சம்... கண்ணீராகப் பெருகியது. அவரது கருப்புத் தோலில் மெல்லிய மினுமினுப்பும் பளபளப்பும் நீக்கமற நிறைந்திருக்கும். சாவித்ரியின் மேனி அழகைக் கூட்டிக் காண்பிக்க இயற்கை தந்த சீதனம்!
அதேபோல் மனத்துக்குள்ளும் மற்றவர்கள் எளிதில் உணர இயலாத பிடிவாதமும், வைராக்கியமும் கோதாவரியாக நிரம்பி வழியும். சிரித்த முகத்துக்குப் பின்னால், சீறிப் பாயும் சினம் சிறைப்பட்டிருக்கும். சாவித்ரி ஒரு முடிவுக்கு வந்தவராக அழுகையை நிறுத்தினார்.
'என்னால் ஏன் நடிக்க முடியாது? இவர்களெல்லாம் பாராட்டும்படியாக நடித்துப் பேர் வாங்குகிறேன் பார்.' ஒரு சவாலை தனக்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்டார். அது நல்ல நேரமாக அமைந்தது. நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் 'பாதாள பைரவி'யில் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தது. அதில் என்.டி.ராமாராவ் அறிமுக நாயகன்.
'வர மாட்டேன்னா... வரமாட்டேன்' என்ற பாடலுக்கு சாவித்ரி அபிநயம் பிடித்தார். மார்க்கஸ் பார்ட்லேவின் கேமரா, கருப்பு திராட்சை சாவித்ரியின் எழிலைச் சாறு பிழிந்தது.
எல்.வி. பிரசாத்துக்குப் பிறகு டைரக்டர் கே.வி. ரெட்டியும், நாகிரெட்டியிடம் சாவித்ரிக்கு சிபாரிசு செய்தார்.
'இந்தப் பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருக்கிறது. நடிக்கும் திறமையும் இருக்கும்போலத் தெரிகிறது. அடுத்த ப்ராஜெக்டிலும் சாவித்ரிக்கு சந்தர்ப்பம் தரலாம்.'
அவரது சொற்கள் சாசனமானது. அன்றிலிருந்து சாவித்ரியின் தாயகம் நாகிரெட்டியின் விஜயா நிறுவனம். ஒரே நேரத்தில் அங்குத் தமிழிலும் தெலுங்கிலும் தயாரான ஒரு டஜனுக்கும் அதிகமான சினிமாக்களில் சாவித்ரியே சாஸ்வதமான ஒரே நாயகி!
'கல்யாணம் பண்ணிப்பார்' விஜயாவின் அடுத்தத் தயாரிப்பு. சாவித்ரிக்கு அதில் சாந்தி என்கிற வில்லி வேடம். தமிழிலும் சொந்தக்குரலில் பேசி நடிக்க வேண்டும் என்றார்கள். அதுவரையில் கொச்சையாகத் தமிழ் பேசிய சாவித்ரி, முறையாக ஓர் ஆசிரியரை வைத்துத் தமிழ் கற்றார்.
என்.டி.ராமாராவ் - ஜி.வரலட்சுமி ஜோடியாக நடித்தனர். ஜி.வரலட்சுமியோடு சாவித்ரிக்கு விஜயவாடாவிலேயே நல்ல சிநேகிதம் உண்டு. அவருடன் நடிப்பது சௌகரியமாகத் தோன்றியது. அப்படியும் சாவித்ரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்கள் காபி கொடுக்கும் பையன்கள்.
வாகினி ஸ்டுடியோ. செட்டுக்கு வெளியே ஜி.வரலட்சுமியும், சாவித்ரியும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஹீரோயினுக்கு கப் அன்ட் சாசரிலும், சாவித்ரிக்கு சாதாரண கண்ணாடி கிளாசிலும் காபி வந்தது. அதைக் கண்டதும் ஜி.வரலட்சுமியிடம் கோபம் வெளிப்பட்டது.
'எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியா காபி கொடுத்தா என்ன? போ, போய் இன்னொரு கப் எடுத்துட்டு வா.'
'ஒரு கப்தான் இருந்தது மேடம்'
பையனின் பதிலில் வரலட்சுமிக்கு வெறுப்பு. பிரம்மாண்டத்துக்காகப் பணத்தை வாரி இறைக்கும் வற்றாத வாகினியில், கேவலம் காபி கப்புக்கு பஞ்சமா? சாவித்ரியை மட்டம் தட்ட யாரோ வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா என்கிற அலட்சியம். சாவித்ரி நம்பிக்கை நட்சத்திரம். உதாசீனங்களால் அவரை யாரும் உதறித் தள்ளிவிட முடியாது என்று சகலருக்கும் உணர்த்த வேண்டும்.
'சரி நீ போ. நாங்க ஒரே கப்ல குடிச்சிக்கிறோம். டம்ளர்ல இருக்குற காபியை நீ திரும்ப எடுத்துட்டுப் போ.'
சென்னைக்கு வந்த புதிதில் ஆயிரம் விளக்கு ஷாபி முகமது தெருவில் எட்டாம் எண் வீட்டில் குடியிருந்தார் சாவித்ரி.
'முதலில் இடத்தைக் காலி செய்யுங்கள். போயும் போயும் எட்டாம் நம்பரில் வந்து சேர்ந்தீர்களே. அது ராசியான இலக்கம் இல்லையே... வேறு எங்காவது போங்கள்' சவுத்ரியின் சிநேகிதர்கள் எச்சரித்தனர். எட்டு, சாவித்ரிக்கு அதிர்ஷ்ட எண். வெகு சீக்கிரத்தில் அது வெளிப்பட்டது.
என்ன காரணத்தாலோ கடைசி நிமிடத்தில் சவுகார் ஜானகியை நீக்கிவிட்டு சாவித்ரியை ஒப்பந்தம் செய்தனர் வினோதா பிலிம்ஸ்காரர்கள்.
'வேதாந்தம் ராகவையா டைரக்ட் செய்கிறார். புகழ்பெற்ற சரத் சந்திர சட்டர்ஜியின் நாவல் தேவதாஸ். அதில் கதாநாயகியாக நடிக்க உங்களுக்குச் சம்மதமா?' - தேவதாஸ் படத்தைத் தயாரிக்கும் வினோதா யூனிட் தேடி வந்தது.
1953 செப்டம்பர் 4-ல் 'தேவதாஸ்' வெளியானது. திரையில் சாவித்ரியைக் காணோம்! அதில் நீக்கமற நிறைந்திருந்தது பார்வதி! க்ளைமாக்ஸில் காதலன் தேவதாஸ் தன் புகுந்த வீட்டின் வாசலில் செத்துக் கிடப்பதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியோடும் ஆவேசத்தோடும், அழுகையை அடக்க முடியாமல் ஓடோடி வந்து சடலத்தின் மீது விழுந்து, அவரும் உயிர் துறந்தபோது திரை அரங்கமே சிலிர்த்து எழுந்தது.
அதுவரையில் யாரிடமும் பார்த்திராத அதிசயமூட்டும் உணர்ச்சி பொங்கும் இயல்பான நடிப்பு! பதினேழு வயது இளம் பெண்ணின் எல்லை மீறிய பேராற்றலுக்குத் தலை வணங்கியது தென்னகம். அஞ்சலியைத் தவிர்த்து கோலிவுட் சட்டென்று சாவித்ரிக்கு மாறிவிட்டது. தேவதாஸ் விளம்பரங்களில் முதலில் லலிதா. அடுத்து சாவித்ரி அதன் பிறகே ஏ.நாகேஸ்வர ராவின் பெயர்கள் இடம்பெற்றன. தேவதாஸை விடுத்து ஏராளமான விருதுகள் பார்வதிக்கே கிடைத்தன.
'ஓ பார்வதி படிப்பு இதானா', 'உலகே மாயம், வாழ்வே மாயம்', 'கனவிதுதான்', 'துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே' உள்ளிட்ட இனிய பாடல்கள் சி.ஆர். சுப்புராமனின் இசையில் காலத்தை வென்று நிற்கின்றன. பகவானாக வந்து காமெடி செய்தவர் எம்.என். நம்பியார் என்றால் இளைய தலைமுறை நம்புமா?
தேவதாஸ் தயாரிப்பில் இருக்கும்போதே நாராயணன் கம்பெனி தங்களது 'மனம்போல் மாங்கல்யத்தில்' சாவித்ரியை நடிக்க அழைத்தது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் நடிகையர் திலகத்தின் வாழ்க்கையில் புதுப் புது உதயங்களை உண்டாக்கியது.
1953 தீபாவளிக்கு 'மனம்போல் மாங்கல்யம'’ ரிலீசானது. அது சாவித்ரியின் தலை தீபாவளி எனச் சொல்லுமளவு அடுக்கடுக்காக நீர்வீழ்ச்சி நிகழ்வுகள். அவை அடுத்த அத்தியாயத்தில்.
***