வைஜெயந்தி மாலா: 4. போலு ராதா போலு சங்கம் ... !
வடக்கே வாகை சூடிய முதல் தமிழ் நடிகை டி.ஆர். ராஜகுமாரி. இந்தியில் எடுத்த எடுப்பில் உச்ச நட்சத்திரமாக ஒளி வீசியவர் வைஜெயந்தி மாலா.
வடக்கே வாகை சூடிய முதல் தமிழ் நடிகை டி.ஆர். ராஜகுமாரி. இந்தியில் எடுத்த எடுப்பில் உச்ச நட்சத்திரமாக ஒளி வீசியவர் வைஜெயந்தி மாலா.
வைஜெயந்தி இந்தியில் அறிமுகமான சமயம். அவருடைய சம காலத்தவர்களான பானுமதி, அஞ்சலி, பத்மினி போன்றத் தென்னிந்தியத் தாரகைகள் அங்கும் வெற்றிகரமாக மின்னினர்.
பத்மினி தவிர மற்றவர்களால் அதிக நாள்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மிக சீக்கிரத்தில் ஆந்திராவில் அடைக்கலம் ஆயினர்.
பப்பியைக் காட்டிலும் வைஜெயந்தி மாலா வடக்கு வானத்தின் எட்ட முடியாத தூரத்தில் இருந்தார். நிரந்தரமாக பம்பாய்வாசி ஆகி விட்டார்.
பத்மினியைத் தொடர்ந்து சரோஜாதேவி, தேவிகா, ராஜஸ்ரீ, காஞ்சனா, பாரதி முதலானவர்கள் இந்தியில் ஓரிரு ஹிட்களை கொடுத்ததோடு சரி.
வைஜெயந்தி மாலா விலகியதும் வடக்கே ஹேம மாலினியும் ---- ரேகாவும் சேர்ந்தாற் போல் மிக நீண்ட காலம் கொடி கட்டிப் பறந்தனர். அவர்களைப் போலவே அடுத்தத் தலைமுறையில் ஸ்ரீதேவி- ஜெயப்பிரதா மெச்சிக் கொள்ளத்தக்க வெற்றியைப் பெற்றார்கள்.
இடையில் லட்சுமி ‘ஜூலி’ மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். ஊர்வசி சாரதாவும் ‘துலாபாரம்’ இந்தி ரீமேக்கில் அழுததோடு சரி.
அசினின் ஆட்டம் புதிய நூற்றாண்டில் அரங்கேறியது. மலையாள மண்ணிலிருந்து முதன் முதலாக ஒருவர், வடக்கே வாகை சூடியது வியப்பின் சரித்திரக் குறியீடு!
தற்போது ஸ்ருதி ஹாசன் - அக்ஷரா இருவரும் இந்தியில் தோன்றுகிறார்கள். இனி மேல் ஒளி வீசினால் உண்டு.
மேற்குறிப்பிட்டவர்களில் வைஜெயந்திக்கு நிகராக எவரையும் எண்ணிப் பார்க்க முடியாது.
வைஜெயந்தி மாலாவுக்குக் கிடைத்த மாதிரியான லட்டு லட்டான கேரக்டர்களும், அதில் வைஜெயந்தி காட்டிய அபார நடிப்புத் திறமையும், அவர் நாயகியாக மின்னிய படங்கள் அடைந்த மகத்தான வசூலும், ஓடிய ஓட்டமும் காலப்பெட்டகமாகிக் காண்பவர் நெஞ்சைக் கவர்கிறது இன்றும்!
34 வயதில் திருமணமாகும் வரையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சாதனைகள் அன்றி, சரிவையேச் சந்திக்காத ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரினி!
ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் எந்த ஒரு மாகாணத்திலும், அத்தனை வருடங்கள் எவரும் நாயகி அந்தஸ்தில் நீடித்தது கிடையாது.
வைஜெயந்தி மாலாவுக்கு எவரும் என்றும் மாற்று அல்ல. அவரது இடத்தை இனியும் இன்னொருவர் எளிதில் கைப்பற்றி விட முடியும் என்று கனவு கூட காண இயலாது.
இந்தி ஹீரோக்களின் தயவில் சில தென் இந்திய நடிகைகள், அங்கு வாய்ப்பு பெறுவது என்றும் மாறாத நடைமுறை.
ஆனால் காலில் விழாத குறையாக வடக்கின் ஜாம்பவான்கள், வைஜெயந்தி செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து போய், வற்புறுத்தி நடிக்க வைத்தது ஆச்சரியப்படுத்தும் அரிதார வரலாறு! அதன் ஓர் துளி இங்கே உங்களுக்காக.-
‘பாப்பாவை ஒப்பந்தம் செய்யும் போது, படத்தின் கதையை வைஜெயந்தி தவிர, பாட்டி யதுகிரிக்கும் சொல்ல வேண்டும். இருவருக்கும் கதை பிடித்தால் மட்டுமே வைஜெயந்தி சம்மதிப்பார்.
வைஜெயந்தியின் ஊதியம், கால்ஷீட், கான்ட்ராக்ட் எல்லாவற்றிலும் பாட்டியின் தீர்ப்பே முடிவானது.
யதுகிரி அம்மாள் விதிக்கும் மிக முக்கிய நிபந்தனை-
‘பாப்பாவை ஆபாசமானக் காட்சிகளில் நடிக்க வைக்கக் கூடாது. அருவருக்கத்தக்கக் கவர்ச்சியான ஆடைகளை என் பேத்தி கண்டிப்பாக அணிய மாட்டார். ’
வைஜெயந்தி, திலீப்குமாருடன் மிக அதிகப் படங்களில் நடித்த நேரம். அவை யாவும் சூப்பர் டூப்பர் ஹிட்களாக அமைந்தன.
வைஜெயந்தியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ராஜ் கபூருக்குக் கிடைக்கவில்லை.
நாங்கள் தேன் நிலவு ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தோம். எவரும் எதிர்பாராத விதத்தில் ராஜ் கபூர் அங்கே வந்தார்.
அவரது காஷ்மீர் விஜயத்துக்குக் காரணம், எப்படியாவதுத் தனது சங்கம் சினிமாவில், வைஜெயந்தியுடன் ஹீரோவாக நடித்து விட வேண்டும் என்பதே. அந்த விஷயத்தில் வைஜெயந்தியோ நழுவிக் கொண்டே இருந்தார்.
‘வைஜெயந்தியை எப்படியும் புக் பண்ணிக் காட்டுகிறேன் பாருங்கள்... ’ என்று ராஜ் கபூர் என்னிடம் சவாலே விட்டார்.
ராஜ் கபூரின் அணுகுமுறையே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். தினமும் நாங்கள் இருக்கும் லொகேஷனில் கையில் பொக்கேயுடன் ஆஜராகி விடுவார் ராஜ் கபூர். அன்றாடம் அதை வைஜெயந்தியிடம் நீட்டி நலம் விசாரிப்பார்.
‘இந்துஸ்தானியின் ட்ரீம் கேர்ளிடம்’ திடீரென்று ஒரு தந்தியைக் காண்பிப்பார்.
‘நாங்கள் எல்லாரும் இங்கே ‘ராதா’வுக்காகக் காத்திருக்கிறோம். ’ என்று ராஜ் கபூரின் ஆர். கே. ஸ்டுடியோவில் இருந்து டெலிகிராம் கொடுத்திருப்பார்கள்.
‘சங்கம் நாயகி ராதா’ நீங்கள் தான். என் யூனிட் மொத்தமும் உங்கள் வருகைக்காகத் தயாராகி விட்டது. உம்... தயவு செய்து ஒப்புக் கொள்ளுங்கள். ’ என்பார் வைஜெயந்தியிடம்.
வைஜெயந்தி மாலாவின் பாட்டி யதுகிரி அம்மையாரையும் விட்டு வைக்க மாட்டார். அவருடனும் நாள்தோறும் பேசி பொழுது போக்குவார் ராஜ் கபூர்.
பாட்டி மூலமாவது பேத்தியின் சம்மதத்தைப் பெற்று விட வேண்டும் என்கிற வைராக்கியம்...
இறுதியில் அசகாய சூரர் ராஜ் கபூர், வைஜெயந்தி மாலாவை சங்கம் படத்தில் சங்கமிக்கச் செய்து விட்டார்- டைரக்டர் ஸ்ரீதர்.
வைஜெயந்தி என்றாலே ஒட்டுமொத்த இந்தியப் பாமரர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது ராஜ் கபூரின் சங்கம்.
அதில் ‘போலு ராதா போலு சங்கம்’ என்ற சூப்பர் ஹிட் டூயட், தேசிய கீதத்தைப் போலவே மாணவர்களால் அதிகம் பாடப்பட்டது!
மும்பை அப்ஸரா தியேட்டர். சங்கம் பட வெளியீட்டு விழா! பத்திரிகையாளர் சந்திப்பும், போட்டோ செஷனும் ஏற்பாடாகி இருந்தன.
ராஜ் கபூர், ராஜேந்திர குமார் உள்ளிட்ட ஹீரோக்கள், சகக் கலைஞர்கள் கலகலப்பும் பரபரப்புமாகக் கூடி நின்றனர். ஒட்டு மொத்த பாலிவுட்டும் வைஜெயந்தியின் வருகைக்காக வாசலில் தவம் இருந்தது.
‘நர்கீஸ், பத்மினிக்கு அடுத்து இப்போது வைஜெயந்தியும் ராஜ் கபூரின் கோட் பாக்கெட்டில்...! ’
என்பதாகக் கிசுகிசுக்கள் பரவியதால் வைஜெயந்திக்கு வருத்தம் ஏற்பட்டது.
‘வேண்டுமென்றே சங்கம் படத்தின் பிரமோஷனுக்காக, தவறானத் தகவல்களைத் தருகிறார்கள். அதில் சிறிதும் நிஜமில்லை’ என்று மறுப்பு வந்தது.
ஹீரோயின் வரக் காணோம். கடிப்பதற்கு நகங்கள் தீர்ந்து விட்டன ராஜ் கபூருக்கு.
‘வைஜெயந்தி வருவாரா...? ’ என்கிறத் தவிப்பு நொடிக்கு நொடி கூடியது. ரத்த அழுத்த மாத்திரையை காலையில் ஞாபகமாகப் போட்டுக் கொண்டோமா...?
இப்படி வியர்க்கிறதே...! கைக் குட்டையால் முகம் துடைத்தார் ராஜ்கபூர்.
நல்ல வேளை. அவர் இருதயத்துக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தாமல், பிளாஷ்களின் ஓயாத மின்னலில் வைஜெயந்தியின் கார் ‘அப்ரஸரா’ வளாகத்துக்குள் நுழைந்தது.
‘அலஹாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமம் ஆகின்றன. அதில் நீங்கள் கங்கையா, யமுனையா...? ’
‘ நான் அவை இரண்டுமே இல்லை. கண்களுக்குத் தெரியாமல் பூமியின் அடியில் ஓடுவதாக புராணங்கள் குறிப்பிடுகிற அந்த ‘சரஸ்வதி’ யே நான்!
ஸோ தட், உங்கள் பார்வைக்கு இத்தனை நேரம் அகப்படாமல் இருந்தேன். ’
ப்ரஸ் மீட்டில் வைஜெயந்தி அளித்த சாமர்த்தியமான பதிலில், வெளிப்பட்ட அவரது புத்திசாலித்தனத்தில் சில நொடிகள் திகைத்து நின்றனர் சினிமா நிருபர்கள்.
சங்கம் பற்றி ‘ராதா’ சொன்னவை-
ராஜ் கபூர் சங்கம் படத்தை 1960ல் எடுத்தார். அவர் தனது படங்களில் பிரம்மாண்டம் இருக்கிற அளவுக்கு, பிரமிக்கவும் வைப்பார். அதற்காக சில காட்சிகளை ஐரோப்பிய தேசங்களில் படமாக்கினார்.
அந்த நேரத்தில் அப்படியோர் பிரம்மாண்டம் யாரும் கண்டதில்லை என்கிற அளவுக்கு, அயல் நாட்டுக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தன. சங்கம் சினிமாவில் இரண்டு இடைவேளை விடுவார்கள்.
இருந்தும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜனங்கள் மீண்டும் மீண்டும் சங்கம் பார்த்தனர். அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடித்தமானதாக இருந்தது.
1999ல் லண்டனில் முதியோர்களுக்கான ஒரு விழா. என்னைப் பங்கேற்க அழைத்தார்கள். மேடைக்கு அருகே அனைவராலும் வர முடியவில்லை. எனவே நடக்க இயலாத மிக மூத்த குடிகளுக்கு அருகே என்னைக் கூட்டிச் சென்றனர்.
அதில் ஒரு பெரியவர் நடந்து கொண்ட விதம் ரொம்பவே நெகிழ்த்தியது. மூப்பின் காரணமாக முதியவருக்குப் பார்வை சுத்தமாகப் பறி போயிருந்தது.
நான் பக்கத்தில் நிற்பதைத் தெரிந்து கொண்ட அவர் என் கைகளைப் பிடித்தவாறு,
‘அம்மா நீதான் வைஜெயந்தி மாலாவா...? சங்கம் சினிமால ராதாவா வந்த அதே வைஜெயந்தி மாலாவா...? நீ நடிச்ச எல்லாப் படத்தையும் இந்தக் கண்கள் பார்த்திருக்கு.
ஆனா இப்ப... இப்ப என் எதிர்ல நீ இருக்கிற, என்னால உன்னைப் பார்க்க முடியலியேம்மா... ’ என்று சொல்லி உள்ளம் உருகக் கண்ணீர் சிந்தினார்.
எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. கடல் கடந்து சென்ற இடத்தில், என்னைத் தனது அன்பால் கலங்கடித்த அந்தப் பெரியவரை சமாதானப்படுத்துவதற்குள் நான் பட்ட பாடு..!
அத்தகைய ரசிகரின் நேசமும், அவர் என் மீது வைத்த நிஜமான பாசமும் என்றுமே மறக்க முடியாதவை. ’- வைஜெயந்தி மாலா.
லண்டன், பாரீஸ், வெனீஸ், சுவிட்சர்லாந்து, என்று சங்கம் படத்துக்கான அவுட்டோர் நடைபெற்றது இந்தியத் திரையுலகில் அன்று அதிசயமாகப் பேசப்பட்டது.
ராதாவாகத் தோன்றும் வைஜெயந்தி மாலாவும் கோபாலாக வரும் ராஜேந்திர குமாரும் காதலிக்கிறார்கள். சங்கம் படத்தில் முதல் பாதி திரைக்கதை அது.
சந்தர்ப்பவசத்தால் சுந்தரை (ராஜ் கபூர்), வைஜெயந்தி மணக்கிறார். தன் மனைவி ஏற்கனவே ஒருவனின் காதலி என்கிற நிஜம், நிம்மதியைக் கெடுக்க ராஜ் கபூர், வைஜெயந்தியை சந்தேகம் கொள்வது மீதிக் கதை.
‘மனைவி மேல் சந்தேகப் படுவதை ராஜ்கபூர் அற்புதமாகச் சித்தரிக்கிறார். அவரைக் காட்டிலும் திறம்பட வேறு யாராலும் அவ்விதம் சித்தரிக்க முடியுமா ? ’
என்று வியந்து விமர்சித்தது குமுதம். வைஜெயந்தி பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
‘சிங்கிள் ஃபீஸ் ஸ்விம்மிங் காஸ்ட்யூமில்’ வைஜெயந்தி சங்கம் படத்தில் தோன்றியதை, மற்றுமொருக் கொண்டாட்டமாக இளைய தலைமுறையினர் வரவேற்றனர். தியேட்டர்கள் தோறும் விசிலடித்து ஒன்ஸ் மோர் கேட்டார்கள்.
தமிழகத்தில் ‘பேசும் படம்’ தனது 1965 ஜனவரி இதழில் வைஜெயந்தியின் துணிச்சலை வன்மையாகக் கண்டித்து எழுதியது.
சங்கம் படத்தில் அருமையாக நடித்ததற்காக பிலிம் பேர், வைஜெயந்திக்கு சிறந்த நடிகை விருது வழங்கி கவுரவித்தது.
பஹாரைத் தொடர்ந்து வைஜெயந்திக்குக் கிடைத்த மகத்தான வெற்றிச் சித்திரம் நாகின்.
‘நாகின்’ பற்றி வைஜெயந்தி -
‘பஹார்’ இந்தியில் வந்தாலும் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டில் தயாராச்சு. அதனால் நாகின் தான் எனக்குக் கிட்டத்தட்ட முதல் இந்திப்படம். எப்படின்னா, முழுக்க முழுக்க பம்பாய் சூழலில் படமானது. அதனாலயே நாகின் என் முதல் வடக்கு அனுபவம்னு சொன்னேன்.
நாகின்ல ஹீரோ - ஹீரோயின் ரெண்டுமே நாகங்கள். நிஜமாகவே அது ஒரு த்ரிலிங்கான அனுபவம். கதைப்படி என் உடலில் உள்ள பாம்பு விஷத்தை, அந்தப் பாம்பே வந்து உறிஞ்சி எடுக்கிற மாதிரி சீன். பாம்பை வரவழைக்க மகுடியோட ஆளும் வந்தாச்சு.
பாம்பாட்டி மகுடி எடுத்து ஊத, நாகம் வளைஞ்சி நெளிஞ்சி வர்றப்ப மனசு தடக் தடக்னு அடிச்சுக்குது. அதுவரையில் நான் அரைக் கண் விழிச்சிப் பார்த்துக் கிட்டே இருப்பேன்.
ஆனா பாருங்க ஒவ்வொரு தடவையும் பாம்பு எங்கிட்ட நெருங்கும், அதுக்கு என்ன தோணுமோ உடனே திரும்பிப் போயிடும்.
நாலஞ்சு தரம் ஷாட் வேஸ்ட் ஆச்சே தவிர நாகம் விஷத்தை உறிஞ்சல. அந்த சீன்ல நடிக்கப் பிடிக்காததைப் போல மறுபடி மறுபடி பிலிமை வீணாக்குச்சு.
இனிமே சரிப்படாதுன்னு ஷாட்டை மாத்தினாங்க. குளோசப்ல பாம்பைக் காட்டி அது விஷத்தை உறிஞ்சிற மாதிரி படமாக்கினாங்க.
இன்னொரு சீன்ல நாகப்பாம்பை கையில எடுத்து சுழற்றித் தூக்கி வீசணும். நான் எப்படி ஜாக்ரதையா நாகத்தை எடுத்து எறியணும்னு அஸிஸ்டென்ட் டைரக்டர் செஞ்சு காட்ட முன் வந்தார்.
அதுக்காக பாம்பாட்டி கிட்டயிருந்து பாம்பை வாங்கி, ஒரு சுத்து சுத்தி கீழே போடப் போனப்ப, ஸர்ப்பம் சுறுசுறுப்பாகி அவர் கழுத்தை வளைச்சு இறுக்கத் தொடங்குச்சு.
உதவி இயக்குநர் மூச்சுத் திணறி கண்கள் நிலை குத்தி மயக்கமாகி விழுந்துட்டார்.
செட்ல எல்லாரும் பதறிட்டாங்க. உடனே ஓடிப் போய் கஷ்டப்பட்டு பாம்பை அவர் கிட்டயிருந்து பிரிச்சி, எப்படியோ உயிரைக் காப்பாத்தினாங்க.
களேபரம் எல்லாம் நடந்து முடிஞ்சு, அஸிஸ்டென்ட் டைரக்டர் உட்பட அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பக் கொஞ்ச நேரம் ஆச்சு.
எப்படியும் அந்த சீனை எடுத்தாகணும்னு எல்லாரும் தயார் ஆனாங்க. பக்கத்துல இருந்து நடந்ததைப் பார்த்தவளாச்சே நான் ..!
‘அய்யய்யோ... என்னால இனி நடிக்க முடியாது. என்னையும் ஸர்ப்பம் சுத்தி வளைச்சிக்கிட்டா நான் என்னாவேன் ...?
நடுங்கிக் கொண்டே அதைச் சொன்னேன்.
டைரக்டர் உடனே ரப்பர் ஸ்நேக்கைக் கொண்டு வரச்சொல்லி, எனக்குரிய காட்சிகளை எடுத்து முடிச்சார். ’ - வைஜெயந்தி மாலா.
நாகினில் வைஜெயந்திக்கு ஜோடி பிரதீப் குமார். இசை ஹேமந்த் குமார். எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். தமிழ் நாட்டிலும் சக்கை போடு போட்டது நாகின். குறிப்பாக திருச்சியில் வெள்ளி விழா கொண்டாடியது.
ஸ்ரீப்ரியாவின் தயாரிப்பில் வெகு காலம் கழித்து நாகின் தமிழில் ரீமேக் ஆனது. 1979 தைத் திருநாளில் நீயா என்ற பெயரில் வெளியாகியது. 100 நாள்கள் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது. நாயகி ஸ்ரீப்ரியாவுக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது.