முகப்பு
பழுப்பு நிறப் பக்கங்கள்

அரு. ராமநாதன்- பகுதி 2

சோழர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ஆட்சியதிகாரத்தில் சிறப்புற்று விளங்கியிருக்கிறார்கள்.  இலங்கைக்கும்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

சோ 

ழர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ஆட்சியதிகாரத்தில் சிறப்புற்று விளங்கியிருக்கிறார்கள்.  இலங்கைக்கும் சோழர்களுக்கும் கி.மு. முதல் நூற்றாண்டிலேய நடந்த போர்கள் பற்றி மஹாவம்சம் குறிப்பிடுகிறது.  கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் கல்வெட்டுகளிலும் சோழர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.  இவர்கள் முற்காலச் சோழர் என்று அழைக்கப்படுகிறார்கள்.  கரிகால் வளவன், கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள் இந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள்.  (ஆனால் பாண்டியர்கள் சோழர்களை விட மூத்தவர்கள்.  கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு குமரிக் கண்டத்தை ஆண்டவர்கள் பாண்டியரே.)

பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டின் துவக்கம் வரை – சுமார் 450 ஆண்டுகள் – சோழர்களின் ஆதிக்கம் நீண்டிருந்தது.  முதலாம் ராஜராஜன், அவனது மகன் முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், வீரராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தில் சோழர்கள் மிகப் பெரிய ஏகாதிபத்திய சக்தியாக விளங்கினார்கள்.  ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரை சென்று மஹிபாலாவை வென்ற கதையையெல்லாம் வரலாற்று நூல்களில் நாம் படித்திருக்கிறோம். இளம் வயதிலேயே இந்த வரலாறு தமிழ் இனம் பற்றிய ஒரு இறுமாப்பை நமக்குள் விதைத்து விடுகிறது.  பின்னர் அந்த இறுமாப்பு நம் வாழ்நாள் வரை தொடர்கிறது.  இந்த இன உணர்வும் இறுமாப்புமே நம்முடைய அரசியலையும் சமூக வாழ்வையும் தீர்மானிக்கிறது.  யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று ஒரு கவிஞன் 2000 ஆண்டுகளுக்கு முன்னே சொன்னதை இதயத்துக்கு வெளியே இருக்கும் சட்டைப் பாக்கெட்டில் பேட்ஜாகக் குத்திக் கொண்டு, இதயத்தின் உள்ளே மிக மோசமான இனவாதத்தைப் பொதிந்து வைத்திருக்கிறோம். இதுதான் அரு. ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி என்ற நாவலின் கரு.  

Advertisement

ஏகாதிபத்தியம் என்பது ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசம், ஒரே கொள்கை, ஒரே சாம்ராஜ்யம் என்ற அடிப்படையிலிருந்து கட்டமைக்கப்படுகிறது.  ராவணன் ஒரு சர்வாதிகாரியாக இருந்ததால்தான் தேசம் முழுவதையும் போர் முனையில் இறக்கி விட்டான்.  அவனே ஒரு கிராமசபைத் தலைவனாக இருந்திருந்தால், அவனைக் கிராம ஜனங்களே தூக்கிக் கடலில் விட்டெறிந்திருப்பார்கள் என்கிறார் ராமநாதன். 

ஆனால் இடைக்காலப் பாண்டிய மன்னர்கள் இலங்கையின் தொடர்பு காரணமாக பௌத்தத்தின் சமதர்மக் கோட்பாட்டை ஓரளவு ஆதரித்தார்கள்.  இது பற்றி வீரபாண்டியன் மனைவியில் ராமநாதன் வைக்கும் கருத்துக்கள் மிகப் பெரும் ஆய்வுக்குரியவை.  மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் இருந்த சமண, பௌத்தத் துறவிகளின் குகை மடங்கள் இடிக்கப்பட்டன.  இது குகையிடி கலகம் என்று கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சமணம், பௌத்தத்துக்குப் பதிலாக அந்நியப் படையெடுப்புகளால் வடநாட்டிலிருந்து துரத்தப்பட்ட வைதீக ஜாதி வழி தர்மம் தமிழ்நாட்டில் தலையெடுத்தது.  அந்த வைதீகர்கள்தான் சோழ மன்னர்களின் ராஜகுருக்களாகவும் விளங்கினார்கள். 

Palimpsest வரலாறு என்று சென்ற வாரம் குறிப்பிட்டேன்.  பின்வருவது ஒரு பாலிம்செஸ்ட் ஓலைச் சுவடி. 

நம்முடைய புலவர்களும் கவிஞர் பெருமக்களும் தமிழ் வேந்தர்களின் வீரம் பற்றிக் கடந்த 2000 ஆண்டுகளாகப் பாடி வருகின்றனர்.  அத்தகைய வீர வரலாற்றை ஒரு பிரதி என்று கொண்டால் அந்தப் பிரதியின் மேல் எழுதப்பட்ட மாற்றுப் பிரதியே வீரபாண்டியன் மனைவி.  அதில் ஜனநாதக் கச்சிராயன் பேச்சிலிருந்து ஒரு பத்தி:

‘தம்பி! நம்முடைய (சோழர்கள்) யானைப் படைகள் பிரும்மாண்டமானது என்று பிரசித்திப் பெற்றதல்லவா?  அதன் பலத்தையெல்லாம் பாண்டிய மக்களுக்குக் காட்டிப் பயமுறுத்தி வைத்து விட்டுத்தானே நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்?  நம்முடைய ராஜதந்திரிகள் இங்கிருந்து (மதுரை) புறப்படுமுன் குறிப்பிட்ட ஒரு தேதியில் அக்குற்றவாளிகளெல்லாம் வரிசைக்கிரமமாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு, பொழுது விடிந்தது முதல் பொழுது அஸ்தமிக்கும் வரை பாண்டிய மக்களின் கண்முன்னே குற்றவாளிகளின் தலைகள் யானைக்காலால் ஓயாமல் இடறப்பட்டுக் கொண்டேயிருக்கும்.  அத்தகைய பயங்கரக் காட்சியை பகிரங்கமாக நாம் நடத்திக் காட்டி விட்டுப் போனால், நமக்கெதிராக பாண்டிய மக்கள் பெருமூச்சு விடக் கூட பல தலைமுறை வரை பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது நம் ராஜதந்திரிகளின் நினைப்பு! ’

ஆனால் எந்த ஒரு சர்வாதிகார ஆட்சியும் மக்களைப் பயமுறுத்துவதன் மூலமாக நீடித்திருந்ததில்லை என்பது உலக சரித்திரம் சொல்லும் பாடம்.  அதன்படியே வீரபாண்டியன் மனைவி நாவலின் கதை நடக்கும் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில்தான் (1180) சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியின் பாதையில் செல்ல ஆரம்பித்தது.  அவனது ஆட்சிக் காலம் 1178 – 1218.  அதற்குப் பிறகு 63 ஆண்டுகளே சோழர்களின் ஆட்சி நீடித்தது.  

வீரபாண்டியன் மனைவி சொல்லும் பாலிம்செஸ்ட் வரலாற்றுக்கு இன்னொரு உதாரணம்: ஒரு சமயம் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு மூலையில் வெள்ளப் பஞ்சம் ஏற்பட்டது.  பெருமழையினால் தொண்டை நாடு பெரிதும் திண்டாடியது.  பெரு வர்ஷம் பெய்து சோமங்கலத்தேரியினால் ஒரே நாளிலே பெருநாசம் ஏற்பட்டது.  அப்போது காமன் கண்டவானவன் என்ற ஒரு தனிப்பட்ட மனிதன் தான் ஏரியின் உடைப்பட்ட ஏழு மடைகளையும் அடைத்தான்.  பிறகு மற்றொரு புறம் மழையின்மையினால் ஒரு பெரும் பஞ்சம் ஏற்பட்டது.  அந்தப் பஞ்ச காலத்தில் காசுக்கு மூணு நாழி நெல் விற்றதென்றும், வேளாளன் ஒருவன் தன் மக்கள் இருவருடன் நூற்றிப்பத்துக் காசுக்குக் கோயில் மடத்துக்கு விலைப்பட்டு அடிமை புகுந்தான் என்றும் திருப்பாம்புரச் சாஸனம் கூறுகிறது.  அப்போது பஞ்சநிவாரண வேலைகளில் ஈடுபட்டுக் குடிமக்களைக் காப்பாற்றிய புண்ணியசீலர்கள் சாம்ராஜ்யவாதிகளல்ல! அருங்குகின்ற கிழார், மங்கையர்க்கரசியார் போன்ற தனிப்பட்டவர்கள்தான்.  அரசாங்கத்தார் செய்த உதவி இன்னதென்று இதுகாறும் தெரியவில்லை.  பிறகு  காவிரி பெருக்கெடுத்து மக்களின் நிலங்களை அழித்தது.  அப்போது சோழ அரசாங்கம் ஆஸ்தானப் புலவரான கம்பரைக் கூப்பிட்டு காவிரியின் வெள்ளம் அடங்கக் கவிதை பாடச் சொன்னது. 

கன்னி அழிந்தனள்; கங்கை திறம்பினள்,

பொன்னி கரை அழிந்து போனாள் என்றிந்நீ,

உரைக்கிடலாமோ உலகுடைய தாயே

கரை கடக்கல் ஆகாது காண்

என்று அரண்மனையிலே கம்பர் கவிதை பாட, அதைக் கேட்டு  மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அகமகிழ்ந்து கொண்டிருந்தானே தவிர, ஆற்று வெள்ளத்தை அடக்கக் குடிமக்கள்தான் மண் அள்ளிப் போட வேண்டியிருந்தது.  கொடிய வறுமைக் காலங்களில் பிழைக்க வழியற்றுப் போகும் பெண்களும் ஆண்களும் தம்மை விலைக்கு விற்றுக் கொண்டு அடிமைகளான செய்திகள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் அவனுடைய முன்னோர் காலங்களிலும் அதிகமாக இருந்தன.

சூலமங்கலத்தில் கணக்கர் இருவர் தம் அடிமைப் பெண்கள் இருவரை ஆள்விலை பிரமாண இசைவுச் சீட்டு எழுதிக் கொடுத்து கோவிலுக்கு விற்றார்.  சோழர்களின் ஆட்சியில் பெண்கள் தங்களையே விற்றுக் கொண்டு கோவிலுக்குத் தேவரடியார் ஆனார்கள்.  ராஜராஜன் காலத்தில் கூட இந்த வழக்கம் இருந்தது.  நான்கு பெண்களுக்கு எழுநூறு காசு என்கிறது கல்வெட்டு.  இத்தகைய அடிமை வியாபாரம் செய்வதற்கு வயிராதராயர் என்னும் அதிகாரி இருந்து வந்தார்.  அவருக்கும் அவர் மனைவிக்கும் பல அடிமைகள் இருந்தனர்.  அத்தகைய அடிமைகளில் பெண்கள் உட்பட முப்பத்தறுவர் கோவில்களுக்கு விற்கப்பட்டார்கள் என்றும் அந்த அடிமை விற்பனையை சிலாசாஸனம் பண்ணுவித்தனர் என்றும் கூறுகிறது கல்வெட்டு.  இச்செய்திகளெல்லாம் மிக விபரமாக நாவலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

குலோத்துங்கச் சோழனின் படைகள் மதுரையில் கைது செய்தவர்களை அடைத்து வைத்திருக்கும் மரணக் கிடங்கை அரு. ராமநாதன் விவரிக்கும் போது நரகம் பற்றி இதுவரை வாசித்ததெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது.  அந்தக் காராகிருகத்தின் அதிகாரியாக இருப்பவரும் ஆயுட்கைதியாக அங்கேயேதான் இருக்க வேண்டும்.  வெளியிலேயே வர முடியாது.  அதற்குப் பிரதியாக மன்னர் அவருடைய குடும்பத்துக்கு நிலமும் பணமும் கொடுப்பார்.  யாராவது கைதி தப்பி விட்டால் அதிகாரியின் தலை யானைக் காலால் இடறப்படும்.   மூன்றாம் குலோத்துங்கன் மதுரையை வென்று அங்கே ஆட்சியிலிருந்த வீரபாண்டியனின் மனைவியைச் சிறைப் பிடித்தான்.  (அப்போது குலோத்துங்கனின் அரசவைப் புலவராக இருந்த கம்பர், ராமனின் மனைவியைச் சிறைப் பிடித்துச் சென்ற ராவணனின் வீழ்ச்சியை எழுதிக் கொண்டிருந்தார் என்ற வரலாற்று நகைமுரணைச் சுட்டிக் காண்பிக்கிறார் ராமநாதன்.) மேலே குறிப்பிட்ட காராக்கிரகத்தில் வீரபாண்டியனின் ராணி சிறைப்பட்டிருந்த அறை எப்படி இருந்தது என்பதை ராமநாதன் வர்ணிக்கிறார்:

ஒருபுறம் குத்துவிளக்கும் ஓலைச்சுவடிகளும் வைக்கப்பட்டிருந்தன.  ஒரு மூலையில் ஸ்நானத்திற்காக ஒரு மறைவுத் தட்டியும், அண்டாவும், தண்ணீர்த் தவலைகளும்,  வெந்நீர் தேவைப்பட்டால் அடுப்பு எரிப்பதற்குத் தேவையான சுள்ளிகளும் வைக்கப்பட்டிருந்தன.   மூன்றாவது மூலையில் சில மண் பாத்திரங்களும், விளக்குமாறுகளும் வைக்கப்பட்டிருந்தன. நான்காவது மூலையில் தேவி படுத்துறங்குவதற்காக ஒரு கிழிந்த ஓலைப்பாய் விரிக்கப்பட்டிருந்தது.

***

இன்றைய அரசியலில் நம் பரிகாசத்துக்குரியதாகத் தென்படும் அத்தனை விஷயங்களும் தமிழரின் பண்டைக் கலாசாரத்தின் நீட்சியே என்று வீரபாண்டியன் மனைவியை வாசிக்கும் போது தெரிகிறது.  மூன்றாம் குலோத்துங்கன் பற்றி ஜனநாதக் கச்சிராயன் கூறுகிறான்: ‘நம் மன்னர் ஆதிக்க வெறி கொண்டு அண்டை அயலிலுள்ள நாடுகள் மீதெல்லாம் வீரம் என்ற பெயரால் படையெடுப்பார்.  ராஜதந்திரம் என்ற பெயரால் அந்நாடுகளை முன்னறிவிப்பின்றித் தாக்குவார்.  அந்நாடுகளைச் சூறையாடுவார்.  அங்கு கொள்ளையிட்ட பொருள்களில் ஒரு சிறு பங்கை கோயில் திருப்பணிகளுக்குச் செலவிட்டுத் தெய்வீகப் புகழடைவார்!...  தம்பி எதேச்சாதிகாரி எப்போதும் முகஸ்துதிப் பிரியனாகவே இருப்பான்.  அது தனக்கு ஆத்ம திருப்தியைத் தருவதோடு மக்களின் அதிருப்தியையும் மறைக்கும் என்றும் எண்ணுவான்.  வெளிநாடுகளில் நம் மன்னருக்கு எவ்வளவு பெரிய மதிப்பு, நம் ஆட்சியாளரை அரும்பெரும் புலவர் பெருமான்களெல்லாம் எவ்வளவு பிரமாதமாகப் புகழ்கிறார்கள் என்பன போன்ற பெருமை உணர்ச்சிகளினாலும், பிரமிப்பினாலும் மக்கள் தங்களுடைய அதிருப்தியையும் குறைகளையும் மறந்து விடுவார்கள்.  பல குறைபாடுகளுடைய நம் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழாமல் இருப்பதற்குக் காரணம், இத்தகைய பெருமையுணர்ச்சியும் குகோத்துங்கச் சோழரின் மாபெரும் புகழுமேயாகும்.  இந்தப் புகழ் அழிந்தால் சோழ சாம்ராஜ்யம் பொடிப் பொடியாய்ப் போய் விடும்.” 

இதோடு இந்தக் கட்டுரையை முடித்தால் அது அரு. ராமநாதனின் மகத்தான பணிக்குச் செய்யும் நியாயமாகாது.  அதனால் வீரபாண்டியன் மனைவிக்கு நிகரான, அதிகம் யாராலும் பேசப்படாத அவருடைய அசோகன் காதலி என்ற மிகச் சிறிய நாவலைப் பற்றி மட்டும் கொஞ்சம் பேசலாம்.  சந்திர குப்த மௌரியனைப் பற்றி நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம்.  எங்கோ மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவனை சாணக்கியன் என்ற மகாபுத்திசாலியான பிராமணன் உலகின் மிகப் பெரிய  சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டியமைத்து அதன் அதிபதியாக ஆக்கினான்.  அதற்காக நந்த மன்னர்களின் பல்லாயிரக் கணக்கான வீரர்களைக் கொன்று கடைசி நந்த மன்னனின் கைக்குழந்தை வரை கருவறுத்தான் சாணக்கியன்.  அவனுடைய ராஜதந்திரத்தினால் தமிழ்நாட்டைத் தவிர்த்து இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்த முதல் அரசன் என்றும், இந்தியாவின் முதல் பேரரசன் என்றும் பேர் பெற்றான் சந்திரகுப்தன்.  அலெக்ஸாண்டரால் வெற்றி கொள்ளப்பட்ட இந்தியப் பகுதிகளை அவரது மரணத்துக்குப் பிறகு ஆண்டு கொண்டிருந்த செலுக்கஸ் நெக்டர் மீது போர் தொடுத்து, போர் உடன்படிக்கையாகத் தன்னிடமிருந்த 500 யானைகளைக் கொடுத்து, செலுக்கஸின் மகளை மணம் புரிந்து கொண்டான் சந்திரகுப்தன்.  அந்த உடன்படிக்கையில் ஆஃப்கனிஸ்தான், பலூச்சிஸ்தான் ஆகிய தேசங்களும் சந்திரகுப்தனின் சாம்ராஜ்யத்திற்குள் வந்தது.  இதற்கெல்லாம் காரணமாக இருந்தது சாணக்கியனின் ராஜதந்திரமே தவிர சந்திரகுப்தனின் படைப்பலம் அல்ல.  (அலெக்சாண்டர் உயிரோடு இருந்த போதே சாணக்கியனின் ராஜதந்திரத்தைக் கேள்விப்பட்டு அவனைச் சந்திக்க விரும்பியிருக்கிறார்.)  

சந்திரகுப்தனுக்கு யாரும் விஷம் வைத்துக் கொன்று விடக் கூடாது என்று மிகக் குறைந்த அளவு விஷத்தை தினந்தோறும் அவனுடைய உணவோடு கலந்து கொடுத்து விஷத்தையே செரிக்கும் தன்மை கொண்டவனாக அவனை மாற்றினான் சாணக்கியன்.  இந்த விஷயத்தை அறியாத சந்திரகுப்தன் ஒருநாள் கர்ப்பவதியாக இருந்த தன் பத்தினிக்குத் தன் உணவை அளிக்க அவள் உடலில் விஷம் பரவியது.  இதைக் கேள்விப்பட்டு ஓடி வந்த சாணக்கியன் இன்னும் சில தினங்களில் மகவைப் பெற்றெடுக்க வேண்டிய அவளுடைய வயிற்றைக் கிழித்துக் குழந்தையை வெளியே எடுத்தான்.  அவளுடைய தேகத்தில் பரவியிருந்த விஷக் குருதி குழந்தையின் நெற்றியில் தெறித்துச் சிவக்க அந்தக் குழந்தைக்கு பிந்துசாரன் என்ற பெயராயிற்று.  (பிந்து – குங்குமப் பொட்டு)  அப்பேர்ப்பட்ட மகா சக்ரவர்த்தியாக விளங்கிய சந்திரகுப்தன் ஒருநாள் தன் சாம்ராஜ்யத்தையும் தனது குருநாதரின் வைதீக மதத்தையும் துறந்து சமணத்தைத் தழுவி ஆடைகள் கூட இல்லாத திகம்பரனாக தமிழகத்தில் இருந்த சிரவணபெலகொலா (அப்போது தென்னகம் முழுவதும் தமிழகம்தான்) வந்து 21 தினங்கள் உண்ணாநோன்பு இருந்து மரணம் அடைந்தான்.   

சந்திரகுப்தனின் மகன் பிந்துசாரனின் பல மனைவிகளில் ஒருத்திக்குப் பிறந்தவன் அசோகன்.  இளம் வயதிலேயே ரத்த வெறி பிடித்த மூர்க்கனாக இருந்த அசோகன் ஒருமுறை மரக் கொம்பினால் சிங்கம் ஒன்றைக் கொன்றதால் அரண்மனையில் பெரும் வீரன் எனக் கொண்டாடப்பட்டான்.  தந்தையின் பதினாறு பட்டமகிஷிகளுக்குப் பிறந்த தனது சகோதரர்கள் 99 பேரையும், பட்டத்து இளவரசனான சுஷீமனையும் கொன்று விட்டுப் பதவிக்கு வந்தான் அசோகன்.  அவன் நடத்திய கலிங்கத்துப் போரில் ஒரு லட்சம் வீரர்கள் மாண்டனர்.  1,50,000 கலிங்க வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.  அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பௌத்த தர்மத்துக்கு மாறிய அசோகன் அஹிம்சை வழியில் ஆட்சி செலுத்தினான்.  முடியரசின் எதேச்சாதிகாரத் தன்மைகளைத் தவிர்த்து விட்டு மக்களுக்காக மக்களால் ஆளப்படும் குடியரசுத் தத்துவத்தை நடைமுறைப் படுத்திய முதல் இந்திய அரசன் அசோகன்.  அவனுடைய இந்த மாற்றம் எல்லோரும் நினைப்பது போல் கலிங்கத்துப் போரினால் அல்ல; அதற்குக் காரணமாக இருந்தது ஒரு பெண் என்கிறார் ராமநாதன்.  அந்தக் கதைதான் அசோகன் காதலி என்ற வரலாற்று நவீனம்.  இதற்குச் சான்றாக அசோகனின் கல்வெட்டையும் ஆதாரமாகக் காண்பிக்கிறார்.  இந்த நாவலின் அடிச்சரடாக அரு. ராமநாதன் முன்வைப்பது, அறிவை விட அன்பே மனித குலத்தை வாழ வைக்கும் முழுமுதல் தத்துவம் என்பதே.  சந்திரகுப்தன் தனது அரசியல் குருவான இந்து மதத்தைச் சேர்ந்த சாணக்கியனைப் புறக்கணித்து விட்டு சமணத் துறவியானதும், அசோகன் பௌத்தத்தைத் தழுவி அஹிம்சாவாதியாக மாறியதுமான இரண்டு சம்பவங்களும் ராமநாதனின் கோட்பாட்டை வலுப்படுத்துகின்றன.  அசோகன் காதலி என்ற இந்த நாவலில் வரும் காரூவகியைக் காதலி என்று குறிப்பிட்டாலும் புத்தனின் பெண் வடிவத்தைப் போன்ற ஒரு மாபெரும் ஞானியாகவே திகழ்கிறாள்.  அசோகன் காதலி என்ற பெயர் இருந்தாலும் அஹிம்சையையும் அன்பையும் போதிக்கும் இந்த அற்புதமான நாவலை நாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அவசியம்.  மாணவர்கள் படித்தால் அவர்களின் வாழ்வு மேன்மையுறும். 

அ.கி. வேங்கட சுப்ரமணியன் எழுதிய ‘அரு. ராமநாதன் : எழுத்துக்களும் எண்ணங்களும்’ என்ற வானதி பதிப்பக நூலும் அரு. ராமநாதன் குறித்த ஒரு விபரமான அறிமுகத்தைத் தருகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments