ஆர். ஷண்முகசுந்தரம் (1917 - 77)
சி.சு. செல்லப்பாவின் எழுத்துப் பிரசுரத்திலிருந்து, 1962-ல் ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற சிறியதொரு கட்டுரைத் தொகுப்பு இரண்டு ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது.
சி.சு. செல்லப்பாவின் எழுத்துப் பிரசுரத்திலிருந்து, 1962-ல் ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற சிறியதொரு கட்டுரைத் தொகுப்பு இரண்டு ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது. அதில் எழுதியிருந்த பதினோரு எழுத்தாளர்களில் ஒருவர் ஆர். ஷண்முகசுந்தரம். திருப்பூர் மாவட்டம், கீரனூர் கிராமத்தில் பிறந்தவர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் ஒருவரான இவர்தான், அந்த எழுத்தாளர்களில் முதலில் நாவல் எழுதியவர்.
நாகம்மாள் என்ற அந்த நாவல் 1942-ல் வெளிவந்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட முதல் நாவல்; குடியானவர் வாழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் ஆகிய பெருமைகளைக் கொண்டது. இதுதவிர, சட்டி சுட்டது, அறுவடை, தனிவழி முதலான இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், நவசக்தியில் கதம்பம் என்ற தலைப்பில் ஆலோலம் என்ற புனைபெயரில் அரசியல் பத்தி என்று ஏராளமாக எழுதியிருக்கிறார். இவைதவிர, விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய பதேர் பாஞ்சாலி உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
Advertisement
ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற கட்டுரையில் சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன. 1937-ல் அவர் எழுதிய முதல் கதையை ஏற்றுக்கொண்டு மணிக்கொடியிலிருந்து ஆசிரியர் பி.எஸ். ராமையா சார்பாக, உதவி ஆசிரியர் கி.ரா. கடிதம் அனுப்புகிறார். (இப்போது கி.ரா. என்றால் கரிசல்காட்டு கி.ராஜநாராயணனைக் குறிப்பதுபோல், முப்பதுகள் நாற்பதுகளில், கி.ரா. என்றால் மணிக்கொடியின் உதவி ஆசிரியராக இருந்த கி. ராமச்சந்திரனையே குறிக்கும். இவரது வாழ்க்கை திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தது. பிறகு பார்ப்போம்). அந்தக் கடிதத்தில், ‘இந்தக் கதை உங்கள் சொந்தக் கற்பனைதானா?’ என்று கி.ரா. கேட்கிறார். இப்படி முதல் கதையிலேயே மணிக்கொடி ஆசிரியரைத் திகைப்படையச் செய்தவர் ஷண்முகசுந்தரம்.
‘எதற்காக எழுதுகிறேன்? உலகத்தை உய்விக்கும் நோக்கம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் கெட்டுத் தொலைகிறதாக இவ்வுலகம் கங்கணம் கட்டிக்கொண்டுவிட்டால், இந்த உலகைத் தடுத்து நிறுத்திவிட நம்மால் முடியுமா?
ஆரம்பத்தில் எனக்கு இருக்கும் ஆர்வத்தினால் எழுதினேன். அன்று என்னுடைய பதில் அது. இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகு பத்திருபது சிறுகதைகள் படைத்து, சரத்சந்திர சட்டர்ஜியின் நாவல்கள் இரண்டொன்றை மொழிபெயர்த்த பின்னர், அமரர் கு.ப.ரா.வோடு நெருங்கிப் பழகிக்கொண்டிருந்த நாளில், ‘கிராமத்து ஜனங்களை நன்றாக அறிந்திருக்கிறீர்கள். நாவல் எழுதுவதுதானே?’ என்று கு.ப.ரா. கூறினார்.
‘நாகம்மாள்’ நாவலை ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன். நண்பர் கு.ப.ரா., உண்மையில் மகிழ்ச்சி அடைந்தார். அன்றைக்கும் இன்றைக்கும், எனக்கு என்ன எழுதுவதென்றாலும் ‘மூடுகீடு’ ஒன்றும் வரவேண்டியதில்லை. எந்த நேரமும் பேனா பிடித்தால், நிற்காமல் நிறுத்தாமல் எழுத வேண்டியதுதான். அடித்தல் திருத்தல்களுக்கு இடம் வைத்துக்கொள்ள மாட்டேன்’.
நாகம்மாளை 1942-ல் எழுதி முடித்துவிட்டு, பத்து ஆண்டுகள் எழுத்தே கதியாக இருந்தார் ஷண்முகசுந்தரம். எழுத்திலிருந்து வருமானம் இல்லாததால், ஒரு முடிவு செய்கிறார். கதைகளை எழுதி சொந்தமாகப் பிரசுரம் செய்வது! அதிலிருந்தும் பணம் வராததால், பத்து ஆண்டுகள் எழுத்திலிருந்தே ஒதுங்கி இருக்கிறார். ‘ஒரு வருஷத்தில் இரண்டு புத்தகம் எழுதினோம் வாழ்ந்தோம் என்ற நிலை இருக்கிறதா? கூழைவிட ஒரு வேளை சோறு மேல் என்று சொல்வதில் என்ன பெருமை? அது ஒரு வளர்ச்சி என்று பறைசாற்றுவது சரியென்று தோன்றவில்லை’ என்று சொல்லும் ஷண்முகசுந்தரம், நண்பர் க.நா.சு.வின் வற்புறுத்தலால் மீண்டும் எழுத ஆரம்பிக்கிறார். அப்போதுதான் சட்டி சுட்டது என்ற நாவல் வருகிறது. அது 1965.
‘பட்டினி கிடந்து செத்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை நான் அடியோடு மறுப்பவன். ‘பாலும் பழரசமும் தந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதுவீரோ? எந்தக் கட்சிக்கும் எழுதித் தருவீரோ?’ என்று நையாண்டி பண்ணாதீர்கள். கட்சியாவது சுண்டைக்காயாவது? வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிக்கொள்வதில் என்ன பிரயோஜனம்?’ என்று தன் கட்டுரையை முடிக்கிறார் ஷண்முகசுந்தரம்.
தமிழ்ச் சூழல், எந்த அளவுக்கு இலக்கியத்துக்கு எதிரானதாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம், க.நா.சு., நாகம்மாள் நாவலின் முக்கியத்துவம் பற்றி இடைவிடாமல் எழுதிவந்தும், 1942-ல் வெளிவந்த அந்த நாவலின் இரண்டாம் பதிப்பு, 1987-ல்தான் வெளிவந்தது. இப்போதோ, பெருமாள் முருகன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு யாருக்கும் அவர் பெயர் தெரியாது!
நாகம்மாள், அறுவடை, சட்டி சுட்டது போன்ற நாவல்கள், கிராமப்புறங்கள் பற்றி எழுதப்பட்ட க்ளாஸிக்ஸ் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. ‘தமிழ் நாவல்களில் மட்டுமல்ல; இந்திய நாவல்களிலும் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கிராமியச் சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்து, பிராந்திய நாவல் என்கிற துறையை முதல்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் ஷண்முகசுந்தரம் என்று சொல்லலாம்’ என்கிறார் க.நா.சு.
கு.ப. ராஜகோபாலன், நாகம்மாளுக்கு எழுதிய முன்னுரையில், அந்த நாவலில் வரும் வெங்கமேடு என்ற கிராமத்தை, தாமஸ் ஹார்டியின் Egdon Heath-த்துடன் ஒப்பிடுகிறார். உண்மைதான். ஹார்டியின் The Return of the Native என்ற நாவலின் முக்கியப் பாத்திரம் மனிதர்கள் அல்ல; எக்டன் தரிசு நிலம். ஹார்டிக்கு எக்டனைப்போல், ஷண்முகசுந்தரத்துக்கு திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்கள். வெங்கமேடு, திருப்பூரிலிருந்து அறுபது மைல் தூரம். ‘வெங்கமேட்டில் வாரத்துக்கு ஒருமுறை புதன்கிழமை சந்தை கூடும்; சுற்று வட்டாரத்துச் சுமார் பத்து இருபது கிராமத்தவர்கள், வீட்டுச் சாமான்கள் வாங்குவதற்கு இங்குதான் வருவது வழக்கம். ‘உப்புத் தொட்டுக் கற்பூரம் வரை, சாதாரணமாக எல்லாச் சாமான்களுமே அங்கு கிடைக்கும்’ என்று வெங்கமேட்டை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
நாகம்மாளைவிட சட்டி சுட்டது இன்னும் காவியத் தன்மை கூடியதாக உள்ளது. தாராபுரம் தாலுகாவின் வடக்கு எல்லையில் நொய்யல் ஆற்று விளிம்பில் ஒதுங்கிக்கிடக்கும் ஒரத்தபாளையம் என்ற குக்கிராமத்தில், நாற்பதுகளில் வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைப் பற்றிய கதை, சட்டி சுட்டது. வருடத்தில் பத்து மாதங்கள் தண்ணீரைப் பார்க்க முடியாத வறண்ட பூமி. பத்துப் பதினைந்து வீடுகள். எல்லாம் ஓட்டு வில்லை வீடுகள். ஒரத்தபாளையம் எப்படி இருந்தது என்பதை ஆசிரியர் விளக்குகிறார் -
‘ஒரத்தபாளையத்துக்குப் போவதென்றால், மற்ற ஊர்க்காரர்களுக்குக் கொஞ்சம் பயம்தான்! பயப்படும்படியான ஆள்களோ கருவிகளோ அப்படி என்ன இருந்தது அங்கே? அதெல்லாம் ஒன்றுமில்லை. பாதை சரியில்லை; வழி கிடையாது. அடுப்புக்கல் கூட்டியது போன்ற ஊரின் அமைப்பு! ஒருபுறம் சிவியார்பாளையம்; இன்னொரு பக்கம் அழுக்குத்தி வலசு. காங்கேயம் - சென்னிமலை செல்கின்ற சாலையிலிருந்து குறுக்குப் பாதை வழியாக – வண்டித்தடத்தில் அழுக்குத்தி வலசு வந்து சேர்வதற்குள், இடுப்பும் முதுகும் வலி எடுக்க ஆரம்பித்துவிடும். அங்கிருந்து நாலு காட்டுத் தூரம் ஒற்றையடிப் பாதையில் நடந்தால், ஒரத்தபாளையம் போய்ச் சேரலாம். அது ஒரு வழி. மற்றொன்று – சிவியார்பாளையத்தை சிரமப்பட்டு, கரடுமுரடுகளைத் தாண்டிச் சென்றடைந்துவிட்டாலும், கை தேர்ந்த மாடுகள் மட்டும் ஏற்ற இறக்கம் குண்டு குழிகளைச் சமாளித்து நிதான நடை போடுகின்ற இட்டேறித் தடத்தில் – பழக்கப்படாத பாதங்கள் நடப்பதென்றால், படாத பாடு பட்டுவிடும். அவ்வளவு கஷ்டத்தைக் கடந்து, ஒரத்தபாளையத்துக்கு யார் போகப் போகிறார்கள்? போக வேண்டிய வேலை என்ன? இந்த இரண்டாவது யுத்தம் முடிந்த நாலைந்து வருஷத்துக்குப் பிறகுதான் – வியாபாரிகள் இரண்டொருவர் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்’.
‘வறட்சியைத் தழுவிக்கொண்டிருக்கும் அந்த வட்டாரத்தில் செய்வதற்கு என்ன வேலை இருக்கிறது? பிஞ்சுக் கரங்கள் வேகாத வெயிலில் ஓடி ஓடிச் சாணி எடுப்பதும், கழி தட்டுப் பொறுக்குவதும், வருஷத்துக்குப் பத்து வள்ளம் கம்புக்கும், எட்டு வள்ளம் சோளத்துக்கும் – ராகிக் கூழுக்குமாக அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் பண்ணைகளில் அவதிப்படுகிறதைப் பார்க்குந்தோறும், சாமிக் கவுண்டர், அந்தப் பேசும் பொற்சித்திரங்களைப் பெற்றெடுத்த புண்ணியவாளர்களை எண்ணி இரங்குவார்’.
கிராமத்து மனிதர்களின் வாழ்வை எந்த அளவுக்கு அவர்களின் அவ்வப்போதைய உணர்ச்சிகள் பாதிக்கின்றன என்பது பற்றிய ஒரு சிறிய சித்திரம் இது –
‘கவுண்டருடைய அத்தை மகன் ஒருவன் – அரும்பு மீசைக்காரன் – தன் தோட்டத்தில் திருட்டுத்தனமாகப் புளியங்காய் பறித்துக் கொண்டிருந்த பையனைக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். அவனும் இளைஞன்தான். மணியக்காரரின் மெய்க்காப்பாளராகப் போகவர இருந்து கொண்டிருந்தவன். சற்று முரடன். புத்தியும் கட்டைப் புத்தி. வார்த்தை தடித்தது. விசுக்கென்று சூரிக்கத்தியை எடுத்துக் குத்திவிட்டான். பையன் குடல் அப்படியே வெளி வந்துவிட்டது. அந்த இடத்திலேயே அவன் துடிதுடித்துச் செத்தான்’.
ஷண்முகசுந்தரத்தின் வறண்ட நிலப்பகுதிகளைப் படித்தபோது, மெக்ஸிகோவில் 1950-களில் பிரபலமாக இருந்த பல எழுத்தாளர்களின் ஞாபகம் வந்தது. குறிப்பாக, யுவான் ருல்ஃபோ (Juan Rulfo). பல்வேறு காரணங்களால், நாம் ஷண்முகசுந்தரத்தின் க்ளாஸிக்குகளை வாசிக்கவும் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்குக் கற்பிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். முக்கியமாக, ஒரு காலகட்டத்தின் நிலவியலையும் மொழியையும் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், இவருடைய நாவல்கள் மிக முக்கியமான மானுடவியல் ஆவணங்கள் என்று சொல்லலாம். ஆனால், வெறும் ஆவணங்களாக மட்டும் இல்லாமல், அவை மகத்தான இலக்கியமாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. ஷண்முகசுந்தரத்தின் படைப்புகளை, யூமா வாசுகி 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்கத் துன்பவியல் நாடகங்களோடு ஒப்பிடுகிறார். அதில் கொஞ்சமும் மிகையில்லை. ஸோஃபாக்ளிஸின் அவல நாடகங்களுக்கும் நாகம்மாள், சட்டி சுட்டது, அறுவடை போன்ற நாவல்களுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
எழுபது வயதில், கல்யாண ஆசையில் பெண் தேடும் சின்னப்ப முதலியாரின் கதை சொல்லும் அறுவடை என்ற நாவல், 1960-ல் எழுதப்பட்டது என்பதை நம்பவே முடியவில்லை. பணம் பணம் என்று பணத்துக்காகவே அலைந்துகொண்டிருக்கும் நாச்சிமுத்து, அவனுடைய செல்ல மகள் தேவானை, அவளுடைய காதலன் சுப்ரமணியன், சின்னப்ப முதலியாருக்கும் தன் மகனுக்குமாகச் சேர்த்து மணமகள்களைத் தேடிக்கொண்டிருக்கும் கருப்பண முதலியார் போன்ற வெகு சில பாத்திரங்களில் ஒரு பெரும் காவியத்தையே படைத்திருக்கிறார் ஆசிரியர். கருப்பண முதலியார் தன் வீட்டில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் தேவானை நினைக்கிறாள், இந்த ஆள் ஏன் நம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்? ‘அவர் மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரியும். ஆனால் சதா தறிக்குழியே சதம் என்று அழுந்திக்கிடக்கும் சொரி சிரங்கு பிடித்த பயலுக்கா, அப்பா தன்னைக் கல்யாணம் செய்து கொடுப்பார்?’ கடைசியில் பார்த்தால், அவள் அப்பன், சின்னப்ப முதலியாருக்கே தேவானையைக் கட்டிக் கொடுக்க முடிவு செய்துவிடுகிறான். சுப்ரமணியனிடம் இந்தக் கொடுமையான விஷயத்தைச் சொல்லி அவள் அழும்போது, அவன் சிரித்துக்கொண்டே சொல்கிறான், ‘எவனயாவது கட்டிக்கிட்டு எங்காச்சும் போயிருந்தயானால் நமக்கு எவ்வளவு கஷ்டம்? எங்க தாத்தனெக் கட்டிக்கிறது நல்லதாப் போச்சு’. ஆம், சுப்ரமணியனின் தாத்தாதான் சின்னப்ப முதலியார்! எப்படி இந்த இக்கட்டிலிருந்து தப்பிப்பது என்று புரியாத தேவானை, நமக்குள் இருக்கும் உறவைப் பற்றி ஊரெல்லாம் சொல்லிவிடுங்களேன் என்று சுப்ரமணியனிடம் சொல்கிறாள். எதற்கு? அப்போதாவது முதலியார் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார் அல்லவா?
‘இதுக்கெல்லாம் எங்க தாத்தா மசியமாட்டார். இதுக்கு முன்னாலே படிதாண்டாப் பத்தினிகளெத்தான் கூட்டிக்கிட்டு வந்து வச்சிருந்தாரா? எல்லா தேவடியாளகள்தானே?’ என்கிறான் சுப்ரமணியன்.
மின்னலில் தாக்குண்டவள்போல் தேவானை துடிக்கிறாள். இவளைப்போல ஒரு தேவடியாளைக் கலியாணம் செய்துகொள்ள அவனுடைய தாத்தா தயங்கமாட்டாராம்! ‘பளார்’ என்று சுப்ரமணியனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்துவிட்டு, அவன் முகத்திலே காறித் துப்புகிறாள் தேவானை. அதற்குப் பின் நாவல் எப்படி முடிகிறது என்பதை நான் சொல்லப் போவதில்லை. யாருமே எதிர்பார்க்காத ஒரு காவிய முடிவு அது. அளவில் சிறிதாக இருந்தாலும், ஷண்முக சுந்தரத்தின் எல்லா நாவல்களையும்விட அறுவடையே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
‘எழுத்தையே நம்பி வாழ்ந்திருந்த ஷண்முகசுந்தரத்துக்கு, இந்தச் சமூகம் போதுமான பொருளாதார வசதியைத் தரவில்லை. தமிழுக்கு முன்னோடி வரவுகளைக் கொடுத்த ஆசிரியருக்கு, இச்சமூகம் புறக்கணிப்பையே தந்தது. அவருடைய படைப்புகள் அனைத்தும் இன்றைய வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வாசகர்கள் அவரைப் பற்றிய, அவரது செயல்பாடுகள் குறித்த முழுமையான கணிப்பை வந்தடைய இயலும். அதற்குரிய சூழல் இன்னும் கனியவில்லை’ – பெருமாள் முருகன்.
நன்றி: எஸ்.எஸ்.ஆர். லிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர்
***