தி. ஜானகிராமன் பகுதி - 2
ஒரு துறையில் சாதனை செய்த ஒரு மேதை அந்தத் துறைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வேறோர் துறையிலும் சாதனைகள் செய்திருந்தால் அது வெளியே தெரியாமல் போய் விடுவது உலக இயல்பு.
ஒரு துறையில் சாதனை செய்த ஒரு மேதை அந்தத் துறைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வேறோர் துறையிலும் சாதனைகள் செய்திருந்தால் அது வெளியே தெரியாமல் போய் விடுவது உலக இயல்பு. உதாரணமாக, பின்நவீனத்துவத்தின் உச்சபட்ச எழுத்தாளராகக் கருதப்படும் வ்ளதிமீர் நபக்கோவ் அவரது லொலிதா என்ற நாவலுக்காக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார். ஆனால் அதே நபக்கோவுக்கு இன்னொரு அடையாளமும் உள்ளது. அவர் ஒரு உலகப் புகழ் பெற்ற Lepidopterist. வண்ணத்துப் பூச்சி ஆய்வாளர். அவரது ஆய்வுகள் அந்தத் துறையில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தை விட உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கக் கூடியது வண்ணத்துப் பூச்சி ஆய்வு. ஏனென்றால், இலக்கியத்தை சிருஷ்டி செய்யும் மனிதர்கள் வாழ்வதற்கு வேண்டிய இந்த பூமி அழிந்து விடாமல் ஜீவித்து இருப்பதற்கு ஆதாரமான ஒன்று வண்ணத்துப் பூச்சி. ஆக, அதை ஆய்வு செய்யும் ஒருவரது சாதனை இலக்கியச் சாதனையை விட உயர்ந்தது அல்லவா?
தி. ஜானகிராமனுக்கும் அப்படித்தான் நடந்தது. தி.ஜா.வின் நாவல்கள் ஆண்-பெண் உறவை மையமாகக் கொண்டதாலோ என்னவோ அவர் காலத்திலேயே அவை பிரபலம் அடைந்து விட்டன. அவரது நாவல்களுக்காகவே அவர் கொண்டாடப்பட்டார்; விமரிசிக்கவும் பட்டார். நானே என்னுடைய 25-வது வயதில் அவருடைய மரப்பசு நாவலைக் கடுமையாக விமரிசித்து எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னுடைய நண்பர் R.P. ராஜநாயஹம் தி.ஜா.வின் சிறுகதைகளைப் படித்துப் பாருங்கள் என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதுதான் தெரிகிறது, ராஜநாயஹம் சொன்னது எவ்வளவு சரி என்று. தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் என்ற பட்டியலில் நாம் யார் யாரையெல்லாம் பார்த்திருக்கிறோம்? கு.ப.ரா., புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி என்று துவங்கிப் போகும் அந்தப் பட்டியலில் நான் என்றுமே தி.ஜா.வின் பெயரைக் கண்டதில்லை. முதல்முதலாக காலச்சுவடு மூலம் தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத் தொகுப்பாக வெளிவந்த ஆண்டு 2014. மொத்தம் 1128 பக்கங்கள். உண்மையில் நாவலை விடவும் தி.ஜா. தனது சிறுகதைகளில் உலகத் தரத்தை எட்டியிருக்கிறார். மாப்பஸான், செகாவ் ஆகியோர் சிறுகதை இலக்கியத்தின் உச்சம் என்று உலகம் கொண்டாடுகிறது. அந்த வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் தி.ஜா. என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பொதுவாகவே உலகமெங்கும் இலக்கிய ரசிகர்கள் நாவல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பவர்கள் – அதிலும் தமிழர்களுக்கு நாவல்தான் உயிர் – என்பதால் சிறுகதைகளில் தி.ஜா.வின் மகத்தான சாதனையைப் புறக்கணித்து விட்டு அவரை நாவலாசிரியர் என்றே கொண்டாடியும் விமரிசித்தும் வந்திருக்கிறோம் நாம். தி.ஜா.வின் மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை உலகின் முக்கியமான நாவல்களில் சேர்க்க முடியும். அதே சமயம் அந்த நாவல்களையும் விட சிறுகதையில் அவர் அதிகம் சாதித்திருக்கிறார். இதை க.நா.சு., அசோகமித்திரன், ஜெயமோகன், கவிஞர் சுகுமாரன் ஆகியோரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.
தி.ஜா.வின் முதல் சிறுகதையான ‘மன்னித்து விடு’ ஆனந்த விகடனில் டிசம்பர் 1937-ல் வெளியாகியது. அப்போது தி.ஜா.வின் வயது 16. கும்பகோணத்தில் கல்லூரி மாணவன். இந்தக் கதை இன்றைய ஜனரஞ்சகப் பத்திரிகையில் வரக் கூடிய இலக்கிய நயம் இல்லாத கதையாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் எழுதி 1946-ல் கலாமோஹினியில் வெளியான ‘பசி ஆறிற்று’ என்ற கதையில் சிறுகதைக் கலையின் பரிபூர்ணமான நிலையை அடைந்து விட்டார் தி.ஜா. தமிழ்ச் சிறுகதை அடைந்திருந்த தேக்கத்தை இந்தக் கதை உடைத்தது என்று குறிப்பிடுகிறார் க.நா.சு. இப்போது நினைத்துப் பார்த்தால் தி.ஜா.வுக்கு எப்படி அது சாத்தியமாயிற்று என்றே ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், அந்தக் கதை வெளியான ஆண்டு 1946.
Advertisement
டமாரச் செவிடான சாமிநாத குருக்களின் மனைவி அகிலாண்டம். ராதா கல்யாணத்துக்காகப் பட்டாளத்தில் வேலை பார்க்கும் ராஜம் மூன்று நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வருகிறான். பக்கத்து வீட்டில் பார்த்த மாத்திரத்தில் அவனிடம் மயங்குகிறாள் அகிலாண்டம். அடுத்த இரண்டு நாள்கள் அவளுக்கு எதுவும் ஓடவில்லை. தேனீ மாதிரி அவன் நினைவே வந்து அவளை ஒட்ட ஒட்ட மொய்க்கிறது. அவளுக்கு அவன் மீது ஏற்படும் பாலியல் வேட்கையை சாமிநாதனின் பரிவும் அன்பும் அவளிடமிருந்து அகற்றி அவளைத் தூய்மைப்படுத்துவதாக முடிகிறது ‘பசி ஆறிற்று.’
‘சண்பகப்பூ’ கதையில் வரும் 18 வயதுப் பெண் கல்யாணமாகி ஒரே ஆண்டில் விதவையாகிறாள். அந்த வீட்டில் குடியிருக்கும் ஒரு கிழவர் அதற்கு ஒரு காரணம் கற்பிக்கிறார். அவள் ஒரு பேரழகி. மண்ணில் பிறந்த பெண்ணும் ஆணும் முயங்கி வடித்த மனுஷ்யப் படைப்பா அது? இந்த இனிமைப் புதையலை எடுத்த தாயும் தந்தையும் விண்ணவள் மேனகையும் மன்னவன் விசுவாமித்திரனுமா? இல்லை. எங்கேயும் பார்க்கக் கிடைக்கிற நடுத்தர ஸ்திரீயான கோசலையம்மாளுக்கும் ஒரு சராசரி பள்ளிக்கூட வாத்தியாரான ராமையாவுக்கும் பிறந்தவள். ஆனாலும் தேங்காய்க்கும் பூவன் பழத்துக்கும் நடுவில் நிற்கிற குத்து விளக்காகப் பிறந்திருக்கிறாள். படைப்பின் எட்டாத மர்மத்தைக் கண்டு இப்படியாக வியந்து கொள்கிறார் கிழவர்.
கிழவருக்கு வேலை ஒன்றும் இல்லை. பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் வாழ்க்கை ஓடுகிறது. இங்கிலீஷ் நாவல், ராமாயணம், கீதை, குறள், வடுவூர் என்று அறிவை அவியல் உருவில் சேர்த்துக் கொண்டும், வெற்றிலையும் பொடியும் போட்டுக் கொண்டும், வேடிக்கைப் பேச்சிலும் காலம் கழிகிறது. கூட, புதையலைக் கண்டு வியப்பது முக்கியமான வேலை. பலனை நோக்கிச் செய்யாத நித்தியக் கடமை போல அவருக்கு ஆச்சரியப்படுவது தினசரிக் கடமை. அதோடு நேரம் கிடைக்கும் போது புதையலோடு பதினைந்தாம் புலி ஆடுவார்.
‘மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்ததையும் நீரில் மிதந்த கருவிழியையும் வயசான துணிச்சலுடன், கண்ணாரப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருப்பார். ‘அது என்ன பெண்ணா? முகம் நிறையக் கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்; உடல் நிறைய இளமை; இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய நெளிவு; நெளிவு நிறைய இளமுறுவல். இது பெண்ணா? மனிதனாகப் பிறந்த ஒருவன் தன்னது என்று அநுபவிக்கப் போகிற பொருளா?’
சண்பகப்பூவை முகர்ந்தால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுமாம். அதேபோல் இந்தப் பெண் சண்பகப்பூ. அதனால்தான் இவளை முகர்ந்தவன் செத்துப் போய் விட்டான் என்று நினைக்கிறார் கிழவர். தன் மனைவியிடம் சொல்கிறார்: ‘என்னடி, மனுஷ்யப் பிறவியாய் இருந்தால் மனுஷனுக்கு மாலை போட்டுச் சந்தோசமா வாழலாம். இதுதான் அக்னி மாதிரி இருக்கே, தகதகன்னு. இப்படி ஒன்னை சிருஷ்டிச்சிப்பிட்டு, மனுஷக் காக்காய் கொத்திண்டு போறதைப் பார்த்துண்டு பேசாமல் இருக்குமா தெய்வம்?’
கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அந்த வகையில் தி.ஜா.வை இடதுசாரி புத்திஜீவிகளும் அதற்குப் பிறகு வந்த அமைப்பியல்வாத விமரிசகர்களும் கொண்டாடியிருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளையாவது விட்டு விடலாம்; தி.ஜா. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி எதுவும் எழுதாத காரணத்தால். ஆனால் மார்க்சீய புத்திஜீவிகளுக்கு தி.ஜா. எப்படித் தெரியாமல் போனார்? மார்க்சீயத்தின் அடிப்படையே தனிச் சொத்துரிமையைத் தகர்ப்பதுதான். மார்க்சீயத்தின் ஆதார நூல்களில் ஒன்றான The Origin of the Family, Private Property and the State என்ற நூலில் ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ், குடும்பம் என்ற அமைப்புதான் தனிச் சொத்துரிமைக்கும் அதைத் தொடரும் சுரண்டலுக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம் என்கிறார். அந்த வகையில் தி.ஜானகிராமன் தானே குடும்ப அமைப்பின் அஸ்திவாரத்தையே அசைத்த முதல் தமிழ் எழுத்தாளர்? கு.ப.ரா.வை அப்படிச் சொல்ல முடியாது. அவர் ஆண் பெண் உறவுச் சிக்கலையும் அதில் நேரும் மீறல்களையும் சொல்ல ஆரம்பித்தார். ஒருவேளை அவர் நாவல் எழுதியிருந்தால் அது நடந்திருக்கலாம். ஆனால் அவருடைய இளவயது மரணத்தால் அவரது இலக்கியப் பயணம் முடிவுறாததாகி விட்டது. ஆனால் தி.ஜா., குடும்பம் என்ற ஸ்தாபனத்தின் அஸ்திவாரத்தையே உடைத்தெறிந்து இருக்கிறார். மதம், தர்மம், நியாயம், நல்லது, கெட்டது, அறம், கலாசாரம் எல்லாமே தி.ஜா.வின் பாத்திரங்களின் சரீர வேட்கை எனும் தீயில் எரிந்து வீழ்கின்றன. அதன் காரணமாகவே அவர் வாழும் காலத்தில் எண்ணற்ற எதிர்ப்புகளையும் சம்பாதித்திருக்கிறார்.
‘அம்மா வந்தாள்’ நாவலில் வேதம் படிப்பதற்காக ஏழு வயதான தன் புதல்வன் அப்புவை எங்கோ ஒரு குக்கிராமத்திற்கு அனுப்பி விடுகிறாள் அவன் அம்மா. பதினாறு வருஷங்கள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வேத பாடசாலையில் பயில்கிறான் அப்பு. குருகுலம் போன்ற அந்தப் பாடசாலையில் விதவையாகி விட்ட பவானியம்மாள் என்ற மூதாட்டியின் பராமரிப்பில் வளர்கிறான். அங்கே ஏழு வயதில் விதவையாகி விட்ட இந்து – பவானியம்மாளின் மகள் - அவன் மீது அபிமானம் கொள்கிறாள். ஆனால் அப்புவுக்கு அது அதர்மமாகத் தெரிகிறது. தான் பயிலும் வேதத்துக்கும், தன் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தாயின் ஸ்தானத்தில் இருக்கும் பவானியம்மாளுக்கும் செய்யும் துரோகம் அது. இந்துவைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் இந்து அவனிடம், ‘நீ படிச்ச வேதத்தின் மேலே ஆணையாச் சொல்றேன்; நீ இல்லாம நான் உசிரோட இருக்கறதுக்கு அர்த்தமே இல்லை’ என்கிறாள்.
‘தார்க்குச்சியைத் தோலில் செருகித் திருகி இழுத்த மாடு போல் அப்பு உள்ளே துள்ளினான். வேதத்தின் மேலே ஆணை! இந்த ஆணையைத்தான் பொறுக்க முடியவில்லை அவனால். தார்க்குச்சி ஏறினால், ஒன்று ஒரேயடியாகத் தலைதெறிக்க ஓட வேண்டும்; அல்லது, அப்படியே அந்த வதை தாளாமல் பொத்தென்று கீழே எழுந்து மயங்கவோ சாகவோ வேண்டும்.’
அவளிடம் சொல்கிறான். ‘வேதத்தை இழுக்காதே. வேதம் எங்கம்மா மாதிரி. அதுதான் எனக்கு ஈச்வரன். எனக்கு அம்மா. எங்கம்மா மாதிரி அது ஒரு தெய்வம். எங்கம்மா மாதிரி அது புடம் போட்ட தங்கம். மாற்றுக் குறையாத தங்கம்…’
பதினாறு வருஷ குருகுலவாசத்துக்குப் பிறகு தாயைப் போல் தன்னை வளர்த்த பவானியம்மாளையும் இந்துவையும் பிரிந்து தன் ஊருக்குக் கிளம்புகிறான் அப்பு. இரண்டு பேருக்கும் இரண்டு சால்வைகளைப் பரிசாகத் தருகிறான். கிளம்பும் வேளையில் இந்துவிடம் ‘நீ என் தங்கை’ என்கிறான் அப்பு. அதற்கு இந்து ‘இன்னொரு தடவை இந்த மாதிரிச் சொல்லாதே. சொல்லாதேன்னா சொல்லப்படாது. என் மனசுப்படி விட்டு, எங்கப்பாவும் உசிரோட இருந்தார்னா, உன்னை இப்ப வழிமறிச்சு, நீ காசிக்குப் போக வாண்டாம்னு என்னைக் கொண்டு நிறுத்தியிருப்பார். நான் என்னமோ மதம் பிடிச்சி அன்னிக்குப் பேத்தினேன்னு நினைக்காதே. இது எட்டு வருஷமா கிடக்கிற நிஜம்’ என்று சொல்லி அவனைக் கட்டி அணைக்கிறாள்.
‘சீ, என்ன இது அசுரத்தனம்! அம்மாவைக் கட்டிக்கறாப்பல… எனக்கு என்னமோ பண்றது,’ என்று சொல்லி அவளை வேகமாகத் தள்ளி விடுகிறான் அப்பு.
‘அம்மாவாம் அம்மா! உங்கம்மா ரொம்ப ஒழுங்குன்னு நினைச்சுக்காதே. நானாவது உன்னையே நினைச்சுண்டு சாகறேன். உங்கம்மா யாரையோ நினைச்சுண்டு சாகாம இருக்கா பாரு. நான் உங்கம்மா இல்லை. நான் உன்னைத் தவிர யாரையும் நினைச்சதில்லேடா பாவி. அம்மா அம்மான்னு என்னை அவளோட சேர்க்காதே. எனக்கு ஏமாத்தத் தெரியாது.’
‘என்ன சொன்னே?’
‘சொன்னதைத்தான். உங்கப்பா அவ நல்லவள்னு ஏமாந்திருக்கார். நீ, நான் பொல்லாதவள்னு ஏமாந்து கிடக்கே.’
கடைசியில் ஊருக்குப் போன பிறகுதான் அப்புவுக்குத் தெரிகிறது, அம்மாவுக்கு வேதத்தின் மீது இருந்த பக்தியினால் தன்னை வேதம் படிக்க அனுப்பவில்லை என்று. தான் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகத் தன் பிள்ளை வேதம் படிக்க வேண்டும் என்று அனுப்புகிறாள். அப்படி என்ன செய்தாள் அவள்?
தண்டபாணிக்கு ஹைகோர்ட் ஜட்ஜெல்லாம் சிஷ்யர்கள். வேதத்தில் சந்தேகம் என்றால் அவரிடம்தான் கேட்பார்கள். மெத்தப் படித்தவர். அவர் மனைவி அலங்காரம். மூத்த பிள்ளை அவனுடைய மனைவி, மகள் காவேரி, இளைய புதல்வர்கள் கோபு, வேம்பு – இவர்கள்தான் அந்தக் குடும்ப உறுப்பினர்கள். வேதம் படிக்க சென்றிருக்கும் அப்பு இரண்டாவது மகன்.
இந்தக் குடும்பத்தில் நுழைகிறான் சிவசு என்ற சிவசுந்தரம். விரைவிலேயே தண்டபாணி வீட்டுக்கு அவனுடைய போக்குவரத்து அதிகரிக்கிறது. ஒருநாள் தண்டபாணி குளியலறையில் இருக்கும்போது சிவசுவின் குரல் கேட்கிறது. இன்னும் சிறிது நேரம் கழித்துப் போகலாம் என்று குளித்துக் கொண்டே இருக்கிறார் தண்டபாணி. பிறகு ‘விரல் அழுக்கைக் கூட எடுத்தாகி விட்டது. எத்தனை நேரம்தான் குளிக்கிற உள்ளில் நிற்க முடியும்?’ என்று நினைத்தபடி வெளியே வருகிறார்.
பொதுவாக எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள். அதிலும் தி.ஜா. தேவி உபாசகர். அவருக்கு எல்லாப் பெண்களுமே தெய்வத்தின் நடமாடும் உருக்கள்தான். ஆனால் ‘அம்மா வந்தாள்’ நாவலில் தண்டபாணியின் கையறுநிலையைக் கதறி கதறி எழுதியிருக்கிறார். சிவசு அலங்காரத்தைத் தன் வீட்டுக்கு அழைக்கிறான்.
‘அதெல்லாம் சரி மன்னி. நீங்க ஆத்துப் பக்கமே வரலியே. வந்து மாசக் கணக்கா ஆயிருக்கும் போலிருக்கே… ரங்கம் கூடப் போன வாரம் சொல்லிண்டேயிருந்தா, மன்னியைக் காணவேல்லியேன்னு…’
இந்தப் பேச்சை மாடியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் தண்டபாணி.
‘பொய்! பொய்!’ என்று மூடின கண்ணை இடுக்கினார் தண்டபாணி. புருவம் சுளித்தது. ‘ரங்கம் அப்படிச் சொல்லி இருக்கவே மாட்டாள். நீதான் சொல்லுகிறாய். அலங்காரத்தைக் குழியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்றுதான் அவள் சொல்லியிருப்பாள்…’
அலங்காரம் என்ன பதில் சொன்னாள் என்று அவர் காதில் விழவில்லை.
அப்பு வண்டியிலிருந்து இறங்கி பெட்டி படுக்கையுடன் வீட்டின் உள்ளே நுழைகிறான். ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் சிவசுவைப் பார்த்து விட்டு ‘என்னடா கோபு, மீசையை எப்ப எடுத்தே?’ என்று கேட்கிறான். மறுகணமே சற்றுக் குழம்பி உற்றுப் பார்க்கிறான். தங்கை காவேரி அவன் குழப்பத்தைத் தீர்க்கிறாள். ‘சிவசு மாமாண்ணா!’
‘ஆ! மாமா… சௌக்யமா, சார்?’ என்றான் அப்பு.
ஒரே வாக்கியத்தில் குடும்பம் என்ற அமைப்பின் அஸ்திவாரத்தையே பெயர்த்து எடுத்து விடுகிறார் தி.ஜா.
சரி, மார்க்சீயவாதிகள்தான் இதை கவனிக்கவில்லை என்றால் எண்பதுகளில் ஒரு அலையாய் எழுந்த அமைப்பியல்வாத விமரிசகர்களாவது தி.ஜா.வைக் கொண்டாடி இருக்க வேண்டாமா? அமைப்பியல்வாதிகளின் முதல் குறியே குடும்பத்தைச் சிதைக்க வேண்டும் என்பதுதான். காரணம், அதிகார மையங்களிலேயே மிகக் கடுமையானது குடும்பம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைப்பியல்வாதிகளும் ஜி. நாகராஜன் போன்றவர்களைத்தான் பேசினார்களே தவிர தி.ஜா. அவர்களின் கண்ணிலேயே படவில்லை. வெங்கட் சாமிநாதன் ஒருவர்தான் ஒற்றை ஆளாய் ‘மோகமுள்’ தான் தமிழின் தலைசிறந்த நாவல் என்று போராடிக் கொண்டிருந்தார்.
அமைப்பியல்வாதம் என்பது அடிப்படையில் அதிகாரத்துக்கு எதிரானது. எதிர்க் கலாச்சாரத்தை முன்வைப்பது. அந்த வகையில் தி.ஜா.வின் எந்தக் கதையை எடுத்துக் கொண்டாலும் அது இதுவரையிலான மதிப்பீடுகளைக் காலடியில் போட்டு துவம்சம் செய்வதாகத்தான் இருக்கிறது.
உதாரணமாக, ‘சண்பகப்பூ’ சிறுகதையில் 18 வயதில் விதவையாகி விட்ட பெண் அதைப் பற்றிக் கவலையே படாமல் இறந்து போன கணவனின் தமையனுடன் ஊருக்குக் கிளம்பி விடுகிறாள். அவன் அவளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்கிறான். நாணம் புன்னகை பூக்க வண்டியில் ஏறி அமர்ந்தாள் என்று எழுதுகிறார் தி.ஜா.
கிழவி ஆளோடியில் நின்று சொல்கிறாள்: ‘ரத்தப்பூவாம். எல்லா மூக்கும் ரத்தம் கொட்டாது, சண்பகப் பூவை மூந்து பார்த்தா! என்ன சிரிப்பு, என்ன நெளிசல்; அவள் அகமுடையான் உயிரோடுதான் இருக்கான். அதான் நெளியறது.’
(தொடரும்)