தி. ஜானகிராமன் - பகுதி 4
ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அதனாலேயே நாத்திகர்கள் அவரை வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால், அவர் ஓர் அற்புதமான கவி என்பதை அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். முக்கியமாக, 'நிர்வாண சத்கம்’.
தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட தரிசனத்தை நாமும் காணலாம். தி.ஜா.வைப் படித்தவுடனே நான் ஆதி சங்கரரின் கவிதைகளைப் படித்தேன். ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அதனாலேயே நாத்திகர்கள் அவரை வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால், அவர் ஓர் அற்புதமான கவி என்பதை அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். முக்கியமாக, 'நிர்வாண சத்கம்’. (சதகம் என்பது நூறு பாடல்கள். உ-ம். பர்த்ருஹரியின் சதகங்கள்.) நிர்வாண சத்கம், வெறும் ஆறே பாடல்கள்தான். ஆனால், அந்த ஆறு பாடல்களுக்குள் இந்தப் பிரபஞ்சத்தையே அடக்கிவிட்டார் ஆதி சங்கரர் என்ற மஹாகவி.
*
மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்,
Advertisement
ந-ச ஷ்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,
ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:
ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோஷ:
ந-வாக் பாணி பாதம், ந- சோபஸ்த பாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹள,
மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!
ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா
ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
ந-ச சங்கதம் நைவ, முக்திர் ந-மேய
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!
*
நான் மனம் அல்ல புத்தியும் அல்ல சித்தமும் அல்ல
நான் செவி அல்ல நாக்கு அல்ல நாசி அல்ல கண் அல்ல
வானும் அல்ல பூமியும் அல்ல
ஒளியும் அல்ல வளியும் அல்ல
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்.
நான் பிராணனும் அல்ல பஞ்ச வாயுவும் அல்ல
ஏழு தாதுக்களும் அல்ல பஞ்ச கோஷமும் அல்ல
பேச்சும் அல்ல கைகால்களும் அல்ல செயல்புலன்களும் அல்ல
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
எனக்கு வெறுப்பு இல்லை விருப்பமும் இல்லை
பேராசையும் இல்லை மோகமும் இல்லை
கர்வமும் இல்லை பொறாமையும் இல்லை
அறம் பொருள் இன்பம் வீடு எதுவுமில்லை
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
எனக்குப் புண்யமும் இல்லை பாவமும் இல்லை
சௌக்யமும் இல்லை துக்கமும் இல்லை
(எனக்கு) மந்திரம் இல்லை தீர்த்த ஸ்தலங்கள் இல்லை வேள்விகளும் இல்லை
நான் துய்ப்பவனும் அல்ல துய்க்கப்படுபவனும் அல்ல
துய்ப்பும் அல்ல
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை
சாதியில்லை பேதமில்லை பிதா இல்லை மாதா இல்லை ஜன்மமும் இல்லை
உற்றம் சுற்றம் குரு சிஷ்யன் யாரும் இல்லை
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
நான் குணபேதம் இல்லாதவன் எந்த ரூபமும் இல்லாதவன்
எங்கெங்கும் எப்போதும் எல்லா புலன்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்
எனக்கு பந்தமும் இல்லை முக்தியும் இல்லை நான் அளக்க முடியாதவன்
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
*
எனக்கு சம்ஸ்கிருதம் படிக்க மட்டுமே தெரியும். அர்த்தத்துக்கு, அகராதிகளையும் பேராசிரியர்களையும் நாடுவேன். 'நிர்வாண சத்கம்’ என்ற ஆதி சங்கரரின் இந்தப் பாடல், இணையத்தளங்களில் பல பிழைகளுடன் காணக் கிடைக்கிறது. பலரும், சதகம் என்றே எழுதுகின்றனர். சதகம் என்றால் நூறு. சத்கம் – ஆறு.
நிர்வாண சத்கம் பாடலுக்குப் பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக்கொண்டு போகலாம். சில வார்த்தைகளுக்கு மட்டும் சுருக்கமான விளக்கம்: பஞ்ச வாயு = பிராண, அபான, வ்யான, உதான, சமான வாயு. பஞ்ச கோஷம் = கோஷம் என்றால் sheath. அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம். உணவு, உயிர், மனம், அறிவு, ஆனந்தம்.
சிதானந்த ரூபம் சிவோஹம் என்ற வார்த்தைகளை, இந்துக் கடவுளான சிவன் என்று புரிந்துகொள்ளக்கூடாது. மதம், சாதி, ரூபம், அரூபம், ஜனனம், மரணம் என்று எல்லா பேதங்களையும் கடந்த பரவசத்தில், கவியின் சந்நத நிலையில் நின்று பாடுகிறார் சங்கரர். சிதானந்த ரூபம் என்பதை இந்தப் பாடலின் முழுமையான பொருளில், ஏகத்துவத்தை உணர்வதன் மூலமாக நமக்குள் அனுபவமாகும். pure consciousness, bliss என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். சிவோஹம் என்பது நான் (சிவன்) அவன் என்பதாகும். கி.பி. 9-ம் நூற்றாண்டில், மன்ஸூர் அல்ஹலாஜ் என்ற ஒரு சூஃபி கவிஞர் இருந்தார். அவருடைய புகழ்பெற்ற குறுங்கவிதை ஒன்று இது -
என் இதயத்தின் கண்களால்
கடவுளைக் கண்டேன்
நீ யார் என்றேன்
நீதான் நான் என்றான்.
அவருடைய இன்னொரு புகழ்பெற்ற வாசகம், அன-ல் ஹக். இதன் பொருள், 'நானே உண்மை’. ஆனால், இறைவனின் 99 பெயர்களில் உண்மை என்பதும் ஒன்று என்பதால், அல்ஹலாஜ் 'நானே இறைவன்’ என்று சொல்வதாகத் தவறாகப் புரிந்துகொண்டு, ஆட்சியாளர்கள் அவரை 11 ஆண்டுகள் சிறையில் தள்ளினார்கள். சிறைத் தண்டனைக்குப் பிறகு, கி.பி. 922-ல் பொதுமக்கள் முன்னிலையில் அல்ஹலாஜ் கொல்லப்பட்டார். எல்லா மதங்களிலும் கவிகளின் குரல் ஒன்றேபோல் இருக்கிறது என்பதற்கு அல்ஹலாஜ் மற்றுமொரு உதாரணம்.
பிரபஞ்சத்தையே நம்முடைய பிரக்ஞையின் விரிவாகவும், பிரபஞ்ச கானத்தின் ஒரு துளியே நாம் எனவும் உணரும் ஏகத்துவ மனோலயத்தைப் பெற்றுவிட்டோம் எனில், ஆதி சங்கரரின் பரவசம் நமக்கும் சாத்தியமாகும். ’மோகமுள்’ளைப் படிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு அந்தப் பரவசம் கிட்டும். அதனால்தான், ஆதி சங்கரரின் ‘நிர்வாண சத்கம்’ பாடல்களை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அதையும், பின்வரும் 'மோகமுள்’ தருணங்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
“தெற்குப் பக்கம் பார்த்தான். கறுத்து நெடிது நின்ற தென்னைகளும், நெட்டிலிங்கைகளும், மாமரங்களும் இருளால் ஆக்கியவைபோலக் கும்பலாக அடர்ந்து கிடந்தன. இந்தக் காவேரிக் கரைத் தென்னைகள் எவ்வளவு உயரம்! மூங்கில்கூட ஒவ்வொன்றும் தூண் தூணாகக் கூடு சிறுத்து வளர்கிற மண்!”
“வலியன் குருவி கத்த ஆரம்பித்துவிட்டது. ஓசை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. அக்கரையில் நாணற்காட்டின் பின்னால் நின்ற மாமரத்திலிருந்துதான் வருகிறதோ என்னவோ, அதற்கு இன்னொரு குருவி அக்கரையில் உயர்ந்து நின்ற இலவ மரக்கிளையிலிருந்து எதிர்க்குரல் கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த மாற்றுக் குரல்களுக்குச் சுதியாக இருக்கிற இடமே கண்டுபிடிக்க முடியாத சுவர்க்கோழி நீளமாக ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறது”.
“காவிரியின் குளிர்நீரும், ஜிலுஜிலுவென்று தவழும் வைகறை மென்காற்றும், வலியன்களின் உருக்கமான கூப்பாடும் வெளியே அழைத்தன”.
“ஆற்றங்கரைப் பக்கம் நடந்துகொண்டிருந்தார். எட்டாம் நாள் பிறைச் சந்திரன் உச்சியை விட்டு நகர்ந்து, மேற்குப் பக்கம் சாய்ந்து, தெருவில் பாலைப் பொழிந்துகொண்டிருந்தது”.
“குடமுருட்டியாறு வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. நீரின் சலசலப்பைத் தவிர, ஓசை வேறு இல்லை. மெல்லிய காற்றில் மூங்கில் தோப்பு கிர்கிர் என்று முனகிக்கொண்டிருந்தது. கடவுளைப்போல எந்த இடத்திலும் இருக்கும் சில்வண்டு, எங்கோ ஒரு மரக்கிளையிலிருந்து சுருதி எழுப்பி, ஆற்று வெளியை நிறைத்துக்கொண்டிருந்தது. எப்போதாவது ஊர் நடுவில் போகிற மோட்டார் வண்டியின் ஹார்ன் ஓசை லேசாகக் கேட்கும். இத்தனையையும் மீறிய நிசப்தத்தின் வெள்ளி மஞ்சத்தில், ஆற்றுவெளி துயில் முயல்வதுபோல் தோன்றிற்று. எதிர்த்த கரையில் மரங்களும், புதர்களும் இருள் குப்பலாக மண்டிக் கிடந்தன. கரையோரமாக இருந்த ஒரு மூங்கில் கொத்திலும், நெடிது நின்ற அரச மரத்திலும் ஆயிரக்கணக்கில் மின்மினிக் கும்பல் தோன்றியும் மறைந்தும் கண்ணை மயக்கிற்று. தூரத்தில், ஆற்றின் குறுக்கே ஓடுகிற ஓடம் ஊர்வது நிலவில் தெரிந்தது”.
“ஆறு, கரை மீது சிற்றலைகளை ஏவி ஏவி ஓசையிட்டு விரைந்து ஓடிக்கொண்டிருந்தது”.
“குளுக் குளுக்கென்று கொப்பளிக்கும் ஒரு சுழல், இன்னொன்றைத் தொடர்ந்துகொண்டே விரைந்து போயிற்று. ஆற்றின் மையத்தில் அகன்று விழுந்த நிலவொளி, ஓடும் நீரின் சலனம் பட்டு சிலிர்த்தது. மூங்கில் கொத்தும் நீரில் சுழலும் அரச மரத்தின் சலசலப்பும் ரகசியங்கள் பேசிக்கொண்டிருந்தன”.
“நுணாப்பூவின் மணம் நிலவிலும், மெல்லிய காற்றிலும் கலந்து கமழ்ந்தது”.
“செம்பனார் கோயிலிலிருந்து சாயங்காலம் புறப்பட்ட கட்டை வண்டி, மண் சாலையில் அசைந்து அசைந்து ஊர்ந்துகொண்டிருந்தது”.
“எதிர்வீட்டு வாசலில், மாட்டின் கழுத்து மணியோசை கேட்டது. விழுந்து வணங்குவதுபோல், ஒரு கூண்டு அரை வண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த மாடுகளின் மணி சோம்பலுடன் ஒலித்தது”.
பாபுவும் அவன் நண்பன் ராஜமும், படகு ஓட்டியபடி காவேரி தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். துடுப்பு வலித்து ராஜத்தின் பாம்பு விரலடியிலும் ஆள்காட்டி விரல் அடியிலும் கொப்புளம் கண்டிருந்தது. அப்போது ராஜம் சொல்கிறான். “பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தவுடனே, உங்கப்பா சொல்கிறாற்போல பாட்டுப் பாடப் போயிருந்தா, இந்த மாதிரி ‘கானோ’ விட முடியுமா, பாபு? வேறு எந்தக் காலேஜ் பையனுக்கும் கிடைக்காத பாக்யம் இது. இவ்வளவு தண்ணிக்கு நடுவிலே இந்த நிழல்லேயும் நாணல்லியும் உரசிண்டு போறபோது, எனக்கு வேறு ஏதோ லோகத்திலே உலவறாப்பல இருக்கு”.
ராஜம் சொல்வது கும்பகோணம், முப்பதுகளின் இறுதி.
“தெருச் சப்தமும், காவேரியில் துவைக்கும் சப்தமும், கொல்லையில் செம்போத்து ஜோடியும், கிளிக்கூட்டமும் போடுகிற இரச்சலும் கண்ணை மூட விடவில்லை”.
“சல்லா போட்டதுபோல முழுவதையும் காட்டாத நிலவில்கூட அந்தச் செதுக்கின உடலின் கட்டும் உறுதியும் பளிச்சென்று தெரிந்தன. நந்தியாவட்டை இதழ்போல அந்த நைப்பும் வழவழப்பும் நிலவோடு நிலவாகப் பொலிந்தன”.
பாபுவும் யமுனாவும் யமுனாவின் தாயார் பார்வதியும் காரில் வருகிறார்கள். அதிகாலை நேரம். காரைப் பார்த்துவிட்டு அபசகுனமாக அவர்கள் எதிரே போவானேன் என்று ஒதுங்கி நிற்கிறாள், ஒரு விதவைக் கிழவி. ஈரம் சொட்டச் சொட்ட, கையில் ஒரு டம்ளர். தையுப்பாட்டி மாதிரி இருக்கே? ஆமாம், தையுப்பாட்டிதான். “பாவம், மூணு வயசிலே கல்யாணம். நாலு வயசிலே தாலி போயிடிச்சு. அப்புறம் எழுபது வருஷம் இந்தக் கோலம்…”
“தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து, செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று.
அப்பழுக்கில்லாத நாதமாக, கூடம் முழுவதும் கமழ்ந்தது அது.
சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும்போல, இரவும் இருளும்போல, நிலவும் தண்மையும்போல, வைகறையும் தூய்மையும்போலச் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுவதுபோல. சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது.
புலன்களைக் கூட்டி, ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது. உடலையும் உலகையும் விட்டுச் சென்ற நினைவும், புத்தியே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்ததுபோல் பறந்தது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு.
நாதமுனிகளெல்லாம் இப்படித்தான் திரிந்தார்கள். மூவுலக வழிப்போக்கனாகத் திரிந்த நாரதன், இந்த நாதவெளியில்தான் திரிந்தான் போலிருக்கிறது. இதைத்தான் மனிதனின் விரியாத கற்பனை, மூவுலகென்று குறுக்கிப் பெயரிட்டுவிட்டதா? அல்லது மூன்று ஸ்தாயிகளையே மூவுலகென்று சொல்லிற்றா? தந்தி ஒலிக்க, வாய் பாட, செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர், தெருவிலா நடந்தார்? திக்கை நிறைத்த நாதத்தில் அலைந்த அவர், செம்பை ஏந்தியது அரிசிக்கா? அல்லது நாதவெள்ளத்தில் மொள்ளுவதற்கா? ஊர் ஊராக காசிக்கும், தில்லைக்கும், தீர்த்தங்களுக்கும் தீட்சிதர் அலைந்ததெல்லாம், நாதத்தில் அலைந்ததுதானே? சுந்தரர் காலால் நடந்தது இந்த ஒருமையில்தானே!
பாபுவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாட்டுக்கூட இல்லை இது. வெறும் இரண்டு மூன்று ஒலிகள். வெறும் தம்புராவின் இசை. திருப்பித் திருப்பி வரும் ஒரே ஸ்வரங்கள். இதுவா இப்படிப் பரவசப்படுத்துகிறது? காரணம் என்ன என்று அறிய முடியவில்லை. தந்திகளின் இனிமையா, நின்று ஒலிக்கும் கார்வையின் நீளமா? சுருதி சேர்ந்த தூய்மையின் நிறைவா?”
ஆதி சங்கரரின் ஏகத்துவம் பற்றியும் அவரது நிர்வாண சத்கம் பற்றியும் இங்கே கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொண்டு, 'மோகமுள்’ளில் வரும் ரங்கண்ணாவைப் பார்ப்போம். இந்த ரங்கண்ணா, ஜானகிராமனின் குரு உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்தான் என்று தி.ஜா. தன்னுடைய பேட்டியிலும், 'மோகமுள் பிறந்த கதை’ என்ற கட்டுரையிலும் கூறுகிறார். “பாபு ரங்கண்ணாவைப் பார்க்கும் முதல் காட்சியில், ரங்கண்ணா தனக்குத்தானே, தன் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நாதத்தைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருப்பார். அதைக் கலைக்க விரும்பாதபடி, பாபுவும் மற்றவர்களும் தயங்கி நின்றிருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று அது” என்று 'தி. ஜானகிராமனின் இசையுலகம்’ என்ற கட்டுரையில் சொல்கிறார் சேதுபதி அருணாசலம். அது உண்மைதான். மேலும், என்னைப் பொறுத்தவரை, 'மோகமுள்’ முழுவதுமே அதுபோன்ற தருணங்களால் நிரம்பி வழிவதாகத்தான் தோன்றுகிறது. 'மோகமுள்’ளில் ரங்கண்ணா அறிமுகமாகும் காட்சி இது -
“ரங்கண்ணா, நடையில் இருந்த ஒட்டுத் திண்ணையில் சப்பணம் கட்டி உட்கார்ந்திருந்தார். கண் மூடியிருந்தது. வலது கை, முழங்கைக்கு மேல் அசைந்துகொண்டிருந்தது. மேலும் கீழும் முன்கையை உயர்த்தித் தாழ்த்திக்கொண்டிருந்தார் ரங்கண்ணா. கண் மூடின முகமும், கையோடு மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்தது. உதடுகள் சற்றுப் பிரிந்திருந்தன. ஆனால், சப்தம் ஏதும் வாயினின்று எழவில்லை. தியானத்தில் ஆழ்ந்து, சுழலில் சிக்குவதைப்போல, சூழ்நிலை நினைவின்றி சிக்கின ஒரு நிலையின் முகபாவம்தான் அது. நடுவில் இரண்டு தடவை, இரண்டு கைகளும் ஏதோ வானைக் கண்டு இறைஞ்சுவதுபோல் மல்லாந்தன. நாலைந்து கணங்கள், அந்த நிலையில் நின்று முழங்கால்களின் மீது அமர்ந்தன. முகம் சற்று மேல் நோக்கி, அசைவு ஓய்ந்தது. இருபது விநாடிக்குப் பிறகு, மீண்டும் வலது முன்னங்கை பழையபடியே மெதுவாக உயர்ந்து தாழ்ந்தது. முகமும் அதன் சலனத்துக்கேற்ப உயர்ந்து தாழ்ந்தது.
அந்த முகத்தில் ஒரு எல்லை காணா அமைதி. ஏதோ பெரிய அலைகள் மீது ஏறி ஏறி இறங்குவதுபோல, இந்தக் கையும் முகமும் எழும்பி இறங்குவது, உள்ளே நிகழும் இயக்கத்தின் வெளித் தோற்றமாகத் தோன்றுகிறது. அப்படி, எந்த அலை மீது இந்த உள்ளம் ஏறி மிதக்கிறது… தன்னை மறந்த அந்த லயிப்பில், அவர் உடல் உள்ளம் உயிர் எல்லாவற்றையுமே இழந்துவிட்டதுபோல்தான் இருந்தது”.
“ரங்கண்ணாவுக்கு சங்கீதம்தான் உயிர். பாடாவிட்டால், நாதத்தைப் பற்றி நினைக்காவிட்டால், அவருக்கு உயிர் தாங்காது. சங்கல்பம் செய்துகொண்டு அதைப்பற்றி நினைக்க வேண்டுமென்றில்லை. தைலதாரை என்று சொல்வதுபோல், அவருடைய சங்கீத உபாசனை கணமும் அறாத உபாசனை. வருடம் முழுதும் வற்றா அருவிபோல், கணமும் ஓயாக் கடலின் அலைபோல், கருத்தும், உணர்வும், கணமும் அறாமல், நாதம் அவருள் நடனமிடுகின்றது. ஓயாத வெள்ளம் அது. இசையே உயிர் அவருக்கு. குளிப்பதும், தின்பதும், பேசுவதும் தற்செயலாக நிலவும் நிகழ்ச்சிகள் அவருக்கு. வேறு சிந்தனையின்றி, நாதத்தையே பரம்பொருளாக எண்ணி, அதன் அருவியின் கீழ் ஓயாமல் நனைந்துகொண்டிருப்பவரின் உணர்வும் அறிவும் குளிர்ந்திடாமல் எப்படியிருக்கும்? அவர் பேச்சும் – ஏன், வெசவும்கூட அருளின் வடிவாகக் குளிர்ந்து, நம் மனதில் எழும் புயலையும், பகையையும், களங்கங்களையும் சாடி விடுவதில் என்ன வியப்பு!”
தொடரும்…
1.ஆதி சங்கரரின் 'நிர்வாண சத்கம்’ மொழிபெயர்ப்பில், சம்ஸ்கிருத பேராசிரியை டாக்டர் சுபஸ்ரீ செய்த உதவி மிகவும் பெரியது. ஒரு நாள் முழுவதும், நான் கேட்ட சந்தேகங்களையெல்லாம் பொறுமையாக விளக்கினார். மூன்றாவது பாடலில், தமிழில் சொல்வதுபோல் 'எனக்கு விருப்பமும் இல்லை; வெறுப்பும் இல்லை’ என்று எழுதினேன். அதை சுபஸ்ரீ திருத்தினார். சம்ஸ்கிருதத்திலும் ‘ராகௌ த்வேஷம்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், சங்கரர் அதை மாற்றி 'ந-மே த்வேஷ ராகௌ’ என்று பாடியிருப்பதால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும் என்றார். பிறகே, வெறுப்பு விருப்பு என்று மாற்றினேன். இப்படிப் பல நுணுக்கங்கள். கடைசியாக ஒரு வார்த்தையை முழுசாக விட்டுவிட்டேன். ஆறாவது பாடலில் 'ந மேய’ என்று வருகிறது அல்லவா? அதை, எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் விட்டுவிட்டார்கள். ந மேய = அளக்க முடியாதவன். இதுபற்றி சுபஸ்ரீ, தன் தாயார் “அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பால்” என்று சொல்வார்கள் என்றார். இந்த வரி, ஔவையார் பாடிய விநாயகர் அகவலில் வருகிறது. “அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி”. 2. நிர்வாண சத்கம், பலராலும் பாடப்பட்டிருக்கிறது. எஸ்.பி.பி.கூட பாடியிருக்கிறார். எல்லாவற்றிலும், உமா மோகன் பாடியதே எனக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. மேற்கத்திய இசைப் பின்னணியும் காரணமாக இருக்கலாம். இதைக் கேட்பது ஓர் அற்புத அனுபவம். அவசியம் கேட்டுப் பாருங்கள். இதைவிட நல்ல முறையில் பாடப்பட்டிருந்தாலும் இணைப்பை அனுப்பிவையுங்கள். |
சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை - http://solvanam.com/?p=15341
***