க.நா.சு. பகுதி - 6
சு.ரா.வின் வார்த்தைகள் இவை: ‘செல்லப்பாவின் எழுத்தின் மேல் ஒருவிதக் கவர்ச்சி இல்லாமல் இருந்தது போலவே அவரது பேச்சிலும் எனக்குக் கவர்ச்சி இல்லாமல் இருந்தது.
சு.ரா.வின் வார்த்தைகள் இவை: ‘செல்லப்பாவின் எழுத்தின் மேல் ஒருவிதக் கவர்ச்சி இல்லாமல் இருந்தது போலவே அவரது பேச்சிலும் எனக்குக் கவர்ச்சி இல்லாமல் இருந்தது. காரணம், அவர் பேசும்போது ஒரு ஆசிரியரின் தொனி அதில் அதிகமாக இருக்கும்… இந்த தொனி க.நா.சு.விடம் துளிகூடக் கிடையாது. எவ்வளவோ மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். ஒரு சமயத்தில் கூட க.நா.சு. இது மாதிரியான தொனியில் பேசினதே கிடையாது.’
‘சி.சு. செல்லப்பா, பி.எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன், ந. பிச்சமூர்த்தி எல்லோரும் இந்தியக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் க.நா.சு. மட்டும்தான் மேற்கத்திய மனோபாவம் கொண்டவர் என்றும் அவரைப் பின் தொடர்ந்து வேறு பலரும் அப்படியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எண்ணினார் செல்லப்பா.’
ஒரு சமயம் க.நா.சு. ஐரோப்பா போய் வந்ததாலோ என்னவோ பைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘இப்படி வேஷ்டியோடு பைப் பிடித்தால் என்னவோ போல் இருக்கிறது சார்’ என்று சு.ரா. க.நா.சு.வைக் கிண்டல் செய்திருக்கிறார். அதற்கும் க.நா.சு. ‘நானும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். புகை உள்ளேயே போக மாட்டேன் என்கிறதே?’ என்று சொல்கிறார். இதன் பொருள் பைப் பிடித்தால் மேற்கத்திய ஆள் என்று அல்ல; ஆச்சார அனுஷ்டானம் அவரிடம் துளியும் இருந்ததில்லை என்பதுதான்; தனக்கு அந்நியமான விஷயங்கள் குறித்து அவர் அசூயை கொண்டிருக்கவில்லை. சகஜமாக எடுத்துக் கொள்ளும் ஜனநாயகத்தன்மை அவரிடம் இருந்தது என்பதுதான்.
Advertisement
அதே சமயம் அவர் இந்தியப் பாரம்பரியத்தை மொத்தமாக நிராகரிக்கவும் இல்லை. சனாதனத்தை வெறுத்தாரே ஒழிய இந்தியப் பாரம்பரியத்தை ஏற்றார். உலகப் புகழ் பெற்ற இந்தியவியல் அறிஞரான ஆனந்த குமாரஸ்வாமி பற்றி ‘இலக்கிய வட்ட’த்தில் அவர் எழுதிய, பிரசுரம் செய்த விரிவான கட்டுரைகளில் இந்தியப் பாரம்பரியம் குறித்த க.நா.சு.வின் ஈடுபாடு நமக்கு விளங்குகிறது. இப்படி இந்தியப் பாரம்பரியத்தையும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களையும் ஒன்றாக இணைத்த வகையில்தான் க.நா.சு.வை பாரதியோடு ஒப்பிடுகிறேன். இப்போது க.நா.சு. பாரிஸில் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் கட்டுரைக்கு வருவோம்.
ஸார்த்ர் காம்யூ மால்ரோ என்பது கட்டுரையின் தலைப்பு. கட்டுரையில் யாருடைய பெயரும் ஆங்கிலத்தில் தரப்படவில்லை. கட்டுரையின் முதல் வரி இப்படித் துவங்குகிறது. ‘உனக்கு ஜான் பால் ஸார்த்ரைப் பார்க்க வேண்டுமா?’ என்று கேட்டார் டரினா ஸிலோனே.
மொத்த கட்டுரையிலும் ஸிலோனே பற்றி வேறு எந்தக் குறிப்பும் இல்லை. இப்போது உள்ள கணினி வசதியின் காரணமாக யார் என்று தேடிக் கண்டு பிடித்தேன். Ignazio Silone (1900 – 1978) இத்தாலியின் புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். மந்திரியாகவும் இருந்தவர். அவருடைய மனைவி தான் டரினா ஸிலோனே (Darina Silone). அவர்தான் க.நா.சு.விடம் அப்படிக் கேட்டவர். ஆண்டு 1956. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற தத்துவம் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ‘இந்தியாவில் கூட, ஸார்த்ர் பற்றி வெகுவாக எதுவும் அறியாதவர்கள் கூட எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்’ என்கிறார் க.நா.சு. ஆனாலும் தனக்கு எத்தனை புத்தகங்களைப் படித்தும் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சொல்கிறார். ஆனால் அடுத்தடுத்த பத்திகளில் அவருக்கு அது பற்றி தெளிவான பார்வை இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ‘தத்துவதரிசியாக ஸார்த்ர் ஒன்றும் சொந்தமான தத்துவங்களைக் கண்டு சொல்லி விடவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒரு நூறு ஆண்டுகளாகவே வளர்ந்து வந்திருக்கிற தத்துவம்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்றும், ஸார்த்ர் தந்த உருவத்தில் அதில் புதுமை என்று சொல்ல ஒன்றும் இல்லை என்றும் சொன்னவர்கள் உண்டு. ஹெடேக்கர், யாஸ்பர்ஸ் முதலிய பலரும் உழைத்து உருவாக்கிய சித்தாந்தம் எக்ஸிஸ்டென்ஷியலிஸம். ஒரு காலகட்டத்தில் அந்த சித்தாந்தம் ஸார்த்ருக்கு முக்கியத்துவம் ஏற்படக் காரணமாக இருந்தது என்றும் சொன்னார்கள். ஸார்த்ருக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியத்திலே அவ்வளவாகச் சிறப்பான ஸ்தானம் கிடையாது – ஃப்ரெஞ்ச் இலக்கிய ரசிகர்களைக் கவரக் கூடிய நடை அழகு அவரிடம் இல்லை என்றும் விமர்சகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.’
க.நா.சு. சொல்லும் இந்த விஷயங்களை 20 ஆண்டுகள் ராப்பகலாக அமர்ந்து ஃப்ரெஞ்ச் தத்துவத்தையும் இலக்கியத்தையும் தலையணை சைஸ் புத்தகங்கள் ஏராளமானவற்றின் மூலமாகக் கற்றுத் கொண்ட பிறகே தெரிந்து கொண்டேன். ஆனால் க.நா.சு.வோ போகிற போக்கில் ‘சொன்னார்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார். அவருடைய அறிவின் ஆழம் பிரமிப்பூட்டுகிறது.
மேலும் க.நா.சு., ஹிந்து சிந்தனைகளில் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்கிற தத்துவம் பல காலமாகவே இருந்து வந்திருப்பதாகவும், குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் கீதையை உபதேசித்தது ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் சந்தர்ப்பத்தைத் தவிர்க்கத்தான் என்றும், அந்த அளவில் பகவத் கீதை ஸார்த்ருக்கு முந்திய எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் நூல் என்றும் சொல்கிறார். இது முழுக்கவும் உண்மை. இரண்டாம் உலகப் போர் தனிமனித அளவிலும் சமூகத்திலும் ஏற்படுத்திய அறம் சார்ந்த நெருக்கடிகளிலிருந்தே இருத்தியலியல்வாதம் பிறந்தது என்பதை ஐரோப்பிய தத்துவம் பயின்றவர்கள் அறிவார்கள். அதே போன்றதொரு பிரச்சினையைத்தான் அர்ஜுனனும் எதிர்கொண்டான். அப்போதுதான் கீதை பிறக்கிறது. ஷேக்ஸ்பியரில் வரும் To be or Not to be என்ற இடம் இருத்திலியல்வாதம் சொல்லும் ‘நெருக்கடி’. அதேபோல் கீர்க்கேகார்ட் அதை Either/Or என்று சொல்லுவார். அதையேதான் கிருஷ்ணனும் கேட்கிறான். போரிடவா? வேண்டாமா? இதே தருணங்களை நாம் ராமனிடமும், சித்தார்த்தனிடமும், நசிகேதனிடமும் காணலாம். இன்னும் விவரித்தால் இதுவே ஒரு தனிப் புத்தகமாகப் போகும். ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் திசையில் ஆய்வு செய்யலாம். நாம் க.நா.சு.விடம் திரும்புவோம்.
‘பகலில் இரண்டு மணி அளவில் ஒரு குறிப்பிட்ட கஃபேவில் வந்து ஸார்த்ர் உட்காருவார். எதிரில் ஒரு பானத்துடன் இரவு இரண்டு மூன்று வரை கூட அங்கேயே தான் இருப்பார். யார் வேண்டுமானாலும் போய்ப் பேசலாம். பார்க்கலாம். அவருக்காகவே அந்த ஹோட்டலில் கூட்டம் சேரும்’ என்கிறார் டரினா ஸிலோனே. மேலும் இத்தாலியர்கள் ஸார்த்ரை விட ஆல்பர்த்தோ மொராவியாவையே பெரிய எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டாகக் கருதுகிறார்கள் என்றும் க.நா.சு.வுக்குப் பார்க்க விருப்பமா என்றும் கேட்கிறார். ஆனால் மொராவியாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் மொழிபெயர்க்கத் தனக்கு விருப்பமில்லை என்றும் டரினா சொல்லி விட்டதால் ஏதோ தூரத்திலிருந்தே கோவிலில் இருக்கும் சாமியை தரிசனம் செய்வது போல் செய்து விட்டுத் திரும்பி விட்டதாக எழுதுகிறார் க.நா.சு.
பிறகு ஒரு நண்பர் மூலமாக ஆல்பெர் கம்யூவைச் சந்திக்கிறார் க.நா.சு. அப்போது பாரிஸில் தங்குவதற்கு அறை வாடகை அதிகமாக இருக்கிறது என்று கம்யூவிடம் சொல்கிறார். உடனே தன்னுடைய வீட்டில் ஒரு அறையைக் கொடுத்து எத்தனை காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்கிறார் கம்யூ. அந்த வீட்டில்தான் க.நா.சு. 11 மாதங்கள் தங்கியிருந்தார். கம்யூவுக்கு ஆங்கிலம் பேச வராது. க.நா.சு.வுக்கு ஃப்ரெஞ்ச் வராது. மொழிபெயர்ப்பாளர் மூலம்தான் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பதினோரு மாதத்திலும் கம்யூவின் வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்தும் க.நா.சு. கம்யூவை ஏழெட்டு தடவைகள்தான் சந்திக்க முடிந்திருக்கிறது. அந்தச் சந்திப்புகள் பற்றி க.நா.சு. சொல்கிறார்: ‘இந்திய சமுதாய, தத்துவ, வாழ்க்கை விஷயங்கள் பற்றி ஒரு தாகத்துடன் விஷயங்களைக் கேட்டறிந்து கொள்ள அவர் முயன்றார். முக்கியமாக முஸ்லிம்களின் நிலைமை பற்றி நாலைந்து தடவைகள் திருப்பித் திருப்பிக் கேட்டார். எனக்கு ஓரளவுக்கு மேல் இது பற்றி விஷயம் தெரியாது என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘அங்கே எது நடந்தாலும் மனிதனைப் பாதிக்கிறது இல்லையா? பாதிக்கப்படாமல் எப்படி இருக்க முடியும் மனிதனால்?’ என்று ஒரு ஆச்சரியத்துடன் கேட்டார். பற்றில்லாமல் இருப்பதை ஒரு தத்துவமாக ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வதை சித்தாந்தரீதியில் கண்டிக்கிற மாதிரி பேசினார். பெரிய அந்தஸ்துள்ள இலக்கியாசிரியர் என்றாலும் எளிமையானவர்; யார் வந்து கூப்பிட்டாலும், பேச வந்தாலும், கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பார்.’
க.நா.சு.வின் பதினோரு மாத பாரிஸ் அனுபவங்களை அவரிடமிருந்து நாம் ஆயிரம் பக்கங்களில் வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், மேலே அவர் எழுதியுள்ள ஒரே ஒரு பத்தியில் உள்ள விஷயங்கள் நூறு பக்கங்களுக்கான செய்திகளைக் கொண்டிருக்கிறது. அந்த நூறு பக்கங்களையும் ஒருசில பத்திகளில் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். ஆல்பெர் கம்யூவை க.நா.சு. சந்தித்தது 1956-ல். கம்யு நோபல் பரிசு பெற்றது 1957-ல். எனவே கம்யு நோபல் பரிசு பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே க.நா.சு.வின் மிக விரிவான உலக இலக்கிய வாசிப்பின் உள்ளே வந்து விட்டார் கம்யு. அதனால்தான் கம்யூவை நேரில் சந்திக்கிறார் க.நா.சு. மேலும், க.நா.சு. குறிப்பிடும் கம்யூவின் ஓரிரு கேள்விகளில் கம்யூவின் வாழ்க்கைச் சரித்திரமே அடங்கியிருக்கிறது. ஏன் அவர் முஸ்லிம்களைப் பற்றி அத்தனை ஆர்வமாகக் கேட்டார்? ஏன் க.நா.சு.வுக்கு இந்திய முஸ்லிம்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லை? இந்தக் கேள்விகளுக்கான பதிலும் ஒரு புத்தகம் அளவு நீளும்.
பியே-ந்வா (Pied-noir) என்று ஒரு ஃப்ரெஞ்ச் வார்த்தை இருக்கிறது. இதன் நேரடி அர்த்தம் கறுப்புக் கால். ஆனால் உண்மையான பொருள், அல்ஜீரியா, மொராக்கோ போன்ற வட ஆஃப்ரிக்க ஃப்ரெஞ்ச் காலனி நாடுகளில் பிறந்து வளர்ந்த ஃப்ரெஞ்சுக்காரர்களைக் குறிக்கும் சொல் பியே-ந்வா. ஆல்பெர் கம்யு ஒரு பியே-ந்வா. அல்ஜீரியாவில் ஒரு ஏழ்மையான, எழுதப் படிக்கத் தெரியாத, காது கேளாத வேலைக்காரிக்குப் பிறந்தவர் கம்யு. கம்யூவின் தந்தை முதலாம் உலகப் போரில் காயமடைந்து இறந்து போனார். அப்போது கம்யூவின் வயது ஒன்று. ஒரு பியே-ந்வாவின் நிலையே இப்படியென்றால் அல்ஜீரிய முஸ்லிம்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும்?
கம்யூவின் புனைகதைகளை விட அவர் அல்ஜீரியா பற்றி எழுதிய கட்டுரைகள் எனக்குப் பிடித்தமானவை. 1939-லிருந்து 1956 வரை அவர் அல்ஜீரியா பற்றி ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் அல்ஜீரியர்களுக்குமாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஃப்ரெஞ்சில் 1958-ல் வெளிவந்திருந்தது. ஆனால் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 50 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவராமல் இருந்தது. என்றாலும், அவர் அந்த அல்ஜீரியக் கட்டுரைகளில் முன்வைத்திருந்த கருத்துக்கள் (முக்கியமாக பயங்கரவாதம் மற்றும் வன்முறை குறித்த அவரது பார்வை) பல புத்திஜீவிகளால் உலக அளவில் விவாதிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அத்தொகுப்பு (Algerian Chronicles) 2013-ல்தான் வெளிவந்தது. அதில் அவர் கபீலியா பற்றி எழுதிய பதிவுகள் அதிமுக்கியமானவை. கபீலியா பற்றி எனது ‘கலகம், காதல், இசை’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். கபீலியாவில் தான் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் ரய் என்ற இசை தோன்றியது. ஏ.ஆர். ரஹ்மானின் இந்தி இசையில் ரய்யின் பாதிப்பு அதிகம். ரய் இசையில் இந்தியாவில் பிரபலமானவர் கலீத் (பாடல்: தீதீ). அல்ஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மலைகள் சூழ்ந்த பிரதேசம் கபீலியா. இங்கே வசிக்கும் மக்கள் பெர்பெர் (Berber) இனத்தைச் சேர்ந்தவர்கள். 1939-ல் கம்யு கபீலியா சென்றது பற்றி அல்ஜீரியக் கட்டுரைகளில் எழுதுகிறார்: ‘எட்டு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 120 கிலோ கோதுமை தேவை. ஆனால் அவர்களுக்கு 10 கிலோ கோதுமைதான் கிடைக்கிறது. அப்படியானால் இந்த கபீலிய மக்களின் வறுமை பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்.’
க.நா.சு.விடம் கம்யூ கேட்ட கேள்விக்கு இவ்வளவு பின்னணி இருக்கிறது.
1956-ல் சார்த்ரையும் கம்யூவையும் சந்திப்பதற்கு முன்னாலேயே 1951-ல் ஒரு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்காக இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டவராக பாரிஸ் சென்றிருக்கிறார் க.நா.சு. அப்போது அவர் சந்தித்தது ஆந்த்ரே மால்ரோ (André Malraux). க.நா.சு. சொல்கிறார்: ‘ஆந்த்ரே மால்ரோ எங்கள் மாநாட்டில் பேசுகிறபோது ஒரு பிரதம மந்திரிக்கு நடக்கும் செக்யூரிட்டி செக் நடந்தது. நாலு மெய்க்காவலர்கள் கையில் ரிவால்வாருடன் நாலு பக்கமும் பார்த்துக் கொண்டு, அவர் பேசும் போது காவல் காத்து நின்றனர். குளிர்காற்று வீசிய அந்த மாலையில் கதவுகளைச் சாத்தியிருந்த கூடத்தில் பேசும்போது பேச்சு வேகத்தில் அவருக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது. அவரே தற்காப்புக்காகக் கையில் ரிவால்வார் இல்லாமல் வெளியே கிளம்ப மாட்டார் என்று சொன்னார்கள்.’
‘மால்ரோ சென்னைக்கு ராஜாராவுடன் வந்து மதுரை போகும் போது தாம்பரத்தில் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். பின்னர் அவர் ஃப்ரெஞ்ச் கலாச்சார மந்திரியாக டெல்லி வந்தபோது அவரைச் சந்திக்க வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். கடிதம் அவர் பாரிஸ் திரும்பிய பிறகுதான் கிடைத்ததாம். சர்க்கார் இலாக்காக்கள் சேவை செய்யும் தன்மையைக் குறிப்பிட்டு எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.’
க.நா.சு. பற்றி எழுதி முடிக்கும் இந்த வேளையில் ஒரு வருத்தம் உண்டாகிறது. ஆல்பெர் கம்யு அல்ஜீரியாவில் சிறுவனாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட நமக்குக் கிடைக்கிறது. ஆனால் க.நா.சு.வின் ஒரு ஆண்டு ஃப்ரான்ஸ் அனுபவங்கள், கம்யூவோடு தங்கியிருந்தது பற்றியெல்லாம் ரெண்டு பக்கத்துக்கு ஒரு கட்டுரையோடு சரி. ஒரு புகைப்படம் கூட இல்லை.
கீழே உள்ளது கம்யூ அல்ஜீரியாவில் சிறுவனாக இருந்த போது எடுத்தது. கீழ்வரிசையில் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருப்பது கம்யு.
க.நா.சு.விடம் கற்றுக் கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்து விடுவோம்.
‘இலக்கிய வட்டம்’ தொகுப்புக்கு கி.அ. சச்சிதானந்தன் எழுதிய முன்னுரை: http://solvanam.com/?p=21683 க.நா.சு. எழுதிய புத்தகங்களின் முழுமையில்லாத பட்டியல்: |