தத்துவ தரிசனம்

26. புருஷனும் வருணமும்

காலம் போகப்போக, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியல்வாதிகளாகவும், மருத்துவர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாகவும், நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாகவும் தற்காலத்தில் எளிதில் ஆகிவிடுவதைப்போல, ஒரு காலகட்டத்தில் ஆகத் தொடங்கினார்கள். பின்னர், ஜாதீய அடிப்படையில் இன்னாரின் மகன்தான் இன்னார் என்ற சாபக்கேடும் புகுந்துகொண்டுவிட்டது. அனைத்தும் அந்த ஏக புருஷனின், ஒற்றை ஆதி ஆற்றலின் வெளிப்பாடுகளே என்பதை உளமார உணர்ந்தவர்கள், இதுபோன்ற ஜாதிச் சதிகளுக்கு உடன்படமாட்டார்கள்.

பத்மன்

புருஷன் எனப்படும் ஒற்றை ஆற்றலே உலகின் தோற்றத்துக்கும், பரிணாம வளர்ச்சிக்கும் காரணம் என்பதை புருஷ சூக்தம், கவித்துவமாக விளக்குகிறது. இதில், உலகில் படைப்புகள் தோன்றியதையும், அதன் இயக்கத்தையும் ஒரு வேள்விபோல் உருவகப்படுத்துகிறது 6-வது ஸ்லோகம்.

யத்புருஷேண ஹவிஷா தேவா யக்ஞமதன்வத்

வஸந்தோ அஸ்யஅஸீதஅஜ்யம் க்ரீஷ்ம இதமஹ் ஸரத்ஹவிஹி

உலகின் இயக்கம் என்பது ஒரு வேள்விபோல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உந்துசக்திக்கு, இயக்கும் ஆற்றலுக்கு எரிபொருள் அவசியம். உடலின் இயக்கத்துக்குக்கூட எரிசக்தி தேவையாக இருக்கிறது. ஆற்றலின் மறுபெயரே எரிசக்திதானே. ஆக, வேள்வி என்பது இயக்கத்தின் அடிப்படையான எரிசக்தியைக் குறிக்கிறது. வேள்வி என்பது என்ன? சமித்துகள் எனப்படும் மரக்குச்சிகள், அதாவது சுள்ளிகளைக் கொண்டு வளர்க்கப்படும் யாகத் தீயில், நெய்யுடன் கூடிய படையலை ஹோதா, அதாவது வேள்வி நடத்துபவர் அர்ப்பணம் செய்வதே வேள்வி. அதேபோல்தான், உலகின் படைப்பும் ஒரு படையலாக அமைகிறது. வேள்வி என்பதற்கு வேண்டியதை விழைவதற்காக, அதாவது விரும்பியதைப் பெறுகின்ற நோக்கத்துக்காகச் செய்வது என்று பொருள்.

அந்த வகையில், படைப்பின் நோக்கத்துக்கு ஆதி ஆற்றலாகிய புருஷனே இங்கு வேள்வித் தீயாக இருக்கிறார். வஸந்த ருது எனப்படும் இளவேனில் காலம் இந்த வேள்விக்கான நெய்யாகவும், கிரீஷ்ம ருது எனப்படும் கோடைக்காலம் இதனுடைய எரிபொருளாகிய சமித்துகளாகவும், சரத் ருது எனப்படும் இலையுதிர்காலம் இதனுடைய ஹவிஷ் எனப்படும் அர்ப்பணப் பொருளாகவும் (படையல்) அமைகின்றன. விராட் எனப்படும் தேவர், இதன் ஹோதாவாக விளங்குகிறார். இதன் உட்பொருள், ஆதி ஆற்றல் எனப்படும் எரிசக்தி, அதாவது எனர்ஜி குறிப்பிட்ட காலங்களைக் கடந்து பரிணாம வளர்ச்சியுற்று பல படைப்புகளாக வெளிப்படுகிறது என்பதே.

இதனைத் தொடர்ந்து, மேற்கொண்டு இருக்கும் 10 ஸ்லோகங்களில் (புருஷ சூக்தம் மொத்தம் 16 ஸ்லோகங்களைக் கொண்டது) படைப்புகளைப் பற்றி மேலும் விவரிக்கிறது புருஷ சூக்தம். இதில், பிற்காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரியதான 12-வது ஸ்லோகத்தின் உட்பொருளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அது தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படுவதுடன், இடைச்செருகல் என்றும்கூட கண்டிக்கப்படுகிறது.

அந்த ஸ்லோகம் -

பிராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹ ராஜன்யஹ க்ருதஹ

ஊரூதஸ்ய யத்வைஸ்யஹ பத்ப்யாம் சூத்ரோ ஆஜாயத

படைப்புகள் மனிதனாகப் பரிணாமம் அடையும்போது, நால்வகை வருணத்தவர்களாக மனிதர்கள் உருவானார்கள் என்கிறது இந்த ஸ்லோகம். இங்கே வருணம் (வர்ணம்) என்பது ஜாதியல்ல. வருணம் என்பதற்கு நிறம் என்றொரு அர்த்தம் இருந்தாலும், வகைப்பாடு என்று மற்றொரு பொருள் இருக்கிறது. புருஷ சூக்தத்தில், வருணம் என்பது நிறத்தைக் குறிக்கவில்லை; வகைப்பாட்டைக் குறிக்கிறது. அது என்ன வகைப்பாடு?

புருஷன் எனப்படும் ஆதி ஆற்றலின் வாயில் இருந்து (சம்ஸ்கிருதத்தில் முகம் என்பதற்கு வாய் என்று பொருள்) பிராமணர்களும், தோள்களில் இருந்து ராஜ்யங்களை நடத்துகின்ற க்ஷத்திரியர்களும், தொடைப் பகுதிகளில் இருந்து வியாபாரம், தொழில் செய்கின்ற வைசியர்களும், பாதங்களில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்கிறது. இந்த நான்கு வர்ணத்தாருமே ஒரே பிரும்மத்தின், அதாவது ஒற்றை இறையின், ஆதி ஆற்றலின் உறுப்புகள்தான். இதில் மேல், கீழ் ஏதுமில்லை. பிறகு ஏன் இந்த வகைப்பாடு? இதன் உட்பொருள் என்ன?

வேதம் அல்லது அக்காலக் கல்வி, சொல்வதைக் கேட்டுத்தான் (ஸ்ருதி) வளர்க்கப்பட்டது. ஆகையால், வேதங்களை ஓதுகின்றவர்களுக்கு வாய் முக்கியம். வேதத்துக்குத் தமிழில் எழுதாக்கிளவி (எழுதப்படாத சொல்) என்றொரு பெயர் உண்டு. எனவே, சொல்லுக்கு (ஸ்ருதிக்கு) முக்கியத்துவம் கொடுக்கும் பிராமணர்கள், புருஷனின் அல்லது பிரும்மத்தின் வாயில் இருந்து தோன்றியதாக வர்ணிக்கப்படுகிறார்கள். அடுத்ததாக, அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு தோள் வலிமை, பராக்கிரமம் அவசியம். வீரம் என்றதுமே நாம் தோள் தட்டுகிறோம் அல்லவா? ஆகையால், புருஷனின் தோள்களில் இருந்து க்ஷத்திரியர்கள் தோன்றியதாக உருவகப்படுத்தப்படுகிறார்கள்.

இதேபோல், எந்தவொரு சமூகத்துக்கும் அதன் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உற்பத்தி அவசியம். உற்பத்தியே சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் பொருளாதாரத் தூணாக விளங்குகிறது. மனிதனுடைய தொடைப் பகுதி தூண்களைப்போல உள்ளது. மேலும் அந்தத் தொடையின் அருகில்தான் வயிறு மற்றும் உற்பத்தி உறுப்பு ஆகியவை அமைந்துள்ளன. ஆகையால், உழவு மற்றும் தொழில் செய்தல், வியாபாரம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் வைசியர்கள், புருஷனின் தொடைகளில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறார்கள். மீதி இருப்பவர்கள் சூத்திரர்கள். இதற்கான பொருளை நாம் சரியாக அறிந்துகொள்ள வேண்டும்.

சூத்திரம் என்றால் அடிப்படை, அஸ்திவாரம் என்று பொருள். கணக்குகளுக்கான அடிப்படை சூத்திரம் எனப்படுகிறது. பல்வேறு சாஸ்திரங்களுக்கான அடிப்படையும் சூத்திரங்கள் என்று போற்றப்படுகின்றன. அப்படியிருக்க, வருணத்தில் மட்டும் சூத்திர என்பது எப்படி மட்டமாகிவிட முடியும்? சூத்திர என்பது எந்தவொரு சமூகத்துக்கும் அடிப்படை அவசியம் என்ற பொருளைக் கொண்டது. எந்தவித சிறப்புத் திறமையும் இல்லாத பொதுவானவர்கள் சூத்திரர்கள் எனப்பட்டனர். உடலைத் தாங்கி நிற்பதோடு, அதன் இயக்கத்துக்கும் உதவுபவை இரண்டு பாதங்கள். அந்தப் பாதங்கள் இல்லாவிட்டால் எந்த மனிதனும் படுத்த படுக்கை ஆகிவிட வேண்டியதுதான். அதேபோல்தான், சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கின்ற, அதனுடைய இயக்கத்துக்குக் காரணமாக அமைகின்ற பிரிவினரே சூத்திரர்கள்.

இங்கே, மேலும் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். தற்காலத்தில் ஜாதியின் அடிப்படையில் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்பதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இது பொய்யானது. ஜாதி முறையும், அதன் பாற்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நமது சமூகத்தைப் பீடித்த பிற்காலப் பீடைகள். ஆனால், வருணம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றைப் பொருத்து அமைகின்ற வகைப்பாடு. முற்காலத்தில், இவ்வாறாகத்தான் பாரதத்தில் மனிதர்கள், குறிப்பிட்ட வருணத்தவர்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். இதில் வாரிசுரிமை ஏதும் இருக்கவில்லை. ஆனால், காலம் போகப்போக, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியல்வாதிகளாகவும், மருத்துவர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாகவும், நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாகவும் தற்காலத்தில் எளிதில் ஆகிவிடுவதைப்போல, ஒரு காலகட்டத்தில் ஆகத் தொடங்கினார்கள். பின்னர், ஜாதீய அடிப்படையில் இன்னாரின் மகன்தான் இன்னார் என்ற சாபக்கேடும் புகுந்துகொண்டுவிட்டது.

அனைத்தும் அந்த ஏக புருஷனின், ஒற்றை ஆதி ஆற்றலின் வெளிப்பாடுகளே என்பதை உளமார உணர்ந்தவர்கள், இதுபோன்ற ஜாதிச் சதிகளுக்கு உடன்படமாட்டார்கள். (வருணாசிரமம் குறித்து மேற்கொண்டு விளக்கம் பெற மகாகவி பாரதியாரின் ஞானரதம் படிப்பது பயன் தரும்).

சூரியன், சந்திரன், இந்திரன், அக்னி உள்ளிட்ட இயற்கை ஆற்றல்கள், அந்த ஏக புருஷனிடமிருந்து வெளிப்பட்டதாக 13-வது ஸ்லோகம் கூறுகிறது.

சந்த்ரமா மனஸோ ஜாதஸ்சக்ஷோஹ் சூர்யோ ஆஜாயத

முகாத் இந்த்ரஷ்ச அக்னிஷ்ச ப்ராணாத் வாயுர் ஆஜாயத

புருஷனின் மனத்தில் இருந்து சந்திரனும், கண்களில் இருந்து சூரியனும் தோன்றின. புருஷனின் வாயில் இருந்து இந்திரனும், அக்னியும், பிராணன் எனப்படும் மூச்சில் இருந்து வாயுவும் (காற்றும்) தோன்றின என்பது இதன் பொருள். உட்பொருளைப் பார்ப்போம்.

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகவும், கற்பனையின் பிறப்பிடமாகவும் இருக்கிறது. நமது மனத்தைத் தூண்டுவதாக சந்திரன் அமைந்திருக்கிறது. நிலவைப் பார்த்தால் கற்பனை ஊற்றெடுக்கிறது. அமாவாசை, பௌர்ணமி போன்ற சந்திரனில் ஏற்படும் மாற்றங்களுக்கும் (அதாவது, பூமியின் சுழற்சியால் தென்படுகின்ற மாற்றங்கள்) நமது மனத்தில் எழும் எண்ண அலைகளுக்கும் தொடர்புள்ளது. ஜாதகப்படி, சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள் கவிஞர்களாகவும், படைப்பாளிகளாகவும் இருப்பார்கள். ஆக, மனத்துக்கும் சந்திரனுக்கு தொடர்பு உள்ளது. ஆதி ஏக ஆற்றலான புருஷனின் மனமே சந்திரனாக உருவெடுத்தது.

ஒளி இருப்பதால்தான் நம்மால் காண முடிகிறது. பொருள்களைக் காண நம்மிடமும் கண்ணொளி வேண்டும். பூமிக்கான ஒளியின் பிறப்பிடமாக சூரியனே உள்ளது. சூரிய நமஸ்காரம் (யோகாசன முறைப்படையான தேகப்பயிற்சியும், விடியற்காலை சூரிய வணக்கமும்) கண்ணொளியை அதிகரிக்கவைக்கும் என்பது கண்கூடு. ஆக, கண்களுக்கும் சூரியனுக்கும் தொடர்புள்ளது. ஆதி ஏக ஆற்றலான புருஷனின் கண்களே சூரியனாக உருவெடுத்தது.

வாய் மூலமாகவே பொருள்களை உண்கிறோம். வாயில் இருந்தே சொற்களை பிறப்பிக்கிறோம். இந்திரன் என்னும் தேவன் இந்திரியங்களின் தலைவனாக வர்ணிக்கப்படுகிறான். அக்னி என்பது வெப்பத்தையும், ஆக்கத்தையும் குறிப்பது. அக்னி என்பது வடிவம் உடையது. வேள்வியில் அக்னி தேவனே நமது படையல்களை ஆண்டவனிடம் கொண்டு சென்று, அவரது பிரசாதத்தை நமக்குத் தருகின்ற பாலமாகக் கருதப்படுகிறான். நமக்குத் தேவையான, அதாவது நமது உடல் உறுப்புகளான இந்திரியங்களுக்குத் தேவையான ஆற்றல் உண்ணும் உணவில் இருந்தே கிடைக்கிறது. நேரடியாகப் பார்க்க இயலாவிட்டாலும், வார்த்தைகள் குறிப்பிட்ட வடிவங்களைத் தாங்கி நிற்கின்றன. மேலும், உணவுப் பொருள்கள் உட்செல்லும் பாலமாகவும் வாய் திகழ்கிறது. அந்தவகையில், இந்திரனும் அக்னியும் ஆதி ஏக புருஷனின் வாயிலிருந்து தோன்றினர். உயிரினங்கள் வாழ்வதற்கு பிராண வாயு அவசியம். அந்தவகையில், ஆதி ஏக புருஷனின் மூச்சுக் காற்றில் இருந்து வாயு தேவன் தோன்றினான்.

அடுத்ததாக, 14-வது செய்யுளைப் பார்ப்போம்.

நாப்யா ஆஸீதந்தரீக்ஷம் ஷீர்ஸ்னோத்யௌஹ் ஸமவர்தத

பாத்ப்யாம் பூமிர் திஷா ஸ்ரோத்ராத்ததா லோகா அகல்பயன்

ஆதி ஏக புருஷனின் நாபி எனப்படும் தொப்பூள், வானுக்கும் பூமிக்கும் இடையிலான நடுவெளி (அந்தரீக்ஷம்) ஆக இருக்கிறது. அவரது தலை, உயர் வானமாக நன்கு பொருந்தியுள்ளது. அவரது பாதங்களில் பூமி நிலைபெற்றுள்ளது. அவரது செவிகள் திசைகளாக உள்ளன. இவ்வாறாக உலகம், அந்தப் புருஷனின் சித்தத்தால் தோன்றி, இயங்குகிறது என்று இதன் பொருள். ஆக, இந்தப் பிரபஞ்சம் புருஷனின் உடல் போன்றது என்கிறது புருஷ சூக்தம். (இதனைத்தான் பிற்காலத்தில் விசிஷ்டாத்வைதிகளும், சித்தாந்த சைவர்களும் பரமாத்மாவின் (விஷ்ணு அல்லது சிவன்) உடலே உலகம் என்ற தத்துவமாகக் கூறினார்கள்).

15-வது ஸ்லோகம், படைப்பு ஒரு வேள்வியாகத் தொடர்வதை வர்ணிக்கிறது.

சப்தாஸ்யாஸன் பரிதயஸ்த்ரிஹி சப்த ஸமிதஹ் க்ருதாஹா

தேவா யத்யக்ஞம் தன்வானா அபத்னன்புருஷம் பசும்

இந்த வேள்விக்கு ஏழு விஷயங்கள் சுற்று எல்லைகளாக உள்ளன. மூவேழு (21) விஷயங்கள் வேள்விக்கான சுள்ளிகளாக (சிறு கட்டைகளாக) உள்ளன. தேவன் (விராட் எனப்படும் புருஷனில் இருந்து தோன்றிய ஹிரண்யகர்ப்பன்) இந்த வேள்வியைச் செய்யும் கர்த்தாவாக இருக்கிறான். எல்லையில்லாத அந்தப் புருஷனே (ஆதி ஆற்றலே) இந்த வேள்விக்கு (படைப்புக்கு), எல்லைக்கு உட்பட்ட பசுக்களாக (படையல் பொருள்) அர்ப்பணிக்கப்படுகிறது.

இதன் உட்பொருளைக் காண்போம். படைப்பு (உலகத் தோற்றம்) என்கின்ற வேள்விக்கு, ஆகாயம், வாயு, தீ, நீர், நிலம், சூரியன் என்று வர்ணிக்கப்படும் புத்தி (மஹத் என்கின்ற பேரறிவு), சந்திரன் என்று வர்ணிக்கப்படும் மனம் (அதாவது, தான் என்ற நினைப்பாகிய அகங்காரம்) ஆகிய ஏழும் சுற்று எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த எல்லைக்கு உட்பட்டு நடக்கும் வேள்வியில், இருபத்தோரு சமித்துகள் வேள்வியைத் தூண்டுபவைகளாக பயன்படுத்தப்படுகின்றன. பஞ்ச தன்மாத்திரைகள் (நிறம், ஒலி, வாசனை, ருசி, தொடு உணர்வு), பஞ்ச ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல் அதாவது, உடல்), பஞ்ச கர்மேந்திரியங்கள் (கை, கால், வாய், மலஜலம் கழிக்கும் உறுப்பு, பிறப்புறுப்பு), பஞ்ச மகாபூதங்கள் (பூமி, நீர், தீ, வாயு, ஆகாயம் எனப்படும் வெளி) ஆகிய இருபதுடன் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையான அந்தகரணமும் சேர்த்து 21 விஷயங்களே அந்த சமித்துகள். இந்த சமித்துகளைக் கொண்டு, விராட் படைப்பு என்னும் வேள்வியைச் செய்யும்போது, எல்லையற்ற அந்த ஆதி ஆற்றலே (புருஷனே) தன்னை ஓர் எல்லைக்குள் சுருக்கிக்கொண்டு வேள்விக்கான அர்ப்பணிப்புப் பொருளாக, அதாவது வாழ்கின்ற உயிரினங்களாக (பசு) வருகிறது. இவ்வாறாக, படைப்பு என்னும் வேள்வி நடைபெறுகிறது என்கிறது புருஷ சூக்தம்.

இப்படியாக, புருஷ சூக்தத்தில் அனைத்தையும் வியாபித்து நிற்கும் ஒற்றை ஆதி ஆற்றலாக வருணிக்கப்படும் புருஷனை ஈஸ்வரனாக ஏற்றுக்கொண்டு, சாங்கிய தரிசனத்தின் நீட்சியாக, யோக தரிசனம் மலர்ந்தது.

அதுபற்றி அடுத்த வாரம் காண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT