பாரதீய மெய்ஞானத்தில், சனாதன தர்மம் எனப்படும் ஹிந்து மதத்தின் ஷட்தர்சனங்களில் ஒன்றான யோக தரிசனம், சாங்கிய தரிசனத்தின் நீட்சியாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சாங்கிய தரிசனம் கூறிய பிரகிருதி தொடங்கி புருஷன் ஈறாக 25 தத்துவங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் யோகம், அதனுடன் பரமபுருஷன் அல்லது பரமாத்மா என்ற ஈஸ்வரனை 26-வது தத்துவமாக முன்வைக்கிறது. ஆகையால், யோக தரிசனத்துக்கு சேஸ்வரவாத (ச ஈஸ்வர வாத) சாங்கியம் என்று பெயர். ஈஸ்வரனுடன் (இறைவனுடன்) கூடிய சாங்கிய வாதம் என்று இதற்குப் பொருள். உயிரினங்களின் உடலுக்குள் ஆன்மா உறைவதைப்போல, பேரண்டமாகிய உடலுக்குள் பரமாத்மா வீற்றிருப்பதாக யோகம் கூறுகிறது.
உலகின் இயற்கையான மூவகைத் துன்பங்களைப் போக்குவதற்கான ஆய்வில் இறங்கிய சாங்கியம், இதற்கு ஆன்மா குறித்த பகுத்தறிவே (ஞானமே) தீர்வு என்று விடை பகன்றது. அந்த ஆன்மாவை விடுதலை (முக்தி) என்ற இலக்கை நோக்கிச் செலுத்துவதற்கான பயிற்சி முறைகளைப் பகிர்கிறது யோக தரிசனம். ஆன்மா உறைகின்ற உடலுக்கும் அதுசார்ந்த மனத்துக்கும் பயிற்சி அளிப்பதன் மூலம் அதனைக் கடைத்தேற்றுவதே யோகத்தின் சாரம்.
சாங்கிய தரிசனத்தை விவரிக்கும் சாங்கிய காரிகை, துக்கத்ரயாத் அபிகாதாத் ஜிக்ஞாஸா என்று தொடங்குகிறது. அதாவது, ‘மூன்று வகையான (ஆதி ஆத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தைவீகம்) துன்பங்களில் அடைபட்டுக் கிடப்பதால் எழுந்த ஆராய்ச்சி குறித்த விருப்பத்தால்’ என்று தொடங்குகிறது. ஜிக்ஞாஸா என்றால் ஆராய்ச்சி அல்லது விசாரணை குறித்த விருப்பம் என்று பொருள். அதேநேரத்தில், சாங்கியத்தின் தொடர்ச்சியான யோக தரிசனத்தை விளக்கும் பதஞ்சலியின் யோக சூத்திரம், அத யோகானுசாஸனம் என்று தொடங்குகிறது. ‘தற்போது யோகத்துக்கான பயிற்சி தொடங்குகிறது’ என்பது இதன் பொருள். அனுசாஸனம் என்றால் பயிற்சியளித்தல், கற்பித்தல் என்று பொருள். யோகம் குறித்த பயிற்சி அளிப்பதே யோக தரிசனம் அல்லது யோக தத்துவம்.
யோகம் என்ற சொல், யுஜ் என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது. யுஜ் என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று இணைத்தல், மற்றொன்று கூர்ந்து கவனித்தல் (தியானித்தல்). அந்தவகையில், யோகம் என்பது உடல் மற்றும் மனப் பயிற்சிகளின் மூலம் ஆன்மாவைக் கூர்ந்து கவனித்து ஓர் ஒத்திசைவை ஏற்படுத்துவது என்று பொருள்படும். அத்துடன், ஜீவாத்மாவுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதன் மூலம், பரமாத்மாவாகிய ஈஸ்வரன் மீதான தியானத்தை ஏற்படுத்தி, இறுதியில் அவருடன் ஒன்றிணைவதற்கு உதவுவது என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆக, ஆன்ம விடுதலைக்கான சாதனம் வெறும் தத்துவ ஆராய்ச்சி மட்டுமே அல்ல; அதன் உட்பொருளை உணர்ந்துகொண்டு முக்தியை அடைய உரிய பயிற்சிகளை மேற்கொள்வதும்தான் என்கிறது யோகம். ஆகையால், இது சாதனா மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. சாதனா, அதாவது சாதனை என்பது உரிய, தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் இலக்கை அடைவதைக் குறிக்கும். மார்க்கம் என்றால் வழி என்று பொருள்.
யோக தரிசனத்தை ஸ்தாபித்தவராக, யோக சூத்திரம் எழுதிய பதஞ்சலி முனிவர் போற்றப்படுகிறார். இவரது காலம் கி.மு. 2-ம் நூற்றாண்டு என்று கூறுகிறார்கள். வேறு சிலர் கி.பி. 3-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இருப்பினும் யோக தத்துவம், பதஞ்சலிக்கும் பழைமையானது
மொகஞ்சதாரோவில் உள்ள சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வில், யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள பசுபதி உருவம் கிடைத்துள்ளது. இதன் காலம், கி.மு. 3,000-க்கு முற்பட்டதாக மதிக்கப்படுகிறது. அதாவது, இன்றைக்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பசுபதி என்பது ஈஸ்வரனை (சிவபெருமானை) குறிக்கிறது. யோகாசனத்தில் அமர்ந்துள்ள அவரைச் சுற்றி பல்வேறு உயிரினங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பசுக்கள் எனப்படும் உயிரினங்களின் தலைவரான பசுபதி, பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த முத்திரை, யோகத்தின் தொன்மையை விளக்கும்.
மேலும், வேத இலக்கியங்களில் மிகவும் பழைமையான ரிக் வேதத்தில் (கி.மு. 2,000 வாக்கில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது) யோகம் என்ற சொல் பலமுறை இடம் பெற்றுள்ளது. ரிக் வேதத்தில், உதயகால சூரியன் சாவித்ரி என்று போற்றப்படுகிறது. இந்த சாவித்ரி, மனத்தையும் புத்தியையும் யோக மார்க்கத்தில் (ஒன்றிணைக்கும் வழியில்) கட்டுப்படுத்துவதாக ரிக் வேத ஸ்லோகம் ஒன்று (5.81.1) கூறுகிறது. யுஞ்ஜதே மன அத யுஞ்ஜதே தியோ விப்ரா விப்ரஸ்ய ப்ருஹதோ விபஸ்சிதஹ் என்பதே அந்த ஸ்லோகம். ஒளிவீசும் மாபெரும் ஞானியாகிய சாவித்ரி ஞானிகளின் மனத்தையும், புத்தியையும் யோகத்தால் கட்டுப்படுத்துகிறது என்பது அதன் பொருள். இதில் கூறப்படும் யுஞ்ஜதே என்ற சொல் (கட்டுப்படுத்துதல் என்ற பொருள் கொண்டது), யோகம் என்ற சொல்லின் வேர்ச் சொல்லாகக் கருதப்படுகிறது.
உலகைப் படைத்தவரான ஹிரண்யகர்ப்பரே (விராட புருஷன்) யோக தத்துவத்தை மொழிந்ததாகவும் கூறப்படுகிறது. சனத்குமாரர், ஜெயகீஸவ்யர், வர்ஸகன்யர் ஆகிய முற்கால முனிவர்கள், யோக சாஸ்திர நூல்களை இயற்றியவர்களாகக் கூறப்படுகின்றனர். ஆனால், இந் நூல்கள் தற்காலத்தில் கிடைக்கவில்லை. சுக்ல யஜுர்வேதப் பிரிவைத் தோற்றுவித்த யாக்ஞவல்கிய மகரிஷியும், யோக சாஸ்திர நிபுணராகக் கூறப்படுகிறார்.
கி.மு. 9-ம் நூற்றாண்டில் இருந்து கி.மு. 3-ம் நூற்றாண்டு வரையிலானதாகக் கருதப்படும் பிருஹதாரண்யக உபநிஷதம், கடோபநிஷதம், சாந்தோக்ய உபநிஷதம், ஸ்வேதாஸ்வதர உபநிஷதம், மைத்ரயனீய உபநிஷதம் ஆகியவற்றில் யோக தத்துவங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மிகவும் பழைமையானதும் கி.மு. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக மதிக்கப்படுவதுமான பிருஹதாரண்யக உபநிஷதத்தில், யோகத்தின் ஓர் அங்கமாகிய பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) பற்றிக் கூறப்பட்டுள்ளது. கி.மு. 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த சாந்தோக்ய உபநிஷதத்தில், பிரத்யாஹாரம் (புலனடக்கம்) பற்றிக் கூறப்பட்டுள்ளது.
கி.மு. 5 அல்லது கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கடோபநிஷதத்தில், யோக வழிமுறை பற்றி விளக்கப்பட்டுள்ளது. தன்னைப் பற்றி அறியும் ஞானத்துக்கு யோக மார்க்கமே வழிமுறை என்கின்றன கட உபநிஷத ஸ்லோகங்கள்.
யதா பஞ்சாவதிஷ்டந்தே ஞானானி மனஸா ஸஹ
புத்திஸ்ச ந விசேஷ்டதே தாமாஹுஹ் பரமாம் கதிம்.
தாம் யோகமிதி மன்யந்தே ஸ்திராமிந்த்ரிய தாரணாம்
அப்ரமத்தஸ்ததா பவதி யோகோ ஹி ப்ரபவாப்யயௌ.
இவற்றின் பொருள் – எப்போது ஐம்புலன்களும் மனமும் (எண்ணங்களும்) நிலைபெற்று, புத்தி அலைபாயாமல் இருக்கிறதோ அதுவே உயர்ந்த பாதை. இந்திரியங்களின் (ஐம்புலன்கள்) ஸ்திரத்தன்மையும், மனத்தின் ஒருமித்த நோக்குமாகிய அதுவே யோகம் என்று போற்றப்படுகிறது. அது சிந்தனை ஏதுமற்ற மந்தம் அல்ல, படைப்பும் (ஆக்கமும்) உடைப்புமே (அழிப்புமே) யோகம். இதன்படி, புலனடக்கத்தாலும் ஒருமித்த எண்ணத்தாலும் எதுவொன்றையும் ஆக்கவும் அழிக்கவும் இயலுகின்ற மன ஆற்றலே யோகம் எனப்படுகிறது.
மைத்ரயனீய உபநிஷதத்தில் ஷடாங்க யோகம் (ஆறு உறுப்புகளைக் கொண்ட யோகம்) பற்றிக் கூறப்படுகிறது. பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), பிரத்யாஹாரம் (புலனடக்கம்), தியானம் (ஆழ்தல்), தாரணை (கூர்ந்து கவனித்தல்), தர்க்கம் (ஆய்ந்தறிதல்), சமாதி (சலனமற்ற நிலை) ஆகியவையே அந்த 6 அங்கங்கள்.
பௌத்த, ஜைன (சமண) மத இலக்கியங்களிலும் யோகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புலனடக்கத்தையும், தியானத்தையும் இரண்டு மதங்களுமே பெரிதும் வலியுறுத்துகின்றன. யோகத்தை மையமாக வைத்து, பௌத்தத்தில் யோகாசார மாத்யமிகம் என்ற பிரிவே பிற்காலத்தில் உருவானது. தியானம் என்ற சொல்லே ஜென் எனத் திரிந்து ஜென் பௌத்தம் என இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பானிலும், சீனத்திலும் புகழ் பெற்றது. திபெத்திய தாந்திரீக பௌத்தமும் யோகாசனத்துக்கும், தியானத்துக்கும் முக்கியத்துவம் தருகிறது.
ராமாயண காலத்தைச் சேர்ந்த வசிஷ்ட முனிவர் (தசரதரின் குலகுரு), ராமபிரானுக்கு யோகம் குறித்தும் ஆன்ம தத்துவம் குறித்தும் போதித்தாகக் கருதப்படுகிறது. யோக வாசிஷ்டம் என்ற பெயரால் வழங்கப்படும் இந்தத் தத்துவ நூல், ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், யோகம் குறித்த வசிஷ்டரின் போதனைகள் பழைமையானதாக இருந்தாலும்கூட, யோக வாசிஷ்டம் என்ற நூல், கி.பி. 6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மகாபாரதத்திலும் யோக தத்துவம் பல இடங்களில் போற்றப்படுகிறது. மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள மாபெரும் தத்துவ நூலான பகவத் கீதையில், மூன்று வகையான யோகங்கள் பற்றிக் கூறப்படுகிறது. கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகியவையே அம்மூன்றும். மொத்தம் 18 அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதை, தலா 6 அத்தியாயங்கள் மூலம் இந்த மூன்றுவித யோகங்களைக் கூறுகிறது. ஒருமித்த செயலாற்றுவது கர்ம யோகம், இறைவன் மீது பக்திகொண்டு ஒன்றிணைதல் பக்தி யோகம், அறிவு ஆராய்ச்சியின் மூலம் ஒன்றிணைவது ஞான யோகம்.
இவை மூன்று தவிர, நான்காவதாக இருப்பது ராஜ யோகம். மனப் பயிற்சிகள், உடல் பயிற்சிகள் மூலம் தன்னுள்ளே இருக்கும் ஆன்ம ஆற்றலை வளர்த்து, பிரபஞ்சத்தின் ஆதி ஆற்றலுடன் (இறைவனுடன்) ஒன்றிணைவதுதான் ராஜ யோகம். இதனை விவரிக்கிறது பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம்.
இதுகுறித்து அடுத்த வாரம் காண்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.