சிந்து சமவெளி நாகரிகக் காலம் மற்றும் ரிக் வேத காலத்தில் இருந்தே யோகக் கலை, யோக தத்துவம் போன்றவை பாரதத்தில் பயின்று வருகின்றபோதிலும், யோக தரிசனம் என்ற வகையில் அதனை உருவாக்கியவராகப் பதஞ்சலி முனிவர் போற்றப்படுகிறார். இவர் வாழ்ந்த காலத்தை, கி.மு. 2-ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையாக, வெவ்வேறு காலகட்டங்களை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதஞ்சலி முனிவரைக் குறிக்கும் சித்திரங்கள், அவரை இடுப்புக்குக் கீழ் பாம்பு போன்ற வடிவத்தில் சித்திரிக்கின்றன. புராண ரீதியில், இவர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால் அவ்வாறு சித்திரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், யோக தத்துவத்தின்படி இதற்கு வேறு பொருள் உண்டு. யோகத்தின் மூலம் மனிதனுக்குள் எழும் ஆன்ம ஆற்றல், குண்டலினி சக்தி எனப்படுகிறது. இந்தக் குண்டலினி சக்தி பாம்பாக உருவகப்படுத்தப்படுகிறது. மூலாதாரம் எனப்படும் முதுகெலும்பின் அடிப்பகுதியில் சிறிதாகத் தோன்றி அடிவயிறு, மேல்வயிறு, மார்பு, கழுத்து, புருவமத்தி வழியாக உச்சந்தலையில் விரிவடையும் இந்த ஆற்றல், ஒரு பாம்பு படம் எடுப்பதைப்போல் சித்திரிக்கப்படுகிறது. ஆகையால், குண்டலினி சக்தி மிகுந்தவர் என்பதைக் குறிக்கும் வகையில் பாம்பு உருவத்துடன் பதஞ்சலி முனிவர் காணப்படுகிறார். இவர் ஆயுர்வேத நூல் ஒன்றை எழுதியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது தற்காலத்தில் கிடைக்கப் பெறவில்லை. இதேபோல், பாணினியின் சம்ஸ்கிருத இலக்கணத்துக்கு விளக்கவுரை (பாஷ்யம்) எழுதிய பதஞ்சலியும் இவரும் ஒருவரா அல்லது வேறு வேறு அறிஞர்களா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
பதஞ்சலி இயற்றிய யோக சூத்திரம்தான், யோக தரிசனத்துக்கு அடிப்படை நூலாக மதிக்கப்படுகிறது. 195 சூத்திரங்களை (செய்யுள் போன்றது) கொண்ட இந்நூல், நான்கு பாதங்களாக (அத்தியாயங்களாக) பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாதமான சமாதி பாதம் 51 சூத்திரங்களையும், இரண்டாவதான சாதனா பாதம், மூன்றாவதான விபூதி பாதம் ஆகியவை தலா 55 சூத்திரங்களையும், நான்காவதான கைவல்ய பாதம் 34 சூத்திரங்களையும் கொண்டவை.
யோக சூத்திர நூல் மிகவும் நுட்பமானது. நேரடியாகப் படித்துப் பொருள் கொள்ளும்போது குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடும். ஆகையால், இதனைத் தெளிவாக அறிந்துகொள்ள, பாஷ்யங்களின் துணை அவசியம். அந்தவகையில், வியாச பாஷ்யம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. இவர், மகாபாரதம் இயற்றிய வேத வியாசர் அல்லர். இவர், கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறொரு வியாசர். இவரது இந்த விளக்கவுரைக்குப் பிற்காலத்தில் சில அறிஞர்கள் விரிவுரை (விவரணம்) எழுதியிருக்கிறார்கள். இவற்றில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கரர் எழுதிய யோக பாஷ்ய விவரணம் குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த சங்கரர் அத்வைத ஸ்தாபகரான ஆதிசங்கரர் என்று கூறப்படுவதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. வியாச பாஷ்யத்துக்கு கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய-யோக தத்துவ அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரா இயற்றிய தத்வவைஷாரதீ, கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானபிக்ஷுவின் யோகவார்த்திக, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஹரிஹரானந்த அரண்யரின் பாஸ்வதீ ஆகிய விரிவுரைகளும் குறிப்பிடத்தகுந்தவை.
இவைபோக, யோக சூத்திரத்துக்கு நேரடியான விளக்கவுரையாக விளங்கும் 6 நூல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை – 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜதேவரின் ராஜமார்த்தாண்ட வ்ருத்தி, பாவாகணேசரின் யோகசூத்ர ப்ரதீபிகா, நாகோஜி பட்டரின் யோகசூத்ர வ்ருத்தி, ராமானந்த யதியின் யோக மணிப்ரபா, நாராயண தீர்த்தரின் யோக சித்தாந்த சந்திரிகா மற்றும் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அத்வைத ஆசார்யரான சதாசிவ பிரம்மேந்தரரின் யோக சுதாகர.
பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் முதலாவதாக வருவது சமாதி பாதம். எவ்வித சலனமுமின்றி பரமானந்தத்தில் ஆழந்திருக்கும் நிலைக்குப் பெயர்தான் சமாதி. இந்த அத்தியாயத்தில், யோகம் என்றால் என்ன, சமாதி நிலையை எப்படி அடைவது என்பது குறித்து விவரிக்கப்படுகிறது. அத யோக அனுசாஸனம் (யோகம் ஒழுங்குமுறைப் பயிற்சிகளுடன் தொடங்குகிறது), யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத (சித்தங்கள் எனப்படும் எண்ணங்கள், உணர்வுகள் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதே யோகம்) ஆகிய யோகத்தின் உட்பொருளை உணர்த்தும் உயர்ந்த வாக்கியங்கள், இந்தசு சமாதி பாதத்தில்தான் இடம்பெற்றுள்ளன.
அடுத்ததாக, யோகப் பயிற்சிகளைக் கூறும் சாதனா பாதம். இரண்டு வகையான யோகப் பயிற்சிகள் இதிலே குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, கிரியா யோகம் எனப்படும் செயல் சார்ந்த யோகப் பயிற்சிகள். இதுவேதான், பகவத் கீதையில் கர்ம யோகம் என்று கூறப்படுகிறது. சுயநலம் சாராத செயல்கள் மூலம் வினைப்பயன்களை அறுப்பதே கிரியா யோகம் அல்லது கர்ம யோகம். இரண்டாவது வகையான யோகம், ராஜ யோகம் எனப்படும் அஷ்டாங்க யோகம். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய மூன்று வகைப்பாடுகளைச் சாராத தனித்துவம் வாய்ந்தது இந்த ராஜ யோகம். இது குறித்து பின்னர் சற்று விரிவாகக் காண்போம்.
யோக சூத்திரத்தில் மூன்றாவதாகக் கூறப்படுவது, விபூதி பாதம். விபூதி என்றால் மேன்மையை அடைவது என்று பொருள். யோகப் பயிற்சிகள் மூலம் கிடைக்கும் உயர்ந்த ஆற்றல்களையும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது.
யோக சூத்திரத்தின் கடைசி அத்தியாயம், கைவல்ய பாதம். கைவல்யம் என்றால் மோன நிலை, தனித்திருத்தல் என்று பொருள். யோகப் பயிற்சிகள் மூலம் இறுதியில் அடையப்படும் இலக்காகிய மோட்சம் (விடுதலை) எனப்படும் தனித்துவ நிலையை இது எடுத்துரைக்கிறது.
அலைபாயும் எண்ணங்களை அடக்குவதன் மூலம் (சித்தவ்ருத்தி நிரோதம்) கைவல்யத்தை அடையலாம் என்கிறது யோக சூத்திரம். பிரகிருதியில் இருந்து புருஷன் (ஆன்மா) தான் வேறுபட்ட தனித்துவம் வாய்ந்தது என்பதை திடமாக உணர்வதே கைவல்யம். இவ்வாறான மோட்சத்தை (விடுதலையை) அடைவதற்காக, புருஷனுக்கு ஈஸ்வரன் உதவுகிறார் என்கிறது யோகம். புருஷன் தனது முயற்சிகளாலேயே மோட்சத்தை எட்ட முடியும் என்றபோதிலும், அது கைகூடுவதற்கு கிரியாஊக்கியாக, ஒரு வழிகாட்டியாக ஈஸ்வரன் அமைகிறார். அந்தவகையில் சாங்கியத்தின் 25 தத்துவங்கள் போக, 26-வது தத்துவமாக ஈஸ்வரனை யோகம் முன்வைக்கிறது.
இந்த ஈஸ்வரனை, விசேஷ புருஷன் என்கிறது யோகம். யோக சூத்திரத்தின் சமாதி பாதத்தில் இடம்பெற்றுள்ள 24-வது ஸ்லோகம் ஈஸ்வரன் பற்றி இவ்விதம் குறிப்பிடுகிறது – க்லேஷ கர்ம விபாகஷயைஹ் (அ)பராம்ருஷ்டஹ் புருஷவிசேஷ ஈஸ்வரஹ். இதன் பொருளை ஆராய்வோம். சிறப்புத் தன்மை கொண்ட ஆன்மாவே, விசேஷ புருஷனே ஈஸ்வரன் (இறைவன்). அது என்ன சிறப்புத் தன்மை? ஒருவருடைய கிலேசங்கள் எனப்படும் தடைகள், கர்மங்கள் எனப்படும் வினைகள், விபாக எனப்படும் பலன்கள், ஆஷய எனப்படும் மனவிருப்பங்கள் ஆகியவற்றால் எவ்வித பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல் இருக்கின்ற (அபராம்ருஷ்ட) தன்மையாகிய சிறப்புத்தன்மை கொண்டவரே ஈஸ்வரன்.
இந்தவகையில், பிரகிருதி மாறுபாடுகளால் எவ்வித மாறுபாடுகளையும் அடையாத இயல்பைக் கொண்டதும், வினைச் செயல்களாலோ அதன் பலன்களாலோ பாதிக்கப்படாததும், விருப்பு-வெறுப்பற்ற பரமானந்தத்தில் திளைப்பதும், எங்கும் நிறைந்ததும், ஞானமும் நன்மையும் பூண்டதுமான விசேஷ புருஷனே ஈஸ்வரன் என்று விளக்கமளிக்கிறது யோக சூத்திரம். எங்கும் நிறைந்துள்ள இந்த ஈஸ்வரன், ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்து அவரவர் ஆன்ம விடுதலைக்கு உதவுகிறார், தூண்டுகிறார், வழிகாட்டுகிறார். இந்த ஈஸ்வரன் ஒருவரே (ஒன்றே) என்றபோதிலும், அவரவர் ஆன்ம வேட்கைக்குத் தகுந்தபடி தனித்தவராக விளங்குகிறார். புருஷனின் முக்திக்காக, பிரகிருதியை நெறிமுறைப்படுத்துபவராக இந்த விசேஷ புருஷன் விளங்குகிறார்.
ஆரம்ப கால யோக ஆசார்யர்கள், ஈஸ்வரனுடன் ஆன்மா (புருஷன்) ஒன்றிணைவதே முக்தி என்று கூறவில்லை. அது பிற்காலத்தில் எழுந்த விளக்கம். பிரகிருதியில் இருந்து தான் வேறுபட்ட ஒன்று என்பதை புருஷனுக்கு உணர்த்தி, முக்திக்கு வழிகாட்டுபவர் ஈஸ்வரன் என்பதே தொடக்க கால விளக்கம். ஈஸ்வரன், ‘இந்த பிடித்துக்கொள்’ என்று முக்தியை நமக்கு பிரசாதமாக வழங்குபவர் அல்லர். மாறாக, நமது முயற்சிகளின் மூலம் முக்தியை அடைய நமக்கு வழிகாட்டுபவர். நமது விடுதலைக்கு நாமேதான் முயற்சி எடுக்க வேண்டும், செயல்பட வேண்டும். அவ்வாறான முயற்சிகளையும், பயிற்சிகளையுமே யோக சூத்திரம் விவரிக்கிறது.
சாங்கிய தரிசனத்தின்படி, பிரகிருதியில் இருந்து புருஷன் வேறுபட்டது என்ற ஞானம் பிறந்தவுடன், முக்திக்கான விதை ஊன்றப்படுகிறது. காலப்போக்கில், புருஷன் முக்தி அடைகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், சாங்கியத்தில் இருந்து கிளைத்த யோகம், இதில் இருந்து சற்று மாறுபாடுகிறது. ஞானம் ஏற்பட்டால் மட்டும் போதாது; உடலுக்கும் மனத்துக்கும் உரிய பயிற்சிகள் அளிப்பதன் மூலமே முக்தி சாத்தியமாகும் என்கிறது. அவ்வாறான பயிற்சிகள்தான் யோகம். இந்த யோகத்தின் அடிப்படை, சித்த விருத்தி நிரோதம் - அதாவது பல்கிப் பெருகும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது. ஒருவன் தனக்குள்ளே இருக்கும் பிரகிருதியைக் கட்டுப்படுத்தி, முறைப்படுத்துவதன் மூலம் அபரிமித ஆற்றலாகிய சித்திகளையும், இறுதி இலக்காகிய முக்தியையும் பெற முடியும் என்கிறது யோகம். ‘யோகஸ் சித்த வ்ருத்தி நிரோதம்’ என்ற சூத்திரத்துக்கு, மன வஸ்துவான சித்தம், பல்வேறு வடிவங்கள் எடுப்பதை (விருத்தி அடைவதை) தடுப்பதே (நிரோதம்) யோகம் என்று சிறந்த விளக்கம் அளித்துள்ளார் சுவாமி விவேகானந்தர்.
பிரகிருதியில் (பேரியற்கையில்) இருந்து உருவாகும் புத்தி, அகங்காரம், மனம் ஆகியவற்றை வெவ்வேறு உறுப்புகளாக சாங்கியம் கூறுகிறது. ஆனால், இது மூன்றையும் இணைத்து சித்தம் என்ற ஒற்றை உறுப்பாக யோகம் கருதுகிறது. ஒழுக்கம், கட்டுப்பாடு (பயிற்சிகள்), தியானம் ஆகியவற்றின் மூலம் இந்த சித்தத்தைக் கட்டுப்படுத்தி முக்தி அடையலாம் என்கிறது யோகம்.
சித்தம் என்பது சத்வம் (ஒளி), ரஜஸ் (துடிப்பு), தமஸ் (இருள்) ஆகிய முக்குணங்களைக் கொண்டது. இந்த சித்தம் சுய அறிவற்றது. புருஷனின் (ஆன்மாவின்) தொடர்பால், புருஷனுடைய அறிவின் பிரதிபலிப்பால் அறிவுபெற்றதாகத் திகழ்கிறது. (ஆகையால்தான், சூரியனோடு அறிவும், சந்திரனோடு மனமும் ஒப்புமை கூறப்படுகிறது). வெளியைப்போல (ஆகாயத்தைப்போல) சித்தம் எங்கும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு புருஷனுடனும் கொண்டுள்ள தொடர்பால், அதற்குரிய சித்தமாக அது உருவாகிறது. இவ்வாறாக சித்தம் சுருங்கி, விரிவடையும் தன்மையைக் கொண்டுள்ளது. (உலகின் தொடக்கத்துக்குக் காரணமான ஒலி அலைகளைப்போல).
மேலும், கர்மவினைப் பயன்களின்படி ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கின்ற உயிரின வடிவங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு புருஷனின் தனிப்பட்ட சித்தமும், சுருங்கி விரிவடைகிறது. உதாரணத்துக்கு, எறும்பாக பிறக்கையில் மிகவும் சுருங்கியிருக்கும் சித்தம், மனிதனாகப் பிறக்கையில் மிகவும் விரிவடைந்து காணப்படுகிறது. இவ்வாறாக சுருங்கி, விரியும் சித்தத்துக்கு காரிய சித்தம் என்று பெயர். இதற்கு மாறாக, எங்கும் நிறைந்துள்ள சித்தம், காரண சித்தம் ஆகும். காரிய சித்தங்களில் உழலும்போது, புருஷன் பிறவிச் சுழலில் சிக்கிக்கொள்கிறது. இதை நிறுத்த, குறிப்பிட்ட கூட்டுக்குள் அடைப்பட்டு சுருங்கி, விரியும் சித்தத்தை, எங்கும் பரந்துள்ள, மாறாத்தன்மையுடைய காரண சித்தமாக மாற்ற வேண்டும். இதுதான் சித்த விருத்தி நிரோதம் – சித்தங்கள் விருத்தி அடைவதை நிறுத்துதல்.
இதுதொடர்பான மேலும் சில விளங்கங்களை அடுத்த வாரம் காண்போம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.