தத்துவ தரிசனம்

19. புருஷனும் முக்தியும்

பொதுவாக, பாரதீய தத்துவங்களில் ஆன்மா என்று அழைப்பதைத்தான் சாங்கியம் புருஷன் என்கிறது.

பத்மன்

பொதுவாக, பாரதீய தத்துவங்களில் ஆன்மா என்று அழைப்பதைத்தான் சாங்கியம் புருஷன் என்கிறது. இந்தப் புருஷன் உடலோ, உடலின் சேர்க்கையால் உருவாவதோ, புத்தியோ, மனமோ அல்ல. இவையெல்லாம் இயற்கையாகிய பிரகிருதியின் வெளிப்பாடுகள். இவற்றில் இருந்து வேறுபட்ட ஒன்றே புருஷன். பிரகிருதி மூலமான அனுபவத்தைப் பெறுகின்றது எதுவோ அதுவே புருஷன்.

இத்தகு புருஷன் எனப்படும் ஆன்மா ஒன்றல்ல, பல என்று சாங்கியம் கூறுகிறது. அதேநேரத்தில், பரமாத்மா எனப்படும் ஆண்டவனை சாங்கியம் ஏற்கவில்லை. எனினும், சாங்கியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான யோக தரிசனம், பரமாத்மாவை ஈஸ்வரன் என்று கூறி 26-வது தத்துவமாக ஏற்றுக்கொள்கிறது. ஐஸ்வர்ய ரூபமான (பொருள் மயமான) பிரகிருதியை நிர்வகிக்கும் ஆற்றலாக இறைவனை யோக தரிசனம் வர்ணிக்கிறது. ஆனால், இயற்கையாகிய பிரகிருதியும் அதன் தொடர்பு மூலமான அனுபவங்களைப் பெறும் தனிப்பட்ட ஆன்மாக்களும் அடிப்படை உண்மைகளாக இருக்க, ஆண்டவன் என்ற ஒன்று அவசியம் இல்லை என்கிறது சாங்கியம். ஆகையால், சாங்கியம் நிரீஸ்வர சாங்கியம், அதாவது ஆண்டவன் இல்லாத சாங்கியம் என்றும், யோகம் சேஸ்வர சாங்கியம் (ச ஈஸ்வர சாங்கியம்), அதாவது ஆண்டனுடன் கூடிய சாங்கியம் (ச என்றால் உடன் என்று பொருள்) என்றும் அழைக்கப்படுகின்றன.

சாங்கியம் கூறுகின்ற முக்தி, ஆண்டவனைப் புகழ்ந்து பாடி அவரது பாதாரவிந்தத்தை அடைவதாகவோ அல்லது பரமாத்மாவின் ஒரு பகுதிதான் நாம் என்பதைக் கருதி அகங்காரத்தை அடக்குவதாகவோ குறிப்பிடப்படவில்லை. பொருள்மயமான உடல் வேறு, அதன் மூலமான அனுபவத்தை அடைகின்ற அறிவு வேறு என்று பகுத்தறியும் ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்று, மீண்டும் பிறக்க நேர்வதைத் தவிர்ப்பதே முக்தி என்கிறது. அதாவது, ஆன்றவிந்து அடங்குவதே முக்தி. மகாகவி பாரதி, இதனைத்தான் சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ; பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ என்று வினவினார் போலும். தாம் சிவம் (புருஷன்) என்கிற தூய அறிவை அடைவதே முக்தி நிலை என்பதுதான் சுருதிகளின் (வேதங்களின்) கருத்து என்றும், அத்தகு நிலையை அடைந்தவர்கள்தான் சித்தர்கள் என்றும் கருதப்படும் பண்டைய மரபைத்தான் பாரதி இங்கே குறிப்பிடுகிறார். இது சாங்கிய தத்துவத்தின் விளைவாகும். இதன் நீட்சியாகத்தான், யோகிகளின் தலைவராக பரமேஸ்வரனை யோக தரிசனம் உருவகப்படுத்துகிறது. ஆக, விஷயங்கள் குறித்த விசாரணையால் (தத்துவ விசாரணையால்) அதில் ஏற்படும் ஞானத் தெளிவின் மூலம் முக்தி கிடைப்பதாக சாங்கியம் கூறுகிறது.

புருஷன், பிரகிருதியோடு தொடர்புகொள்ளப் பயன்படுவது மஹத் எனப்படும் புத்தியாகும். இந்த மஹத், பேரியற்கையாக இருப்பதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு புருஷனுக்காகவும் தனிப்பட்ட புத்தியாகவும் செயல்படுகிறது. விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவே, புத்தியும் அதனுடைய வெளிப்பாடுகளான உறுப்புகளும் செயல்படுகின்றன. இவை உட்கருவிகளாகவும், புறக்கருவிகளாவும் உள்ளன. இவை விளக்குகள்போல இருந்து, நடுவனாகிய புருஷன் அறிந்துகொள்வதற்காக விஷயங்களை ஒளிர்வித்து புத்தியிடம் வழங்குகின்றன. புத்தியின் மூலம் புருஷன் விஷயங்களை அறிந்துகொள்கிறது. அந்தப் புத்தியின் மூலமே முக்திக்கான வழிவகையையும் புருஷன் தெரிந்துகொண்டு முக்தியில் நிலைபெறுகிறது.

முக்தி (விடுதலை) என்பது உண்மையில் என்ன... எந்தவிதத் தளைகளும் இல்லாமல் சுதந்தரமாக இருப்பது முக்தி. புருஷன் உண்மையில் சுதந்தரமயமானதுதான். ஆனால், பிரகிருதியுடனான சேர்க்கை காரணமாக அதுதான் உடல் என்று மயங்கி, கர்மவினைளுக்கு ஆட்படுகிறது. இந்த வினைப் பயன்களை அனுபவிப்பதற்காகப் பல பிறவிகள் ஏற்படுகின்றன. இவ்வாறு கர்மவினைப் பயன்களால் ஏற்படுவது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுடலாகும். ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஒரு பிறவியில் ஏற்படுகின்ற பருவுடல் எனப்படும் பூத உடல் அந்தப் பிறவியோடு அழிந்துவிடுகிறது. ஆனால், கர்மவினைகளால் ஆன நுண்ணுடல் தொடர்கிறது.

புருஷனுக்கு ஏற்படும் பிறவிச் சுழலின் ஊடகமாக விளங்கும் இந்த நுண்ணுடல்கள் எவ்வளவு ஏற்படும் என்பதற்கு ஓர் அளவு இல்லை. அது அவரவர் கர்மவினைகளைப் பொருத்தது. அது, முக்தி அடைகிறவரைக்கும் நிலையானது. பெரிய உயிரினங்கள் தொடங்கி நுண்ணிய பூச்சிகள் வரையான அனைத்து உயிரின வகைகளிலும், புருஷனுக்கு ஏற்படும் பிறவிச் சுழல்தோறும் இந்த நுண்ணுடல் தொடர்ந்து வந்து, அந்தந்தப் பிறவிகளின் வாசனையைச் சேர்த்துக்கொண்டு, அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. படம் ஒன்றை வரைவதற்குப் பலகை அல்லது காகிதம் போன்ற ஒன்று தேவைப்படுவதைப்போல, நிழல் விழுவதற்கு நிலம் தேவைப்படுவதைப்போல, அதிநுட்பமான புருஷனுக்கு ஆதாரமாக (புருஷனை தாங்கிப் பிடிப்பதைப்போல) நுண்ணுடல் விளங்குகிறது.

இயற்கையின் பேராற்றலில் உள்ள தன்மையினால், முந்தைய கர்மவினை என்ற வித்து (விதை) காரணமாக அதன் விளைவுகளை அனுபவிப்பதற்காகப் புதுப் புதுப் பிறவிகளை, ஒரு கைதேர்ந்த நடிகன் போடும் பல்வேறு வேடங்களைப்போல, நுண்ணுடல் எடுப்பது இதன் சாட்சியாக விளங்கும் புருஷனுக்காகவே. புண்ணியம், ஞானம், பற்றின்மை, ஆற்றல் (சித்திகள் போன்றவை) ஆகிய நான்கும் நுண்ணுடலுக்கு நல் அணிகலன்கள் போன்றவை. இந்நான்கும், ஒரு நுண்ணுடலுக்கு முந்தைய பிறவிப் பயன் காரணமாக இயற்கையாகவோ அல்லது அந்தப் பிறவியில் மேற்கொள்ளும் கடும் முயற்சிகள் காரணமாகவோ அமையப்பெறுகின்றன. இந்த நான்குக்கும் எதிர்மறையானவை பாவம், அறியாமை, பற்று, பலவீனம் ஆகியவை. இவை யாவும் புத்தியில் உறைகின்றன.

நல்வினை காரணமாக சொர்க்க போகத்தை அனுபவிக்கும் உயர் பிறப்புகளும், தீவினை காரணமாக நரக வேதனையை அனுபவிக்கும் கீழ் பிறப்புகளும் தோன்றுகின்றன. புருஷனுக்குப் பகுத்தறிந்து பார்க்கும் ஞானம் ஏற்படுகின்ற வரையில், பிரகிருதி இதுபோன்ற அனுபவங்களைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும். புண்ணிய பலன்களால் சொர்க்க போகத்தை அனுபவிப்பது, புருஷனுக்கு முக்தியைத் தராது. இந்தப் பாவ-புண்ணிய பலன்களைக் கடந்து நிற்கும் பக்குவத்தாலேயே அது சாத்தியமாகிறது. இந்த ஞானத்தை அடைகின்றவரையில், பிறவிச் சுழல் என்ற கட்டு (பிணைப்பு) தொடரும்.

இதனை, சாங்கிய காரிகையின் 44-வது ஸ்லோகம் (செய்யுள்) இவ்வாறு கூறுகிறது –

தர்மேண கமனம்ஊர்த்வம் கமனம்அதஸ்தாத் பவேத்அதர்மேண
க்ஞானேன சஅபவர்கோ விபர்யயாதிஇஷ்யதே பந்தஹ்

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு -

நல்வினையால் ஏறுமுகம் தீவினையால் இறங்குமுகம்
ஞானத்தால் விடுதலை அறியாமையால் பிணைப்பு.

புருஷன் என்பது பிரகிருதியோடு சம்பந்தப்பட்டது அல்ல என்ற முழுமையாகப் பகுத்தறிந்து பார்க்கும் ஞானம் வந்தால்தான் நிரந்தரமான விடுதலை சாத்தியமாகும். இதனை அறிந்துகொண்டால் மட்டும் போதாது; தியானம் முதலிய பயிற்சிகள் மூலம் புருஷன் குறித்த ஞானத்தை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். புருஷன் (ஆன்மா) பற்றிய தெளிவான ஞானம் இல்லாத தவறான அறிவும் ஒருவிதத்தில் அறியாமையே. இதனால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிறக்க நேரிடும் நிலை தோன்றுகிறது. இதனை, சாங்கிய காரிகையின் தத்துவ கௌமுதி கீழ்க்காணும் வகையில் விளக்குகிறது.

தவறான அறிவின் மூலமும் பந்தம் (பிணைப்பு) ஏற்படுகிறது. இது மூன்று வகைப்படும். பிராகிருதிகஹ், வைக்ருதிகஹ் மற்றும் தாக்ஷணிக. பிராகிருதிகஹ் என்பது பிரகிருதி எனப்படும் இயற்கையோடு தொடர்புடையது. புண்ணியம், ஞானம், பற்றின்மை, ஆற்றல் ஆகியவை இருந்தும் புருஷன் (ஆன்மா) குறித்த பெரு விழிப்பு இன்றி, பிரகிருதியே அனைத்தும் என்று மயங்குவதால், பிராகிருதிக பந்தம் ஏற்படுகிறது. இந்தப் பந்தம் ஏற்பட்டவர்கள், மரணத்தின்போது பிரகிருதியுடன் கலந்துவிடுகிறார்கள். இவர்கள் பிரகிருதி லயர்கள், அதாவது பிரகிருதியில் லயம் அடைபவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவ்யக்தம் எனப்படும் வெளிப்படாத மூலப் பிரகிருதியில் லயம் அடையும் இவர்கள், ஒரு லட்சம் மன்வந்தர ஆண்டுகள் வரை அங்கேயே உறைந்திருந்து பிறகு மீண்டும் பிறப்பு எடுக்கிறார்கள். இந்தப் பிரகிருதி லயர்கள், இயற்கையில் கட்டுண்டவர்கள்.

(மன்வந்தரம் என்பதற்கு மனுவின் ஆயுட்காலம் என்று பொருள். ஒரு மன்வந்தரம் என்பது மனித ஆண்டுகளில் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம். அதேசமயம், இந்த மன்வந்தரம், பிரும்மாவின் ஒரு தினத்தில் 14-ல் ஒரு பங்காகும். அதாவது, 14 மன்வந்தரங்கள், பிரம்மாவுக்கு ஒரு நாளாகும்).

இதேபோல், பிரகிருதி எனப்படும் மூல இயற்கையில் இருந்து தோன்றிய உணர்வுக் கருவிகள், மூலக்கூறுகள் (ஐந்து தன்மாத்திரைகள்), அகங்காரம், புத்தி ஆகிய வெளிப்பாடுகள்தான் புருஷன் (ஆன்மா) என்று மயங்குவதால், வைக்ருதிக பந்தம் ஏற்படுகிறது. கண், காது, மூக்கு உள்ளிட்ட உணர்வுக் கருவிகள்தான் ஆன்மா என்று மயங்குபவர்களுக்குப் பிறவிச் சுழலில் இருந்து கிடைக்கிற முக்தி, 10 மன்வந்தரங்கள் வரைதான். அதற்குப் பின்னர் அவர்கள் நிரந்தர விடுதலை பெற, மீண்டும் பிறப்பு எடுத்தாக வேண்டும். இதேபோல், தன்மாத்திரைகளில் பந்தப்பட்டவர்கள், 100 மன்வந்தரங்களும்; அகங்காரத்தில் பந்தப்பட்டவர்கள், ஆயிரம் மன்வந்தரங்களும்; புத்தி எனப்படும் மஹத்தில் பந்தப்பட்டவர்கள், பத்தாயிரம் மன்வந்தரங்களும், அங்கங்கே லயித்து (உறைந்து) பின்னர் மீண்டும் பிறப்பு எடுக்கின்றனர். இதுபோன்ற வைக்ருதிக பந்தம் உடையவர்கள் (வெளிப்பாடுகளில் கட்டுண்டவர்கள்) விதேஹர்கள் எனப்படுகின்றனர்.

மூன்றாவதாக உள்ள கட்டு, தாக்ஷணிக பந்தம். இது தற்சார்புடையது. புருஷ தத்துவத்தை அறிந்துகொள்ளாமல் (புருஷனைப் பற்றிய தெளிவான ஞானம் இல்லாமல்) தனது நன்மை கருதியோ, புண்ணிய பலன்கள் கருதியோ அறச் செயல்களைச் செய்பவர்களும், தனது விருப்பங்களை நிறைவு செய்வதற்காக (இஷ்டிபூர்த்த) பல்வேறு வேள்விச் சடங்குகளைச் செய்பவர்களும் தாக்ஷணிக பந்தத்தில் கட்டுண்டவர்கள் ஆகின்றனர். இவர்கள் தங்களது செயல்களின் பலன்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட காலம் வரை மேலுலகத்தில் இருந்துவிட்டு, மீண்டும் பிறவிச் சுழலில் அகப்படுகிறார்கள்.

புருஷன் குறித்த தெளிந்த ஞானம் இல்லாவிடினும், பற்றின்மை என்ற வைராக்கியத்தை (உறுதியை) கைகொள்பவர்கள், ஏற்கெனவே கூறியபடி பிரகிருதியில் குறிப்பிட்ட காலம் வரை உள்ளிழுக்கப்படுகின்றனர். அதாவது, குறிப்பிட்ட காலம்வரை பிரகிருதியில் லயம் அடைகிறார்கள். ரஜோ குணத்தால் ஏற்படும் விருப்பத்தில் (உணர்ச்சிகளில்) கட்டுண்டு கிடப்பதால், சம்சாரம் என்ற பிறவிச் சுழல் ஏற்படுகிறது. ஆற்றல் காரணமாக, நினைத்ததை நிறைவேற்றும் தன்மை கிடைக்கிறது. ஆற்றலின்மையால், நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகின்ற நிலைமை ஏற்படுகிறது.

இதனை, சாங்கிய காரிகையின் 45-வது ஸ்லோகம் இவ்விதம் கூறுகிறது -

வைராக்யாத் ப்ரகிருதிலயஹ் ஸம்ஸாரோ பவதி ராஜஸாத்ராகாத்
ஐஸ்வர்யாத்அவிகாதோ விபர்யயாத்தத்விபர்யாஸஹ்

(அறுத்தலால் உள்ளிழுப்பு ஆசைகளால் பிறவிச்சுழல்
ஆற்றலால் நிறைவேற்றம் இன்மையால் தடுமாற்றம்)

அறியாமை எனப்படும் தவறான அறிவு எத்தகையது? அதனைக் கடந்து அடைகின்ற உண்மையான முக்தி எது? என்பதை சாங்கிய காரிகை விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.

அதுபற்றி அடுத்த வாரம் காண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT