தத்துவ தரிசனம்

29. சித்தத்தைக் கட்டு; வழிமுறைகள் எட்டு

யோகம் என்பது, உடலுக்கும் மனத்துக்கும் முறையான பயிற்சிகளை அளித்துக் கட்டுப்படுத்துவது. ஆனால், இந்த யோகப் பயிற்சிகளுக்கு 9 விதமான இடையூறுகள் ஏற்படுவதாக யோக சூத்திரத்தில் பதஞ்சலி குறிப்பிடுகிறார். இந்த இடையூறுகளுக்கு அந்தராயங்கள் என்று பெயர்.

பத்மன்

சித்தம் என்பது எண்ணம், உணர்ச்சி. இது புலனுக்கு அகப்படாத உட்கருவி (அந்தகரணம்). கண்கள், காதுகள் உள்ளிட்ட உணர்வுக் கருவிகள் (இந்திரியங்கள்) மூலம் உணரப்படும் பொருள்களால், இந்த உட்கருவியில் எண்ண அலைகளும், உணர்ச்சி அலைகளும் உருவாகின்றன. இதுதான் சித்த விருத்தி. இந்தச் சித்த விருத்தி, அதாவது எண்ணப் பெருக்கம் என்பது உண்மையில் எண்ணிலடங்காதது. இருப்பினும், யோகம் அதனை 5 ஆக வகைப்படுத்தியுள்ளது.

பிரமாணம், விபர்யயம், விகல்பம், நித்ரா மற்றும் ஸ்மிருதி என்பதே அந்த 5 வகைப்பாடுகள். பிரமாணம் என்பது மெய்யறிவுக்கான வழிமுறை. பிரத்யட்சம் (நேரடியாக அறிதல்), அனுமானம் (ஊகித்தல்), ஆகமம் (நம்பத்தகுந்தவர்களின் மற்றும் வேதம் போன்ற நம்பத்தகுந்தவற்றின் வாக்கியங்கள்) ஆகிய மூன்றுமே உண்மையான அறிவுக்கான வழிமுறைகள். விபர்யயம் என்பது தவறான அறிவு. அரை இருட்டில் கயிற்றை பாம்பு எனக் கருதுவதைப் போன்றது இது.

விகல்பம் என்பது ஒரு வார்த்தையைக் கேட்டதும், நமது மனத்தில் அது குறித்து எழுகின்ற சித்திரம். நித்ரா என்பது தூக்கம். நாம் துயிலும்போது, முடக்கத்தின் (தமஸ்) ஆதிக்கத்தில் மனத்தில் சில மாறுபாடுகள் எழும். ஸ்மிருதி என்பது முந்தைய அனுபவம் குறித்த நினைவு.

ஒவ்வொரு முறை சித்தம் மாற்றம் அடையும்போதும், குறிப்பிட்ட விளைவுகளை அது ஏற்படுத்துகிறது. அவையே ஆசைகளையும், உணர்ச்சிகளையும் எழுப்புகின்றன. இந்தச் சித்த விருத்திகள், ஐந்துவித காரணங்களால் புருஷனுக்கு கிலேசத்தை, அதாவது பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவை - அவித்யா (அறியாமை), அஸ்மிதா (அகந்தை), ராகம் (விருப்பு), துவேஷம் (வெறுப்பு), அபினிவேஷம் (குருட்டுத்தனமான உணர்வு). ஒரு தவறான விஷயத்தை சரியெனக் கருதுதல் அறியாமை. தன்னுணர்வு மிகுதியால் உடலையும் மனத்தையும் ஒன்றெனக் கருதி மயங்குதல் அகந்தை. பிடித்தமான விஷயங்களில் ஏற்படும் பற்றுதலே விருப்பு. பிடிக்காத விஷயங்களில் தோன்றும் ஈடுபாடின்மையே வெறுப்பு. வாழ்க்கையின் மீது காரணம் தெரியாத ஆசையும், மரணத்தின் மீது இனம்புரியாத அச்சமும் ஏற்படுகிறதே இதுதான் குருட்டுத்தனமான உணர்வு.

இவ்வாறாக, புருஷனுக்கு (ஆன்மாவுக்கு) இந்த ஐவகை பாதிப்புகளை ஏற்படுத்தும் சித்த விருத்திகளுக்கு க்லிஸ்த என்று பெயர். இந்த ஐவகைப் பாதிப்புகளில் இருந்தும் புருஷன் விடுபட அவையே உதவும்பட்சத்தில், அதற்கு அக்லிஸ்த என்று பெயர். எவை நமக்குத் துன்பம் அல்லது பாதிப்பைத் தருகின்றனவோ அவற்றைப் பற்றி தீவிரமாக ஆராயும்போது, அவையே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளையும், வழிமுறைகளையும் நமக்கு உணர்த்தி உதவுகின்றன. நமக்குப் பாதிப்புகளைத் தருகின்ற கிருமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து, அவற்றுக்கான மருந்துகளைக் கண்டறிவதைப் போன்றதுதான் சித்த விருத்திகள் குறித்த ஆய்வும்.

யோக தரிசன முறையிலான ஆய்வில், சித்தம் 5 வகை நிலைகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவை – க்ஷிப்த (கொந்தளிப்பு), மூட (மந்தம்), விக்ஸிப்த (குழப்பம்), ஏகாக்ர (ஒருமித்தல்), நிருத்த (நிறுத்தம்). முதல் மூன்று நிலைகளிலும் மனம், ரஜோ குணத்திலும், தமோ குணத்திலும் இருப்பதால், அதாவது உணர்ச்சி மிகுந்தும் அல்லது முடங்கியும் கிடப்பதால், அந்த நிலைகளில் யோகம் சாத்தியமாகாது. சத்வ குணத்தின்பாற்பட்ட ஒருமுனைப்பு, அதன் இறுதியில் கிட்டும் முழுமையான கட்டுப்பாடு ஆகிய இரு நிலைகளில்தான் யோகம் கைகூடும். ஏகாக்ர சிந்தனையின் மூலம், அதாவது குறிப்பிட்ட ஓர் இலக்கைக் குறித்த சஞ்சலமற்ற, தெளிவான, ஒருமித்த சிந்தனை மூலம், சம்பிரக்ஞாத சமாதி (தூயமுனைப்பிலான ஆழ்தல்) என்ற நிலை சாத்தியமாகிறது. இதையே தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, நிறைவாக, எவ்வித சித்த விருத்திகளும், எண்ண மாறுபாடுகளும் ஏற்படாத, அனைத்து எண்ணங்களும் நிறுத்தப்பட்ட அசம்பிரக்ஞாத சமாதி (முனைப்பைக் கடந்த ஆழ்தல்) நிலை அடையப்பெறுகிறது. இந்தச் சமாதி நிலையில், எந்தவொரு இலக்கின் மீதும் சிந்தனை குவியாத, அதனைத் தாண்டி, ஆன்மா (புருஷன்) தனது சுய இருப்பில் லயிக்கின்ற பரமானந்தம் கிட்டுகிறது. இதன்மூலம், பிரகிருதியின் தளைகளில் இருந்து முற்றிலும் விடுதலை அடைகின்ற முக்தனாக புருஷன் உயர்கிறது.

யோகம் என்பது, உடலுக்கும் மனத்துக்கும் முறையான பயிற்சிகளை அளித்துக் கட்டுப்படுத்துவது. ஆனால், இந்த யோகப் பயிற்சிகளுக்கு 9 விதமான இடையூறுகள் ஏற்படுவதாக யோக சூத்திரத்தில் பதஞ்சலி குறிப்பிடுகிறார். இந்த இடையூறுகளுக்கு அந்தராயங்கள் என்று பெயர். அவை – வியாதி (காய்ச்சல்), ஸ்த்யான (வெறுமை அல்லது பிடிப்பின்மை), சம்சய (சந்தேகம்), ப்ரமாத (கவனமின்மை), ஆலஸ்ய (சோம்பல்), அவிரதி (உறுதியின்மை), பிராந்திதர்சன (தவறான கருத்து), அலப்தபூமிகத்வ (யோக நிலைகளை அடையத் தவறுதல்) மற்றும் அனவஸ்திதத்வ (குறிப்பிட்ட நிலையில் நிலைபெறாமல் போகுதல்).

மருத்துவத்தின் மூலம் வியாதியைக் குணப்படுத்தலாம். தன்னம்பிக்கையின் மூலம் வெறுமையை தவிர்க்கலாம். குரு மற்றும் தத்துவ நூல்களில் நம்பிக்கை கொள்வதன் மூலம் சந்தேகத்தைப் போக்கலாம். விழிப்புணர்வின் மூலம் கவனமின்மையை சரிசெய்யலாம். சுறுசுறுப்பான செயல்பாடுகளின் மூலம் சோம்பலை விரட்டலாம். பகுத்தறிவாலும் (விவேகம்), பற்றின்மையாலும் (வைராக்யம்) உறுதியின்மையை முறியடிக்கலாம். அதேநேரத்தில், தவறான கருத்து, யோக நிலைகளை அடையத் தவறுதல், குறிப்பிட்ட நிலையில் நிலைபெறாமல் போகுதல் ஆகிய கடைசி மூன்று இடையூறுகளையும் தகுந்த குருவின் அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி நடப்பதன் மூலம் வெற்றி கொள்ளலாம்.

இவைதவிர, மனத்துக்கு மேலும் 5 விதமான தடைகளும் ஏற்படலாம் என்று யோக சூத்திரம் கூறுகிறது. துக்கம் (வருத்தம்), தௌர்மனஸ்ய (சலிப்பு), அங்கமேஜயத்வ (உடல் உறுப்புகளில் ஏற்படும் அசதி), ஸ்வாஸ மற்றும் ப்ரஸ்வாஸ (மூச்சிழுப்பு மற்றும் வெளியேற்றுதலில் ஏற்படும் கோளாறுகள்) என்பவையே அந்த 5 வகைத் தடைகள். இவற்றையும், அவற்றுக்குரிய தீர்வுகள் மூலம் கடக்கலாம்.

யோகப் பயிற்சியில் ஈடுபடும் சாதகன், இடையூறுகளைக் கடந்து சாதனை படைக்க சில ஆலோசனைகளைப் பதஞ்சலி கூறுகிறார். அவற்றில் முக்கியமான முதலிரண்டு விஷயங்கள் – வைராக்யம் (உறுதி) மற்றும் அப்யாஸம் (இடைவிடா பயிற்சி). புலன்களின்பால் மனம் அலைபாய்வதை வைராக்கியத்தின் மூலம் தடுத்துக் கட்டுப்படுத்த முடியும். இடைவிடாத பயிற்சியின் மூலம் ஆத்மனை அறிந்துகொள்ள முடியும்.

இவைபோக, யோகம் கைகூட மேலும் சில ஆலோசனைகளையும் பதஞ்சலி முனிவர் வழங்கியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கும் நபர்களைப் பார்த்து பொறாமைகொள்ளாமல், அவர்களுடன் நட்பு பூண வேண்டும். இதனை மைத்ரீ என்று பதஞ்சலி குறிப்பிடுகிறார். துயரப்படுபவர்கள் மீது இரக்கம் (கருணா) கொள்ள வேண்டும். சுவாசப் பயிற்சியின் மூலம் பிராண ஆற்றலை வளர்த்தல்; தனது இதயத்தின் மத்தியில் ஒளியை தியானித்தல்; மிகச் சிறந்த மனிதர்களை, மகான்களைப் பற்றிச் சிந்தித்தல்; உயர்வான கனவுகள் அல்லது நினைப்புகளை திரும்பத் திரும்ப நினைவுகூர்தல்; கடவுளர்களின் (தேவ-தேவியர்கள்) வடிவங்கள் அல்லது நிலா, கோள்கள், நட்சத்திரங்கள் அல்லது தனது உடலுக்குள் உள்ள மனம் சார்ந்த மையங்கள் ஆகியவற்றை தொடர்ந்து நினைத்தல்; மேற்கூறிய வழிமுறைகள் மூலமும் ஒருவர் மனத்தை அமைதிப்படுத்தவும், சிறப்பாகக் கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறார் பதஞ்சலி.

இவ்வாறாக, சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இறுதி இலக்காகிய முக்தியை எட்டுவதற்கு எட்டுவித வழிமுறைகளையும் பதஞ்சலி வகுத்தளித்துள்ளார். அதற்கு அஷ்டாங்க மார்க்கம் என்று பெயர்.

புருஷன் எனப்படும் ஜீவாத்மாவானது, உடல்-மனத்தால் உருவான கலவை மீது தேவையற்ற பற்றுதல் வைத்திருப்பதன் காரணமாகவே அது சம்சார சாகரத்தில் கட்டுண்டு கிடக்கிறது. உடல், மனம் ஆகிய இரண்டுமே பிரகிருதியின் (பேரியற்கையின்) உருவாக்கங்கள். பிரகிருதியின் பிடியில் இருந்து புருஷனைப் பிரிப்பதே யோகத்தின் அடிப்படை நோக்கம். இவ்வாறு பிரிப்பதற்கு வியோகம் என்று பெயர். யோகம் என்றால் இணைத்தல், வியோகம் என்பது பிரித்தல். உடல்-மனக் கூட்டில் இருந்துதான் வேறான ஒன்று என்ற பிரித்தறியும் ஞானம் புருஷனுக்கு ஏற்படுவதன் மூலமே, தனது உண்மையான இயல்பில் புருஷன் ஒன்றிணைய முடியும். இவ்வாறாக, புருஷனையும் பிரகிருதியையும் பிரித்து அறியும் ஞானத்துக்கு விவேக கியாதி என்று பெயர். விவேகம் என்றால் பகுத்தல் அல்லது பிரித்தறிதல் என்றும், கியாதி என்றால் அறிவு என்றும் பொருள்.

எட்டு படிநிலைகளிலான வழிமுறைகளை (அஷ்டாங்க மார்க்கம்) அடுத்தடுத்து பயிற்சி செய்வதன் மூலம் பகுத்தறியும் ஞானம் கைவரப் பெற்று, முக்தி முகிழ்க்கிறது.

அவை - இயமம் (கட்டுப்பாடு), நியமம் (கடைப்பிடிப்பு), ஆசனம் (அமரும் நிலை), பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), பிரத்யாஹாரம் (நிராகரிப்பு), தாரணை (ஒருமுனைப்படுத்துதல்), தியானம் (உற்றுநோக்கி ஆழ்தல்), சமாதி (முழுமையான உள்ளிழுப்பு). இதில் இயமம் தொடங்கி பிரத்யாஹாரம் வரையான முதல் 5 படிநிலைகளும், பயிற்சிமுறைகளும் பஹிரங்கம் (வெளி வழிமுறை) எனப்படுகின்றன. இறுதியில் உள்ள மூன்று படிநிலைகளும் அந்தரங்கம் (உள் வழிமுறை) எனப்படுகின்றன.

1. இயமம் - முதலில், முதலாவது படிநிலையாகிய இயமத்தைப் பார்ப்போம். இயமம் என்பது ஐவகை கட்டுப்பாடுகளை, விலகியிருத்தலைக் குறிக்கிறது. அவை – அஹிம்ஸா (துன்புறுத்தாமை – பிற உயிர்களைத் துன்புறுத்துவதில் இருந்து விலகியிருத்தல்), சத்ய (உண்மை – பொய் பேசுவதில் இருந்து விலகியிருத்தல்), அஸ்தேய (திருடாமை – திருடுதல், பிறர் பொருட்களைக் கவர்வதில் இருந்து விலகியிருத்தல்), பிரமச்சர்ய (புலனடக்கம் – காம இச்சைகளில் இருந்து விலகியிருத்தல்), அபரிக்ரஹ (ஏற்காமை – பரிசுப் பொருட்களை ஏற்பதில் இருந்தும், உடைமைகள் வைத்திருப்பதில் இருந்தும் விலகியிருத்தல்).

இயமத்தின் முதல் கட்டுப்பாடாகிய அஹிம்சை என்பது வன்முறையைத் தவிர்ப்பது மட்டுமல்ல, பகையுணர்ச்சியை முற்றிலுமாகக் கைவிடுதல், அனைத்து உயிர்கள் மீதும் அன்பு பூணுதல் என்று விரிந்த பொருள் கொள்கிறது. மேலும், உயர்ந்த கோட்பாடான அஹிம்சையில், க்ஷமா (பொறுத்தல்), த்ருதி (அச்சுறுத்தலுக்கு அடிபணியாத உறுதி), தயா (இரக்கம்), ஆர்ஜவ (கர்வமின்மை, போலி கௌரவம் இல்லாமை), மிதாஹாரம் (அளவான உணவு) ஆகியவையும் உள்ளடங்கியிருப்பதாக யோக ஆசார்யர்கள் கூறுகின்றனர்.

2. நியமம் - கடைப்பிடித்தல், அனுசரித்தல் என்பதே நியமம் ஆகும். இவையும் ஐந்தாகும். அவை – சௌசம் (தூய்மை), சந்தோஷம் (மகிழ்ச்சி), தபஸ் (தவம், நோன்பு), ஸ்வாத்யாய (சுய பரிசோதனை, தன்மதிப்பீடு), ஈஸ்வரப்ரணிதான (கடவுளைப் பணிதல்). இதுதவிர, ஆஸ்திக (ஆத்மாவின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை கொள்ளுதல்), தான (கொடை அளித்தல்), ஹ்ரீ (அடக்கம், முந்தைய தவறுகளை ஒப்புக்கொள்ளுதல்), மதி (சிந்தித்தல்), வ்ரத (உறுதியுடன் இருத்தல், வாக்கைக் காப்பாற்றுதல், நோன்பிருத்தல்) ஆகியவையும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நியமங்களாக சில யோக ஆசார்யர்கள் தெரிவிக்கின்றனர்.

3. ஆசனம் - அமரும் நிலைக்கு ஆசனம் என்று பெயர். தியானத்துக்கும், பிராணாயாமத்துக்கும் உரிய வகையில் அமர்தல் முதலில் ஆசனம் என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் ஹட யோக வளர்ச்சிக்குப் பின்னர், பல்வேறு வகையிலான அமரும், நிற்கும், உடலை வளைக்கும் நிலைகளும் ஆசனங்கள் என்று பெயர் பெற்றன.

4. பிராணாயாமம் - பிராண வாயுவை (மூச்சுக் காற்றை) உள்ளிழுத்தலையும், வெளிவிடுதலையும் கட்டுப்படுத்துதல். இடகலை (இடா), சுழுமுனை (சுஷும்ணா), பிங்களை (பிங்ஙள) ஆகிய நாடிகளில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, கட்டுப்படுத்தி, வெளிவிடுதல் மூலமாக பிராண சக்தியைப் பெருக்குதல், மனத்தையும், உடல் உள்ளுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி, வலிமையாக்குதல் பிராணாயாமம் ஆகும்.

5. பிரத்யாஹாரம் - புலன்களின் சலனங்களை நிராகரித்தல், புலன்களால் உணரப்படும் பொருள்களில் இருந்து மனத்தைத் திருப்புதலுக்கு பிரத்யாஹாரம் என்று பெயர். அதாவது, புலன்களை அதனோடு தொடர்புகொள்ளும் பொருள்களின் பேரில் செல்லவிடாமல், மனத்தை அதன் இயல்பிலேயே இருக்கவைத்தல் என்பதாகும். பொருள்களின் மீதான நாட்டத்தைத் தவிர்த்தல், புலனடக்கத்தால் மனத்தை நிலைநிறுத்துதல் பிரத்யாஹாரம் ஆகும்.

6. தாரணை - அந்தரங்க மார்க்கத்தில் முதலாவது படிநிலை தாரணை. குறிப்பிட்ட இலக்கில் மனத்தைக் குவித்து, ஒருமுனைப்படுத்துதல் தாரணை ஆகும்.

7. தியானம் - இடைவிடாது ஒன்றைச் சிந்தித்தல் தியானம் ஆகும். ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்துக்கு எண்ணெய்யை மாற்றும்போது, சிறிதும் பிசிறில்லாமல் அது இடம்பெயர்கிறதல்லவா. அதுபோல, இடைவிடாது ஓர் இலக்கைச் சிந்தித்தல், உற்று நோக்கி ஆழ்தல் தியானம் ஆகும்.

8. சமாதி - ஓர் இலக்கை இடைவிடாது தியானிக்கும்போது, அந்த இலக்கிலேயே முழுமையாக உள்ளிழுக்கப்பட்டு, தனது சுயம் குறித்த நினைப்பே இல்லாமல், இலக்கும் தாமும் இரண்டற்றதாக ஒன்றென மூழ்கும் நிலைக்குச் சமாதி என்று பெயர். அந்தரங்க மார்க்கமாகிய தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்றும் சேர்ந்து சம்யம என்றும் அழைக்கப்படுகிறது.

உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்தும் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையே யோகம். இந்த விஞ்ஞான அணுகுமுறையில் முக்தி என்ற இறுதி இலக்கை எட்டுவதற்கு முன்பு வியத்தகு ஆற்றல்களும் வசமாகின்றன. சித்தி எனப்படும் அந்த வசீகரமான ஆற்றல்கள், ஒருவகையில் முக்திக்கு இடையூறு என்று எச்சரிக்கிறார் பதஞ்சலி.

அதுபற்றி அடுத்த வாரம் காண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT