வேளாண்மணி

மணக்கும் ஏலம்

வாசனைப் பொருட்களின் அரசி என்றால் அது ஏலக்காய்தான். உலக நாடுகளின் சந்தையில் மிகவும் விரும்பப்படுகின்ற ‘நறுமண’ப் பொருள்

S.V.P.வீரக்குமார்

வா
சனைப் பொருட்களின் அரசி என்றால் அது ஏலக்காய்தான். உலக நாடுகளின் சந்தையில் மிகவும் விரும்பப்படுகின்ற ‘நறுமண’ப் பொருள் ஏலக்காய்தான். ஏலக்காயின் பூர்வீகம் இந்தியா. ஏல உற்பத்தியிலும் இந்தியாவிற்குத்தான் முதலிடம். கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் நீண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடந்த ஆரண்யத்தின் நிழல்களில் வளரும் ஏலக்காய் கோடிகளில் அந்நிய செல்வாணியை கொட்டிக் கொடுக்கும் பயிர். கெளதமாலா எனும் நாடு இன்று இந்திய ஏலக்காயை சர்வதேச சந்தியில் அசைத்துப்பார்க்கும் போட்டியாளராக வளர்ந்துள்ளது. ஆனால் இன்னமும் இந்திய ஏலத்தின் மணம், தரம் என்கின்ற தரத்தில் போட்டியிட இயலாமல் பின்தங்கியே நிற்கின்றது.

இந்தியாவில் சுமார் 9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகின்றது. உலக நாடுகளில் கெளதமாலாவைத் தொடர்ந்து டான்சேனியா, ஸ்ரீலங்கா, எல்சால்வடார், வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பாபுவா, நியூகினியா போன்ற நாடுகளிலும் ஏலம் உற்பத்தி ஆகின்றது. இந்தியாவில் வடகிழக்குப் பகுதியில் ஏலத்தின் இன்னொரு ரகமான பெரிய ஏலக்காய் விளைவிக்கப்படுகின்றது. இந்திய ஏலக்காய் உற்பத்தியில் 60 சதவிகிதம் கேரள மலைத்தொடரின் வனப்பகுதியிலும், 30 சதவிகிதம் கர்நாடகா வனப்பகுதியிலும் மீதமுள்ள 10 சதவிகிதம் தமிழக வனங்களிலும் வளர்கின்றன.

பெரிய ஏலக்காய் உற்பத்தியாகும் வடகிழக்கு மாநிலங்கள் பூகோள ரீதியிலும், இனரீதியிலும் இந்தியாவுடன் இணையாமலேயே இருக்கின்றன. அவர்களின் மங்கோலிய இனச் சாயல் நம்மை விட்டு அந்நியப்படுத்துகின்றது. வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களை அருணாசல பிரதேசம், அஸாம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, சிக்கிம் ஆகியன இந்த மாநிலங்களின் எல்லை. வெறும் 2 சதவிகிதம் மட்டுமே இந்தியாவுடன் இணைந்துள்ளன. எஞ்சியுள்ள 98 சதவிகிதம் சர்வதேச எல்லை வங்காளதேசம், பூடான், சீனா, மியான்மர், நேபாளம் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லைகள் தான் இம்மாநிலத்திற்கு அருகிலுள்ள எல்லைகள். இங்கு விளையும் பெரிய ஏலக்காயிற்கு இன்னமும் சரியான ‘வெளிச்சமில்லை’. தகவல் தொடர்பு, போக்குவரத்து குறைபாடு, ஆங்காங்கே தனி அரசு நடத்தும் தீவிரவாத குழுக்களினால் ‘பெரிய ஏலக்காயிற்கு’ பெரிய சந்தையும் வாய்ப்பில்லை. பெயர்தான் பெரிய ஏலக்காயே தவிர்த்து அதற்கு சிறிய ஏலக்காய் போன்று நல்ல விற்பனை வாய்ப்பு, பெரிய அளவிலான சர்வதேச சந்தை வாய்ப்பு என எதுவுமில்லை, காரணம் காரம், மணம், குணமில்லை.

ஏலக்காய் எதற்குப் பயன்படுகின்றது? ஏலம் ஒரு உணவு மணமூட்டி. காயவைத்த ஏலப்பழமே ஏலக்காய் ஆகும். அடுக்கடுக்காக விதைகள் உள்ளிட்ட ‘கேப்சூலே’ ஏலக்காய். சிறிய ரக ஏலம் ‘எலெட்டேரியா கார்டமோம் மடன் (Elettaria Cardamom Matan) என தாவரவியல் பெயர் கொண்டு அழைக்கப்படும் ஒரு விதை இலை வகை தாவரம். இஞ்சி குடும்பமான Zingi beraceae ஜிஞ்சிபரேசிய எனும் பெருங்குடும்பத்தைச் சேர்ந்தது. நன்கு வளர்ந்த ஏலச் செடியானது இரண்டு முதல் நான்கு மீட்டர் உயரம் வரையிலும் வளரக் கூடியது. இலைகள் அம்பு வடிவில் நீண்டு இருக்கும். தண்டு நேராக அடுக்கு இலை வரிசைகளுடன் இளம் பச்சையும் கரும் பச்சைக்கும் இடையிலான நிறத்தில் இருக்கும். தண்டுப் பகுதி மண்ணில் உள்ள இஞ்சியைப் போன்று விரல் விரலான அமைப்புடன் கூடிய கிழங்கு போன்ற அமைப்பின் உதவியினால் மண்ணில் நிலை நிறுத்தப்படுகின்றது. ஏலத்தின் வேர்கள் மண்ணில் மேல் மட்டத்திலேயே மட்டும் பரவி வளரும் சல்லி வேர்கள் ஆகும். ஏலச்செடிகளுக்கு ஆணிவேர் கிடையாது. இளைத்து வளரும் குணமுடைய பயிர். பக்கவாட்டில் வளரும் குணமுடையது.

கிழங்கிலிருந்து புதிய குருத்துகள் தோன்றிச் செடிகள் வளர்கின்றன. ஏலக்காய் செடியின் மேற்புறமும் காய்ப்பதில்லை.மண்ணுக்குள்ளும் காய்ப்பதில்லை. தண்டின் திரட்சியான அடிப்பாகமும் கிழங்கும் சேருகின்ற இடத்தில் ‘பெனிக்கல்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வல்லிகள் தோன்றும். இந்த வல்லிகள் மண்ணின் இடைமட்டத்தில் சாட்டை போன்று நீண்டு வளரும். ஏலச் செடியின் ரகத்தைப் பொறுத்து தரையுடன் படரும் வல்லி, நேராக நிமிர்ந்து இருக்கும் வல்லி, பாதி நிமிர்ந்து இருக்கும் வல்லி என பலவகையான வல்லிகள் உண்டு. இந்த வல்லிகளில் தான் ஏலப்பூக்கள் மலரும். பூக்கள் மலர்ந்து பிஞ்சாகி, காயாகி, எடுக்கத் தக்கபடி ஆக நூறு நாட்கள் ஆகும். ஏலக்காய் என்பது மூன்று அறைகளைக் கொண்ட கேப்சூல் வடிவில் இருக்கும். இந்த கேப்சூலினுள் 15 முதல் 25 விதைகள் வரை இருக்கும். நன்கு புடம் செய்யப்பட்ட ஏலக்காய் கிளிப்பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் அடர் பழுப்பு, அல்லது கருமையான நிறத்தில் காணப்படும்.

ஏலம் எல்லாவிதமான தட்ப வெப்ப நிலை, சூழலிலும் வளர்ந்துவிடுகின்ற பயிர் அல்ல. மிகவும் தனித்துவம் வாய்ந்த பயிர். நல்ல மழையிலும், பருவம் தவறாமல் கிடைக்கின்ற மழையும், பசுமை மாறா காடுகளின் நிழலும், நல்ல இலை மக்குகளுடன் கூடிய மேல் மண்ணும் அவசியம் தேவை.

மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்திலிருந்து 4000 அடி உயரம் வரையில் அமைந்திருக்கும் பசுமை மாறாத வனப்பகுதிதான் ஏலக்காய் விளைவிக்க ஏற்ற நிலப்பரப்பை கொண்டுள்ளது. அடிக்கடி கிடைக்கின்ற மழை குறிப்பாக பருவமழை, கோடை மழை ஏலக்காய் விளைவிக்க தேவையானது. சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளைப் பின்பற்றினாலும் இயற்கை மழை ஏலக்காய் சாகுபடிக்கு ஏற்றது. சுமார் 2500 மி.மீலிருந்து 4000 மி.மீ வரை மழையளவு ஆண்டிற்கு தேவைப்படும். 15°c யிலிருந்து 35°c வரையில் வெப்பநிலை நல்லது. மலைச்சரிவிலுள்ள காட்டுப்பகுதி மண் என்பதால்  களி சேற்று வண்டல் மண் அதிக அளவிலான இலை மக்கு முதலான அங்ககப் பொருட்களுடன் இருக்கும். மலைச்சரிவு என்பதால் போதுமான நீர் பாசனமும், வடிகால் வசதியும் இருக்கும். எப்போதும் மலைசரிவு மண்கள் அமிலத்தன்மையுடன் தானிருக்கும். மண்ணின் pH அளவு 4.5 முதல் 6.5 வரையிலும் காணப்படலாம். 5.5 pH இருக்கும் நிலம் ஏலச்சாகுபடிக்கு எற்றதாகக் கருதப்படுகின்றது.

ஏலச் செடியில் பல்வேறு ரகங்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் மூன்று ரகத்தில் அனைத்தும் அடங்கும். முதலாவது மலபார் ரகம். இந்த வகை ஏலச் செடி 6 அடியிலிருந்து 9 அடிவரை உயரமுள்ளவை. இலைகளின் மேற்புறத்தில் முசுமுசுவென மென்மையான உரோமம் போன்ற தோற்றமிருக்கும். மலபார் ரகத்தின் வல்லிகள் தரையில் படர்ந்து காணப்படும். இந்த ரகத்தின் காய்கள் முட்டை வடிவில் இருக்கும். திர்ப்ஸ் வகை பூச்சித் தாக்குதலைத் தாங்கி எதிர்த்து நிற்கும் தன்மையுடைய இந்த இனத்தை நாட்டு ஏலம் என்றும் கூறுவதுண்டு.

இரண்டாவது ரகம், மைசூர் ரகம். ஓங்கி வளரக் கூடிய தன்மையை உடைய இந்த ரகம் 9 அடி முதல் 12 அடி உயரம் வரையிலும் வளர்கின்ற தன்மையை உடையது. இதன் இலைகள் அகலமாக ஈட்டி வடிவில் இருக்கும். இதன் வல்லிகள் தொய்வின்றி நிமிர்ந்து நேராக நிற்கக் கூடியவை. மைசூர் ரகத்தின் காய்கள் நீளமானதாகவும் பெரியதாகவும் இருக்கும். கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகளுக்கும், அதிக மழை இருக்கும் பகுதிக்கும் ஏற்றவை.

வழுக்கை ரகம் எனும் ரகம் மலபார் மற்றும் மைசூர் இனத்தில் இயற்கையாக நடைபெற்ற இனக்கலப்பினால் (ஹைபிரிட்) உண்டான ரகமாகும். அதன் காரணமாகத்தான் வழுக்கை ரகத்தின் பல்வேறு குணங்கள் மலபார் ரகத்திற்கும், மைசூர் ரகத்திற்கும் இடைப்பட்டத் தன்மை உடையதாயிருக்கும். இதன் வல்லிகள் மைசூர் ரகத்தைப் போல நிமிர்ந்துமில்லாமல், மலபார் ரகத்தைப் போல தரையில் படர்ந்தும் இல்லாமல் ஓரளவு நிமிர்ந்து வளைந்திருக்கும். காய்கள் பெரியதாகவும் உருண்டை வடிவிலும் இருக்கும்.

இவை மூன்றும் பாரம்பரியமான ரகங்கள். உயர் விளைச்சல் ரகங்கள் பல விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் விவசாயிகளால் பெரிதும் வரவேற்று பயிரிடப்படுகின்றது. இதன் விளைச்சலும் அபரிதமாக உள்ளது. நல்லாணி, பனிகுளங்கரா, பவளக்கொடி, இருதாலி, வைகை, பொம்மி என விவசாயிகளால் கண்டறியப்பட்ட ரகங்கள் உயர் விளைச்சல் ரகங்களாகும். இன்றைக்கு ஏல விவசாயிகளால் சக விவசாயிகளால் கண்டறியப்பட்ட ரகங்கள் விரும்பி சாகுபடி செய்யப்படுகின்றது.

ஏல நாற்றுகளை இரண்டு முறையில் பெறலாம். முதலாவது விதை மூலமாக நாற்றுகள் தயார் செய்தல் இரண்டாவது விதையில்லா இனப்பெருக்கம். விதை மூலம் இனப்பெருக்கம் செய்ய நல்ல விளைச்சல் தரக்கூடிய, நோய் தாக்குதல் இல்லாத செடியிலிருந்து இரண்டு அல்லது மூன்றாவது அறுவடையின் போது நன்கு விளைந்து முதிர்ந்த பழங்களைத் தேர்ந்து எடுத்து அறுவடை செய்து, அதிலிருந்து விதைகளை பிரித்து எடுத்து தண்ணீரில் அலசி சாம்பல் புரட்டி நிழலில் காயவைத்து விரைவில் விதைத்து முதல் நிலை நாற்றாங்காலில் வளர்த்து, இரண்டாம் நிலை நாற்றாங்காலாக பாத்தி நாற்றாங்கால் அல்லது பாலித்தீன் பை நாற்றாங்காலில் வளர்த்து நடவுக்குப் பயன்படுத்தலாம். விதை மூலம் உண்டாகும் நாற்று என்பதால் இதில் தாய் செடியின் குணாதிசயங்களில் 100 சதவிகிதம் அப்படியே சந்ததிக்கு வருமென நம்பமுடியாது.

ஆனால் விதையில்லா இனப்பெருக்கத்தின் மூலம் தாய் செடியின் குணங்களை அப்படியே கொண்டிருக்கும் புதிய செடிகளை உண்டாக்க இயலும். விதையில்லா இனப்பெருக்கத்தை திசு வளர்ப்பு மூலமும் அல்லது தட்டை நாற்று என்று அழைக்கப்படும் தாய் செடிலியிருந்து வேர் கிழங்கோடு கிளை முளையுடன் பிரித்து எடுக்கும் முறையிலும் செய்யலாம்.இரண்டு முறையிலும் தாய் செடியின் அத்தனை குணங்களும் வளரும் செடிக்கு வரும். திசு வளர்ப்பு முறையென்றால் அதற்கென உள்ள திசு வளர்ப்பு கூடத்தை நாடவேண்டும். தட்டை நாற்று என்றால் கண்முன்னால் பார்த்த செடியில் தட்டை பிரித்து எடுத்து நடவு செய்யலாம்,

ஏலச் செடி வளர்ந்து பலன் கொடுக்க அதற்கென ஏதுவான சூழலை உடைய விளைநிலம் தேவை. நிலத்தை நடவுக்கு முன்னர் சுத்தப்படுத்தவேண்டும். தாவரக் கழிவுகள், பழைய செடி கழிவுகள் மண்ணில் புதைக்கப்பட வேண்டும். ஏலத்தோட்டத்திற்கு நிழல் அமைப்பு மிக முக்கியம். நேரடி சூரிய ஒளி 40 சதவிகிதம் அளவிற்கு மட்டும் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு போதுமானது. மீதமுள்ள 60 சதவிகிதம் ஒளியினை நிழல் மரங்கள் தாங்கிக் கொள்ளவேண்டும். கோடையில் இலை உதிர்க்காத, சிறிய இலையமைப்பு உடைய, ஏலச்செடிகளின் வேர்களுடன் போட்டியிடாத வேர் அமைப்புடன் கூடிய நிழல் மரங்கள் ஏற்றவை.

நிலத்தின் நீர் மட்டக் கோடு (காண்டூர் லைன்) படி 10 அடி X 10 அடி இடைவெளியில் வரிசையில் நடவு செய்யவேண்டும். பருவ மழை துவங்கும் முன்னரே 3 அடி X 3 அடி X 1 ½ அடி அளவுள்ள குழிகள் வெட்டி ஆறவிட்டு மக்கிய தொழு உரம், மேல் மண், இலை மக்கு கலந்து மூடி பருவ மழைக்கு முன்னதாக நடவு செய்யவேண்டும். நிலத்தில் களை நிர்வாகம் அத்தியாவசியமானது. மண் அரிப்பைத் தடுக்க ஆங்காங்கே தண்ணீர் குழிகளும், நீர் மட்டக்கோடு தண்ணீர் தடுப்புகளும் ஏற்படுத்த வேண்டும். மழை குறைவான காலத்தில் நீர் பாசனம் செய்தால் வருடம் முழுவதும் ஏலக்காய் மகசூல் கிடைக்கும். அகற்றப்பட வேண்டிய தண்டுகள்,. உலர்ந்த இலைச் சருகுகள், நோய், பூச்சி தாக்கிய தாவரப் பகுதிகளை சுத்தப்படுத்திச் சிறிய துண்டுகளாக்கி தோட்டத்தில் ஆங்காங்கே புதைத்துவிட வேண்டும். ஏலச் செடிகள் மெல்லிய, மேல்பரப்பில் உள்ள வேர்களை உடைய செடிகள் ஆதலால் கொடுக்கப்படும் மேல் உரத்தை எளிதில் எடுத்துக் கொள்ளும் தன்மையை உடையது.

ஏலச் செடிகளுக்கு பூச்சி நோய்த் தாக்குதல் சற்று அதிகமே. தீவிர ஏல விவசாயிகள் 30 நாளைக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பூச்சி மருந்தை தேவைப்படுகின்றதோ இல்லையோ தெளிப்பதை ஒரு சடங்காகவே  செய்து வருகின்றனர். பருவ கால மாறுபாடு காரணமாக பூச்சி, நோய் தாக்குதல் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகின்றது. ஆனால் இயற்கை வழியிலோ அல்லது செயற்கை வழியிலோ கட்டுப்படுத்தாவிட்டால் விளைச்சல் கணிசமாக பாதித்துவிடும். செடிகளின் தண்டு பாகத்தை துளைத்து உள் குருத்தை அழிக்கும் தண்டு துளைப்பான் ஒரு புழு. டிசம்பர் முதல் மே வரையான காலகட்டத்தில் அதிகமிருக்கும். சிறிய பசும் நீலம் அல்லது மரப்பச்சை நிற புழுக்கள் 10 மி.மீ நீளத்தில் குட்டையாக, திரண்டிருக்கும். இவை செடிகளில் வேர்ப் பாகத்தில் காணப்பட்டு வேர்களிலும், வேர் தண்டுகளிலும் தாக்கி செடிகளை நாளடைவில் கொன்றுவிடும்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சில் காணப்படும் வெட்டுப்புழுக்கள் இலைகளை தின்று சேதப்படுத்தும். இலைகளின் அடிப்பாகத்தில் காணப்படும் அந்துப் பூச்சிகள் இலை திசுக்களை சுரண்டி சாற்றை உறிஞ்சி விடுவதால் காய்களின் மேற்புறம் அழகற்ற தழும்பை ஏற்படுத்திவிடுகின்றது. வெளிர் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமுடிய காய் துளைப்பான் பெரிய அளவில் மகசூலை சேதப்படுத்தும். வெள்ளைப் பூச்சி இலையின் மேலிருந்து இதிலிருந்து தோன்றும். கருமையான வளர்ச்சியான இலை பச்சையம் தயாரிக்கும் செயல்பாட்டை பாதிக்கின்றது. ஏலக்காய் செதில் பூச்சிகளால் காய்கள் உலர்ந்து, தரமிழந்து போகின்றன. சிவப்பு சிலந்தி, அந்துப் பூச்சி இலைகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் உண்டாகக் காரணமாக உள்ளது.

இலைப்புள்ளி நோய், நாற்றழுகல் நோய், வேர் கிழங்கு அழுகல் நோய், கட்டே நோய், அழுகல் நோய், செந்தால் நோய், இலைக் கொப்புள நோய், காய்களில் கேங்கர் நோய் என ஏலச்செடிகளை பலவிதமான நோய்கள் தாக்குகின்றன.

சாதாரண அடிப்படை பூசண கொல்லியான ஒரு சதவிகித போர்டோ கலவையிலிருந்து, தடை செய்யப்பட்ட தடையில்லாத, நான்காம் தலைமுறை பூச்சி கொல்லிக்ள் வரை ஏலத்தோட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி, மீன் அமினோ அமிலம் என இயற்கை வழியும் கடைபிடிக்கப்படுகின்றன. அதிக மகசூல் என்ற ஒரே லட்சியத்திற்காக ஏலச் சாகுபடியாளர்கள் ரசாயனத்தையும் இயற்கையும் கலந்த கலவையான ஒரு முறையில் சாகுபடி செய்கின்றனர்.

நன்றாக பராமரிப்பு செய்தால் 10 முதல் 15 ஆண்டுகள் ஏலம் செடி இருக்கும். சில தசாப்தங்களுக்கு ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் என்பதே பெரிய விஷயம். இன்றைக்கு ஏக்கருக்கு 1000 கிலோ மகசூல் எளிய விஷயம். 2000 கிலோ மகசூலை எட்டவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 40 நாளைக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படும் ஏலக்காய்கள் அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏலக்காய் ஸ்டோர்களில் உலர வைக்கப்படுகின்றது. இப்போது டிரையர் (Dryer) எனும் இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

இனி கொஞ்சம் பசுமை நிற ஏலக்காய் உலக அளவில் நறுமணப் பொருளில் முதலிடத்தில் வர்த்தகம் ஆகி அந்நிய செலவாணியையும், வேலை வாய்ப்பையும் அள்ளி வழங்குகின்றது என்பது நிதர்சனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிம்கானா... பூனம் பாஜ்வா!

‘மௌ'..னி...கா.... மௌனி ராய்!

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

SCROLL FOR NEXT