முகப்பு
யோகம் தரும் யோகம்

ஆசனம் 14. பட்சிமோத்தனாசனம்

சென்னை கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதிக்க வந்தவளுக்கு, இடிவிழுந்தது போன்ற ரிபோர்ட்!

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

அஷ்டாங்கயோகம்

நியமம்

வாடகை என்ன தர வேண்டும்?

அமுதாவுக்கு மார்பகப் புற்றுநோய்.

சென்னை கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதிக்க வந்தவளுக்கு, இடிவிழுந்தது போன்ற ரிபோர்ட்!

அமுதா, மல்லாங்கிணறு என்ற சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவள். விருதுநகரில், அமுதாவும் கிரிஜாவும் ஒன்றாகப் படித்தவர்கள். கிரிஜா சென்னைக்கும், அமுதா அருப்புக்கோட்டைக்கும் மணமாகிப் போனவர்கள்.

சென்னை போரூரில் உள்ள கிரிஜாவின் வீட்டில் தங்கிப் பரிசோதித்துக்கொள்ள, கணவன் கிருஷ்ணராஜுடன் சென்னை வந்திருந்தாள் அமுதா.

ஒரு மாதம் கதிர் சிகிச்சை பண்ண வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.

“நாங்கள் வெளியூர். எங்களால சென்னைல தங்கி சிகிச்சை எடுத்துக்க முடியாது சார்” என்றாள் அமுதா.

“அதுக்கு நாங்க என்னம்மா பண்றது. யாராவது சொந்தக்காரங்க வீட்டுல தங்கிக்க வேண்டியதுதான். இல்லன்னா லாட்ஜ்ல ரூம் போட்டுத் தங்குங்க. நாங்க சிகிச்சைதான் பண்ண முடியும்’’ என்று கறாராகச் சொன்னார் டாக்டர்.

ஆஸ்பத்திரி சுவற்றில் சோகத்தோடு தலையைச் சாய்த்துக்கொண்டாள் அமுதா.

“உன் ஃப்ரண்டு கிரிஜா வீட்டுலயே ஒரு மாசம் தங்கிக்கலாமே?” என்றான் கிருஷ்ணராஜ்.

“அது சரியா வராதுங்க. விருந்தும் மருந்தும் மூணு நாள்தான். ஒரு மாசமெல்லாம் யார் வீட்லயும் தங்கக் கூடாது. அவளுக்கும் குடும்பம் இருக்கு. வேலைக்கு வேற போறா. நம்மால யாருக்கும் எந்தத் தொந்தரவும் வேணாம். வாங்க ஊருக்கே போய்டுவோம். விதிப்படி நடக்கட்டும்’’ என்றபடி நடந்தாள் அமுதா.

“நல்லா இருக்கு அமுதா நீ சொல்றது. ஊருக்குப் போன நேரம், நோய் முத்திப்போச்சின்னா என்ன பண்றது. நமக்கு ரெண்டு பொட்டப்புள்ளைங்க. இப்பதான் காலேஜ்ல அடி எடுத்து வெச்சிருக்காங்க. அவங்களுக்கு வேலை தேடி நல்ல வரன் பார்த்து கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா? அந்தக் காரியம் முடிஞ்சிடுச்சின்னா, நாம ரெண்டு பேருமே சேர்ந்தே போயிடுவோம். அதனால, உன் ஃப்ரண்டு வீட்டுலயே தங்கி சிகிச்சை எடுத்துக்கவான்னு கிரிஜாகிட்ட கேட்டுப் பாரேன்” என்றான் கிருஷ்ணராஜ்.

“அதெல்லாம் வேணாம். லாட்ஜ்ல தங்கறதா இருந்தா எவ்ளோ ஆகும்?”

“அதைவிட ஊருக்கே போயிடலாம். சென்னையில், மாசக்கணக்குல லாட்ஜ்ல தங்க முடியாது. வாடகை கொடுத்து கட்டுப்படி ஆகாது. அதுக்கு வாய்ப்பே இல்ல, அதை மறந்துடு அமுதா”.

எந்த ஒரு முடிவுக்கும் வராமல், இருவரும் கிரிஜா வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

மாலையில், கிரிஜாவும் அவளது கணவரும் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, அமுதாவும் கிருஷ்ணராஜும் பெட்டிகளுடன் தயாராக இருந்தனர்.

“ஏன், என்ன ஆச்சு?” – கேட்டபடி வந்தாள் கிரிஜா.

“நாங்க ஊருக்கு கௌம்பறோம் கிரிஜா. டாக்டர் மாத்திரை எழுதிக் குடுத்துருக்காரு. நாலு நாளா எங்கள நல்லபடியா பாத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி கிரிஜா” என்று, கண்களில் நீர் மல்க அவளது கைகளைப் பிடித்துக்கொண்டாள் அமுதா.

காரை நிறுத்திவிட்டு வந்த கிரிஜாவின் கணவன் சுரேஷ், “என்ன அவசரம். இங்கயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே’’ என்றான்.

“இல்லண்ணா. மாத்திரையிலயே குணமாயிடும்னு டாக்டர் சொன்னாரு. நாங்க கெளம்பறோம் என்றபடி பெட்டியை எடுத்த அமுதாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கிரிஜா.

“எங்க, அந்த ரிப்போர்ட்ட காட்டு”.

“அதுல பாக்க என்னடி இருக்கு. மாத்திரை எழுதியிருக்காரு. மதுரை ஜி.ஹெச்ல கெடைக்குமாம். ட்ரெயினுக்கு நேரமாச்சு, நாங்க கெளம்பறோம்’’.

‘‘இல்ல, நீ எனக்கு அந்த ரிப்போர்ட்டை காட்டு’ என்று அமுதாவின் பெட்டியை வாங்கி, அதில் இருந்த ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தாள், கிரிஜா. அதிர்ந்துபோனாள்.

“ஒரு மாசத்துக்கு ரெகுலரா கதிர் சிகிச்சை எடுக்கணும்னு எழுதியிருக்கே”

சுரேஷும் வாங்கிப் பார்த்து, “என்னங்க அமுதா, எவ்வளவு சீரியஸான மேட்டர் இது. எதுக்கு எங்ககிட்ட பொய் சொன்னீங்க?”

பதில் சொல்லமுடியாமல் தவித்தாள் அமுதா. அவளால் அப்போதைக்கு அழத்தான் முடிந்தது.

“ஊருல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்காங்க. அவங்க அங்க தனியா எப்படி இருப்பாங்க… அதான்’’

“பாட்டியோடதான் அவங்க இருக்காங்கன்னு சொன்னியே”

அமுதாவால் பேச முடியவில்லை. கிருஷ்ணராஜ் பேசினான்.

“தப்பா எடுத்துக்காதீங்க. நாலஞ்சி நாளுன்னா பரவாயில்ல. ஒரு மாசம் தொடர்ந்து இன்னொருத்தர் வீட்டுல தங்கறது சரியா வராது. எங்களுக்கும் கஷ்டம், உங்களுக்கும் கஷ்டம். அதான், மாத்திரை வாங்கி சாப்பிட்டுக்கலாம்னு…’’

“என்னடி அமுதா இது பைத்தியக்காரத்தனம். உனக்கு வந்திருக்கிறது கேன்ஸர். டாக்டர் சொன்ன மாதிரி மருந்து மாத்திரை கண்டிப்பா எடுத்துக்கனும். உனக்கு கண்டிப்பா குணமாயிடும், குணமாகும். உனக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். ஒரு மாசம்தானே. நீ இங்கயே எங்க வீட்டுலயே தங்கி இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ. அதுல எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல.

“இல்ல, வேணாம்…’’

‘‘ஏய் உனக்கு என் வீட்டுல தங்கிக்க கஷ்டமா இருக்குன்னா, பின்னாடி ஒரு போர்ஷன் காலியாத்தான் இருக்கு. நீயும் உன் ஹஸ்பண்டும் அங்க தங்கிக்கங்க. எத்தன மாசம் ஆனாலும் நீ உன் உடம்பை பார்த்துக்கிட்டு, குணமானதும் நீ ஊருக்குப் போலாம்’’.

‘‘வாடகை…’’

‘‘உதைபடுவே’’

‘‘எங்களால காசு குடுக்காம தங்க முடியாது’’

‘‘சரி தாயே. என் பசங்களுக்கு பாடம் சொல்லிக்குடு. நீதான் படிப்புல புலியாச்சே. உனக்கும் பொழுது போகும். ஓகேவா?’’

அமுதாவின் முகம், மேகங்கள் விலகிய முழு நிலாபோல், சோகங்கள் நீங்கிப் பிரகாசித்தது!

நிபந்தனைகளோடு கூடிய உறவுகள், நீடித்த காலத்துக்குத் துணை நிற்கும். அதுவே நியமம்.

ஆசனம் - 14

பட்சிமோத்தனாசனம்

பெயர்க் காரணம்

பட்சி என்றால் பறவை. மோத்தனா என்றால் உறங்கும் விதம்.

பறவைகள் உறங்கும் நிலைபோல் இவ்வாசனம் இருப்பதால், இதற்கு பட்சிமோத்தனாசனம் என்று பெயர்.

பறவைகள் உறங்கும்போது, தங்கள் தலையை வளைத்து தமது உடலுக்குள் வைத்துக்கொள்ளும். அதுபோல, நாம் இவ்வாசனத்தில் நமது தலையை நமது கால்களுக்குள் புகுத்திக்கொள்வதுபோல் வளைத்து வைத்திருக்க வேண்டும்.

செய்முறை

• விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.

• இரண்டு கைகளையும் தலைக்கு மேலே நீட்டி வைத்துக்கொள்ளவும்.

• சுவாசத்தை நன்றாக உள்ளிழுக்கவும்.

• பிறகு சுவாசத்தை வெளியிட்டவாறு எழுந்து, குனிந்து கைகளால் கால் விரல்களைத் தொடவும்.

• அப்படியே கைவிரல்களால் கால் விரல்களைக் பற்றிக்கொள்ளவும். முகம், முழங்கால்களுக்கு நெருக்கமாக இருத்தல் வேண்டும்.

• இதே நிலையில் சுமார் பத்து நீண்ட சுவாசங்கள் எடுக்கவும்.

• பிறகு கைகளைத் தளர்த்தியவாறு, சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே மெதுவாகக் கைககளை மேலே உயர்த்தியவாறு நிமிர்ந்து, பின்னர் ஓய்வாகப் பின்பக்கமாகச் சாய்ந்து மல்லாந்து படுத்துவிடவும்.

• சற்றே இளைப்பாறிய பிறகு, மீண்டும் இதே ஆசனத்தைத் தொடரவும்.

• இவ்வாறாக மூன்று தடவை இவ்வாசனத்தைச் செய்யவும்.

பலன்கள்

இவ்வாசனத்தால், ஜீரண உறுப்புகள் அனைத்தும் அழுத்தப்பட்டு நல்ல ரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன. நுரையீரல்களால் நிறைய காற்றை உள்ளிழுக்க முடிகிறது. அது, நமது ஜீவசக்தியை அதிகரிக்கிறது.

கணையம் நன்றாக அழுத்தப்படுவதால் இன்சுலின் நன்றாகச் சுரக்கும். அதனால் சர்க்கரை வியாதி முற்றிலுமாகக் குணமாகும்.

கல்லீரலும் அழுத்தப்படுவதால், பித்தநீர் நன்றாகச் சுரந்து செரிமானத்துக்கு ஊட்டமளிக்கிறது.

நல்லப் பசி ஏற்படும்.

மலச்சிக்கலும் அகலும்.

தொப்பை இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான ஆசனமாகும். தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்துவந்தால், தொப்பையை முற்றிலுமாகக் கரைத்து, ஒட்டிய வயிற்றைப் பெற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.