நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் 1981-ம் ஆண்டு முதல் பொது விநியோகத்திட்டம் முழுமையாக கூட்டுறவு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 1,96,32,951 ஆகும். ம
கருத்துக் களம்நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் 1981-ம் ஆண்டு முதல் பொது விநியோகத்திட்டம் முழுமையாக கூட்டுறவு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 1,96,32,951 ஆகும். ம
தமிழ்நாட்டில் 1981-ம் ஆண்டு முதல் பொது விநியோகத்திட்டம் முழுமையாக கூட்டுறவு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 1,96,32,951 ஆகும். மாநிலத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கை 30,924 ஆகும். சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை 1975-ம் ஆண்டு முதல் பொதுத்துறை நிறுவனமாக தமிழக அரசு அறிவித்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 1261 நியாயவிலைக் கடைகளை நடத்தி வருகிறது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு சங்கங்கள் 28,898 நியாயவிலைக் கடைகளை நடத்தி வருகின்றன. இதர கூட்டுறவுச் சங்கங்கள் 138 நியாயவிலைக் கடைகளை நடத்தி வருகின்றன. மகளிர் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் 617 நியாயவிலைக் கடைகளையும், நடமாடும் நியாயவிலைக் கடைகள் 10 கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ஆகும் செலவைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது.
கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் மிகவும் குறைந்த ஊதியம் பெற்று வருகின்றனர். உதாரணமாக, 25 ஆண்டுகள் பணி முடித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர் பெறும் மாத ஊதியம் | 18,000 ஆகும். 25 ஆண்டுகள் பணிமுடித்த நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர் பெறும் மாத ஊதியம் | 8,000 ஆகும்.
அதேபோன்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் நடத்திவரும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் மாத ஊதியம் | 5,000-க்கும் குறைவு ஆகும்.
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விநியோகம் சீரான முறையில் நடைபெறவில்லை எனக் கண்டறியப்பட்டு அதனைப் போக்கிட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் புதிதாக ஆள்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
விற்பனையாளர் பணிக்கு மாதம் | 3,000 எனவும், எடையாளர் பணிக்கு மாதம்
| 2,500 எனவும் தொகுப்பூதியம் நிர்ணயம் செய்து பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு 5 ஆண்டுகள் பணி முடித்த பின்னர் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்கிற உத்தரவாதத்துடன் பணி வழங்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்த பலர் பணியில் சேர்ந்து ஓரிரு மாதங்களில் பணியை ராஜிநாமா செய்துவிட்டுச் செல்கிற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், நியாயவிலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருள்களை நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படாத நிலையில், குடும்ப அட்டைதாரரின் கோபத்துக்கு ஊழியர்கள் ஆளாகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களை போதுமான அளவு கையிருப்பு வைத்து ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்குப் போதுமான இடவசதி இல்லாத நியாயவிலைக் கடைகள் உள்ளதால், பொருள்கள் அடிக்கடி கையிருப்பு இல்லை என்பதால் அட்டைதாரர்களின் கோபத்துக்கு ஊழியர்கள் ஆளாகின்றனர்.
அட்டைதாரர்களுக்கு வழங்க போதுமான அளவு உணவுப்பொருள்கள் இருந்தும், அதனை உடனடியாக விநியோகம் செய்ய போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில், கார்டுதாரர்கள் நீண்டநேரம் காத்திருந்து பொருள்களைப் பெறவேண்டிய சூழ்நிலை காரணமாக கார்டுதாரர்களின் கோபத்துக்கு ஊழியர்கள் ஆளாகின்றனர்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் இருக்கை வசதி, கழிப்பறை வசதி இல்லாத நிலை, குறைவான சம்பளம், ரௌடிகள், ஏரியா தாதாக்களின் மிரட்டல்கள், உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய இக்கட்டான நிலையில், நேரத்தோடு சாப்பிடக்கூட நேரமில்லாத பணிச்சுமையில் உள்ள ஊழியர்களும் அபராதம் விதிப்பது, சஸ்பெண்ட் செய்யப்படுவது, கைது நடவடிக்கை போன்ற காரணங்களால் மனம் வெதும்பி பணியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள், இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு தாங்கள் பணி செய்த காலத்தைக் கணக்கில்கொண்டும், வாழ்நிலை காரணமாகவும் புலிவாலைப் பிடித்த கதையாகத் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் உன்னதமான பணியைச் செய்து வரும் கூட்டுறவு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள், மோசமான சுற்றுப்புறச் சூழல், போதுமான இடவசதி இன்றி உணவுப் பொருள்களைத் தொடர்ந்து வழங்க இயலாமல் கார்டுதாரர்களின் கோபத்துக்கும், பழிச் சொல்லுக்கும் ஆளாகி, மிகவும் குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு மனவேதனையுடனும், மன அழுத்தத்துடனும், கூனிக்குறுகி, குற்றப் பரம்பரையினரைப் போல் வாழ்ந்து வருகின்றனர்.
2010-11-க்கான உணவு மானியம் | 3,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்களின் ஊதியத்துக்கு என ஒரு சில கோடிகளை ஒதுக்க அரசு முன்வர வேண்டும்.
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளை அரசே வழங்கி அவர்களும், அவர்கள் குடும்பமும் சமூகத்தில் அந்தஸ்துடன், தலைநிமிர்ந்து, மனநிம்மதியுடன் வாழும் நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
ஏனெனில், மாதந்தோறும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் மனநிலையைத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் உள்ள நியாயவிலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து உடனே நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும்.