ரயில் பயணம் சுகப் பயணம் ஆகட்டும்
ஆண்டு தோறும் ரயில்வே துறை பல ஆயிரம் கோடிகள் நட்டத்தில் இயங்குகிறது. பயணக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. தினசரி நாளேடுகளில் இச்செய்தி அடிக்கடி வரத் தவறுவதில்லை.
ஆண்டு தோறும் ரயில்வே துறை பல ஆயிரம் கோடிகள் நட்டத்தில் இயங்குகிறது. பயணக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. தினசரி நாளேடுகளில் இச்செய்தி அடிக்கடி வரத் தவறுவதில்லை.
"பயணச் சீட்டுடன் பயணம் செய்பவர்களைக் காட்டிலும் பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.' ரயில்வே உயரதிகாரிகளில் ஒருவரின் பேட்டியாகவும் சில நாள்களுக்கு முற்பட்ட செய்தியாகவும் தமிழ் நாளேடு ஒன்றின் கட்டமிட்ட செய்தி.
முன்பதிவு செய்தது, முன்பதிவு செய்யாமல் சாதாரணப் பயணிகள் பெட்டி என எல்லாப் பெட்டிகளிலும் என் போட்டால் இடமில்லாத அளவு நெரிசல் கூட்டம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் முன்டியடித்துப் பயணிப்போரே ஏராளம். பண்டிகை விசேஷ நாள்களில் மட்டுமில்லாமல் எல்லா நாள்களிலும் இந்த நிலைமையே சகஜம். இப்படியிருந்தும் ரயில்வே துறை நட்டத்தில் ஓடுவதாகவே ஆண்டுதோறும் ரயில்வே அமைச்சரின் அறிக்கை.
பயணச் சீட்டுப் பரிசோதகர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் நுழைவது போலச் சாதாரணப் பெட்டிகளில் நுழைந்து பயணச் சீட்டுகளைச் சரிபார்ப்பதில்லை. நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். சீட்டில்லாமல் பயணிப்போரின் மிரட்டல் வன்முறைத் தாக்குதல்களுக்குப் பயந்து ஒதுங்குகிறார்கள். வடமாநிலங்களில் சீட்டில்லாமல் பயணம் செய்வோரை யாரும் ஏதும் செய்யமுடியாது என்பதும் ஒரு காரணம். இங்கும் குறைந்த தூரப் பயணம் செய்வோரும், ஏறியவுடன் அடுத்து அருகிலுள்ள நிலையத்தில் இறங்கிவிடுவோரும், அன்றாடக் கூலி வேலைக்குச் செல்வோரும் பெரும்பாலும் பயணச் சீட்டுடன் பயணிப்பது அரிது. இதனால் இழக்கப்படும் தொகை நட்டக் கணக்கில் சேர்க்காமல் எதில் சேர்ப்பது?
நட்டத்தில் இயங்குவதாகச் சொல்லும் ரயில்வே நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டிய பல திட்டங்களைக் கிடப்பில் போட்டுள்ளது. திட்டப் பணிகளுக்காகப் பத்தாண்டுகள் பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட பொருள்கள் எல்லாம் பல ரயில் நிலையங்களில் குப்பை போலக் குவிந்து கிடக்கின்றன. மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்றுக் கிடக்கும் இவை பயன்பாட்டு நிலையில் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தற்போது இருமடங்கு மும்மடங்குச் செலவுகள் கூடுதலாலும் நிதிப் பற்றாக் குறையாலும் நடைபெற வேண்டிய பணிகள் அநாதைப் பிணம் போலும் கிடப்பதை உயரதிகாரிகளும் அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
ரயில்வே நிர்வாகம் லாபத்தின் திசையில் செல்லவேண்டுமானால் போர்க்கால நடவடிக்கை போல சில பணிகளை உடனடியாகச் செய்ய வேண்டும். நாடெங்கும் இரு வழி இருப்புப் பாதைகள் விரைந்து முடிக்கப் படுதல், ஒவ்வொரு ரயிலிலும் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ரயில்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துதல், முன்பதிவு செய்யப்படாத சாதாரணக் கட்டணம் உடைய பெட்டிகள் எண்ணிக்கை அதிகமாகவும், பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் ஒன்று மட்டுமே இருக்குமாறு அமைத்தல், அனைத்துப் பெட்டிகளிலும் முன்பதிவுக் கட்டணத்துடன் பயணம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் இருக்குமாறு செய்தால் நெரிசலைக் குறைக்க ஏதுவாகும்.
இருவழி இருப்புப் பாதைகள் அமையும்போது காலதாமதம், ரயில்கள் ஒன்றையொன்று மோதிக் கொள்ளுதல், வழித் தடங்கல் தடைகள், நெரிசல்கள் சிக்கியபடியே பயணிக்கும் சங்கடம் இவை நிச்சயம் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கட்டணமில்லாமல் பயணிப்போரைக் குறைக்கப் பயணச் சீட்டைச் சரிபார்க்கும் அலுவலர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது நல்லது. ஒவ்வொரு ரயிலிலும் பயணச் சீட்டைச் சரிபார்ப்போர் இருவர், ரயில்வே காவலர் ஒருவர் எல்லாப் பெட்டிகளுக்கும் சென்று வர பணி நிரவல் செய்ய வேண்டும். பயணச்சீட்டில்லாமல் பயணிப்போர், குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வோர். பயணச் சீட்டைச் சரிபார்ப்பவரை மிரட்டி அச்சுறுத்துபவர் முதலாளவர்களுக்கு கடுமையான தண்டனை, அதிகபட்ச அபராதம் தயவு தாட்சண்யமில்லாமல் சிறை என்பதில் நீக்குப்போக்கில்லாத கண்டிப்பு அவசியம் தேவை. புகைவண்டி நிலையங்கள் ஒவ்வொன்றிலும் ஏறுவோர் இறங்குவோரை நிலையத்தின் பிற அலுவலர்களாலும் கண்காணிக்கலாம்.
ரயில் நிலையங்களில் கட்டுமானப் பணிகள் உடனுக்குடன் விரைவில் முடிக்க ஒப்பந்தக்காரரைத் தீவிரப் படுத்துதல், தாமதிப்போரின் ஒப்பந்தம் ரத்தாதல், பணிகளில் ஏய்ப்போரையும் ஏனோதானோவென வேலை செய்வோரையும் கண்காணித்தல் இவைகளில் மெத்தனம், பின் வாங்கும் நிலையும், மென்மையான கண்டிப்பும் தவிர்க்கப்பட வேண்டும்.
நாட்டின் தூர திருஷ்டமோ பிற காரணங்களோ தெரியவில்லை. திறமைசாலிகள் நாணயமில்லாதவர்களாகவும், நாணயமானவர்கள் திறமையற்றவர்களாகவும் ஆட்சியின் மேல்மட்டத்தில் இருக்கிறார்கள். லாலுபிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது நினைத்துப் பார்க்க முடியாத அபரிமிதமான வருவாயை (லாபத்தை) எட்டியது.
யாருக்கு எப்பணியைத் தரவேண்டும் என்பதில் சரியான முடிவெடுத்தல் தலைமைக்கு அவசியம் தேவை. ஒவ்வொரு துறையிலும் அதில் வல்லவர்கள் ஈடுபாடுள்ளவர்கள் எல்லாவற்றிலும் நேர்மையானவர்கள் எனத் துல்லியமாகக் கண்காணித்து அவர்களுக்கு அப்பணிகளை ஒதுக்குவது தலைமையின் முக்கியமான பொறுப்பு.
இதனை, இதனால், இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
(குறள் எண்.517)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வள்ளுவப் பெருமாணார் அறிவுரையை நமது அமைச்சர்கல், உயர்மட்ட அதிகாரிகள் சற்றேனும் எண்ணிப் பார்ப்பார்களா?