சித்ரவீணை உலகின் மிகப் பழமையான இசைக்கருவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற கோட்டுவாத்யம் நாராயண ஐயங்காரின் பேரனும் சித்ரவீணா நரசிம்மனின் மகனுமான சித்ரவீணா ரவிகிரண், இரண்டு வயது பால்யத்திலேயே 325 ராகங்களையும் 175 தாளங்களையும் இனம் காண முடிந்ததென்னும் சங்கீத வரலாறு கர்நாடக இசை ரசிகர்கள் நன்கறிந்த சமாசாரம். தனது ஆறு வயதிலேயே ”அருள் இசைச் செல்வன்” என்று பட்டம் பெற்றவர் ரவிகிரண். நேற்றைக்கு (17-12-2014) இந்த அருள் இசையில் நாரத கான சபா மூழ்கியது.
ஸரஸீஸுஹாசனப்ரியே என்கிற நாட்டை ராகத்திலமைந்த புலியூர் துரைசுவாமி ஐயர் க்ருதியில் இன்றைய கச்சேரியை அமர்க்களமாகத் தொடங்கினார்.
ஸ்ரீரஞ்சனி ராகத்திலமைந்த த்யாகராஜரின் புவினிதாசுடனே க்ருதி -- "அறிவார்ந்த சான்றோர்களின் மனதைத் திருடும் ஓ இறைவனே! நான் இப்பூவுலகில் என்றும் உனது தாசன் என்று பெருமிதம் கொள்வது எனது பேராசையில்தானா?" என்கிற உருக்கமான பாடலின் பாவத்தை நம் மனக்கண் முன் கொண்டு நிறுத்தினார். சித்ரவீணை பாடியது.
கன்னட ராகத்திலமைந்த ஸ்ரீ மாத்ருபூதம் க்ருதி அற்புதமாய் வாசித்ததும், அதன்பின் பூபாள ராகத்தில் "விதியின் விந்தை அறிந்தவர் யாரோ, விதியின் லீலையை வென்றவர் யாரோ" என்கிற பல்லவியைப் பாடி, சித்ரவீணையில் வாசித்ததும் விதியின் விளையாட்டாக இருக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவத்திற்குத் தாயுமானவரான மாத்ருபூதேஸ்வரர் குறித்த க்ருதி. அதன்பின் விதியின் விந்தையைப் பற்றிய பாடல். ஏனோ நேற்றைய அண்டைநாட்டுத் துர்நிகழ்வு கேட்பவர் மனதில் ஓர் நிமிடம் ஊடாடியது.
காம்போஜி ராகத்தில் விஸ்தாரமான, கிளி கொஞ்சும், அழகான ஆலாபனை. லால்குடி விஜயலக்ஷ்மியின் அமைதியான அழுத்தமான வயலின் வாசிப்பு. த்யாகராஜரின் எவரிமாட க்ருதி -- ராமனிடம் உருகி வேண்டி இப்பூவுலகிற்குப் பக்தர்களை ரட்சிக்கும் பொருட்டு எப்போது வருவாய் என விண்ணப்பிக்கும் உருக்கமான வரிகள்.
ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் அவர்களின் மிருதங்கம் மற்றும் SV ரமணி அவர்களின் கடம் - பொறிபறக்கும் சரவெடித் தனியாவர்த்தனம். சுண்டி இழுக்கும் லயப் பிரஸ்தாபங்களினால் வழக்கமான ’தனி’ வெளிநடப்புக்கு மாறாக, பெருவாரியான ரசிகர்கள் தாளத்துடன் தொடை தட்டி ரசித்தது செவியோடு சேர்த்து கண்ணுக்கும் அழகாகயிருந்தது.
சாவேரி ராகத்திலமைந்த ஜாவளி மற்றும் 'கண்ணன் வருகின்ற நேரம்' காவடிச் சிந்து இவற்றுடன் கச்சேரியை நிறைவு செய்தார்.
கச்சேரியின் விசேஷமாக ராக ஆலாபனை அல்லது க்ருதி பூர்த்தியான பின்னர் அதன் பெயரை அறிவித்தது இதுவா அதுவா என்று ராக ஆராய்ச்சியிலிருந்த ரசிகர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.