மார்கழி இசைத் திருவிழா 2014!

கர்நாடக சங்கீத ரசிகரின் டைரிக் குறிப்பிலிருந்து: வி. ஸ்ரீராம் – ”கானகலாதர” மதுரை மணி ஐயர்

சென்னை இசை விழாவில் ஒவ்வொரு வருடமும் இசை நுண்ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி.....

ராஜகோபாலன் வெங்கட்ராமன்

சென்னை இசை விழாவில் ஒவ்வொரு வருடமும் இசை நுண்ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி -- திரு. ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் அவர்களின் இசை மற்றும் இசைக்கலைஞர்கள் பற்றிய அரிய சொற்பொழிவு.

தங்களது குடும்ப நிறுவனம் மற்றும் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமை அதிகாரியாகப் பணிபுரியும் இவர், சென்னை மாநகர் மற்றும் கர்நாடக சங்கீதம் இவையிரண்டின் வரலாற்றில் அலாதியான ஆர்வம் கொண்டவர். எட்டு புத்தகங்களும் எண்ணற்ற கட்டுரைகளும் எழுதியுள்ள இவர், சென்னையின் பல்வேறு இடங்களிலும் "ஹெரிடேஜ் வாக்" என்றழைக்கப்படும், அந்தந்த பகுதியின் வரலாறு மற்றும் கலாச்சார அம்சங்களை எடுத்துக்கூறும் நடைப்பயணங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

நேற்று (21/12/2014) காலை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள "டாக் சென்டரில்" இவரது சொற்பொழிவு “கானகலாதர” மதுரை மணி ஐயர் குறித்து நடைபெற்றது. அரங்கை முழுவதுமாய் நிறைத்துத் திரளாகக் குழுமியிருந்த ரசிகர்களில் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன், இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமண்யன் போன்ற நட்சத்திரங்களும் உண்டு. டாக் சென்டர் ஆர்.டி. சாரி இளம் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் புரவலர். அகாதமியின் ஒத்துழைப்போடும் இசை ஆர்வலர்களின் பங்களிப்போடும் “டாக் ஆர்க்கைவ்ஸ்” என்று ஒலிக்கூடமைத்து அதில் பழங்கால சிறந்த கச்சேரிகளை ரசிகர்கள் கேட்டு இன்புறும்படி அமைத்திருப்பது கர்நாடக சங்கீதத்திற்கான இவரது விசேஷ சேவை.

அப்பழுக்கற்ற ஆங்கிலத்தில், நுண்ணிய நகைச்சுவை இழையோடும் தெளிந்த நீரோடை போன்றது வி. ஸ்ரீராமின் பேச்சு. சுவையான சம்பவங்களும், பல்வேறு நிகழ்ச்சிகளும், நிகழ்ந்த வருடங்களும், பல்வேறு ஆளுமைகளும் அவர்கள் வாழ்வியல் குறித்த சிறப்புத் தகவல்களும் இவரது விரல்நுனியில்.

சொற்பொழிவிலிருந்து சில துளிகள்:–

மதுரை மணி ஐயருக்கு ரசிகர்கள் என்று யாரும் இல்லை. அனைவருமே அவரது 'வெறியர்கள்'.1912ல் மதுரையில் பிறந்த மணி ஐயரது சிற்றப்பா புஷ்பவனம் ஐயர் ஓர் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார். ஆரம்ப நாட்களில் இவர் ராஜம் பாகவதர் மற்றும் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ஆகிய இருவரிடம் இசை பயின்றார்.

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மற்றும் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் இவர்கள் இருவரது சங்கீதமும் சிறுவயதிலேயே மணி ஐயரை மிகவும் கவர்ந்தன.

மணி ஐயரின் தந்தையார் ராமஸ்வாமி ஐயர் இசை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார். 1927ல் ம்யூசிக் அகாதமியின் முதல் இசை விழாவில் இசைக்கட்டுரை ஒன்றை அவர் வாசிக்க, அவருடன் சென்றிருந்த மணி ஐயர் முதல்முறையாக அங்கே பாடினார்.

இவரது 16ம் வயதில் தந்தையார் காலமாகிவிட, குடும்பப் பொறுப்பு இவரிடம் வந்துவிடுகிறது. மூன்று சகோதரிகளில் இருவர் இவருக்கு இளையவர்கள். அக்கால வழக்கப்படி  அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் கடமையை ஏற்றுக்கொள்ளும் இவர் தமது இறுதிக்காலம் வரையில் திருமணமே செய்துகொள்ளவில்லை.

மதுரையிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்ததும் பாபநாசம் சிவனிடமும் TL வெங்கடராம ஐயரிடமும் சிட்சை பயின்றார். ஆரம்ப நாட்களிலிருந்து திருவாலங்காடு 'சுஸ்வரம்' சுந்தரேசன், பழனி சுப்ரமணிய பிள்ளை இவர்களிருவரும் மணி ஐயருடன் தொடர்ந்து உடன் வாசிக்கின்றனர். 1940களில் இவருக்குக் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் தெய்வாதீனமாக இவரது குரல் இன்னும் வளமை அடைந்து மேலும் மெருகடைகிறது.

இதன் காரணமாக இவரது ஆலாபனை மற்றும் ஸ்வரப்ப்ரஸ்தாரங்களில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெட்டிப் பாடுவது போன்ற ஒரு தனித்துவமான வழியை இவர் கையாண்டது இசை விமர்சகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் ரசிகர்கள் இவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பளித்து இவரது சங்கீத மழையில் நனைந்தனர்.

ஒருமுறை இவர் பம்பாய் சென்றிருந்தபோது தாராவி வாழ் குடிசைவாசிகள் பலரும் மரங்கள் மீதேறி இவரது கச்சேரியைக் கேட்டு மகிழ்ந்தனர் என்பது அந்நாளில் மிகப் பிரசித்தம். பாமரர் முதல் பண்டிதர் வரை இவரது இசை அனைவரையும் சுண்டி இழுத்தது. இவரது கச்சேரி நேரத்தில் ரிக்ஷாக்காரர்கள் பலரும் சவாரிக்குச் செல்லவும் மறுத்ததாகக் கூறுவர்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சென்னையிலிருந்து பலரும் வெளியேறுகையில் இவர் மாயவரத்தில் சில வருடங்கள் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில்தான் இவருக்கு தஞ்சையில் 'கான கலாதர' என்கிற பட்டம் வழங்கப்படுகிறது. இவ்விழாவிற்கு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற மூத்த இசைக்கலைஞர்கள் சென்று இவரைக் கெளரவித்தனர்.

ஜோசியத்தில் தீவிர நம்பிக்கையுடைய இவருக்கு உயர்தர வெளிநாட்டுக் கைக்கடிகாரங்கள் மிகவும் விருப்பம்.  கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த இவர் ஆங்கில நாவல்களும் -- குறிப்பாக சார்ல்ஸ் டிக்கன்ஸ் நாவல்களை விரும்பிப் படிப்பார்.

மணிக்கொடி எழுத்தாளர் வராவிடம் நட்பு கொண்டிருந்த இவர் ஏராளமான தமிழ்ப் பாடல்களையும் பாடி வந்தார். தமிழிசைச் சங்கத்தின் முதலாண்டுகளில் இவர் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். கல்கி அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இவர் சங்கீத உலகில் அனைவருக்கும் நண்பராக விளங்கினார்.

GNB அவர்கள் சங்கீத கலாநிதி விருது பெறப் போகும் விஷயம் தெரிந்தவுடன் உடனே மதுரை மணி ஐயர் வீட்டிற்குச் சென்று அவரிடமே முதலில் இதைத் தெரிவிக்கிறார். மிக்க மகிழ்ச்சியடைந்த ஐயர் பால்பாயசம் செய்து இதைக் கொண்டாடவேண்டுமென அவரது சமையல்காரருக்கு உத்தரவிடுகிறார்.

அதற்கடுத்த வருடம் இவருக்கு சங்கீத கலாநிதி விருது கிடைத்தவுடன் எழுத்தாளர் சிட்டியே தனது ஏற்புரையை வாசிப்பார் என இவர் வேண்டிக்கொள்ள (இவரது கண் பார்வை மங்கிவிட்டதால்)  அகாதமி அதை மறுத்து விடுகிறது. விருது பெறுபவரோ அல்லது அவரது குடும்பத்தினரில் யாரேனும் ஒருவரோதான் ஏற்புரையை வாசிக்கமுடியும் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட, இவரது ஏற்புரையை இன்றும் சங்கீத உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இவரது மருமகனான திரு TV' சங்கரநாராயணன் அவர்கள் படிக்கிறார்.

எந்தவிதமான சங்கீத அரசியலிலும் ஈடுபடாத இவருக்கு சங்கீத உலகில் அனைவருமே நண்பர்கள்தாம். சங்கீதம் ஒன்றே தனது மூச்சாக வாழ்ந்த இவர் என்றும் ரசிகர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற நாதயோகியாகவும் 'மதுர' மணியாகவும் போற்றப்படுகிறார்.

- புகைப்பட உதவி: ஸ்ரீமதி மோகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT