கர்நாடக இசையின் அருஞ்செய்திகளில் ஆர்வமுடைய இசை நுண்ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நிகழ்ச்சியான திரு. ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் அவர்களின் இசை மற்றும் இசைக்கலைஞர்கள் பற்றிய சொற்பொழிவு நேற்றைய தினம் (28-12-14) ஆழ்வார்ப்பேட்டை டாக் சென்டரில் (TAG Centre) ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’ பாலக்காடு மணி ஐயர் சரித்திரமாக விரிந்தது.
இசை, வரலாறு மற்றும் நிர்வாகவியல் தொடர்பான பத்து புத்தகங்களும் எண்ணற்ற கட்டுரைகளும் வி.ஸ்ரீராம் எழுதியுள்ளார். ம்யூசிக் அகாதமியைப் பற்றிய இவரது புத்தகம் அகாதமியின் வரலாற்றுப் பின்னணியை அருமையாக விவரிக்கும் ஓர் அற்புதமான ஆவணம். கர்நாடக இசை ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்கவேண்டிய முக்கியமான புத்தகம்.
டாக் (TAG) நிறுவனங்களின் உரிமையாளர் திரு RT சாரி அவர்களின் ஆதரவுடன் இயங்கும் 'தென்னிந்திய தொன்மரபு அறக்கட்டளை' (South Indian Heritage Trust) சார்பாக நடைபெறும் சொற்பொழிவுகள் வரிசையில் நடைபெற்ற 158ஆவது சொற்பொழிவு இது. இதே மேடையில் திரு ஸ்ரீராம் அவர்கள் நிகழ்த்திய 26ம் சொற்பொழிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரளமான ஆங்கிலத்தில், ஆங்காங்கே நுண்ணிய நகைச்சுவை இழையோட, மணி ஐயர் சம்பந்தப்பட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், சுவையான சம்பவங்களையும், அவருடன் நெருங்கிப் பழகிய, அவரது இசை வாழ்வின் போக்கில் முக்கியப் பங்காற்றிய பல்வேறு ஆளுமைகளையும் குறித்த விசேஷத் தகவல்களையும் அனாயாசமாகப் பிரவாகித்தார் ஸ்ரீராம்.
செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரால் பிறவிமேதைகள் என்று புகழப்பட்ட மூன்று கலைஞர்களில் ஒருவர் பாலக்காடு மணி ஐயர். மற்ற இருவர் -- புல்லாங்குழல் மாலி மற்றும் நாகஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை.
1912ம் வருடம் ஜூன் மாதத்தில் கேரளாவில் திருவில்வமலை மாவட்டத்தில் பழையனூர் என்கிற கிராமத்தில் பிறந்த மணி ஐயரின் இயற்பெயர் TS ராமஸ்வாமி.
சாத்தாபுரம் சுப்பையர் என்பவரிடம் தனது ஆரம்ப சிட்சையைப் பயின்ற இவருக்குத் தமது எட்டாம் வயதிலேயே பாலக்காடு கணபதி ஆலயத்தில் முதல் கச்சேரியை நிகழ்த்தும் வாய்ப்பு கிட்டியது.
இவரது மேதமையையும் பாண்டித்தியமும் நன்குணர்ந்த செம்பை வைத்யநாத பாகவதர் இளம் வயதிலேயே இவரை அடையாளம் கண்டுத் தமக்குப் பக்கவாத்தியம் வாசிக்க உடன் கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்கிறார்.
தமது பத்தாம் வயதிலேயே பல்வேறு இடங்களுக்கும் கச்சேரிகளுக்குச் செல்ல ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்ய நேரிடுகிறது - டிக்கட் பரிசோதர்கள், பெரியவர்கள் துணையின்றித் தனியே பிரயாணிக்கும் இவரை வீட்டிலிருந்து தொலைந்துவிட்ட சிறுவன் என்று தப்பிதமாய்ப் பிடித்து வைத்துக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு!
இவரது வாழ்வில் மூன்று கிருஷ்ணமூர்த்திகள் முக்கியப் பங்களிக்கின்றனர். முதலாமவரான PG கிருஷ்ணமூர்த்தி என்னும் சுதந்திரப் போராட்ட வீரர், பள்ளியில் சென்று முறையாகக் கல்வி பயிலாத மணி ஐயருக்குக் கணிதமும் தமிழும் இன்னபிற வாழ்க்கைப் பாடங்களையும் கற்பிக்கும் ஆசானாகிறார்.
தஞ்சாவூர் பாணி மிருதங்க வாசிப்பில் தமது மகன் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற தந்தையார் சேஷம் பாகவதரின் எண்ணப்படி தஞ்சாவூர் பாணியில் அன்று கொடிகட்டிப் பறந்த வைத்யநாத ஐயரிடம் குருகுலவாசம் செல்கிறார்.
புதுக்கோட்டை பாணியில் புகழ்பெற்ற கஞ்சிரா விற்பன்னர் இலுப்பூர் பஞ்சாமிப் பிள்ளையுடனான இவரது முதல் கச்சேரி அனுபவம் குறிப்பிடத்தக்கது - பிள்ளையவர்கள் மிருதங்க வித்வான் வழக்கமாக உட்காரும் இடத்தைச் சிறியவரான மணி ஐயருக்கு விட்டுத் தராமல் அங்கு உட்கார்ந்தபடி வாசிக்க, மணி ஐயர் அசராமல் மேடையோரத்தில் சிலைபோல நின்றார். இப்படியே சற்று நேரம் தொடர, இதைக் காணப் பொறுக்காத செம்பையவர்கள் மணியைத் தமது பக்கத்தில் அமர்ந்து வாசிக்கும்படிப் பணிக்க, பிள்ளையவர்களும் தமது தவறை உணர்ந்து இவருக்குரிய இடத்தையளித்து விலகுகிறார்.
சென்னை ஜகன்னாத பக்த சபையின் சார்பில் அதன் போஷகர் திரு ராமையா செட்டி அவர்கள் தங்க மெடல் ஒன்றை அணிவித்துப் 'பாலக்காடு மணி ஐயர்' என்று இவரை மரியாதையுடன் விளிக்க, அன்றுமுதல் இன்றுவரை இவர் இப்பெயராலேயே அறியப்படுகிறார்.
தமது பன்னிரெண்டாம் வயதில் அன்றைய சங்கீத உலகின் சாம்ராட் அரியக்குடி ஐயங்காருக்கு முதலில் வாசிக்கிறார். அவரது சங்கதிகளுக்கு அவருக்கு இணையாக வாசிப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, ஐயங்காரவர்களின் பல்வேறு கிராமபோன் இசைத்தட்டுகளைக் கேட்டுக் கடுமையான சாதகத்தில் ஈடுபட்டுத் தம்மைத் தயார் செய்து கொள்கிறார். வெகுவிரைவில் அரியக்குடி-பாப்பா வேங்கடராமையா-மணி ஐயர் என்கிற சங்கீத மும்மூர்த்திக் கூட்டணியாக இசையுலகில் கோலோச்ச ஏதுவாகிறது.
இசையுலகில் புயலாய் நுழைந்து அக்கால இளைஞர்களின் உள்ளங்களை வசீகரித்த GNB அவர்களுடன் இவருக்கு ஆரம்ப காலமுதலே சிறந்த நட்பு உருவாகிறது. தஞ்சாவூரில் அந்நாட்களில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஆனந்தா லாட்ஜில் GNB மற்றும் மணி ஐயர் இருவரும் பலநாட்கள் தங்கி அதன் நிறுவனர் 'கிட்டப்பா ஐயர்' அவர்களிடம் நீண்டகாலம் நீடிக்கும் நட்பு உருவாகிறது. இவர் இரண்டாவது கிருஷ்ணமூர்த்தி.
மதுரை மணி ஐயர் - லால்குடி ஜெயராமன் - பாலக்காடு மணி ஐயர் என்கிற கூட்டணியும் பிரபலமடைகிறது. 1940களில் புதுக்கோட்டை பாணியின் உச்சமாகக் கருதப்படும் பழனி சுப்ரமணிய பிள்ளை அவர்கள் கச்சேரி மேடைகளில் பிரவேசிக்க, ஓர் ஆரோக்யமான போட்டிச் சூழல் வளர்கிறது. மணி ஐயரின் மிருதங்கத்திற்கு பழனி அவர்கள் கஞ்சிரா வாசிக்கவும் தயங்கவில்லை.
இவர் மிருதங்க வாசிப்பில் காட்டிய முனைப்பிற்கும் உழைப்பிற்கும் நிகராக மிருதங்கங்களைப் பராமரிப்பதிலும் காட்டி வந்தார். சோமு ஆசாரி, 'பர்லாந்து' என்றழைக்கப்பட்ட பெர்னான்டெஸ் போன்றவர்கள் அடங்கிய பெருங்குழு ஒன்று 200க்கும் மேற்பட்ட மிருதங்கங்களை நிர்வகித்து வந்தது. அவ்வப்போதைய கச்சேரியின் பிரதான பாடகரின் ஸ்ருதிக்கேற்ற சில மிருதங்கங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு அவர்களது.
இத்தருணத்தில் இவரது வீட்டுப் பொறுப்பை நிர்வகித்து வந்த -- இவரது வாழ்வில் முக்கியப் பங்களித்த மூன்றாமவது கிருஷ்ணமூர்த்தியான -- 'கிட்டா ஐயர்', ரயில்வண்டிகளில் 200க்கும் மேற்பட்ட மிருதங்கங்களுடன் பர்லாந்துவை அனுப்பி, இரண்டு புகைவண்டி நிலையங்களுக்கிடையே கிடைக்கும் ஒருமணி நேர அவகாசத்தில் மணி ஐயரைச் சந்தித்து கச்சேரிகளுக்குத் தேவையான சில மிருதங்கங்களைத் தேர்தெடுத்துச் செல்ல உதவுவார்.
புகழின் உச்சியில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு முறை இவரைச் சந்திக்கச் சென்றார். இருவரும் பேசிக்கொள்ள விஷயங்கள் அதிகமின்றி, அவர் திரும்பிச் சென்றதும் இவர் அருகிலிருந்தவரைப் பார்த்து “என்னவாக்கும் ஜோலி பண்றா இவா?" என்று பாலக்காட்டுத் தமிழில் வினவியது ஓர் சுவாரஸ்யமான சம்பவம்.
விருதுகளை என்றுமே ஒரு பொருட்டாக மதியாத இவரைத் தேடி விருதுகள் வந்ததில் வியப்பேதுமில்லை. இந்திய அரசின் பத்மபூஷண் விருது, ம்யூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி விருது - மிருதங்கக் கலைஞருக்கு முதல் முறையாக - என விருதுகள் இவர் பின்னால்.
அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் மறைவு இவரைப் பெரிதும் பாதித்தது. சில வருடங்கள் முன்பாகவே பழனி சுப்பிரமணியப் பிள்ளையும் காலமாகி விட்டிருந்தார். சௌடையா, மதுரை மணி ஐயர், GNB என இவரது சமகாலத்திய கலைஞர்கள் ஒவ்வொருவராய் இறைவனடி சேர, பெரிதும் மனமுடைந்த இவர் அதன்பின் அப்போது வளர்ந்துவரும் கலைஞர்களான பாலக்காடு KV நாராயணசுவாமி, DK ஜெயராமன் போன்ற பாடர்களைப் பெரிதும் ஊக்குவித்தார். பெண் கலைஞரான DK பட்டம்மாள் அவர்களுக்கு வாசிக்க ஆரம்பித்துப் பின்னர் ML வசந்தகுமாரியைக் கண்டெடுப்பதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.
1981ம் வருடம் மே மாதம் 31ம் தேதி தட்சிணாமூர்த்திப் பிள்ளையவர்கள் தம்மை அழைக்கவருவாதக் கூறி சில கணங்களில் உயிர் நீத்தார். அன்றும் இன்றும் என்றும் அவரது சுநாத ஒலியால் உலகெங்கும் உள்ள ரசிகர்களின் மனங்களில் மிருதங்கச் சக்கரவர்த்தியாய் கோலோச்சி வரும் மாபெரும் உன்னதக் கலைஞரான இவரால் மிருதங்கக் கலைக்கே ஓர் புத்துணர்வு ஏற்பட்டதென்றால் அது மிகையல்ல.
- புகைப்பட உதவி: ஸ்ரீமதி மோகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.