கர்நாடக சங்கீதம் பற்றி நல்ல புரிதலுள்ளவர்களிடம் இன்றைய வாய்ப்பாட்டுக் கலைஞர்களில் யாருடைய சங்கீதம் உசத்தியானது என்று கேட்டுப் பார்த்தால் அதில் பெரும்பாலானவர்களின் தேர்வு விஜய் சிவாவாகத்தான் இருக்கும். தனது நான்காவது வயதிலேயே ராகங்களை அடையாளம் காணும் குழந்தை வித்தகராக இருந்த விஜய் சிவா, டி.கே. பட்டமாளிடமும் அவரது சகோதரர் டி.கே. ஜெயராமனிடமும் சங்கீதப் பயிற்சி பெற்றவர். வாய்ப்பாட்டு மட்டுமல்லாமல் கும்பகோணம் ராஜப்பா அய்யரிடம் மிருதங்கத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பவர். நான்கு மணி நேரம் ராகம், தானம், பல்லவி பாடவும், அதேபோல தமிழ் சாகித்யங்களை மட்டுமே கையாண்டு நான்கு மணி நேரம் இசை வினிகையை நடத்தவும் முடிந்த அசாத்திய இசை நிபுணர் விஜய் சிவா.
சாஸ்த்ரீய சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற பலரும் இசை மேடைகளில் வெற்றி பவனி வருவதில்லை. அவர்கள் இசை ஆசிரியர்களாகப் புகழ் பெறுவார்களே தவிர, இசைக்கலைஞர்களாக ரசிகர்களின் பாராட்டைப் பெறுவது அரிது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் மாலை 6.30 மணிக்கு நடந்த விஜய் சிவாவின் இசை வினிகைக்கு யாராவது வந்திருந்தால், மேலே சொன்ன கருத்தை மறுத்திருப்பார்கள். அப்படியொரு கூட்டம் என்பது மட்டுமல்ல, பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள் என்பதுதான் உண்மை.
இம்மியும் சாஸ்த்ரீய மீறல் இல்லாத விஜய் சிவாவின் சங்கீதம் சாமானிய ரசிகர்களையும் கட்டிப் போடுகிறது என்று சொன்னால் அவரது திறமைக்கு நாம் தலைவணங்கத்தான் வேண்டும். ஆர்.கே. ஸ்ரீராம்குமார் வயலின், திருச்சி சங்கரன் மிருதங்கம், சந்திரசேகர சர்மா கடம் என்று அன்றைக்கு பக்கவாத்தியம் அமைந்திருந்தது.
"ஹம்சத்வனி' ராகத்தில் "கங்கணபதே' என்கிற சாகித்யத்தில் "பங்கஜாசனாதி வந்தித' என்கிற இடத்தில் நிரவல் பாடி, "கங்கணபதே' என்கிற பல்லவியில் கல்பனாஸ்வரம் பாடினார். வித்தியாசமாக இருந்தது.
"ஆனந்தபைரவி'யில் சியாமா சாஸ்த்ரியின் "ஓ ஜகதம்பா' பாடிவிட்டு, "மாயாமாளவ கெüளை' ஆலாபனை. ராகத்தைப் பிழிந்து எடுத்துக் கொடுத்தார் என்று சொல்வார்கள். நிஜமாகவே "மாயாமாளவ கெüளை'யைப் பிழிந்து எடுத்து ரசிகர்களுக்கு ரசமன்புடன் வழங்கினார். முத்துத்தாண்டவரின் "ஆடிக் கொண்டார்'தான் சாகித்யம். அதில் "ஆர நவமணி மாலைகள் ஆட' என்கிற இடத்தில் நிரவல், கல்பனாஸ்வரம். அடுத்து வந்தது 'தர்பார்' ராகத்தில் வாலாஜாப்பேட்டை வெங்கடரமண பாகவதர் இயற்றிய "நீவே நன்னு ப்ரோவ வலே நம்மா' என்கிற பாடல்.
அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் விஜய் சிவா பாடிய "கல்யாணி'. "கல்யாணி'யை யார் ஆலாபனை செய்தாலும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் விஜய் சிவா ஆலாபனை செய்தால் "கல்யாணி'க்கே மோஸ்தர் கூடிவிடுகிறது. இந்த சீசனில் பலர் "கல்யாணி'யைத் தேர்ந்தெடுத்துப் பாடினார்கள். ஆனால், அனைத்திலும் சிறந்தது விஜய் சிவாவின் "கல்யாணி'தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். தியாகராஜ சுவாமிகளின் "நிதி சால சுகமா' சாகித்யத்தில் "சுமதி தியாகராஜ' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு ஸ்வரமும் பாடினார். ரீலிஃபுக்கு "தெலியலேரு ராமா' (தேனுகா).
"காபி' ராகத்தில் ராகம், தானம், பல்லவி. "பீதாம்பர தர ப்ரிய நாயிகாம் மாம்பாதும் ராதிகாம்' என்கிற ஆதிதாள பல்லவி. விஜய் சிவா சிம்பிளாக ஆதிதாளத்தில் அமைந்த பல்லவியைத் தேர்ந்தெடுத்து ரா.தா.ப. பாடியிருக்கிறாரே என்று நினைத்துவிடாதீர்கள். அதில் ஏகப்பட்ட கணக்கு வழக்குகள் இருந்தன என்பதுதான் உண்மை. "கல்யாணி'யும் "காபி'யும் நிகழ்ச்சியின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டுவிட்டன. அதனால்
துக்கடாக்களுக்கு விஜய் சிவாவால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, விஜய் சிவாவின் ரசிகர்கள், "துக்கடா'க்களிடம் எதிர்பார்ப்பது போல அவரிடம் துக்கடாக்களை எதிர்பார்ப்பது இல்லை! தனியாவர்த்தனத்துடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்.
சங்கீதம் என்று சொன்னால், இது சங்கீதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.