மார்கழி இசைத் திருவிழா 2014!

உலாவுக்கு விடை...

கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய நமது இசை உலா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 16 நாள்கள் இசை மேடைகளை வலம் வந்து, கலைஞர்கள் பலருடைய நிகழ்வுகளைப் பற்றிய நமது கருத்துகளைப் பதிவு செய்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த ஆண்டைவிட மூன்று நாள்கள் அதிகமாகவே நம்மால் விமர்சனங்களைப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.

தினமணி

கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய நமது இசை உலா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 16 நாள்கள் இசை மேடைகளை வலம் வந்து, கலைஞர்கள் பலருடைய நிகழ்வுகளைப் பற்றிய நமது கருத்துகளைப் பதிவு செய்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த ஆண்டைவிட மூன்று நாள்கள் அதிகமாகவே நம்மால் விமர்சனங்களைப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.

நமது இசை உலாவின் அடிப்படை நோக்கம் சங்கீதத்தை மேம்படுத்துவது என்பதுதான். நாம் விமர்சிக்க முற்படும் எல்லா இசை வினிகைகளையும் முழுமையாகப் பதிவு செய்வது என்பதை ஒரு தனித்துவமான பாணியாகவே கையாள்கிறோம். ஒவ்வொரு கலைஞரும் இன்னின்ன ராகங்களைக் கையாண்டனர், இன்னின்ன சாகித்யங்களைப் பாடினார்கள், ராகம், தானம், பல்லவியைக் குறிப்பிட்ட தாளத்தில் அமைத்துக் கொண்டனர் என்பது மட்டுமல்லாமல், முடிந்தவரை வாக்கேயகாரர்களின் பெயரையும் குறிப்பிடுகிறோம்.

வளரும் இளைய கலைஞர்கள் என்னென்ன ராகங்கள், சாகித்தியங்கள் இசை மேடைகளில் கையாளப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள நமது விமர்சனங்கள் உதவுகின்றன. அதுமட்டுமல்ல, சக கலைஞர்களும் என்னென்ன ராகங்கள், சாகித்தியங்கள் கையாளப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள நமது விமர்சனங்கள் பயன்படும்.

கடந்த 16 நாள்களில் 53 கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நமது விமர்சன நுண்ணாடியில் (மைக்ரோஸ்கோப்) ஆய்வு செய்யப்பட்டன. இந்த முறை ஓரளவு வளர்ந்த கலைஞர்களையும், வளர்ந்துவிட்ட கலைஞர்களையும் மட்டும்தான் விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டோம் என்பது உண்மை. ராமகிருஷ்ண மூர்த்தி, பரத் சுந்தர், ரித்விக் ராஜா, சந்தீப் நாராயண், லாவண்யா சுந்தரராமன், கே. காயத்ரி, ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், சின்மயா சகோதரிகள், அக்கரை சகோதரிகள் போன்றோர் இளைய தலைமுறைக் கலைஞர்களாக இருந்ததுபோய் இப்போது ஓரளவு வளர்ந்துவிட்ட கலைஞர்களாகி விட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பது அவசியம் என்று கருதியதுதான் அதற்குக் காரணம்.

இந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமான வரவேற்பைப் பெற்றவர்கள் யார் யார் என்று கேட்டால், நாம் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்ட எல்லா கலைஞர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்றுதான் கூற வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அபிஷேக் ரகுராமும், ரஞ்சனி - காயத்ரியும் ரசிகர்களின் அபரிமித ஆதரவைப் பெற்றிருந்தனர்.

புதிய திறமை என்று எடுத்துக் கொண்டால் சாஸ்வதி பிரபுவைக் குறிப்பிட வேண்டும். ரித்விக் ராஜாவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல, அமெரிக்க இந்தியரான கிருதி பட் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த இளைய தலைமுறைக் கலைஞர்களில் ஒருவர்.

அதிகமாக இசைக்கப்பட்ட ராகங்கள் சாவேரி, கல்யாணி, சஹானா, சுத்த தன்யாசி ஆகியவை. ஒவ்வொரு சீசனிலும் பல இசைக் கலைஞர்களால் சில ராகங்கள் சொல்லி வைத்தாற்போல விரும்பிக் கையாளப்படுவது எப்படி என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் சில அபூர்வ ராகங்களும், அதிகம் பாடப்படாத சாகித்தியங்களும் இசைக்கப்படுவதும் சங்கீதத்தின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

மின்னி மறையும் திரையுலக நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய முக்கியவத்துவம் ஊடகங்களால் அளிக்கப்படும்போது, கலைவாணியின் அருள் பெற்ற இசைக் கலைஞர்களுக்கும் ஏன் அப்படியொரு அந்தஸ்தையும், மரியாதையையும் அளித்து உற்சாகப்படுத்தக் கூடாது என்கிற நமது தார்மிக உணர்வின் வெளிப்பாடுதான் "கலாரசிகனின்' இசை உலா. அந்த நோக்கம் இந்த ஆண்டும் செவ்வனே நிறைவேறி இருக்கிறது என்கிற ஆத்ம திருப்தியுடன் விடைபெறுகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT