பெண்கள் மிருதங்கம் வாசிப்பது என்பது மிகவும் அபூர்வம். ஆண்கள் மட்டுமே வாசித்து வந்த தாள வாத்தியக் கருவியில் பெண்களும் தேர்ச்சி பெற முடியும் என்று நிரூபித்தவர் டி.எஸ். ரங்கநாயகி அம்மாள். புதுக்கோட்டை ஆஸ்தான வித்வானாக இருந்த சிவராம நட்டுவனாரின் இரண்டாவது மகளான ரங்கநாயகி அம்மாள், தனது ஒன்பதாவது வயதிலேயே புதுக்கோட்டை கிருஷ்ணய்யர் மடத்தில் கம்பராமாயண பிரசங்கங்கள் செய்யத் தொடங்கிவிட்டார். 13-ஆவது வயதில் அரங்கேற்றம். ரங்கநாயகி அம்மாளின் அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வயலின் வாசித்தவர் புதுக்கோட்டை சமஸ்தான வித்வான் இலுப்பூர் பொன்னுசாமிப் பிள்ளை.
1926-இல் சென்னையில் நடந்த அகில இந்திய சங்கீத விழாவில் ஒரு வீணை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக ரங்கநாயகி அம்மாள் மிருதங்கம் வாசித்தார். அடுத்த நிகழ்ச்சி
உஸ்தாத் அப்துல் கரீம் கானின் ஹிந்துஸ்தானி சங்கீதம். அவரது பக்கவாத்திய தபலாகாரரின் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், உஸ்தாத் கரீம் கான் சிறுமியான ரங்கநாயகி அம்மாளையே தனக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும்படி வேண்டினார்.
மிகவும் சிரமமான சில ஹிந்துஸ்தானி தாள அமைப்புகளுக்கு அநாயாசமாக ரங்கநாயகி அம்மாள் வாசித்ததைப் பார்த்து ரசிகர்களும் வித்வான்களும் அசந்து போய்விட்டனர். உஸ்தாத் கரீம் கானின் வேண்டுகோளை ஏற்று, அந்த ஆண்டுக்கான சங்கீத வித்வத் சபையின் தங்கப்பதக்கத்தை அதே மேடையில்
ரங்கநாயகி அம்மாளுக்கு வழங்கி கெüரவித்தனர். எப்படி உங்களால் ஹிந்துஸ்தானி தாளக் கோர்வைக்கு வாசிக்க முடிந்தது என்று கேட்டபோது ரங்கநாயகி அம்மாள் சொன்ன பதில்-
""திருப்புகழில் இல்லாத தாளங்களே இல்லை. ஒவ்வொரு சந்தத்துக்கும் ஏற்றபடியான தாளத்தை அருணகிரிநாதர் அமைத்திருக்கிறார். திருப்புகழுக்கு வாசித்துப் பயிற்சி பெற்ற எனக்கு உஸ்தாதுக்கு வாசிப்பது சிரமமாகவே இருக்கவில்லை.''
ரங்கநாயகி அம்மாளுக்குப் பிறகு, அவருக்கு நிகராக மிருதங்கத்தில் தேர்ச்சிப் பெற்ற பெண்மணி யாரும் சங்கீத மேடையில் வலம் வரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.