எம்.எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு அவரைப் போலவே தேன் சொட்டும் சாரீரம் யாருக்கு அமைந்திருக்கிறது என்பதைப் பல்வேறு இசை வினிகைகளைத் தொடர்ந்து கேட்கும் எந்த சங்கீத சபா அமைப்பாளர்களைக் கேட்டாலும், அவர்களின் ஒருமித்த தேர்வு காயத்ரி வெங்கடராகவன் என்பதாகத்தான் இருக்கிறது. சாரீர வளம் மட்டுமல்ல, சங்கீதத்தில் ஆழமும் தொடர்ந்து மூன்று நான்கு மணி நேரம் பாடக் கூடிய வலிமையும் (ஸ்டாமினா) அவருக்கு கிடைத்திருக்கின்ற இறைவரம். காயத்ரி வெங்கடராகவனின் சங்கீதத்தின் தனிச்சிறப்பு அதில் காணப்படும் தெய்விகத்தனம் என்பதுதான் உண்மை.
இந்த சீசனில் மிக அதிகமான நிகழ்ச்சிகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்களில் காயத்ரி வெங்கடராகவனும் ஒருவர். சாரீர வளம் இருக்கிறது, ஸ்டாமினா இருக்கிறது என்பதற்காக தினமும் ஒரு நிகழ்ச்சி என்று ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் காயத்ரி வெங்கடராகவன் போன்ற கலைஞர்களுக்கு நிச்சயமாகக் கிடையாது.
இந்த விஷயத்தில் காயத்ரி வெங்கடராகவன் பாம்பே ஜெயஸ்ரீயிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுவது நல்லது. எல்லா சபாக்காரர்களையும் திருப்திபடுத்த நினைத்து, கடைசியில் ரசிகர்களை அவர் நிர்ந்தரமாக ஏமாற்றிவிடக் கூடும். குறைந்த நிகழ்ச்சிகள் நிறைந்த சங்கீதம் என்பதுதான் நிரந்தர புகழுக்கு உத்தரவாதம் என்பதை காயத்ரி உணர வேண்டிய கட்டம் வந்துவிட்டது.
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் காயத்ரி வெங்கடராகவனின் இசை நிகழ்ச்சிக்கு, எம்.ஆர். கோபிநாத் வயலின், திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம், ஆலத்தூர் ராஜகணேஷ் கஞ்சிரா.
"பைரவி' ராகத்தில் "விரிபோனி' அடதாள வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கி, "மாயாமாளவகெüளை'யில் தியாகராஜ ஸ்வாமிகளின் "துளசிதள' என்கிற சாகித்யம். "சந்தோஷமுகா பூஜிஞ்சு' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனாஸ்வரம் பாடினார். அடுத்து வந்தது சியாமா சாஸ்த்ரி "தன்யாசி'யில் இயற்றிய "மீனலோசனா'. "கானவிநோதினி' என்கிற இடத்தில் கல்பனாஸ்வரம்.
அடுத்தாற்போல் ராக ஆலாபனையில் இறங்குவார் என்கிற நமது எதிர்பார்ப்பு பொய்த்தது. ஊத்துக்காடு வேங்கடகவி "காம்போதி' ராகத்தில் முருகன் மீது இயற்றிய "வாங்கும் எனக்கு இரு கை அருள் உனக்குப் பன்னிரு கை' என்கிற அற்புதமான பாடலைப் பாடினார். காயத்ரி வெங்கடராகவனின் குரலுக்கும் அவரது ஸ்பஷ்டமான உச்சரிப்புக்கும் உணர்வுபூர்வமான சங்கீதத்திற்கும் இருக்கும் சேர்ச்சை ரசிகர்களை ஏதோ இன்னொரு சங்கீத உலகில் சஞ்சரிக்க வைத்துவிடுகிறது. அப்படியொரு உருக்கம்.
விஸ்தாரமான ராக ஆலாபனைக்கு காயத்ரி வெங்கடராகவன் அன்று தேர்ந்தெடுத்துக்கொண்டது "ஸிம்ஹேந்திர மத்யமம்'. ஆலாபனையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! காயத்ரியின் சாரீரம் சர்வசாதாரணமாக திரிகால சஞ்சாரம் செய்வதும், அபாரமான சங்கதிகளை சரவெடிகளைப் போல அவ்வப்போது உதிர்ப்பதும் கேட்டு ரசித்தால்தான் புரியுமே தவிர, வார்த்தையில் வடிக்க முடியாது. அன்றைய ஆலாபனையில் குறைந்தது ஆறேழு இடங்களிலாவது ரசிகர் கூட்டம் சபாஷ் போட்டும் உச்சுக்கொட்டியும் ரசித்தது.
'ராம ராம குணசீமா' என்கிற ஸ்வாதி திருநாளின் சாகித்யத்தில் "முனி மானஸ தாமா' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு ஸ்வரம் பாடினார். காயத்ரி வெங்கடராகவனின் ஸ்வரப்ரஸ்தாரங்களில் அப்படியொரு விறுவிறுப்பு. மேடையில் ஏறிவிட்டால், அவருக்கு காற்றிலிருந்து கற்பனைகள் வந்து விழுமோ என்னவோ? அவரது குரல்வளத்தை எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் ஒப்பிடலாம் என்றால், அவரது ஸ்வரப்ரஸ்தாரங்களை எம்.எல். வசந்தகுமாரியுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.
"ஸிம்ஹேந்திர மத்யமம்' விஸ்தாரமாக ஆலாபனை செய்து பாடிய பிறகு துணிந்து ராகம், தானம், பல்லவியை ஏன் எடுத்துக்கொண்டார் என்கிற சலிப்பே ஏற்படவில்லை என்றால் அதற்கு காயத்ரியின் உசத்தியான சங்கீதம் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும். கண்டஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த "மால்மருகனை முருகனை நினை மனமே உமையாள் மகனை குகனை' என்கிற பல்லவியை அமைத்துக்கொண்டு "வலஜ்', "ஹிந்தோளம்' என்கிற இரண்டு ராகங்களில் ராகம், தானம், பல்லவி பாடத் துணிந்த காயத்ரி வெங்கடராகவனுக்கு முதல் சபாஷ். இதற்கு தைரியமும் வேண்டும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
"மால்மருகனை முருகனை நினை மனமே' என்பதை "வலஜ்' ராகத்திலும் "உமையாள் மகனே குகனை' என்பதை "ஹிந்தோளம்' ராகத்திலும் அமைத்துக்கொண்டு அவர் சாதுரியமாகச் செய்த இரண்டு குதிரை சவாரி அபார சூரத்தனம். தாளக்கட்டும் சாதாரணமானதல்ல. இவ்வளவு கடினமான பல்லவியை சிரித்துக்கொண்டே அவர் கையாண்ட விதம் அதைவிட வியப்பு. "ஷண்முகப்ரியா', "வசந்தா', "கானடா', "சாவேரி', "ரசிகப்ரியா' ஆகிய ராகங்களை ராகமாலிகைக்கு எடுத்துக்கொண்டு கீழ் காலம், திஸ்ரம் பாடி ஒரு ரா.தா.ப. சங்கீத ஜாலத்தை நிகழ்த்திவிட்டார்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் "ஜோன்புரி' ராகத்தில் இயற்றிய "ஆண்டவன் தரிசனமே தியாகேசர் தாண்டவர் தரிசனமே' என்கிற பாடலையும் "காபி' ராகத்தில் "ஜகதோதாரண'வையும் கலகலப்பாகப் பாடி நிகழ்ச்சிக்கு மங்களம் பாடினார். காயத்ரி வெங்கடராகவன் எம்.எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு கர்நாடக சங்கீதத்திற்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.