மார்கழி இசைத் திருவிழா 2014!

கர்நாடக சங்கீத ரசிகரின் டைரிக் குறிப்பிலிருந்து: சஞ்சய் விருந்தளித்த முக்கனிச்சுவை

சஞ்சய் சுப்ரமணியன் அவர்களை கர்நாடக இசை உலகின் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றே சொல்லவேண்டும்.

ராஜகோபாலன் வெங்கட்ராமன்

சஞ்சய் சுப்ரமணியன் அவர்களை கர்நாடக இசை உலகின் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றே சொல்லவேண்டும். ம்யூசிக் அகாதமி, நாரத கான சபை போன்ற நகரின் புகழ் பெற்ற அரங்கங்களில் நடைபெறும் இவரது இசை விழாக் கச்சேரிகள், ரஜினி ரசிகர்களின் தீபாவளி ரிலீஸ் முதல் நாள் முதல் காட்சியைப் போன்ற பரபரப்பையும் எதிர்பார்ப்புகளையும் ஒத்தது.

ஆலாபனைகளிலும் ஸ்வரங்களிலும் இவர் வெளிப்படுத்தும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் இவருக்கே உரித்தான பாணி, ஒவ்வொரு கச்சேரியையும் சரியான திட்டமிடலுடன் அணுகும் இவரது கச்சேரிப் பாங்கு, அபாரமான நினைவாற்றல் - கச்சேரிகளில் பாடும் ஒவ்வொரு க்ருதியும் இவருக்கு மனப்பாடம். - மேடையில் பாடல்வரிகள் எழுதிய தடிமனான நோட்டுப்புத்தகங்களோ அல்லது இன்றைய நவீனமய ஐபாட், மடிக்கணினி போன்ற எந்தவித ஊன்றுகோல்களும் இவருக்குத் தேவையில்லை.

ஆலாபனைகளில் இவர் கையாளும் நாகஸ்வரப் பிடிகள் மிகவும் பிரசித்தம். புகழ்பெற்ற நாகஸ்வர வித்வான் செம்பனார்கோவில் SRD வைத்யநாதன் அவர்களிடமும் இவர் சிட்சை பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற தமிழ்ப் பாடல்களைத் தோண்டி எடுத்து கச்சேரி மேடைகளில் இவர் பாடிவருவது ரசிகர்கள் இவரிடம் மிகவும் எதிர்பார்க்கும் அம்சங்களில் ஒன்று.

நாரத கான சபாவில் வயலினில் மைசூர் நாகராஜ், மிருதங்கத்தில் திருச்சி ஹரிக்குமார் கஞ்சீராவில் ஆலத்தூர் ராஜ கணேஷ் சகிதம்  இவரது கூட்டணி கடந்த 23-12-14 அன்று களமிறங்கியது.

சஹானா ராக வர்ணம், மாயாமாளவகௌள ராகத்தில் 'மேரு சமான' கிருதியில் தொடங்கி, தர்பாரில் ஓர் துல்லிய ஆலாபனை. ‘ராமாபிராமா’ என்ற தியாகராஜர் கிருதியை நேர்த்தியாகப் பாடினார். ஒவ்வொரு கச்சேரியிலும் அதிகம் கேட்டிராத ராகங்களையோ பாடல்களையோ களமிறக்குவதை இவரது சிறப்பம்சமாகச் சொல்லலாம் -- இக்கச்சேரியில் நீதிமதி ராகத்திலமைந்த 'மோகனகர முத்துக்குமர' என்ற கோடீஸ்வர ஐயரின் கிருதி.

விஸ்தாரமான சங்கராபரண ஆலாபனை செய்து தீட்சிதரின் ‘ஸ்ரீ கமலாம்பிகாயாம்’ என்கிற கிருதியைப் பாடினார். ப்ருந்தாவன சாரங்காவில் ராகம் தானம் பல்லவியில் வர்ண ஜாலம் புரிந்தார். 'உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே' என எது உண்மை எது மாயை என்ற தத்துவார்த்தக் கேள்வியை ரசிகர்களுக்கு எழுப்பி ஹமீர்கல்யாணி, பேகடா என ஸ்வரமாலையைத் தொடுத்து அழகு சேர்த்தார்.

சுத்தானந்த பாரதியின் 'பாரில் உயர்ந்த நிலம்' என்கிற அழகிய விருத்தம், புதுவைக்குயில் பாரதிதாசனின் 'என் தாய் வாழ்' வரிகள் பட்தீப் ராகத்தில் சஞ்சயின் குரலில் அரங்கமெங்கும் எதிரொலிக்க, தமிழ்ச் செவிகளில் இன்பத்தேனாறு பாய்ந்ததங்கே!

கிருஷ்ண கான சபை இசை விழாவின் மணிமகுடம் சஞ்சய் அவர்களின் கிறிஸ்துமஸ் தினக் கச்சேரி - கடந்த பலவருதாங்களாக இம்மரபு தொடர்கிறது. வயலின் வரதராஜன், மிருதங்கத்தில் தஞ்சாவூர் ராமதாஸ் மற்றும் பெங்களூர் ராஜசேகர் கூட்டணியில் 25-12-14 அன்று இங்கு இசைமாரி பொழிந்தார்.

‘தேவபாலய முராரே’ என்கிற ஸ்வாதித் திருநாள் கிருதி, தீட்சிதரின் உருக்கமான த்விஜாவந்தி ராகத்திலமைந்த ‘சேதச்ரீ பாலகிருஷ்ணம்’ இரண்டும் மிக நேர்த்தி.

அடுத்த அரை மணி நேரம் தோடி ராக ஆலாபனையில் ரசிகர்கள் நனைந்தனர். சஞ்சயின் அவருக்கே உரித்தான ராக சஞ்சாரங்கள், பிருகாக்கள், சங்கதிகள் என விரிய, வரதராஜன் அவற்றை நிழல்போலப் பின்தொடர ‘கார்த்திகேய காங்கேய’ என்கிற பாபநாசம் சிவனின் தமிழ்க் கிருதி. மத்யம மற்றும் துரித கால ஸ்வரங்களில் அனாயாசமாகப் பயணித்து, தஞ்சாவூர் ராமதாஸ் மற்றும் பெங்களூர் ராஜசேகர் உற்சாகமான தனியாவர்த்தனம்.

ஆனந்த பைரவி ராகத்தில் ராகம் தானம் பாடி ‘முருகைய்யனே பன்னிரு கையனே வள்ளி தெய்வானை மணாளனே’ என்கிற பல்லவி. ராகமாலையாய் சாம, ரஞ்சனி, சிந்துபைரவி என விரிய, 'எந்த வேளையும் கந்தவேளை’த் தொழுது, மத்யமாவதியில் ‘கற்பகமே கண்பாராய்’ என மயிலைக் கற்பகாம்பாளை வணங்கிக் கச்சேரியை நிறைவு செய்தார்.

வெள்ளியன்று (26-12-14) அக்காதமியில் அவரது வழக்கமான கூட்டணியான வரதராஜன் (வயலின்), நெய்வேலி வெங்கடேஷ் (மிருதங்கம்) உடன் களமிறங்க, கஞ்சிராவில் வேங்கடரமணன்.

வழக்கம்போலவே விடியற்காலை நான்கு மணிமுதலே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி, தங்களது ஆதர்ச பாடகரின் அக்காதமி கச்சேரியைப் பரவசத்துடன் எதிர்நோக்கியிருந்த ரசிகர்களால் அரங்கின் மேல்தளம் முழுவதுமே நிறைந்திருந்தது. அதையும் தாண்டி, நடைபாதைகளிலெல்லாம் பிளாஸ்டிக் இருக்கைகளைத் தருவித்து கூடுதலாக ரசிகர்களுக்கு இடமளித்தது அக்காதமி நிர்வாகம்.

கச்சேரியை தர்பார் பத வர்ணத்தில் தொடங்கி குண்டக்ரியா ராகத்தில் ‘இந்தனுசு வர்ணிம்ப’ என்கிற கிருதி இரண்டாவதாக.

ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அழகான ஆலாபனை. ‘ஸ்ரீராமச்சந்திர ரக்ஷதுமாம்’ என்கிற தீட்சிதர் கிருதி. ஸ்ரீராமனின் மிதிலைப் பிரவேசத்தையும் சீதா கல்யாண நிகழ்வையும் வர்ணிக்கும் தீட்சிதரின் அற்புத வரிகள். ஸ்வரங்களில் இவரது தனக்கே உரித்தான சொற்கள். வசீகரிக்கும் மத்யம கால விஸ்தரிப்புகள் மற்றும் துரிதகால அவுட்டுஸ்வர ஜாலங்கள்.

அடுத்ததாக, கல்யாணியில் ராகம் தானம் பாடி ‘மாமயில் வாகனனை அனுதினமும் நினைமனமே’ என்கிற 'சங்கீத கலாநிதி' விருது பெறப்போகும் திரு TVG அவர்களின் பல்லவியை ஆதி தாளம் சதுஸ்ர நடையில் அரங்கமே ஒன்றியைந்து தாளமிசைக்க, நெய்வேலியாரும் வேங்கடரமணனும் சிறப்பான தனி ஒன்றை அளித்தனர்.

அதன்பின் அக்காதமியில் ரசிகர்கள் நனைந்தது செந்தமிழ் நாடென்னும் போதினில் காதினில் பாய்ந்த இன்பத்தேன் மழையில் - சிந்துபைரவி விருத்தம் திருஅல்லிக்கேணி தெய்வம் புகழ் பாடும் ‘விற்பெரு விழவும்’ மூன்றாம் திருமொழி.

ஆபேரி ராகத்தில் ‘கருவுற்ற நாளாக’ தேவார திருப்பதிகம் – ‘திருவற்றியூரனாய் திருவாலவாயானை திருவாரூரானை கச்சியே கம்பனே’ என உணர்வுபூர்வமாய் விரிய, கமாஸ் ராகத்திலமைந்த பாபநாசம் சிவனின் 'திருவளர் மயிலையின்' வரிகளுடன் 'கபாலியே கபாலியே' என்று அரங்கில் எதிரொலிக்க, அருணகிரிநாதரின் திருப்புகழுடன் இந்நிறைவான கச்சேரியை நிறைவு செய்தார்.

முக்கனிச்சுவையாம் மா பலா வாழை போல சஞ்சய் அவர்களின் இம்முக்கனிக் கச்சேரிச்சுவையை ரசித்துப் பருகியதும் ஓர் பேரானந்த ரசிகானுபவமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT