அந்த நாளில் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை வயலின் என்றால் அவ்வளவு உசத்தி. நாயினாப் பிள்ளை பூச்சி சீனிவாச அய்யங்கார், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், முசிரி சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையின் வயலினைத் தங்களுக்கு பக்கவாத்தியமாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். "சங்கராபரண'த்தில் கோவிந்தசாமி பிள்ளை எக்ஸ்பெர்ட்.
அவருக்கு ஜார்ஜ் ஓக்ஸிலிருந்து ஷூ வரும். இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிளாஸ்கோ மல்தான் கட்டுவார். தனது சிரம தசையில் கூட யாரும் தனக்கு தானம் தருவதை ஏற்றுக்கொள்ளாதவர். மானஸ்தர். அவமானத்தை தாங்கிக் கொள்ள மாட்டார். அதே சமயத்தில் ரொம்பவும் இளகிய மனசு.
சென்னையில் ஒரு பெரிய மருந்துக் கடை முதலாளி. அவர் வடநாட்டுக்காரர் என்று நினைவு. அவரது ஒரே பிள்ளைக்கு சித்த பிரமை. என்னவெல்லாமோ மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. அந்தப் பணக்காரரிடம் யாரோ போய் சங்கீதத்தின் மூலம் சித்த பிரமையை குணப்படுத்த முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை வயலின் வாசித்ததை ஒரு கச்சேரியில் கேட்ட மருந்துக் கடை முதலாளிக்கு இவரை வைத்து தனது பையனை குணப்படுத்தினால் என்ன என்கிற எண்ணம் வந்தது.
கோவிந்தசாமி பிள்ளையிடம் விஷயத்தைச் சொன்னார் அவர். பிள்ளைவாள், "நான் கச்சேரி வாசிக்க வந்திருக்கிறேன். சங்கீதத்தின் மூலம் சித்த பிரமை குணமாகுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இது வீண் முயற்சி' என்று தட்டிக் கழித்தார். ஆனால் அந்த முதலாளி விடவில்லை. ஏதோ ஒரு பையனுக்கு இதனால் விடிவு காலம் வந்தால் வரட்டுமே என்று திருச்சிக்கு திரும்பிப் போக வாங்கியிருந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு அந்தப் பணக்காரரின் வீட்டிற்குப் போனார் கோவிந்தசாமி பிள்ளை.
அங்கே அந்த இளைஞனை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள். இவரைப் பார்த்தவுடனேயே அவன் வெறி பிடித்தது போல கத்தினான். இவரைப் பார்த்து அவன் முறைத்த முறைப்பே பயப்படும்படியாக இருந்தது. பிள்ளைவாள் வயலினை எடுத்து பக்கவாத்தியம் எதுவும் இல்லாமல் "சங்கராபரணம்' வாசிக்கத் தொடங்கினார். முதல் மூன்று நாட்களில் பெரிய மாற்றம் இருக்கவில்லை. நான்காவது நாள் அந்தப் பையன் சற்று சாதுவானான். அவனுடைய பார்வையிலும் பழக்கத்திலும் அசாத்திய மாற்றம். கோவிந்தசாமி பிள்ளை அவனுடைய சங்கிலியை அவிழ்த்துவிடச் சொன்னார். ஒரு வாரம் அங்கேயே தங்கியிருந்து வாசித்து வாசித்து அந்தப் பையனின் சித்த பிரமையை மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை குணப்படுத்திவிட்டார் என்று சொல்வார்கள். அந்தப் பணக்காரர் தந்த பணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாராம் அவர்.
- ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.