வாணி மஹாலில் ஒரு முறை மாலியின் புல்லாங்குழல் கச்சேரி. வழக்கத்துக்கு மாறாக அவர் சரியான நேரத்திற்கு வந்து மேடை ஏறிவிட்டார். அன்றைக்கு நல்ல மூட். எடுத்த எடுப்பிலேயே அசத்த தொடங்கிவிட்டார். அப்போது ஆட்டோ பார்ட்ஸ் நடராஜன் என்று ஒரு பரம ரசிகர். அவர் எல்லோருக்கும் போன் போட்டு, மாலி நல்ல மூடில் இருப்பதாகவும் அசத்தலாக வாசிப்பதாகவும் தெரிவித்துவிட்டார். செய்தி காட்டுத் தீ போல சங்கீத உலகில் பரவியது.
மாலி எங்கே கச்சேரிக்கு வரப் போகிறார் என்று நினைத்து முதலில் அதிக கூட்டம் இருக்கவில்லை. நாங்கள் சுமார் 150 பேர்தான் இருப்போம். அடுத்த அரை மணி நேரத்தில் பார்க்க வேண்டுமே கூட்டம்! அலை மோதத் தொடங்கிவிட்டது. கல்கி சதாசிவம், எம்.எஸ். சுப்புலட்சுமி, செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர், முசிரி சுப்பிரமணிய அய்யர் தொடங்கி கர்நாடக சங்கீத உலகத்தில் பெயர் சொல்லக் கூடிய அத்தனை வித்வான்களும் அங்கே ஆஜர். அன்று சுமார் நான்கு மணி நேரம் வாசித்துத் தள்ளியிருக்கிறார். தேவகானம் என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டம் அங்கே இங்கே அசையவில்லை.
கச்சேரி முடிந்து போகும்போது செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர், கல்கி சதாசிவத்திடம் சொன்னது என் காதில் விழுந்தது- "இது ஜென்மாந்தரமா வந்த சங்கீதம். இதெல்லாம் கற்றுத் தேறக் கூடிய ஒன்றல்ல!'
- ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.