இசை

முத்தாய்ப்பு...

இன்றுடன் கலாரசிகனின் இசை உலாவை நிறைவு செய்கிறோம். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, சென்னை இசைவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல இளம் கலைஞர்களை நம்மால் ஊக்கம் தந்து உற்சாகப்படுத்த முடிந்ததில் கிடைக்கும் மன நிறைவுக்கு அளவே இல்லை.

ஆசிரியர்

இன்றுடன் கலாரசிகனின் இசை உலாவை நிறைவு செய்கிறோம். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, சென்னை இசைவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல இளம் கலைஞர்களை நம்மால் ஊக்கம் தந்து உற்சாகப்படுத்த முடிந்ததில் கிடைக்கும் மன நிறைவுக்கு அளவே இல்லை. பெரிய வித்வான்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவர்களது நிகழ்ச்சிகள் விமர்சனம் செய்யப்படுவதும், பாராட்டப்படுவதும் போய், வளரும் கலைஞர்களை, நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை அடையாளம் காட்டி உற்சாகப்படுத்தும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெருமைப்படுகிறோம்.

மூத்த கலைஞர்கள் சிலரை நாம் விமர்சன வளையத்திலிருந்து ஒதுக்கிவிட்டது உண்மை. விமர்சனங்களைக் கடந்த சங்கீதத்துக்குச் சொந்தக்காரர்கள் எனும்போது அவர்களது நிகழ்ச்சிகளை இனியும் விமர்சனம் செய்து கொண்டிருப்பானேன்? அதற்கு பதிலாக இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தலாமே என்பதுதான் காரணம். இன்றைய முன்வரிசைப் பாடகர்கள் சிலரும் விடுபட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களே ஏன் விடுபட்டோம் என்று கவலைப்படப் போவதில்லை, நாம் அதைப் பற்றி அலட்டிக் கொள்வானேன்?

அதேபோலத்தான் சில சபாக்களும் விடுபட்டுப் போயிருக்கின்றன. தங்களது சபாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் கலாரசிகனின் இசை உலாவில் வெளிவர வேண்டும் என்று விழையும் சபாக்கள் ஏதாவது விடுபட்டிருந்தால், அதற்கு மன்னிக்கவும். நங்கநல்லூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள சபாக்களுக்கு நமது விமர்சனக் குழுவினரால் சென்று வர முடியாததால் அந்த நிகழ்ச்சிகளை நாம் பதிவு செய்ய முடியவில்லை.

ஒன்றிரண்டு பெரிய சபாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நமது விமர்சகர்கள் தவிர்த்தனர் என்பது நிஜம். தமிழில் முன்னோடி நாளிதழான "தினமணி'க்குத் தர வேண்டிய முன்னுரிமையையும் முக்கியத்துவத்தையும் தர விருப்பமில்லாத சபாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பின் வரிசைகளில் தீண்டத்தகாதவர்கள் போல நின்று விமர்சனம் செய்யத் தயாராக இல்லை. கலைஞர்களின் நிகழ்ச்சியைத்தான் நாம் விமர்சிக்கப் போகிறோமே தவிர, சபாக்களை அல்ல. அதே கலைஞர்கள் வேறு பல சபாக்களில் பாடுகிறார்கள் எனும்போது, அவர்கள் அந்தக் குறிப்பிட்ட சபாவில் பாடியதைத்தான் விமர்சிக்க வேண்டும் என்று நமக்கு என்ன கட்டாயம்?

இந்த ஆண்டின் மகிழ்ச்சியான செய்தி, திருச்சூர் ராமசந்திரன் என்கிற மூத்த கலைஞர் இப்போதாவது சங்கீத கலாநிதி விருது வழங்கி கெüரவிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் குரல் கொடுத்தது இப்போதாவது நிறைவேறியதே... சந்தோஷம்!

அதேபோல இந்த ஆண்டின் இசை விழா மேடைகளில் வழக்கம்போல அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, எஸ். சௌம்யா, காயத்ரி வெங்கட்ராகவன், அக்கரை சகோதரிகள் ஆகியோரும், ஆண் கலைஞர்களில் சஞ்சய் சுப்பிரமணியன், சிக்கில் குருசரண், அபிஷேக் ரகுராம், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா ஆகியோரும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கலைஞர்களாக அரங்கம் நிறைந்த நிகழ்ச்சிகளுடன் வலம் வந்தனர். அதிலும் குறிப்பாக, அபிஷேக் ரகுராமின் அபரிமிதமான வளர்ச்சியை இந்த வருட இசைவிழாவில் காண முடிந்தது.

இந்த ஆண்டு இசைவிழா நிகழ்ச்சிக்கு திருஷ்டி பரிகாரமாக அமைந்துவிட்ட அந்தத் துயர சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடக்கூடத் தயக்கமாக இருக்கிறது. நித்யஸ்ரீக்கு கலையுலகம் தொடர்ந்து நல்லாதரவு தரவேண்டும் என்பதும் அவர் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்!

இனி வளரும் கலைஞர்கள் பற்றிப் பார்ப்போம். இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக இளம் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் வரிசையில் பரத் சுந்தர், ரித்விக் ராஜா, திருச்சூர் சகோதரர்கள் மூவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தனர் என்பது மட்டுமல்ல, மூத்த கலைஞர்களாக வலம் வரப்போகிறார்கள் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். வருங்காலம் நிச்சயமாக இவர்கள் கையில்தான் இருக்கப் போகிறது என்று துணிந்து கட்டியம் கூறலாம்.

அடுத்த தலைமுறை விதூஷிகள் என்று பட்டியலிட்டால், நமது பார்வையில் கே. காயத்ரி, ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், லாவண்யா மூவரையும் நாம் சட்டென அடையாளம் காட்ட முடிகிறது. ஐந்தாறு இசைவிழாக்களுக்குப் பிறகு முதல் வரிசைக் கலைஞர்களாக வலம் வரப் போகிறவர்கள் இவர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

எஸ்.பி. ராம், சந்தீப் நாராயணன், சங்கீதா சுவாமிநாதன் போன்றோரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

விரைவிலேயே "இசை உலா' புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். அந்தந்த ஆண்டு இசைவிழா மேடைகளில் என்னென்ன சாகித்யங்கள் அதிகம் பாடப்பட்டன, என்னென்ன ராகங்கள் கையாளப்பட்டன, யார் யாரெல்லாம் ரசிகர்களைக் கவர்ந்த இசையுலக நட்சத்திரங்கள் போன்ற தகவல்களின் பெட்டகமாகப் போற்றிப் பாதுகாக்கும் வண்ணம் கலாரசிகனின் இசை உலா தயாராகிறது என்கிற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறோம்.

இனி, அடுத்த இசைவிழாவில் சந்திப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT