மகாராஜபுரம் சந்தானத்தின் சங்கீதத்தை கேட்க முடியவில்லையே என்று யாரும் ஏக்கமடைய வேண்டிய அவசியமே இல்லை. மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதனின் கச்சேரிக்குப் போய் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிட்டால் போதும். மகாராஜபுரம் சந்தானத்தின் கச்சேரியைக் கேட்கின்ற அதே உணர்வு ஏற்படும்.
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மதியம் 1.30 மணிக்கு மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதனின் இசை நிகழ்ச்சி. நாகர்கோவில் ஆனந்த் வயலின், குரு ராகவேந்திரா மிருதங்கம். தொடக்கமே அசத்தல். சுத்த தன்யாசி ராகத்தில் விக்னராஜ ஸ்ரீ என்கிற பாடல். அதில் "மணிரத்ன கசித மகுடாபரண' என்கிற இடத்தில் ஸ்வரம் மட்டும் பாடினார். அடுத்தது விறுவிறுப்பாக பூர்ண சந்திரிகா ராகத்தில் அமைந்த தெலிசிராம. அதில் "ராம அனிச்சபலா' என்கிற இடத்தில் கல்பனாஸ்வரம் மட்டும் பாடினார். மூன்றாவதாக நாயகி ராகத்தில் அமைந்த தியாகய்யரின் நீ பஜன கான என்கிற பாடல். இப்படி மூன்று உருப்படிகளைப் பாடி ஒரு ஃபாமுக்கு தன்னையும் ரசிகர்களையும் உயர்த்தியிருந்தார் கணேஷ்
விஸ்வநாதன்.
அடுத்தாற்போல, விஸ்தாரமாக பந்துவராளி ராக ஆலாபனை. பரிபாலயதான் சாகித்யம். அதில் " ஸ்ரீ பத்மநாப' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு ஸ்வரம் பாடினார். தாத்தா சந்தானத்தைப் போலவே ஒன்றிரண்டு இடத்தில் கணேஷும் பொருத்த ஸ்வரம் பாடியபோது சந்தானத்தின் ரசிகர்கள் எழுப்பிய சபாஷும் கரவொலியும் கணேஷை மேலும் உற்சாகப்படுத்தின. ஸ்வர குறைப்பும் செய்து அப்ளாஸ் வாங்கினார் அவர்.
சுத்த பங்களா ராகத்தில் தப்பகனே என்கிற தியாகய்யர் கிருதியை இறுக்கத்தைக் குறைப்பதற்கு இசைத்துவிட்டு, அன்றைய முக்கிய உருப்படிக்கு நகர்ந்தார் கணேஷ் விஸ்வநாதன். அற்புதமான சங்கராபரண ராக ஆலாபனை. அந்த கணீர் குரலுக்கும், நாபிக் கமலத்திலிருந்து உருண்டோடி வந்த பிருகாக்களுக்கும் ஈடு இணை காலம் சென்ற மகாராஜபுரம் சந்தானம் மட்டுமே. எதுட நிலி சிதே என்பது சாகித்யம். அதில் "தரான தொரகனி' என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரம். சங்கராபரண ஆலாபனையும் நிரவல் ஸ்வரமும் நேரம் போனதே தெரியவில்லை.
மிஸ்ர சிவரஞ்சனி ராகத்தில் ராகவேந்திரா, திலங் ராகத்தில் சுத்தானந்த பாரதியின் வருவானோ வண்ணக் குயிலே என்று இரண்டு துக்கடாக்களைப் பாடி, கச்சேரியை முடித்துக் கொண்டார் மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதன். முதல் பாராவை மறுபடியும் ஒருமுறை படித்துக் கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.