வருங்காலத்தில் கர்னாடக சங்கீத உலகத்தில் சாதனை புரியக்கூடிய அளவுக்கு வளரப் போகும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர் சுகுணா புருஷோத்தமனின் தயாரிப்பான கே. காயத்ரி. அப்படியொரு வித்வத். குரல்வளமானால் அசாத்தியம். இரண்டு கைகளாலும் தாளம் போடக் கூடிய தேர்ச்சி பெற்ற கே. காயத்ரி மூன்று காலங்களிலும் அநாயாசமாக சஞ்சரிக்கும் ஆற்றலும் பெற்றவர்.
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் எதிராஜ் கல்யாண மண்டபத்தில் கடந்த திங்கள்கிழமை கே. காயத்ரியின் இசை நிகழ்ச்சி. அவருக்கு பக்கவாத்திய பலம் சேர்த்தவர்கள் நிஷாந்த் சந்திரனும் (வயலின்), பூங்குளம் சுப்பிரமணியமும் (மிருதங்கம்).
ஸஹானா ராகத்தில் அமைந்த கருணிம்ப என்கிற வர்ணத்துடன் தொடங்கிய கே. காயத்ரியின் நிகழ்ச்சியின் அடுத்த உருப்படி, பட்டணம் சுப்பிரமணி ஐயர் மலையமாருதம் ராகத்தில் இயற்றிய தன்யுதெவ்வதோ என்கிற சாகித்யம். அதில் "வர மத்தள தாளாதி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு ஸ்வரம் பாடினார். கே. காயத்ரியின் புத்திசாலித்தனம் எப்படிப்பட்டது என்றால், முதல் இரண்டு உருப்படிகளிலே தனது குரல்வளத்தாலும் தேர்ந்தெடுக்கும் சாகித்யங்களின் விறுவிறுப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போடும் செப்படி வித்தையைக் கற்று வைத்திருப்பதுதான்.
ஆஹா ஓஹோ ரகத்தில் அமைந்த ரீதிகெளளை ராக ஆலாபனை. அதைத் தொடர்ந்து சியாமா சாஸ்திரி இயற்றிய நின்னுவின மரிகலதா என்கிற சாகித்யம். அதில் "சியாமகிருஷ்ணனுத பக்த பரிபாலனமு சேயு' என்கிற இடத்தில் நிரவல், கல்பனா ஸ்வரம். இந்த ரீதிகெளளை உருப்படியை மட்டுமே இரண்டு மணி நேரம் கச்சேரி செய்யும் திறமைசாலி கே. காயத்ரி என்பதை உணர முடிந்தது.
எவரிகை அவதாரம் எத்திதிவோ என்று தியாகய்யர் தேவ மனோகரி ராகத்தில் இயற்றிய சாகித்யமும், அவரே மனோரஞ்சனி ராகத்தில் அமைத்த அட்டுகாராதனி சாகித்யத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக பாடினார். இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்- மனோரஞ்சனி ராகத்தை அவ்வளவு சர்வசாதாரணமாக கையாண்டுவிட முடியாது. கொஞ்சம் தவறினாலும் வேறு எங்கேயாவது போய் நிற்கும். கே.காயத்ரி போன்ற கலைஞர்கள்தான் துணிந்து தன்னம்பிக்கையுடன் மனோரஞ்சனியைக் கையாள முடியும்.
அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் மோகனம் ஆலாபனை. அடேயப்பா! மோகனத்திற்கு இவ்வளவு மோகனம் உண்டு என்பது காயத்ரியின் அந்த ஆலாபனையைக் கேட்டபோது புரிந்தது! ஆலாபனை எப்படியிருந்தது என்று கேட்டால் சுகம் சுகம் சுகம். பிரமிப்பு பிரமிப்பு பிரமிப்பு.
இதற்கு மேல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாபநாசம் சிவனின் நாராயண திவ்ய நாமம் என்கிற பாடலைத் தேர்ந்தெடுத்து கல்பனாஸ்வரம் பாடி, தனியாவர்த்தனத்துக்கும் இடம் ஒதுக்கினார். "மேரேதோ கிரிதர கோபாலா' (பெஹாக்), வடவரையை மத்தாக்கி (சிலப்பதிகாரம்), தனது குருநாதர் சுகுணா புருஷோத்தமன் கமாஸ் ராகத்தில் அமைத்த தில்லானா, மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக விறுவிறுப்பாகப் பாடி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்.
புத்திசாலித்தனமாக ரீதிகெளளை, மோகனம் என இரண்டு பரவலாக அறியப்படும் ராகங்களை விஸ்தாரமாக இசைத்து தனது இசை புரிதலை வெளிப்படுத்தி, அதே நேரத்தில் மூன்று நான்கு ஜனரஞ்சகமான கிருதிகளையும் பாடி கச்சேரியை கே. காயத்ரி அமைத்துக் கொண்டதுதான் அன்றைய நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். நம்பிக்கையை மட்டுமல்ல, பிரமிப்பையும் ஏற்படுத்தும் அற்புதக் கலைஞர் கே. காயத்ரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.