பாரதி ராமசுப்பன் இசை பாரம்பரியத்தில் வந்தவர். அவரது பாட்டி, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யை. பாரதியின் இசைப் பயிற்சி தாயாரிடம் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சங்கீத மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நாத இன்பம் சார்பில் ராகசுதா அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை பாரதி ராமசுப்பனின் இசைக் கச்சேரி. விட்டல் ரங்கன் வயலின், மன்னார்கோயில் பாலாஜி மிருதங்கம்.
ஆனந்த நடன பிரகாசம் என்கிற கேதாரம் ராகத்தில் அமைந்த தீட்சிதர் கிருதியுடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கினார் பாரதி ராமசுப்பன்.
அதைத் தொடர்ந்து விஸ்தாரமான ஆனந்தபைரவி ஆலாபனை. பாஹிஸ்ரீ கிரிராஜசுதே என்கிற சியாமா சாஸ்திரியின் சாகித்யம். அதில் கல்பனாஸ்வரம் மட்டும் பாடிவிட்டு, பேகடா ஆலாபனையில் இறங்கினார். லோகாவன சதுர என்கிற தியாகய்யரின் சாகித்யத்தில் "ஸாகேதாதிப சரஸகுண பிரமேய' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனாஸ்வரமும் இசைத்தார்.
ரிலீஃபுக்கு முத்துஸ்வாமி தீட்சிதர் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் இயற்றிய செளந்தரராஜம் என்கிற சாகித்யம். பாடலை மட்டும் பாடிவிட்டு, மீண்டும் இன்னொரு விஸ்தாரமான ராக ஆலாபனைக்குத் தயாரானார் பாரதி. இந்த முறை கையாண்ட ராகம் கல்யாணி. ஆலாபனையைத் தொடர்ந்து இசைத்த பாடல் சியாமா சாஸ்திரியின் தல்லி நின்னுநெர நம்மிநானு. அதில் "காமிதார்த்த பிரதகஞ்ச லோசனி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனாஸ்வரமும் பாடினார். அதைத் தொடர்ந்து தனி.
"பூலோகங்கா' என்கிற ஸ்லோகத்தை நாதநாமக்ரியா, காபி, பெஹாக் ஆகிய ராகங்களில் அமைந்த ராகமாலிகையாகப் பாடிவிட்டு கடைசியாக, ஆடும் சிதம்பரமோ பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் பாரதி ராமசுப்பன்.
பாரதி ராமசுப்பனுக்குப் பாடாந்தரம் சுத்தம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் காலபிரமாணங்களில் சற்று கவனம் தேவை. அந்தந்த இடத்தில் நிற்காமல் ஸ்வரம் அவ்வப்போது விலகி நிற்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். பாரம்பரியத்துக்கு சொந்தக்காரியாக பத்து ஆண்டுகளாக வளைய வரும் இசைக் கலைஞர் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.