இன்றைய இளைய தலைமுறை கலைஞர்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இளைஞர்களில் பரத் சுந்தர் குறிப்பிடத்தக்கவர். பி.எஸ்.நாராயணஸ்வாமியின் தயாரிப்பான பரத் சுந்தரின் மிகப்பெரிய பலம் இந்தச் சிறிய வயதிலேயே அவருக்கு இசையில் இருக்கும் அசாத்தியமான ஞானமும் கற்பனை வளமும். ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பிற்பகல் பரத் சுந்தரின் நிகழ்ச்சி. எம்.எஸ்.அனந்தகிருஷ்ணன் வயலின். சுமேஷ் நாராயணன் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா.
இந்த இடத்தில் எம்.எஸ்.அனந்தகிருஷ்ணன் பற்றி ஒரு வார்த்தை. பரூர் சுந்தரமய்யர் குடும்ப வாரிசான எம்.எஸ்.அனந்தகிருஷ்ணன், தனக்குப் பாரம்பரியமாக கிடைத்திருக்கும் வயலின் வித்வத்தை முழுமையாகப் பயன்படுத்தாமல், அவ்வப்போது சங்கீத மேடைகளில் தலைகாட்டிவிட்டு, கூடுதல் நேரத்தை சினிமா இசையமைப்பாளர்களுடன் செலவழித்துக் கொண்டிருப்பது அவருக்குப் பெருமை சேர்க்காது. சங்கீத உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு.
நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் மூலைவீட்டு ரங்கசாமி நட்டுவானார் அமைத்திருக்கும் சலமேல வர்ணத்துடன் தொடங்கியது பரத் சுந்தரின் நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்தது சுத்த ஸீமந்தினி ராக ஆலாபனை. பி.எஸ்.என். தயாரிப்பு என்று சொல்லும்போது ராக ஆலாபனையில் சாஸ்திரிய சுத்தம் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அமரிக்கையான ஆலாபனை. தியாகய்யரின் ஜானகி ரமணாதான் சாகித்யம். அதில் "ரக்த நளினதள' என்கிற இடத்தில் ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு அடுத்த உருப்படிக்கு நகர்ந்தார் அவர்.
தொடர்ந்து இரண்டாவது ராக ஆலாபனையில் பரத் சுந்தர் இறங்கியபோது அவரது தன்னம்பிக்கைக்கு சபாஷ் போடத் தோன்றியது. இந்த முறை எடுத்துக்கொண்டது வாசஸ்பதி ராகத்தை. வாசஸ்பதி ஆலாபனையில் பரத் சுந்தரின் சாரீரம் சர்க்கஸில் ஊஞ்சல் விளையாட்டு விளையாடுவதுபோல இயல்பாக வெளிப்பட்டதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவரது பிருகாக்களில் ஒருவித நேர்த்தி காணப்பட்டது. சிலர் தங்களது சாரீரத்தின் மேன்மையைக் காட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தில் வரம்பு மீறி பிருகாக்களில் இறங்குவது சகஜம். பரத் சுந்தர் அப்படிப்பட்ட விபரீதங்களில் இறங்காமல் கனகச்சிதமாக பிருகாக்களைக் கையாண்டது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
பாபநாசம் சிவன் இயற்றிய பராத்பரா பரமேஸ்வராதான் சாகித்யம். அதில் "அரி அயனும் காணா' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனாஸ்வரம் பாடினார். எதிர்பாராத ஷாக் - அவர் தனியாவர்த்தனத்துக்கு நேரம் ஒதுக்கியது. இப்படி மூன்றாவது உருப்படியிலேயே தனியாவர்த்தனத்துக்கு நேரம் ஒதுக்குவது என்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
செஞ்சுருட்டி ராகத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய சாகித்யம் கஜாம்பா நாயகோ பாடலை மட்டும் பாடிவிட்டு ராகம், தானம், பல்லவிக்கு நகர்ந்தார் பரத் சுந்தர். எடுத்துக்கொண்ட ராகம்
தோடி. திஸ்ர ஜம்பையில் அமைந்த பல்லவி "நீரஜ தள லோசனி நிகில லோக ஜனனி'. திஸ்ர ஜம்பை என்பது சற்று கடினமான தாளக் கட்டு. அதுமட்டுமல்ல, அரை இடம் தள்ளி எடுப்பு என்பது பரத் சுந்தரின் வித்வத்துக்கு எடுத்துக்காட்டு. ராகமாலிகையை ஸ்வரமாக அவர் பெஹாகையும் மத்யம ஸ்ருதியில் சிந்துபைரவியையும் கையாண்டதற்கு ஸ்பெஷல் அப்ளாஸ் தர வேண்டும்.
சுத்தஸீமந்தினி, வாசஸ்பதி, தோடி என்று மூன்று விஸ்தாரமான ராக ஆலாபனைகளை தனது 2 மணி நேர கச்சேரி அமைத்துக் கொண்டது பரத் சுந்தரின் வித்வத்தின் வெளிப்பாடு. மத்தியான கச்சேரியாக இருந்தாலும்கூட விஸ்தாரமான ராக ஆலாபனைகள் சற்றும் தொய்வை ஏற்படுத்தாதது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
கோமதி ராமசுப்ரமண்யம் இயற்றி டி.கே. ஜெயராமனால் பிரபலப்படுத்தப்பட்ட ஹம்சாநந்தி ராகத்தில் அமைந்த முருகா முருகா என நீ சொல் என்கிற பாடலுடன் தனது நிகழ்ச்சியை நிறைவு செய்தார் பரத் சுந்தர்.
அதற்கு மேல் துக்கடா உருப்படிகளைப் பாட அவருக்கு கால அவகாசம் இருக்கவில்லை. ஏதாவதொரு ராக ஆலாபனையை குறைத்துக் கொண்டிருந்தால் மேலும் சில கிருதிகளைப் பாடியிருக்க முடியும்.
நிறைவான சங்கீதத்தை ரசித்துக் கேட்ட திருப்தி கிடைத்தது. அடுத்த சீசனில் முன்வரிசைக்கு "ப்ரமோஷன்' தரப்பட வேண்டிய பாடகர் பரத் சுந்தர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.