முத்தமிழ் பேரவையின் சார்பில் ஸ்ரீ ராகம் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் கடந்த திங்கள்கிழமை காஷ்யப் மகேஷின் வாய்ப்பாட்டு. திருமருகல் தினேஷ்குமார் வயலின், கலைமாமணி வழுவூர் ரவி மிருதங்கம். இளைஞரான காஷ்யப் மகேஷ் குறிப்பிடத்தக்க வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர். அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சம் - அத்தனையுமே தமிழ் பாடல்கள் என்பதுதான்.
"கற்பக விநாயகா' என்கிற விருத்தத்தை ஹம்ஸத்வனி ராகத்தில் பாடிவிட்டு, பாபநாசம் சிவன் அதே ராகத்தில் அமைத்திருக்கும் மூலாதார மூர்த்தி என்கிற கிருதியுடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கினார் மகேஷ். அடுத்தாற்போல "ஆதியாய் நடுவமாகி' என்கிற பெரியபுராண செய்யுளை ஆபோகி ராகத்தில் பாடிவிட்டு, தொடர்ந்து அதே ராகத்தில் அமைந்த கோபாலகிருஷ்ண பாரதியின் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்கிற சாகித்யத்தைப் பாடினார். வழக்கம்போல கிருபாநிதி இவரைப் போல என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு ஸ்வரம் பாடினார்.
"கொண்டல் வண்ணனை' என்கிற திருப்பாணாழ்வாரின் பாசுரத்தை ஆரபி ராகத்தில் அவர் இசைத்தபோது, அதே ராகத்தில் ஏதாவது பாடலைப் பாடுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. அது பொய்க்கவில்லை. "ஓங்கி உலகளந்த' பாடல் தொடர்ந்தது.
கம்பராமாயணத்தின் தொடக்கச் செய்யுளான "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்பதை ஹிந்தோளம் ராகத்தில் பாடிவிட்டு அதே ராகத்தில் "ராமனுக்கு மன்னன் முடி' என்கிற பாடலைப் பாடினார். அதில் "பட்டம் கட்ட ஏற்றவன்டி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு, கல்பனாஸ்வரம் பாடினார். தொடர்ந்தது கோடீஸ்வரய்யர் ரசிகப்ரியா ராகத்தில் இயற்றிய "அருள் செய்ய வேண்டுமய்யா' என்கிற பாடல்.
அன்றைய நிகழ்வில் விஸ்தாரமான ராக ஆலாபனைக்கு காஷ்யப் மகேஷ் தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் பந்துவராளி. ஆலாபனையில் அப்பழுக்கு சொல்ல முடியாது. பாபநாசம் சிவன் இயற்றி எம்.கே. தியாகராஜ பாகவதர் திரையில் இசைத்த "அம்பா மனம் கனிந்து' என்கிற பாடலை "பந்துவராளி' ராக ஆலாபனையைத் தொடர்ந்து மகேஷ் பாடியபோது நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர் ரசிகர்கள். பல்லவியில் நிரவல் அமைத்துக் கொண்டு ஸ்வரம் பாடினார். தொடர்ந்தது கலைமாமணி வழுவூர் ரவியின் தனியாவர்த்தனம்.
பீம்ப்ளாஸ் ராகத்தில் "மனமே கணமும் மறவாதே ஜகதீசன் மலர் பதமே' என்கிற பாபநாசம் சிவன் பாடலுடன் தனது நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார் காஷ்யப் மகேஷ். நல்லதொரு தமிழ் கச்சேரியை புத்திசாலித்தனமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த காஷ்யப் மகேஷுக்கு நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.