சென்னையின் தலைசிறந்த நர்த்தக தாரகைகளில் முக்கியமானவர், அனிதா குஹாவின் சீடரான ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியன். திருமணத்திற்கு முன்பு ஐஸ்வர்யா நாராயணஸ்வாமியாக இருந்தபோதும் சரி, இப்பொழுது ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியன் ஆன பிறகும் சரி, அவரது அர்ப்பணத்திலோ உடல்வாகிலோ எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருப்பது அவரது தனிச்சிறப்பு. தனது 5 வயதிலேயே அனிதா குஹாவின் "பரதாஞ்சலி' பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட ஐஸ்வர்யா, அவரது வியப்புமிகு லாகவத்தாலும் முகபாவ வெளிப்பாடுகளாலும் பாதத்தின் கால நேர்த்தியாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். தனது சலிக்காத பயிற்சியாலும் கடுமையான கட்டுப்பாட்டாலும் பரத நாட்டியம் மீதான தாளாத காதலாலும் தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தையும் புகழையும் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் அவர். "நளந்தா நிருத்ய நிபுணா', "நாட்டியச் சுடர்' என பல பட்டங்களையும் பெருமைகளையும் அடைந்திருக்கும் ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியனின் நாட்டியம் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் நடந்தபோது அரங்கமே நிரம்பி வழிந்தது. அநாயாசமான அவரது அங்க அசைவுகளையும் முகபாவங்களையும் பார்த்து பிரமித்துப் போய் அமர்ந்திருந்தது ரசிகர் கூட்டம்.
தன் நாட்டியத்தினை ஹம்ஸநாத புஷ்பாஞ்சலியுடன் துவக்கிய ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியன், பல்வேறு தாளக் கணக்குகளுடன் அதைத் திறம்பட நிர்வகித்தார். குற்றமற்ற அரைமண்டி, சுற்றிச் சுழன்றாடும்போதும் சற்றும் தடுமாறாத ஸ்திரத்தன்மை ஆகியவை இவரின் நாட்டியத்திற்கு பலம் சேர்த்தன. வியாக்ரபாத ரிஷி இயற்றிய சிவகாமசுந்தரி அஷ்டகத்தைப் பல கற்பனை ஸ்வரங்களுடன் ஆடியது நேர்த்தியாக இருந்தது.
நிகழ்ச்சியின் நடுநாயகமாக, தியாகராஜரது பஞ்சரத்ன கிருதி - "கன கன ருசிரா'. குரு அனிதா குஹாவால் வர்ணமாக நடன வடிவமைக்கப்பட்டுள்ளது. "பார்க்கப் பார்க்க இனிமை தரும் வடிவுடைய ராமா, அலுப்புத் தட்டாத நின் மங்கள வடிவம்' - என்ற வரிகளுக்கு ஐஸ்வர்யா ஆடிய விதம் சபையோரை சபாஷ் போட வைத்தது. நீண்ட ஜதிக்கோர்வைகள் மட்டுமே சற்று நெருடல். கவனம் கொள்க. தியாகய்யருடைய ஸ்வரக்கோர்வைகளுக்குப் புதிய பரிமாணம் தந்து, நாட்டியக் கோர்வைகள் அமைத்தது கவனத்தைக் கவர்ந்தது. அதிலும் அறுதி எனச் சொல்லப்படும் தீர்மானக் கோர்வைகள் படு சுத்தம்.
நாட்டியத்திற்கெனவே பிறந்தவர் போன்ற தோற்றம். அதீத ஈடுபாடு. புதியனவற்றைக் கற்கும் ஆர்வம் - இவை அனைத்தும் இணைந்த ஐஸ்வர்யா, அடுத்த உருப்படியாக ஆடியது ஜாவளி - "வந்த வழியைப் பாரும் சுந்தரரே'. இதில் கண்டித நாயிகா என்று சொல்லப்படும், தலைவன் மேல் கோபம் கொண்ட தலைவி, தாமதமாக வந்த தலைவனை நோக்கி, "என்னை மற்ற பெண்களைப்போல் எண்ண வேண்டாம். எவ்வகையிலும் எத்தனை சொன்னாலும் உன் பொய்யுரைகளால் என்னை ஏமாற்ற முடியாது. எனவே வந்த வழியே செல்லும்' என்று கடிந்துரைப்பது போன்று ஒலித்த ஜாவளி, மிருதங்கம் விஜயராகவன் அவர்களால் இயற்றப்பட்டது. அதைத் தன் நாட்டியத்தினால் அழகுபடுத்தினார் ஐஸ்வர்யா.
அடுத்ததாக, 15-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் வாழ்ந்த, புகழ் பெற்ற ஸþர்தாஸ் என்னும் கவிஞரின், "மையா மோரி...மை நஹி மாக்கன் காயோ' என்ற பஜன். ஸþர்தாஸ் ஒரு பிறவிக் குருடர். சதா சர்வ காலமும் கண்ணனையே நினைத்து அகக்கண்களால் அவரைத் தரிசித்து முக்தி பெற்றவர். வாயில் வெண்ணை தின்ற சுவடைக் கண்டு அடிக்க வந்த யசோதையிடம் கண்ணன், "தாயே வெண்ணை திருடியது நானல்ல. எனக்கு எட்டாத உயரத்தில் அல்லவா வெண்ணைத் தாழி உள்ளது? அதுவுமன்றி, நான் இப்போதுதான் மாடு மேய்த்துவிட்டுக் களைப்பாக வீடு திரும்பியுள்ளேன். உன் மீது ஆணையாக நான் திருடவில்லை' என்று தாயை சமாதானம் செய்வதுபோல் அமைந்த பஜன். இதன் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் உயிர்ப்புடன் அபிநயித்தார் ஐஸ்வர்யா.
நிறைவாக "பரஸ்' ராக தில்லானா. பளிச்சிட்ட முத்திரைகளுடனும் பரபரப்பான பாத வேலைகளுடனும் முடித்தபோது அரங்கமே கரவொலி எழுப்பி ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியனின் திறமையை அங்கீகரித்து பாராட்டியது.
-ஜாகிர் உசேன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.