பகுதி 24 – அடைக்கலப் பத்து - 1
மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடிகளில் அடைக்கலமானதைச் சொல்லும் பாடல்கள் இவை.
மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடிகளில் அடைக்கலமானதைச் சொல்லும் பாடல்கள் இவை.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. இதில் பத்து பாடல்கள் உள்ளன.
149
பாடலின்பம்
செழுங்கமலத்திரள்அன நின்
சேவடி சேர்ந்துஅமைந்த
பழுத்த மனத்து அடியர்உடன்
போயினர், யான் பாவியேன்
புழுக்கண்உடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல்வி, ஞானம்இலா
அழுக்கு மனத்து அடியேன்,
உடையாய்! உன் அடைக்கலமே.
*
வெறுப்பனவே செய்யும் என்
சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவனே,
பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே, நின் திருவருளால்
என் பிறவியை வேர்
அறுப்பவனே, உடையாய், அடியேன்
உன் அடைக்கலமே.
பொருளின்பம்
என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,
வளமான தாமரை மலர்களைப்போன்றவை உன்னுடைய திருவடிகள், மனம் பக்குவப்பட்ட அடியார்களெல்லாம் அந்தத் திருவடிகளை வந்தடைந்தார்கள்,
நானோ, பாவி, புழுக்கள் நிறைந்த இழிவான உடலைக் கொண்டவன், பொல்லாத விஷயங்களைக் கற்றவன், ஞானமில்லாத அழுக்குமனத்தைக் கொண்டவன்,
எனினும், சிவபெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.
*
என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,
வெறுக்கக்கூடிய செயல்களையே நான் செய்கிறேன், எனினும், உன்னுடைய பெருந்தன்மையால் நீ என்னுடைய சிறுமையைப் பொறுத்துக்கொள்கிறாய்,
பாம்பை அணிந்தவனே, பொங்கிவரும் கங்கையைச் சடையா தடுப்பவனே, உன்னுடைய திருவருளால் என் பிறவிவேரை அறுப்பவனே, சிவபெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.
சொல்லின்பம்
செழும்கமலத்திரள்: வளமான தாமரைகள்
சேவடி: சிவந்த/ சிறந்த திருவடி
பழுத்த: பக்குவப்பட்ட
புன்குரம்பை: அற்ப உடல்
உடையாய்: என்னை அடிமையாகக் கொண்டவனே
அராப்பூண்பவனே: பாம்பை அணிபவனே
செறுப்பவனே: ஒடுக்குபவனே