முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 24 – அடைக்கலப் பத்து - 2

மிகப் பெரிய தெய்வமே, என் பிறவி வேரை அறுத்து, பெரிய பித்துநிலையைத் தருகின்ற தெய்வமே, அனைத்துச் சக்திகளும்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடிகளில் அடைக்கலமானதைச் சொல்லும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. இதில் பத்து பாடல்கள் உள்ளன.

150

பாடலின்பம்

பெரும்பெருமான், என் பிறவியை

வேர்அறுத்துப் பெரும்பிச்சுத்

தரும்பெருமான், சதுரப் பெருமான்,

என் மனத்தின்உள்ளே

வரும்பெருமான், மலரோன், நெடுமால்

அறியாமல் நின்ற

அரும்பெருமான், உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

*

பொழிகின்ற துன்பப்புயல்வெள்ளத்தில்

நின் கழல் புணைகொண்டு

இழிகின்ற அன்பர்கள் ஏறினர்

வான், யான் இடர்க்கடல்வாய்ச்

சுழிசென்று, மாதர்த் திரைபொரக்

காமச் சுறவுஎறிய

அழிகின்றனன், உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

பொருளின்பம்:

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

மிகப் பெரிய தெய்வமே, என் பிறவி வேரை அறுத்து, பெரிய பித்துநிலையைத் தருகின்ற தெய்வமே, அனைத்துச் சக்திகளும் கொண்ட தெய்வமே, என் மனத்தில் எழுந்தருளும் தெய்வமே, பிரம்மனும் திருமாலும் தேடிக் கண்டறிய இயலாதபடி நின்ற அரிய தெய்வமே, சிவபெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.

*

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

துன்பப்புயலும் வெள்ளமும் வருத்தும்போது, உன்னுடைய திருவடிகளையே புணையாகப் பற்றிக்கொண்டு அன்பர்கள் வானுலகத்தில் புகுந்துவிட்டார்கள்,

ஆனால் நானோ, துன்பமாகிய கடலுக்குள் சென்று சுழியில் சிக்கிக்கொண்டேன், பெண்ணாசை என்கிற அலைகள் என்மீது மோதின, காமம் என்கிற சுறாமீன் என்னைத் தாக்குகிறது, நான் அழிந்துகொண்டிருக்கிறேன், சிவபெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.

சொல்லின்பம்:

பெருமான்: தெய்வம்

பிச்சு: பித்து

சதுரப் பெருமான்: சக்திவாய்ந்த தெய்வம்

மலரோன்: பிரம்மன்

அரும்பெருமான்: அரிய தெய்வம்

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

புணை: படகு/ தெப்பம்

இழிகின்ற: இறங்குகின்ற

இடர்: துன்பம்

மாதர்: பெண்கள்

திரைபொர: அலைகள் மோத

சுறவு: சுறாமீன்

முழு கட்டுரையைப் படிக்க →