முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 28 – வாழாப் பத்து - 1

எம்பெருமானே, மண்ணிலும் விண்ணிலும் பரந்து விளங்குகின்ற பரம்பொருளே, சிறப்பாகப் பொலியும் சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

இவ்வுலகில் வாழவிரும்பாமல், சிவபெருமானின் திருவடிகளில் சேரவிரும்பும் தன்மையைக் குறிப்பிடும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

169

பாடலின்பம்

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே,

பற்றுநான் மற்றுஇலேன், கண்டாய்,

சீரொடு பொலிவாய் சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

யாரொடு நோகேன், ஆர்க்குஎடுத்துஉரைக்கேன்,

ஆண்டநீ அருளிலைஆனால்?

வார்கடல் உலகில் வாழ்கிலேன், கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

*

வம்பனேன்தன்னை ஆண்ட மாமணியே,

மற்றுநான் பற்றுஇலேன், கண்டாய்,

உம்பரும் அறியா ஒருவனே, இருவர்க்கு

உணர்வுஇறந்து உலகம்ஊடுருவும்

செம்பெருமானே, சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

எம்பெருமானே, என்னைஆள்வானே,

என்னைநீ கூவிக்கொண்டுஅருளே.

பொருளின்பம்

எம்பெருமானே, மண்ணிலும் விண்ணிலும் பரந்து விளங்குகின்ற பரம்பொருளே, சிறப்பாகப் பொலியும் சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

என்னை ஆட்கொண்ட நீயே இப்போது எனக்கு அருள்செய்யவில்லை என்றால், நான் அந்தக் குறையை யாரிடம் சென்று சொல்வேன்? உன்னைத்தவிர எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

விரிந்த கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் நான் இனிமேலும் வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும், சிவபெருமானே, ‘வருக’ என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.

*

வம்பில் ஈடுபடுகிறவனான என்னையும் மன்னித்து ஆட்கொண்ட மாமணியே, தேவர்களால் அறிய இயலாத தனித்துவமானவனே, திருமால், பிரம்மன் என்ற இருவருடைய அறிவுக்கும் எட்டாமல் உலகத்தை ஊடுருவிச் சென்ற ஜோதி வடிவான சிவந்த பெருமானே, சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, எம்பெருமானே, என்னை ஆள்வானே,

உன்னைத்தவிர எனக்கு வேறு பற்றுதல் இல்லை, சிவபெருமானே, என்னை உன்னிடம் அழைத்துக்கொண்டு அருள்செய்,

சொல்லின்பம்

பார்: உலகம்

பரனே: பரம்பொருளே

மற்றுஇலேன்: வேறு இல்லை

சீர்: சிறப்பு

பொலிவாய்: அழகாகத் திகழ்கின்ற

உறை: வசிக்கிற/ எழுந்தருளியிருக்கிற

வார்கடல்: விரிந்த கடல்

வம்பனேன்: வம்பில் ஈடுபடுகிறவன்

மாமணி: பெரிய மாணிக்கம்

உம்பர்: தேவர்கள்

உணர்வுஇறந்து: உணர இயலாதபடி

முழு கட்டுரையைப் படிக்க →