பகுதி 28 – வாழாப் பத்து - 2
பெருமானே, திருமால் பாடிப் புகழும் உன்னுடைய திருவடிகளைத் தவிர, எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ காண்பாய்,
இவ்வுலகில் வாழவிரும்பாமல், சிவபெருமானின் திருவடிகளில் சேரவிரும்பும் தன்மையைக் குறிப்பிடும் பாடல்கள் இவை.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
170
பாடலின்பம்
பாடி மால்புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,
தேடிநீ ஆண்டாய், சிவபுரத்துஅரசே,
திருப்பெருந்துறைஉறை சிவனே,
ஊடுவதுஉன்னோடு, உவப்பதும்உன்னை,
உணர்த்துவதுஉனக்கு எனக்குஉறுதி,
வாடினேன் இங்கு, வாழ்கிலேன் கண்டாய்,
வருகஎன்று அருள்புரியாயே.
*
வல்லை வாள்அரக்கர்புரம் எரித்தானே
மற்றுநான் பற்றுஇலேன் கண்டாய்,
தில்லைவாழ் கூத்தா, சிவபுரத்துஅரசே,
திருப்பெருந்துறைஉறை சிவனே,
எல்லை மூஉலகும் உருவிஅன்று இருவர்
காணும்நாள் ஆதி,ஈறுஇன்மை
வல்லையாய் வளர்ந்தாய், வாழ்கிலேன் கண்டாய்,
வருகஎன்று அருள்புரியாயே.
பொருளின்பம்
பெருமானே, திருமால் பாடிப் புகழும் உன்னுடைய திருவடிகளைத் தவிர, எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ காண்பாய்,
என்னைத் தேடிவந்து ஆட்கொண்டவனே, சிவபுரத்தின் அரசனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,
நான் ஊடல்கொள்வதும் உன்னோடு, மகிழ்ச்சிகொள்வதும் உன்னை எண்ணிதான், இந்த எண்ணத்தை நான் உனக்கு உணர்த்துகிறேன், உன்னை வணங்கும் உறுதியான சிரத்தை என்னிடம் இல்லையே என்று எண்ணி நான் வாடுகிறேன், சிவபெருமானே, இந்த உலகில் இனியும் நான் வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும், ‘வருக’ என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.
*
வாள்களை ஏந்திய அரக்கர்களின் முப்புரங்களை விரைவாக எரித்தவனே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,
தில்லைச் சிதம்பரத்தில் வாழ்கிற கூத்தனே, சிவபுரத்தின் அரசனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, அன்றைக்குத் திருமாலும் பிரம்மனும் காண்பதற்காக, முதலும் முடிவும் இல்லாதபடி உடனே மூன்று உலகங்களையும் கடந்து ஜோதிவடிவாகச் சிறப்புடன் வளர்ந்தவனே, சிவபெருமானே, இனியும் நான் இந்த உலகில் வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும், ‘வருக’ என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.
சொல்லின்பம்
மற்றுஇலேன்: வேறு இல்லை
உறை: வசிக்கிற/ எழுந்தருளியிருக்கிற
ஊடுவது: ஊடல்கொள்வது
உவப்பது: மகிழ்ச்சிகொள்வது
உறுதிவாடினேன்: உறுதித்தன்மை இல்லையே என வருந்தினேன்
வல்லை: விரைவாக
உருவி: கடந்து
ஆதி,ஈறுஇன்மை: தொடக்கமும் முடிவும் இல்லாத தன்மை
வல்லையாய்: சிறப்பாக