முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 22 – கோயில் திருப்பதிகம் - 5

ஒளிவடிவமாகத் தோன்றுகிற உருவமே, அருவமாகத் திகழ்கின்ற ஒப்பற்றவனே, சொல்லால் விவரிக்க இயலாத முதற்பொருளே, நடுவும், முடிவுமாகத் திகழ்கிறவனே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

பதிகம் என்பது பத்து பாடல்களின் தொகுப்பு. இந்தப் பத்து பாடல்களின் திருப்பெருந்துறை சிவனின் பெருமை குறிப்பிடப்படுவதால், இங்கே  ‘கோயில்’ என்பது திருப்பெருந்துறை என்று கொள்ள வேண்டும்.

இவை அந்தாதி வகையில் அமைந்த பாடல்கள், அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல், அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமையும்.

143

பாடலின்பம்

சோதியாய்த் தோன்றும் உருவமே, அருவாம்

ஒருவனே, சொல்லுதற்கு அரிய

ஆதியே, நடுவே, அந்தமே, பந்தம்

அறுக்கும் ஆனந்த மாகடலே,

தீதுஇலா நன்மை திருஅருள்குன்றே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

யாதுநீபோவதோர் வகை, எனக்குஅருளாய்

வந்து நின் இணையடி தந்தே.

*

தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை,

சங்கரா, ஆர்கொலோ சதுரர்,

அந்தம்ஒன்றுஇல்லா ஆனந்தம் பெற்றேன்,

யாதுநீ பெற்றதுஒன்று என்பால்,

சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான்,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

எந்தையே, ஈசா, உடல் இடம்கொண்டாய்

யான் இதற்குஇலன் ஓர் கைம்மாறே.

பொருளின்பம்

ஒளிவடிவமாகத் தோன்றுகிற உருவமே, அருவமாகத் திகழ்கின்ற ஒப்பற்றவனே, சொல்லால் விவரிக்க இயலாத முதற்பொருளே, நடுவும், முடிவுமாகத் திகழ்கிறவனே,

பந்தங்களை அறுக்கும் ஆனந்தப் பெருங்கடலே, குற்றமில்லாத நன்மையை அருளும் திருஅருள் குன்றே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

இங்கு வந்து உன்னுடைய திருவடிகளைத் தந்து எனக்கு அருள்செய், சிவபெருமானே, என்னைவிட்டு நீ செல்ல வழி ஏது? என்றும் என்னோடு இருப்பாய்.

*

சிந்தனையில் கோயில்கொண்ட எம்பெருமானே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

நீ உயர்வான உன்னை எனக்குத் தந்தாய், பதிலுக்கு அற்பமான என்னைப் பெற்றுக்கொண்டாய், சங்கரனே, நம் இருவரில் யார் திறனுடையவர்கள்?

முடிவில்லாத ஆனந்தத்தை உன்னிடம் பெற்றுக்கொண்டேன், சிவபெருமானே, நீ பதிலுக்கு என்னிடம் என்ன பெற்றாய்?

என் தந்தையே, ஈசனே, என் உடலைத் தங்குமிடமாகக் கொண்டவனே, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?

சொல்லின்பம்

பந்தம்: கட்டுகள்

போவதோர்வகை: செல்லும் வகை

ஆர்கொலோ சதுரர்: யார் திறமைசாலி/ புத்திசாலி

அந்தம்: முடிவு

சிந்தை: சிந்தனை

எந்தை: என் தந்தை

முழு கட்டுரையைப் படிக்க →