தினம் ஒரு திருவாசகம்

பகுதி 50 – ஆனந்த மாலை - 2

நான் கெட்டுப்போகிறவன், கெடுவதற்கு என்னென்ன வழிகளெல்லாம் உள்ளனவோ அனைத்திலும் சென்று கெட்டுப்போவேன்,

என். சொக்கன்

சிவனை வணங்குவோர் அனுபவிக்கும் ஆனந்தத்தின் இயல்பை விவரிக்கும் பாடல்கள் இவை.

தில்லையில் அருளப்பட்டவை. மொத்தம் ஏழு பாடல்களின் தொகுப்பு.

265

பாடலின்பம்

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன், கேடுஇலாதாய், பழிகொண்டாய்,

படுவேன், படுவதுஎல்லாம் நான் பட்டாற்பின்னைப் பயன்என்னே?

கொடுமா நரகத்து அழுந்தாமே, காத்துஆட்கொள்ளும் குருமணியே,

நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே.

*

தாயாய் முலையைத் தருவானே, தாராதுஒழிந்தால் சவலையாய்

நாயேன் கழிந்துபோவேனோ, நம்பி, இனித்தான் நல்குதியே,

தாயோ என்றுஉன் தாள்அடைந்தேன், தயாநீ என்பால் இல்லையே,

நாயேன் அடிமை உடன்ஆக ஆண்டாய், நான்தான் வேண்டாவோ?

பொருளின்பம்

எங்கள் நாயகமே,

நான் கெட்டுப்போகிறவன், கெடுவதற்கு என்னென்ன வழிகளெல்லாம் உள்ளனவோ அனைத்திலும் சென்று கெட்டுப்போவேன்,

நீ கேடே இல்லாதவன், ஆனால், எனக்காக இந்தப் பழியை ஏற்றுக்கொண்டாய்,

நான் செய்யும் கெடுதல்களால் நான் துன்பப்படுவேன், அப்படி நான் அனைத்துத் துன்பங்களையும் பட்ட பிறகு நீ என்னைக் காப்பதால் என்ன பலன்?

குருமணியே, சிவபெருமானே, கொடிய, பெரிய நரகத்தில் நான் சென்று அழுந்தாமல் காத்து ஆட்கொள்கிறவனே, நடுநிலையில் நின்று என்னைக் காக்காமல் நீ விட்டுச்செல்லலாமா? அது சரியா?

*

பக்தர்களுக்குத் தாயாகத் திகழ்பவனே, ஞானத்தை ஊட்டுகிறவனே, சிவபெருமானே, அனைத்திலும் சிறந்த நம்பியே,

நீ அவ்வாறு எனக்கு அருளாவிட்டால், நாய் போன்றவனான நான் தாய்ப்பால் கிடைக்காத சவலைப்பிள்ளையாக அழிந்துபோவேனே, இனிமேலாவது எனக்கு ஞானப்பாலைத் தந்துஅருள்வாய்,

தாயே என்று சொல்லி உன்னுடைய திருவடிகளை வந்தடைந்தேன், உனக்கு என்மேல் கருணையில்லையே!

நாய்போன்ற என்னையும் உன் அடிமையாக்கிக்கொண்டு உடனே வந்து ஆட்கொண்டவனே, நான் உனக்கு இனி தேவையில்லையோ? என்னை மறுக்காது அருள்செய்.

சொல்லின்பம்

கெடுமா: கெடும் வழி

கேடு இலாதாய்: கெடுதல் இல்லாதவனே

பட்டாற்பின்னை: பட்டபிறகு

பயன் என்னே?: என்ன பயன்?

கொடு மா நரகம்: கொடிய, பெரிய நரகம்

நாயகமே: தலைவனே

சவலையாய்: சவலைப்பிள்ளையாய்

நம்பி: சிறந்தவனே / உயர்ந்தவனே

நல்குதியே: வழங்குவாய்

தாள்: திருவடி

தயா: கருணை

வேண்டாவோ: வேண்டாம

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT