முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 21

நண்பரொருவர், ‘மௌனம் உணர்த்தாததை வார்த்தை உணர்த்தாது’ என்று சொல்லியபடி இருப்பார்.

Updated On : 7 அக்டோபர், 2015 at 10:21 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:24 PM

நண்பரொருவர், ‘மௌனம் உணர்த்தாததை வார்த்தை உணர்த்தாது’ என்று சொல்லியபடி இருப்பார். ‘ஆனால் இவ்வளவு பெரிய செய்தியைச் சொல்வதற்கு வார்த்தை தேவைப்படுகிறதே’ என்று நான் கேட்பதுண்டு. மௌனம் உணர்த்துவதை வார்த்தையால் உணர்த்த முடியாதென்றால், அதை மௌனமாக இருப்பதன் மூலம் மற்றவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே! இப்படிப்பட்ட அடிப்படைய நிலையை உணர்த்துவதற்கே வார்த்தைகளின் துணை அவசியமாகத் தேவைப்படுகிறதே!

மனிதனுக்கு இரண்டும் தேவைதான். எந்த நேரத்தில் எது தேவை என்பது மட்டும் தெரிந்துவிட்டால், அதை உணர்ந்த மனிதன் எதையும் வென்றவன். வென்றவன் என்பது ஒரு பேச்சுக்காகச் சொல்லப்படுவது. உண்மையில் அப்படியொரு நிலையை அடைந்தவன், வெற்றி - தோல்வி என்ற நிலைகளைத் தாண்டியவன். அவனை வெற்றியும் பாதிப்பதில்லை. தோல்வியும் பாதிப்பதில்லை.

எனவே, மனிதனுக்கு மௌனமும் தேவைதான். வார்த்தைகளைச் செலவழிப்பதும் தேவைதான். ‘சும்மா இரு சொல்லற’ என்று இறைவனாலேயே உபதேசிக்கப்பட்டவர்தான் குருநாதர். இப்படி உபதேசம் பெற்று நிர்விகல்ப சமாதியில் இருந்தபிறகு, தொடர்ந்து சும்மா இருந்துவிடவில்லையே! அவர் வாக்கிலிருந்து பிரவாகமாகப் புறப்பட்ட திருப்புகழும் அந்த இறைவன் உபதேசித்த ஒன்றுதானே. அதுவும் எப்படிப்பட்ட திருப்புகழ்! சொல்கிறார்:

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே

Advertisement

சித்ர கவித்துவ, சத்த மிகுத்த திருப்புகழைச் சிறிது அடியேனும், செப்பு என வைத்து உலகிற் பரவ, தெரிசித்த அநுக்ரகத்தை ஒருபோதும் மறவேன்.

அந்தத் திருப்புகழ் சத்த மிகுத்த திருப்புகழ். அதைச் செப்பு எனச் சொல்லி எதிரில் வந்து தெரிசனம் கொடுத்து உத்தரவிட்டவனும், ‘சும்மா இரு சொல்லற’ என்று சொன்ன அதே இறைவன்தான்.

பூர்வபீடிகை பலமாக இருக்கிறதோ? இன்றைய பாடல் அப்படி. மௌனத்தை ராகமாக்கியிருக்கிறார்கள்; இன்னும் என்னென்ன வகைகளாகவோ, வழிகளாகவோ கண்டும் காட்டியுமிருக்கிறார்கள். மௌனத்தைக் கோவிலென்று சொல்லிக் கேள்விப்பட்டதுண்டா? இதோ கேளுங்கள்.
 

தனன தான தானான தனன தான தானான

தனன தான தானான தனதான

அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய

அரிய மோன மேகோயி லெனமேவி

அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான

அறிவி னாத ராமோத மலர்தூவிச்

சகல வேத னாதீத சகல வாச காதீத

சகல மாக்ரி யாதீத சிவரூப

சகல சாத காதீத சகல வாச னாதீத

தனுவை நாடி மாபூசை புரிவேனோ

விகட தார சூதான நிகள பாத போதூள

விரக ராக போதார சுரர்கால

விபுத மாலி காநீல முகப டாக மாயூர

விமல வ்யாப காசீல கவிநோத

ககன கூட பாடீர தவள சோபி தாளான

கவன பூத ராரூட சதகோடி

களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர

கருணை மேரு வேதேவர் பெருமாளே

பொருளை நாளைக்குப் பார்ப்போம்.

</p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.