முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 8

எழுத்து, உரைநடையென்றால் எல்லையின்றி விரியலாம். ஆனால் பாட்டு, கவிதை என்றால், அதற்கொரு எல்லை தேவைப்படுகிறது.

Updated On : 21 செப்டம்பர், 2015 at 5:56 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:17 PM

எழுத்து, உரைநடையென்றால் எல்லையின்றி விரியலாம். ஆனால் பாட்டு, கவிதை என்றால், அதற்கொரு எல்லை தேவைப்படுகிறது. சொல்லவரும் செய்தி, அதைச் சொல்ல நினைக்கின்ற விதம் இவையிரண்டும் சேர்ந்து எல்லையைத் தீர்மானிக்கின்றன.

பழைய மரபில், சுருக்கமாகப் பாடுவதற்கு வெண்பாவும், ஓரளவுக்கு விரிவாகவோ அல்லது விரிந்த விரிவாகவோ பாட ஆசிரியப்பாவும் கைகொடுத்தன. அவ்வப்போது மற்ற வடிவங்களும் தலைகாட்டின. விருத்தம் என்ற வடிவம் எப்போது தோன்றியது என்பது கேள்விக்குறிதான். பக்தி இலக்கிய காலத்தில், ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த வடிவத்தைக் கையாண்டிருக்கிறார்கள்.

வெண்பா என்றால், இரண்டே அடிகளுக்கு குறள், மூன்று என்றால் சிந்தியல், நான்கு என்றால் நேரிசை, இன்னிசை, ஐந்து முதல் பன்னிரண்டுவரை பஃறொடை அதற்கு மேல் எவ்வளவு போனாலும் கலிவெண்பா. இதில், இன்னிசைக் கலியும் உண்டு, நேரிசைக் கலியும் உண்டு. ஆசிரியப்பா என்றால், குறைந்தது மூன்றடிகள். எவ்வளவு நீளமாய் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த வசதியால்தான், பழைய இலக்கியங்களில் நீளமானவையெல்லாம் ஆசிரியப் பாவில் அமைந்திருக்கின்றன. கதை சொல்ல வந்த சிலம்பு, மணிமேகலை எல்லாம், பெரும்பாலும் இந்த வடிவத்திலேயே நடக்கின்றன.

Advertisement

வெண்பா விரியவும் விரியும்; சுருங்கவும் சுருங்கும். ஆசிரியமும் அப்படியே. விருத்தத்துக்கோ ஒரே ஒரு அளவுதான் உண்டு. நான்கடிகள். நான்கேயடிகள். குறையாது, கூடவும் செய்யாது. இந்த வடிவம், சின்னச் சின்ன செய்திகளைச் சொல்ல மட்டுமே பயன்பட்டது. ஒரு பத்துப் பாடல்களாக ஒரே தொனியில், பொருளில் சொன்னால் பதிகம். இப்படித்தான் இருந்தது. அடுத்த அடுத்த நான்கடிப் பாக்களில் ஒரு கதையைச் சொல்லிக்கொண்டே போகலாம் என்ற பொறி முதலில் யாருக்குத் தட்டியதோ தெரியவில்லை.

இப்படித்தான் தொடர்நிலைச் செய்யுள் என்ற பகாசுர வடிவம் தோன்றியது. நான்கடி வெண்பாவில் நளவெண்பா தோன்றியது; நான்கடி விருத்தத்தில் ராமாயணம், சீவகசிந்தாமணி, பெரிய புராணம் எல்லாம் தோன்றின. ராமாயணமா சிந்தாமணியா எது முந்தி என்று பெரிய விவாதங்களெல்லாம் உண்டு. நமக்கு அது தேவையில்லை. யார் செய்திருந்தாலும், நம் முன்னோர்கள் யாரோதான் செய்திருக்கிறார்கள். எப்படியும் இருக்கட்டும். நான்கடி நான்கடியாக மெல்ல மெல்ல விரிந்து, மூவாயிரம் நாலாயிரம் பாடல்களில். மற்றவர்கள் செய்ததை, பத்தாயிரத்து சொச்சம் பாடல்களாக விரித்து இராமயணத்தைப் படைத்தது, கம்பனுடைய அசுர சாதனை.

இந்த நான்கடி விருத்தத்திலேயே, கம்பன் பாடியிருப்பது பெரும்பாலும் நான்கு, ஐந்து ஆறு சீர்கள்தான் அதிகம். எண்சீர் விருத்தம் ஏதோ ஒன்றிரண்டு இடத்தில் தட்டுப்படுகிறது. ஒரே இடம்தான் என்று நினைவு. ஆனால், அந்த நான்கடிகளை அப்படியே வைத்துக்கொண்டு, அதன் சீர்களின் அளவை நீட்டி நீட்டிப் பெருக்கியது, அருணகிரியாரின் கைவண்ணம். இவருடைய பிரமிக்கவைக்கும் வேலைகளையெல்லாம் திருப்புகழ் நெடுகிலும், திருவகுப்பிலும் காணலாம். திருவகுப்பு என்பது, திருப்புகழ் மதாணியில் ஒரு பகுதி. மதாணியை பற்றிச் சொல்கிறேன் என்றது நினைவிருக்கிறது. சொல்கிறேன். அதற்கு முன்னால், பொருள் சொல்ல வேண்டிய நேற்றைய பாடலைப் பார்ப்போம்.

மிக எளிய பாடல்.  எளிய பாடல்தானா என்று யோசிக்கவைக்கும் பாடல்.  பொருளைப் பார்ப்போம்.

உம்பர்தரு - உம்பர் என்றால் தேவலோகம். தரு என்பது பெயர்ச்சொல். மரம். தேவலோகத்து மரமான கற்பக விருட்சம்.

தேநுமணி - தேனு. தேநு.  காமதேனுவும் சிந்தாமணியும். கற்பக விருட்சமும், காமதேனுவும் சிந்தாமணியும் வேண்டியவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதுபோல, எனக்குள் ஈகை உணர்வு

கசிவாகி - கசிய வேண்டும்.

ஒண்கடலிற் தேனமுதத்து உணர்வு - ஒளியை உடையதாகிய பாற்கடலிலே அமுதம் உண்டானது போல என்னுள்றே உணர்வு ஊற, ஊற்றெடுக்க வேண்டும்.

ஒன்றைக் கவனியுங்கள். கற்பக விருட்சம், காமதேனு, சிந்தாமணி எல்லாம் கேட்டார்க்கு கேட்டதைக் கொடுப்பவை என்றாலும், அவற்றுக்கும் ஒன்று தேவைப்படுகிறது. ‘எனக்கு வேண்டும்’ என்று கேட்பதற்கு ஒருத்தர் வேணுமில்லியா? இவற்றுக்கெல்லாம் கொடுக்கும் காருண்யம் எப்படிக் கசிந்து பெருகுகிறதோ, அப்படி என்னிடம் வருபவர்களுக்கு என் மனம் கசியவும் எனக்கு உன் அருள் வேண்டும்.

அடுத்தது, பாற்கடலில் அமுதம் வந்ததைப்போல, உணர்வு ஊற வேண்டுமாம். அமுதம் தானாக வரவில்லை. அதற்காக தேவர்கள் ஒருபக்கம், அசுரர்கள் ஒருபக்கம் நின்றுகொண்டு, வாசுகிப் பாம்பையும் மந்தர மலையையும் கொண்டு கடல்வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினயே என்பதைப்போல, கலக்கிக் கடைந்தால் அமுது ஊறும்.

மனமே பாற்கடலும் மலையும் பாம்பும். மனத்துக்குள்ளேயே தேவசக்திகளும் அசுர சக்திகளும். இவையெல்லாம் ஒன்று திரண்டு இந்த மனத்தைப் போட்டுக் கடைந்தால், அமுதம்தான் வரும் என்று என்ன உத்தரவாதம்? தேவசக்திகளும்தான் உள்ளே இருக்கின்றன; அசுரசக்திகளும் அதியசுரத்தனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மனத்தை இப்படிப் போட்டுக் கடைந்தால் அமுதம்தான் உண்டாகும் என்று எப்படிச் சொல்வது? அங்கே ஆலகால விஷமல்லவா முந்திக்கொண்டு கிளம்பியது?

அப்படித்தானே இந்த மனத்தைப் போட்டுக் கடைந்தால் அமுதும் ஊறும், ஆலகால விஷமும் கிளம்பும்? ஒண்கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி. அந்த விஷம் கிளம்பும்போது, அதைக் குடிப்பதற்கு ஆளெல்லாம் ஏற்பாடு செய்தாயிற்று. கணபதியே, இந்த மனத்தில் ஊறும் உணர்வு அமுதமாக இருக்க நீ அருள்.  அப்படி உண்டாகிற இன்பரசமாகிற ஞானத்தை நான் பருக, நீ அருள வேண்டும். எப்படி?

பலகாலும் - நீண்டகாலத்துக்கு இந்தச் சுவை நீடிக்க வேண்டும்.

அடுத்த இரண்டடிகள் எளியவை.

தம்பி தனக்காக வனத்து அணைவோனே - தம்பிக்காக வள்ளியின் முன்னால் தினைப்புனத்தில் வந்து தோன்றியவனே

தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே - தந்தையை வலம்வந்த அருள்ஞானக் கனியைப் பெற்றவனே

அன்பர் தமக்கு ஆன நிலைப் பொருளோனே - அன்பர்களுக்கான நிலைத்த பொருளாக இருப்பவேனே

ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே - நான்கு கரங்களுடன் துதிக்கையையும் சேர்த்து ஐந்து கரங்களும் யானை முகமுமாய் இருக்கும் பெருமாளான கணபதியே.

நாளைக்குக் காணப்போகும் கணபதிப் பாடல், நல்ல சந்த நயத்தோடு கூடியது. பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.