முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 11

இப்போதுதான் திருப்புகழின் முதல் பாடலுக்குள் நுழைகிறோம். திருப்புகழின் யாப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளி வைப்போம்.

Updated On : 25 செப்டம்பர், 2015 at 2:29 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

இப்போதுதான் திருப்புகழின் முதல் பாடலுக்குள் நுழைகிறோம். திருப்புகழின் யாப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளி வைப்போம். இந்தப் பாடலைப் பற்றிப் பேசவேண்டியது இருக்கிறது; பேச, வேண்டியது இருக்கிறது!

‘முத்தைத்தரு பத்தித்திருநகை’ பாடலைப் பற்றிய பரவலான நம்பிக்கை வேறு. அதன் புராணப் பின்னணி வேறு. குருநாதர், திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகன் தடுத்தாட்கொண்ட அந்தச் சமயத்தில் எழுந்ததில்லை இந்தப் பாடல். வாரியார் சுவாமிகள் மிக விவரமாகச் சொல்கிறார். அதன்பிறகு பல சம்பவங்கள். அவற்றுக்குப் பின்னர்தான் இந்தப் பாடல் எழுந்தது. வாரியார் சுவாமிகள் இயற்றியுள்ள ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் சொல்வது இது -

ஆரம்பநாளில், அருணகிரிநாதர் சில உலகாயதவாதிகளுடைய போதனைக்கு வசப்பட்டிருந்தார். உலகாயதவாதம் என்றால் என்ன என்பதை வாரியார் சுவாமிகள் சொல்கிறார் -

Advertisement

முத்தியிலை; நீதிநெறி முறைமையிலை; விரதமிலை;

பத்தியிலை; வினைசெயும் பயனுமிலை; சீவனிலை;

சித்தியிலை; அயர்வுமிலை; தெய்வமிலை; அருளுமிலை;

சத்தியமும் இலைநிரையத் தாழ்வுமிலை; அவையன்றி…

இது கலிவிருத்தம். இப்படிப் பல பாடல்களால் விளக்குகிறார். பொருளைச் சுருக்கமாகச் சொல்கிறேன். மோட்சம் என்றொன்று இல்லை; நீதிநெறி ஏதுமில்லை; பக்தியில்லை; செய்யும் நற்செய்கை தீச்செய்கைகளுக்கான பலனென்று எதுவுமில்லை; ஜீவன் என்றொன்று இல்லவே இல்லை; சித்தி, சோர்வு, நரகம் (நிரையம் = நரகம்) என்று இவையெதுவுமே இல்லை. இதுமட்டுமில்லாமல்,

பாவ-புண்ணியம், பிறப்பு-இறப்பு சுழற்சி, வேதங்கள், மறுமைப் பயன், சிவம், தவம் எதுவுமே இல்லை. நம் அறிவால் ஆவது என்றும் ஒன்றுமில்லை. கவலையற்று, காதல் எண்ணத்தை மனத்தில் வளர்த்து, நன்றாக உண்டு,

ஐம்புலன்கள் இழுக்கும் வழிக்கெல்லாம் சென்று, நல்ல ஆடை அணிகலன்களை அணிந்துகொள்ள வேண்டும். பெண்களுடன் கூடி மகிழ வேண்டும். இதுவே சுகம். இதைத்தவிர சுகமென்று எதுவுமில்லை.

இந்தச் சமயத்தில்தான், அருணகிரி என்ற உடனே என்னென்னவோ நினைவுக்கு வருகிறதே, அப்படிக் கிடந்தார். ‘அதுக்கப்புறமும் அப்படித்தானே! அவருடைய பாடல் முழுவதுமே பரத்தையரைத் திட்டுவதுபோல விவரமாக வர்ணிப்பவைதானே’ என்று கேட்கத் தோன்றும். ஒரு சின்ன கணக்கைச் சொல்கிறேன்.

திருப்புகழ் மதாணி என்பது ஒன்பது பிரிவுகளைக் கொண்டது. மதாணி என்றால் மார்பிலே விளங்கும் பதக்கம் என்று பொருள். இந்தப் பதக்கத்தில் விளங்கும் நவரத்தினக் கற்களால் ஆனது திருப்புகழ் மதாணி. அருணகிரி நாதர்,

மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்

ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன்

என்று பூதவேதாள வகுப்பிலும்,

உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும்

ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும்

என்று வேடிச்சி காவலன் வகுப்பிலும் பாடுகிறார். அவருடைய வாக்கிலிருந்து பிறந்ததுதான் திருப்புகழ் மதாணி என்ற சொற்றொடர். அந்த ஒன்பது மணிகள் -

1. திருப்புகழ் 1330*

2. கந்தரலங்காரம் 107

3. கந்தர் அந்தாதி 100

4. கந்தரனுபூதி 51

5. திருவகுப்பு 25

6. வேல் விருத்தம் 11

7. மயில் விருத்தம் 11

8. சேவல் விருத்தம் 11

9. திருஎழுகூற்றிருக்கை 1

* பழைய கணக்கு. வாரியார் பதிப்பின்படி 1327, சேலம் சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை பதிப்பின்படி 1330, இவற்றுக்குப் பிறகு நான்கு பாடல்கள் கிடைத்து, மொத்தம் 1334 பாடல்கள், http://kaumaram.com/ வலைத்தளத்தில் உள்ளன.

இத்தனை பாடல்களில், அருணகிரியாருடைய பாடல்களின் தன்மையாகப் பரவலாக நம்பப்படும் வகையில் சுமார் 50-60 பாடல்கள் உள்ளன. 1,647 பாடல்களில் இது சுமார் ஐந்து விழுக்காடு. தொண்ணூற்றைந்து விழுக்காடு பற்றி பேசுவதே இல்லை. இந்த ஐந்து விழுக்காடுதான் அருணகிரிநாதருடைய பாடல்களின் இயல்பாகப் பேசப்படுகின்றது. பிழை அவருடையதில்லை. நம்முடையது.

அருணகிரிநாதருடைய வரலாற்றைத் தொடர்வோம். இப்போது இன்றைய பாடலும் ஒலிவடிவமும் -

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

பாடலை ஒலிவடிவில் கேட்க..

</p><p align="JUSTIFY"> </p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.